14 அக்., 2012

திருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...


பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். பயணத்தில் கழுகுமலை, சங்கரன்கோவில், வீரசிகாமணிக்கு அடுத்து நான்காவதாக திருமலாபுரத்திற்கு சென்றோம். திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி - சேந்தமரம் சாலையில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலைப்புரம் எனப்படும் திருமலாபுரம்.
திருமலாபுரத்தில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்த (கி.பி 750) இரண்டு குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. திருமலாபுரம் சிற்றூரின் ஊருக்கு வெளியே தெற்குப் பகுதியில் மிக பெரிய நீண்ட மலைக் குன்றுத் தொடர் காணப்படுகிறது. இந்த மலைக்குவருணாச்சி’ மலை என்று பெயர். இவ்வூருக்கு முன்பு வருணாச்சிபுரம் என்ற பெயர் இருந்துள்ளது.

இம்மலையில் இரண்டு குடைவரை கோவில்கள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று மலையின் தெற்கு திசையிலும் மற்றொன்று மலையின் வடக்கு திசையிலும் உள்ளது. குன்றின் வடக்கு திசையில் உள்ள குடைவரை முழுமையடைந்த நிலையில் சிற்பங்களுடன் அழகாக காட்சி தருகிறது. இக்கோயில் மிகவும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரால் இக்குடவரை ’பசுபதேஸ்வரர் குடவரை’ என்று அழைக்கப்படுகிறார். மலையின் தெற்கு திசையில் உள்ள மற்றொரு குடவரை முழுமை அடையாத நிலையில் உள்ளது.

சாலையிலிருந்து ’பசுபதேஸ்வரர் குடவரை’ அமைந்துள்ள இடத்திற்கு செல்வதற்கு அழகான பாதை அமைக்கப்பட்டுள்ளது. குடவரைக்கு அருகே பனை மரங்கள் நிறைந்திருந்தன. மலைக்குன்றின் மேலே கிறித்துவ தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு மத நல்லிணக்கத்தை வருணாச்சி’ மலை தன்னகத்தே கொண்டு காட்சி தருகிறது. குடவரைக்கு ஏறிச் செல்வதற்கு பாறை கற்களால் ஆன படிகள் செய்யப்பட்டிருந்தன. மலை நீர் குடவரையின் உள்ளே புகாத வண்ணம் குடவரையின் மேலே பாறையில் புருவம் போன்ற காடி வெட்டப்பட்டுள்ளது. குடவரையில் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. நுழைவாயிலில் காணப்படும் தூண்களின் மீது அழகிய பூ வேலைபாடுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. குடவரையானது வடக்குத் திசை பார்த்த வகையிலும், கருவறை கிழக்கு திசை பார்த்தவாறும் குடைவிக்கப்பட்டுள்ளது. உள்ளே காணப்படும் செவ்வக வடிவ அரைமண்டபத்தில் (முன்மண்டபம்) முற்பாண்டியர் காலப் புடைப்புச் சிற்பங்களும், காலத்தால் சற்று பிந்திய இரண்டு கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. 

உள் அரைமண்டபம் 19 அடி நீளம் 12 அடி அகலம் கொண்டது. கருவறை 8 சதுர அடி அளவிலும் நடுவில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறது. இக்குடைவரையில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நான்கு கரம் கொண்ட விஷ்ணுவின் இருபுறமும் இருக்கின்ற உருவங்கள் வணங்கிய நிலையில் உள்ளன.  மேலிருகரங்கள் சங்கு சக்கரம் ஏந்தியிருக்க கீழ் இரு கரங்கள் தொடையை தொட்ட வண்ணம் காட்டப்பட்டுள்ளன. விஷ்ணுவின் அருகில் விநாயகர் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. மறுபுறம் சிவபெருமான் காட்சி அளிக்கிறார். கருவறையில் ஒற்றை கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் தெய்வங்களின் உருவங்கள் அனைத்தும் நான்கு கைகளோடு காட்சி தருவது குறிப்பிடதக்கது. 

கிழக்குப்புறச் சுவரில் நின்ற நிலையில் ஓர் இறை உரு உள்ளது. மற்றொரு மாடமும் உள்ளது. கனமான தூண்கள் விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. தரங்க போதிகைகள் அமைப்பில் மேலும் அழகு செய்கின்றன. மேல் மற்றும் கீழ்ப் பகுதி தூண்கள் சதுர வடிவிலும் இடையில் எண்பட்டை வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. குடவரையின் விதானத்தில் பழங்கால ஓவியங்களின் வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. கி.பி 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று ;ஸ்ரீவல்லபதேவன்’ என்னும் பாண்டிய அரசன் வழங்கிய நிலக்கொடையைப் பற்றி தெரிவிக்கிறது. மலையின் பின்புறம் முற்றுப்பெறாத குடவரை முற்றுப்பெறாத தூண் வேலைகளுடன் காட்சி அளிக்கிறது.
சாந்தலிங்கம் அய்யா திருமலாபுரம் குறித்த வரலாற்றுத் தகவல்களை நேரமின்மை காரணமாக பேருந்தில் திருமலாபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் பொழுது கூறினார். வீரசிகாமணிக் குடைவரையில் காணப்படுவது போலவே இங்கும் வாயிற்காவலர்களான துவாரக பாலகர்களின் மீது காணப்படும் பூணூல் இடது தோள்பட்டையிலிருந்து வந்து இடைவழியாக செல்லாமல் வலது கையின் மேல் பகுதி வழியாக மேலே ஏறிச் செல்கிறது. எனவே இக்குடைவரையும் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். 
நண்பர்கள் அனைவரும் சேர்ந்து குடவரை முன் குழுவாக நிழற்படமெடுத்துக் கொண்டோம். பின்னர் அங்கிருந்து கிளம்பி கடையநல்லூர், இராஜபாளையம் வழி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றோம். காலையிலிருந்து தொடர்ச்சியாக வரலாற்று செய்திகளை ஒரே நாளில் 5 இடங்களில் அறிந்துகொள்வதற்காக செல்லும் பயணத்தில் 4 இடங்களை காண்பதற்கு வெயிலில் அலைந்ததில் அனைவரும் கொஞ்சம் துவண்டு போனோம். 
வெளியே காலையிலிருந்து நம் கூடவே பயணப்பட்டு நம்மை வாட்டி வதைத்த கதிரவனும் சற்று ஓய்வெடுப்பதற்காக மலைகளினூடே மெல்ல ஓய்வெடுக்க சென்று கொண்டிருந்தது. சாலையில் இருபுறங்களிலும் காணப்படும் தென்னந் தோப்புகளினூடே பேருந்து சென்று கொண்டிருக்கும் போது மெல்ல பகல்பொழுது மறைந்து இரவு பொழுது துவங்கியது. பகலோ இரவோ எப்பொழுதும் பயணங்களை சுகமாக்குவது இசைஞானி இளையராசாவின் இசை. தற்போதும் அவரின் இசையில் அனைவரும் கரைந்து கொண்டிருந்தோம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேரும் பொழுது இரவு நேரமாகியதால் இங்குள்ள சில வரலாற்று முக்கிய பகுதியை காண இயலவில்லை. நண்பர்கள் சிலர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர், சிலர் ஸ்ரீவில்லிபுத்தூரின் சிறப்பான பால் கோவாவையும், பால் அல்வாவையும் வாங்க சென்றுவிட்டனர். 

இந்தப் பயணத்தை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையக்குழுவினர் மிகச் சிறப்பாக நடத்தினர். வரலாற்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவுடன் சென்றது நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள உதவியாகயிருந்தது. நான்கு வெவ்வேறு ஊர்களில் உள்ள மலைகளில் பொதிந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் செய்திகளை ஒருநாள் சுற்றுலாவில் அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் அனைவரும் ஊர் வந்து சேர்ந்தோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக