5 ஏப்., 2016

6000 ஆண்டுகள் பழமையான தேவன்குறிச்சி

தேவன்குறிச்சி என்னும் சிற்றூர் திருமங்கலத்திலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் T.கல்லுப்பட்டி - பேரையூர் சாலையில் அமைந்துள்ளது. கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேவன்குறிச்சி. T.கல்லுப்பட்டி என்ற ஊர் பெயரில் முன்னதாக வரும் T. (தே) என்ற எழுத்து தேவன்குறிச்சியைக் குறிக்கும் (T Stands for Thevankuruchi. Kalluppadti). தேவன்குறிச்சி பற்றிய வரலாற்றுச் செய்திகளை இணையதளம் மூலமாக  படித்து அறிந்துக்கொண்ட பின் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்  அதிகமானது. 
நண்பர்களுடன் தேவன்குறிச்சிக்கு சென்ற வாரம் சென்று வந்தேன். காலை வேளையில் சென்றால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்பதால் 6 மணியளவில் இருசக்கர வாகனங்களில் புறப்பட்டோம். கடந்த இரண்டு வாரங்களாக நல்ல மழை. வழியெங்கும் குளுமையும் பசுமையும் நிறைந்திருந்தது. சிறு குளங்களிலெல்லாம் நீர் நிறைந்து காணபட்டது. குளங்களில் சாம்பல் நாரை, நத்தைகொத்தி, வெண் கொக்கு, மீன்கொத்தி, பனங்காடை, கரிச்சான்குருவி என பறவைகள் நிறைந்திருந்தன. 
குன்னத்தூரை தாண்டியதுமே தேவன்குறிச்சியில் உள்ள மலை தெரிந்தது. தே. கல்லுப்பட்டி வந்தடைந்ததும் அருகிலுள்ள தேநீரகத்திற்கு சென்றோம். காலைச் சிற்றுண்டியாக தேநீரோடு உழுந்த வடையும் போண்டாவும் வயிற்றுக்குள் இறங்கியது. தே. கல்லுப்பட்டி உழுந்தவடைக்கு பிரபலமான ஊர் என்று நண்பர்  கூறினார். மலைப் பயணம் என்றாலே தண்ணீரும் நொருக்கு தீணியும் மிக அவசியமான ஒன்றாய் இருந்துவிடுகிறது நமக்கு.பின்னர் அங்கிருந்து மலை அமைந்துள்ள தேவன்குறிச்சியை நொக்கி சென்றோம். மலையை நெருங்கியதுமே அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயில் தோரணவாயிலும் அடர்ந்து நிறைந்த மரங்களும் நம்மை வரவேற்கின்றன. சிறிது தூர நடைக்கு பின் கோவிலை அடைந்தோம். கோவிலின் பின்னால் மிகப் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது தேவன்குறிச்சி மலை. முதலில் கோவிலுக்கு சென்று கோவிலின் அமைப்பையும் அழகையும் கண்டு ரசித்தோம்.   
இக்கோவில் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிகாலத்தில் (கி.பி 12 - 13ம் நூற்றாண்டில்) கட்டப்பட்டு, பின்னர் நாயக்கர் காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. கொடிமரத்திற்கு அடுத்ததாக அழகிய கல்மண்டபம் காட்சியளிக்கின்றது. கல்மண்டபத்திலுள்ள ஒவ்வொரு தூண்களிலும் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தை கடந்து உள்ளே சென்றால் அக்னீஸ்வரர் கருவறையும்  அதனை அடுத்து கோமதி அம்மனின் கருவறையும் உள்ளது. கோவிலின் பின்புறமுள்ள சிறுகுன்றில் முருகன் கோவிலும், அங்கிருந்து வலது பக்கமாக வந்தால் பசுமாடு சிவலிங்கத்திற்குப் பால் சொரியும் காட்சியை சிற்பமாக வடிவமைத்துள்ளனர்.  அடுத்ததாக சண்டிகேஸ்வரர், தட்சிணா மூர்த்தி சன்னதிகளும் அதனையடுத்து கோவிலின் முகப்பில் நவகிரகங்களும் உள்ளன. நவகிரகங்களுக்கு அருகிலுள்ள கல்வெட்டு ஒன்றில் “திருவற்கீசரமுடைய நாயனார்” என்ற பெயர் காணப்படுகிறது. இப்பெயர் இங்குள்ள தெய்வமாகிய சிவவனைக் குறிக்கும் பெயராக இருக்க வேண்டும். 
இக்கோவிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டுகள் சில கோவிலின் கருவறைச் தென்புறச் சுவரிலும், கோவிலைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவர்களிலும் காணப்படுகின்றன. அவைகள் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238 ) காலத்தை சேர்ந்தவை. இங்குள்ள 8 கல்வெட்டுகளில் 6 கல்வெட்டுகள் கோயில் சுவர்களிலும், ஒன்று கோவிலுக்கு பின்புறமுள்ள கிணற்றுக்குள் கல்வெட்டு தழைகீழாகவும் மற்றொன்று கோவிலுக்கு எதிர்புறம் விநாயகர் சன்னதியை ஒட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சுவற்றிலும் காணப்படுகின்றன. கல்வெட்டுகளின் விபரங்கள் பற்றி அறிந்துகொள்ள இந்த சுட்டியை அழுத்தவும்...தேவன்குறிச்சியில் பாண்டியர் காலக் கல்வெட்டுகள்


கோவில் பின்புறமுள்ள கிணற்றுக்குள் சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் அமர்ந்த நிலையில் உள்ள சிற்பம் காணப்படுகிறது. கிணற்றின் சுற்றுச் சுவருக்காக எழுப்பப் பயன்பட்ட கற்களோடு இச்சிற்பம் உள்ள கல்லும், அதற்கு எதிர் திசையில் உள்ள சுவரில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் சேர்ந்து காணப்படுகிறது. மகாவீரரின் சிற்பத்தில் அவருக்கு  மேலே மரத்தின் கிளைகள் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பம் மூலம் இவ்விடத்தில் சமணம் சைவத்துக்கு முன்னதாகவே இங்கு இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. இதற்கு சான்றாக இங்குள்ள மலையில் குகை போன்ற அமைப்பும் அதன் உள்ளே கற்படுக்கையும் காணப்படுகிறது. குகைக்கு அருகே மருந்து அரைப்பதற்காக பாறையிலேயே வெட்டப்பட்ட குழியும் காணப்படுகிறது.


கோயிலின் முன்புறம் மேற்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மேற்குப் பகுதியில் உள்ள குளத்து மேட்டுச் சுவரில் இக்குளத்தை உருவாக்கி தந்தவரின் கல்வெட்டு காணப்படுகிறது. குளத்தைச் சுற்றிலும் மருத மரமும் வேம்பு மரங்களும் நிறைந்துள்ளன. மேற்கு பகுதியில் உள்ள குளத்தின் அருகில் சுனை போன்ற அமைப்பு மலைப் பாறைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இதனைச் சுற்றிலும் கற்களால் கோட்டைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பெய்யும் மழை நீர் மலையிலிருந்து இச்சுனைக்கு வருமாறு பாறைகளுக்கு இடையே நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுனைக்கு நடுவே சுவர் எழுப்பப்பட்டு இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒன்றை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கானப் பயன்பாட்டிற்கும், மற்றொன்றை கோவிலுள்ள இறைவனுக்கு நீராட்ட  பயன்படுத்துமாறும் அமைக்கப்பட்டுள்ளது. 
வடக்குப் புறத்தில் அமைந்துள்ள பெரிய மலையில் ஆஞ்சிநேயர் கோவிலும், அதற்கு மேலே மலை உச்சியில் பெருமாள் கோவிலும் உள்ளது. ஆஞ்சிநேயர் கோவில் வரை செல்வதற்கு சிமெண்ட் படிகளும் அதற்கு மேலே உள்ள பெருமாள் கோவில் செல்வதற்கு மலையில் பாறைகளுக்கு இடையிலான கற்பாதையும் உள்ளது. பெருமாள் கோவிலை நெருங்கும் பொழுது பாதை சற்று செங்குத்தாக உள்ளது. கவனமாக சென்று வர வேண்டும். செல்லும் வழியில் குரங்குகள் நிறைய உள்ளன. அதிகம் தொந்தரவு செய்வதில்லை. நாம் அவர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் சேதாரம் நிச்சயம். கவனம். மலை உச்சிக்குச் சென்றடைந்ததும் குளிர்ச்சியான காற்று நம்மைத் தழுவிச் செல்கின்றது. சிறு அளவில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.  
இங்கு வருவதற்கே இத்தனைச் சிரமம் இருக்கையில், எப்படித்தான் கோவிலுக்கான கட்டுமானப் பொருட்களை கொண்டு வந்து கட்டினார்கள் என்பது வியப்படையச் செய்கின்றது. அங்கிருந்து சுற்றிலும் பார்க்கையில், வயல்வெளிகள் பச்சை பசேல் என போர்வையால் மூடியதுபோல் காணப்பட்டது. தொலைவில் மலைகளெல்லாம் சிறிதாக காணப்பட்டது. சிறிது நேரம் அமர்ந்து தூய்மையான காற்றை சுவாசித்தோம். சிறிது நேர இளைப்பாறலுக்கு பின் மலையைவிட்டு கீழிறங்கினோம். நண்பர்களோடு பேசிக்கொண்டே சென்று வந்ததால் சிரமம் தெரியவில்லை. மலைக்கு மேலே செல்ல 1 மணி நேரமும், கீழே இறங்கி வர அரை மணி நேரமும் ஆகின்றது. மலைக்கு மேலே இருந்து பார்த்தால் சுற்றியுள்ள பகுதிகளை எல்லாம் பறவைக் கோணத்தில் காண முடிந்தது. 
தேவன்குறிச்சி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1976-77 ல்  இந்திய  தொல்லியல் துறையினர் மேற்கோண்ட ஆய்விலிருந்து அங்கு 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் குடியேற்றம் இருந்ததற்கான பல தடயங்கள் கிடைத்துள்ளன. இப்பபகுதிகளில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய நுண்கற்கருவிகள், இரும்பு மற்றும் செப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து, இரும்புக் கால மக்களும் செப்புக் கால மக்களும் அங்கு வாழ்ந்துள்ளதை அறிய முடிகிறது. மேலும், பெருங்கற்காலத்தைச் ( ) சேர்ந்த பொருள்களான கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள், கல் மணிகள், கிளிஞ்சல்கள், வளையல்கள், முதுமக்கள் ஈமத்தாழிகள் போன்றவை கிடைத்துள்ளன. 
கோவிலின் நுழைவாயில் வழியாக வரும் பொழுது இடது பக்கத்தில் சிறிய கோவில் ஒன்று உள்ளது. கோவிலுக்கு உள்ளே நடுகல் ஒன்று வழிப்பாட்டுத் தெய்வமாக உள்ளது. இதில் புலி ஒன்றை வீரன் ஒருவன் வேல் கம்பினால் குத்தி கொல்வது போன்று காணப்படுகிறது.  வீரனது அருகில் பெண்ணின் உருவம் ஒன்றும் உள்ளது. புலியோடு போராடி இறந்த வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல்லாக இக்கல் இருக்க வேண்டும்.  நடுகற்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஆகும். மேலும், கோவிலுக்கு அருகில் காணப்படும் பெரிய கற்பலகை போன்ற கல்லையும், அதனருகே காணப்படும் நிற்கும் நிலையிலுள்ள இரண்டு கற்களையும் பார்க்கும் பொழுது அது ‘கல்திட்டை’ (DOLMENS) ஆக இருக்க வேண்டும். கல்திட்டைகளின் காலம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய காலமாகும். எனவே இப்பகுதியானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்துள்ள பகுதி என்பதை அறியமுடிகிறது.
மிகக் கம்பீரமான மலையின் அடிவாரத்தில் தேவன்குறிச்சி ஊர் மிக முக்கிய வரலாற்றுச் சான்றுகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. அனைத்து வரலாற்றுச் செய்திகளையும், கல்வெட்டுகளையும், சிற்பங்களையும், கோவிலையும் நிழற்படங்களாக எடுத்துக்கொண்டோம். இத்தனை வரலாற்றுச் சிறப்புகளை கொண்ட தேவன்குறிச்சி மலையை கண்டு ரசித்த  மகிழ்ச்சியில் நண்பர்கள் அனைவரும் ஊர் திருப்பினோம்.   
12ம் நூற்றாண்டு சிவன் கோவில், சமணச் சிற்பங்கள், கற்படுக்கைகள், கிணறுகள், குளங்கள், கல்வெட்டுகள், நடுகல், முதுமக்கள் வாழ்ந்த  பகுதி என ஏராளமான வரலாற்று தகவகள் நிறைந்துள்ள தேவன்குறிச்சிக்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் சென்று வாருங்கள். வரலாற்றை கண்டு வாருங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக