தலைப்பைச் சேருங்கள் |
வீரசிகாமணி ஊருக்கு அருகிலுள்ள
பெரிய மலைக்குன்றில் குடைவரைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் காணப்படும் சிவனுக்கு கயிலாயநாதர்
என்ற பெயர். குடைவரைக் கோவிலுக்கு வெளியே சுற்றுச்சுவர்
கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கருவறைக்கு நேர் எதிரே உள்ள மேடையில் நந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது.
கைலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. குடவரையில் வெளிப்பகுதி மற்றும் முன்
மண்டபம் முழுவதும் வெள்ளை மற்றும் காவி வண்ணங்கள் பூசபட்டிருந்தன.
குடைவரை முன் மண்டபத்திற்கு
வெளியேயுள்ள பாறைக் குன்றில் இடதுபுறம் விநாயகர் சிலையும், வலதுபுறம் திருமால் சிலையும்
புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. கருவறையில் சிவலிங்கம் ஒற்றைக் கல்லினால்
ஆன பீடத்தின் மேல் மிக அழகாக காட்சி தருகின்றது. முன் மண்டபத்தில் கருவறைக்கு வெளியே
வாசலுக்கருகில் இரண்டு பக்கங்களிலும் துவாரபாலகர் சிலை அமைந்துள்ளது. மண்டபத்து சுவர்களில்
சிலைகள் இரண்டு முனிவர்களைப் போல் காணப்படுகிறது. அவர்களை பற்றிய விபரங்களை அறிய முடியவில்லை.
குடவரையின் முகப்பு பகுதியில்
மூன்று வாசல்கள் அல்லது நுழைவுகள் உள்ளன. இரண்டு தூண்களில் ஒன்றில் வட்டெழுத்துக்களில்
கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. குடைவரைக்குள் செல்வதற்கு படிகள் அழகாக வெட்டப்பட்டிருந்தன.
குடைவரையின் முன் மண்டபம் மற்றும் வெளியே பாறைகளில் காணப்படும் அனைத்துச் சிற்பங்கள்
மேலேயும் நெய் அல்லது எண்ணெய் போன்றவைகள் ஊற்றப்பட்டு கருமை நிறத்தில் காணப்படுகின்றன.
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்
அய்யா இக்குடைவரை குறித்த வரலாற்று தகவல்களைக் கூறினார். தமிழகத்தில் நிறைய குடைவரைக்
கோயில்கள் உள்ளன. இன்றைய பயணத்தில் வீரசிகாமணியும், திருமலாபுரமும் குடைவரைக் கோயில் வகை. கழுகுமலை வெட்டுவான்
கோவில் ஒற்றைக் கற்கோயில் வகையைச் சார்ந்தவைகள். வீரசிகாமணி குடைவரை கோவில்
சோழர்கள் பாண்டிய நாட்டை ஆண்ட காலத்தில் கட்டப்பட்டது என்பதை இங்குள்ள வட்டெழுத்து
கல்வெட்டின் மூலம் அறியலாம். ராஜராஜ சோழனின் வாரிசுகள் பாண்டிய நாட்டில் மண்டலாதிபதிகளாக
பொறுப்பேற்றிருந்தனர்.
துவாரபாலகர்களின் தோளிலிருந்து
பூணூல் தோல்பட்டையிலிருந்து இடைவழியாக செல்லாமல் கையின் மேல் பகுதி வழியாக செல்கின்றது.
இதன் மூலம் இக்குடைவரைக் கோவிலானது 7 அல்லது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாமென்று
கணிக்கப்படுகிறது.
கைலாயநாதர் குடைவரைக் கோவிலை
நிழற்படங்களாக சேமித்துக் கொண்டு குடவரை காணப்படும் மலையின் தெற்குப் பகுதியில் மிகப்பெரிய
குகைத் தளம் ஒன்று காணப்பட்டது. அங்கு ஏதேனும் வரலாற்றுத் தகவல்கள் உள்ளதா என தெரிந்துகொள்ள
அனைவரும் அங்கு சென்றோம். இயற்கையான அமைப்பில் குகைத்தளம் அமைந்துள்ளது. மிகப்பெரிய
குகைத் தளத்தினுள் மூன்று நான்கு சிறிய குகைகள் காணப்பட்டன. இம்மலையை சுற்றியுள்ள பகுதிகளில்
வசிக்கும் மக்கள் இக்குகையை ’பஞ்ச பாண்டவர் குகை’ என்று அழைக்கின்றனர்.
புத்தம் அல்லது சமண மதத்தைச்
சார்ந்தவர்கள் அக்காலத்தில் தமிழகத்தில் உள்ள மலைகளில் தங்கி வாழ்ந்து வந்தனர். இவர்கள்
வடக்கிலிருந்து இங்கு வந்து குடியேறியதால், இராமயணம் மற்றும் மகாபாரத கதைகளின் மேல்
நம்பிக்கை கொண்ட நம்மக்கள் ’வனவாசம்’ சென்றவர்களின் குடும்பத்தாரர்கள் இவர்கள் என அக்கால
நம் மக்கள் இவர்களை பாண்டவர்களின் வம்சாவளியினர் என்று அர்த்தங்கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
எனவே தான் இவர்கள் வசித்து வந்த மலைப்பகுதிகளுக்கு பஞ்ச பாண்டவர் மலை என்ற பெயரை இட்டு
அழைத்துவந்துள்ளனர்.
இக்குகைத் தளத்தில் கல்வெட்டுகள்,
சிற்பங்கள், ஓவியங்கள் என ஏதும் காணப்படவில்லை. குகைத் தளத்தையும் நிழற்படங்களாக பதிவு
செய்து கொண்டு அனைவரும் பேருந்தில் ஏறினோம். பேருந்து அடுத்ததாக எங்கள் அனைவரையும்
திருமலாபுரம் நோக்கி அழைத்துச் சென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக