6 செப்., 2015

நீர்நிலைகள் நீரைச் சேமிக்கவே...

கண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ஏரிகள், குளங்களெல்லாம் மூடப்பட்டு விலை நிலங்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், பெரும் அங்காடிகள், அரசு கட்டிடங்கள் என கான்கீரிட் காடுகளாகவே வளர்ந்து நிற்கின்றன. இத்தனைக்கு மத்தியிலும் நீரைச் சேமிக்க வேண்டும், நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாசகங்களின் கூக்குரல் உரக்க... உரக்கச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவையனைத்தும் மனிதமற்ற, மரங்களற்ற வெட்டவெளிப் பகுதிகளில் எதிரொலியாக மட்டுமே ஒலித்துக்கொண்டு உள்ளது.
சமீபத்தில் கண்மாய்களை ஆக்கிரமித்துக் வளர்ந்துக் கொண்டிருக்கும் கான்கீரிட் காடுகள் அமைந்துள்ள ஓரு பகுதியில், நீர்வரத்து (அ) நீர்கடத்துப் பகுதியில் நசிந்து போன ஒரு ஓடையின் இருபுறமும் கான்கீரிட் சுவர்களை எழுப்பி ஓடையைப் பாதுகாக்கும் பணியைச் செய்துக் கொண்டிருந்தனர். உண்மையில் மகிழ்ச்சியே. ஆனால், மழை பெய்வதற்கான அத்தனை காரணிகளையும் புறகணித்துவிட்டு ஓடையை மட்டும் கட்டி எழுப்பிவிட்டால் நீரை சேமித்துவிட முடியுமா?. நீரைத் தேக்கி வைக்கும் கண்மாய்களையும், குளங்களையும், ஏரிகளையும், கிணறுகளையும் அழித்துவிட்டு நீர் வழிப்பாதையை மட்டும் பாதுகாப்பதைக் காணும் பொழுது மழை வருமா ? என்ற கேள்வியே தற்போது மனதில் எழுவதில்லை. முன்பெல்லாம் மழைக்காலம் என்ற ஒரு பருவம் இருந்தது. தற்போது மழை நாட்களைதான் காண முடிகிறது.
மழை பெய்வது என்பது, புவியில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கையை வளமாக்க செய்யவே... எந்த உயிரினத்தின் வாழ்க்கைக்கும் எதிர்வினையாற்ற வருவதில்லை. நீர் என்பது மனிதனுக்கு மட்டும் உபயோகப்படும் பொருளா ? எந்த உயிரினமாவது நீர்நிலைகளிலேயே குடிகொண்டுள்ளனவா? (நீர்வாழ் உயிரனங்களைத் தவிர) அனைத்து உயிரினங்களுக்கும் நீரின் தேவை இன்றியமையாதது. அதனை மனித இனம் தனக்கு மட்டும் என கபளீகரம் செய்துகொண்டிருக்கின்றது. 

என்று மழை வருவதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டிய நிலை வந்ததோ...! அன்றே மழை பொய்துவிட்டது. மழை மனித இனத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட பிற உயிரினங்களுக்கு மழை மிகவும் அத்தியாவசியமானது. ஏனென்றால், அவைகளால் நம்மைப் போன்று ஆழ்குழாய் இட்டு நீரை எடுக்க முடி(தெரி)யாது.
விவசாயத்தின் முக்கிய ஆதாரம் நீர். இன்று நீர் பற்றாக்குறையால் விவசாயம் குறைந்து வருகிறது. நாகாரீகச் வளர்ச்சியில் சுவிச்சைப் போட்டால் நீர் என்ற வாழ்க்கை முறையில் நீரைச் சேமிப்பது என்பதைப் பற்றியெல்லாம் மனம் சிந்திப்பதில்லை. அந்த எண்ணங்களே மனதில் எழுவதில்லை. மனதையே வறட்சியாக வைத்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில், அதில் இயற்கையைப் பற்றிய சிந்தனை, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை மட்டும் எப்படி யோசித்து பார்க்க முடியும். முதலில் மனங்களை பசுமைப் படுத்துவோம். பின்பு அது நிலங்களை பசுமையாக்கிவிடும்.
இன்று பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே பயன்பாடு முடிந்தவுடன் தூக்கி எறியப்படும் முறைகளில் தயாரிக்கபடுகின்றன. எந்த ஒரு பொருளுமே மீண்டும் சுழற்சி முறையில் உபயோகிப்படுவது இல்லை. பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்படும் பலப் பொருட்கள் சங்கமிக்கும் இடம் இன்றைய வறண்ட நீர்நிலைப் பகுதிகள், நீரோடை மற்றும் கழிவுநீர் கடத்துக் கால்வாய்கள். 

நீர்நிலைகள் நீரைச் சேமிக்கவே... குப்பைகளைச் சேமிக்க அல்ல. தற்போது நகர்புறங்களில் குப்பைகளைக் கொட்டுவதற்கு என்றே தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது. அந்த இடத்தைக் கடந்து செல்பவர்கள் அனைவரும் மூக்கை பொத்திகொள்ள மறப்பதில்லை. ஆனால், குப்பைப் பெருக்கத்தை குறைப்பதற்கான வழிகளை மறந்துவிடுகின்றனர்.


குடியிருக்க பல அறைகள் கொண்ட வீடு, பயணிக்க மகிழுந்து (கார்), விதவிதமான உடைகள், தங்கத்தில் முதலீடு, வங்கியில் தேவைக்கும் அதிகமான பணத்தை சேமித்தல், மீதமிருக்கும் பணத்தில் நிலங்களை வாங்கி போடுதல் என பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது நாளைய தலைமுறைக்கான இன்றைய சொத்துகள். 

ஆனால், இந்த பட்டியலில் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மூன்று விசயங்களில் இரண்டு மட்டுமே இடம் பெற்றுள்ளது. அது உடை மற்றும் உறைவிடம். மிக அத்தியாவசிய மற்றொன்றான உணவு விடுபட்டுள்ளது. உணவுகளிலும் நீருக்குதான் முதலிடம் என்பதை பலர் நாகரீக வாழ்வில் மறந்துவிட்டனர். 
நவீன யுகத்தில் ஆறுகளில் நீர் கருமை நிறத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பயணங்களில் நீர்நிலைகளை கடந்து செல்லும் பொழுதெல்லாம் அதன் இன்றைய நிலை கண்டு நம் மனம் வருந்துவதில்லை. சாக்கடைக் கழிவுகளால் ஆறுகள் நிரம்பிவருகின்றன. மாற்றத்தை நம் மனது முடிவு செய்யாவிட்டால் விளைவுகளை நாம் அனுபவித்தே தீரவேண்டும். குப்பைகள் அதிகம் உருவாகுவதை தவிர்க்க முடிந்த அளவேனும் முயற்சி செய்வோம். பாதுகாப்பான குடிநீர் அனைவருக்கும் கிடைத்திடுவது நம் கைகளிலும் எண்ணங்களிலும் உண்டு என்பதை உணர்வோம்.
பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் தங்களது எதிர்காலத் தலைமுறையினருக்குத் தேவையான அனைத்தையும் பெற்றிட வழிவகை செய்திருந்தனர். நீரைச் சேமிப்பதன் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றனர். வாழ்க்கை முறையே இயற்கையோடு இணைந்து சென்றிருந்தது. நீரை சேமிக்க குளங்களும், கண்மாய்களும் உருவாக்கப்பட்டது. இன்று நாம் நீரைப் பூமிக்கடியிலும், தெருமுனைக்கு வந்து செல்லும் குடிநீர் லாரிகளிலும் தேடிக் கொண்டிருக்கிறோம்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க அனைவரும் முன் வர வேண்டும். அருகிலுள்ள குளம், கண்மாய்களைப் பாதுகாப்பதன் மூலம் நீரின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யமுடியும். மரம் வளர்க்க முடிந்த சூழ்நிலை உள்ள பகுதிகளில் எல்லாம் மரங்களை நடுவோம். தேவைக்கு ஏற்ப நீரைப் பயன்படுத்துவோம். நீர் சேமிப்பைப் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை நம் குடும்பங்களிலிருந்தே துவங்குவோம். அடுத்தத் தலைமுறையினர் நீரை பாட்டில்களில், லாரிகளிலிருந்து வாங்கவேண்டிய நிலையை தவிர்க்க வழி செய்வோம்.  

1 கருத்து: