18 மே, 2013

கீழவளவு பஞ்ச பாண்டவர் மலை...

இயற்கையை காதலிப்பவர்களுக்கு, இயற்கை தன்னை பல பரிமாணங்களில் காட்சி தரும். அருவியாக, நதியாக, கடலாக, காடுகளாக, மலைகளாக, பனி மலையாக என இயற்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இவைகள், பார்பவர்களின் கண்களை கவர்ந்து, மனதை வருடி, கொள்ளை கொண்டு பின்பு மெல்ல நம்மை தனக்கு அடிமையாக்கும். இது காதலின் சக்தி.

அப்படிபட்ட, இயற்கையின் படைப்புகளில் மலைகள் மிகவும் அற்புதமானவைகள். மலைகள் ஒவ்வொன்றும் தனக்கென்ற ஒரு தனி அழகை கொண்டிருக்கும். ஒரு மலையில் ரசித்த அழகு வேறொரு மலையில் வேறொரு தனி அழகைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும். மலைகள் ஒவ்வொன்றும் பார்பவர்களின் ரசனைக்கேற்ப காட்சியளிக்கும். மலைகளின் உருவங்கள், வண்ணங்கள், அதன் சிறிதும் பெரிதுமான உயரங்கள் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும்.

வாழ்வின் ஒரு சிறுபகுதியை மலைகளோடு சேர்ந்து வாழ்ந்துவிட்டதால் மலைகள் மீதான காதல் எனக்கு மலைகளைப் போன்றே அழகானது. உறுதியானது. என்னுடைய காதலும் தீரவில்லை. மலைகளும் என்னை விடுவதாக இல்லை. ’மலைகாதல்பயணம் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. இந்த பயணத்தில் கீழவளவு மலைகளும் ஒன்று. கல்லூரி நாட்களில் மதுரையிலிருந்து காரைக்குடி சென்றுவரும் பொழுதெல்லாம் கீழவளவு மலைகளின் அழகை 5....6... வினாடிகளில் பேருந்தில் இருந்தவண்ணம் ரசித்துக்கொண்டே கடந்து சென்றதுண்டு.

நீண்ட மலைகுன்றுகள், மிகப்பெரிய உருண்டை வடிவ பாறைகள்ஒரு சிறுபாறை பெரிய ஒரு பாறையை உருண்டோடி விடாமல் தடுத்து தாங்கி நிற்ப்பது, நிறுத்தி வைக்கப்பட்ட தூண்களைப் போலான பாறைகள் என பார்பதற்கு அழகாக காட்சியளிக்கும். இவையனைத்தும் பேருந்துப் பயணத்தின் அந்த 5....6... வினாடிகளில் கண்களில் இருந்து கடந்துவிடும். என்றாவது ஒருநாள் இந்த மலைகளை தொட்டு ரசித்திட வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள்ளே உருண்டு கொண்டிருந்து. கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த எண்ணம் சாத்தியப்படவில்லை

இன்று, பசுமை நடையின் மூலம் அந்த மலைகளைத் தொட்டு ரசிக்க முடிந்தது. பசுமைநடை நண்பர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். கோடையின் கொடிய மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறில், பசுமை நடைப் பயணத்தின் 22வது பயணமாக கீழவளவு பஞ்சபாண்டவர் மலையை நோக்கிச் சென்றோம். வானிலை சற்று மந்தமாக இருந்தது, மனதிற்க்கு சற்று  மகிழ்ச்சியைத் தந்தது. நண்பர்கள் 90 பேருடன் பள்ளி நிறுவனர் ஐயா குகன் அவர்களின் பள்ளி பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் மதுரையிலிருந்து கீழவளவு பஞ்சபாண்டவர் மலை நோக்கி பயணம்.

மேலாரிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது கீழவளவு கிராமம். மேலூர் - திருப்பத்தூர் செல்லும் வழியில் சாலையின் இடதுபுறத்தில் அமைந்துள்ளது பஞ்சபாண்டவர் மலை. இம்மலையில் தமிழ்பிராமிக் கல்வெட்டுகளும், சமணச்சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் காணப்படுகிறது. 1903ல் வெங்கோபராவ் என்பவரால் இங்குள்ள கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இந்தமலைத் தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனைச் சுற்றி இருந்த மலைகள் எல்லாம் இன்று நமது வீட்டின் தரைத்தளங்களை அலங்கரித்து வருகின்றன. இன்னும் பல மலைகள் அங்கு நமது வீட்டின் தளங்களை அலங்கரிக்க காத்து இருக்கின்றன. பஞ்சபாண்டவர் மலை மட்டும் கிரானைட் தொழிலில் இருந்து தப்பித்துள்ளது. எதற்காக, எந்த காரணத்திற்காக இந்த பஞ்சபாண்டவர் மலை மட்டும் கிரானைட்டாக மாறவில்லை? என்ற கேள்வியுடன் தொடர்வோம்.

ஏரத்தாள 2300 வருடகளுக்கு (கி.மு 3ம் நூற்றாண்டு) முந்தைய தமிழ் பிராமி எனப்படும்தமிழி’ எழுத்துக்களின் கல்வெட்டு இம்மலையின் தனிச்சிறப்பு. மேலும் சமண மதத்தைத் தோற்றுவித்த மகாவீரரின் புடைப்பு சிற்பங்களும், பல தீர்த்தங்கரர்கள் எனப்படும் சமணத் துறவிகளின் புடைப்பு சிற்பங்களையும், கற்படுகைகளையும் பஞ்சபாண்டவர் மலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பஞ்சபாண்டவர் மலையின் வரலாற்றை மூத்த தொல்லியல் அறிஞர், ஐயா சொ. சாந்தலிங்கம் அவர்கள் வந்திருந்த நண்பர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கி கூறினார். சமணர்கள் தங்கி இருந்த குகைகள் அனைத்தும் அந்த பகுதியில் வாழும் மக்களால் பஞ்சபாண்டவர் குகை அல்லது படுகை என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. அந்த அளவிற்க்கு இராமயணமும், மகாபாரதமும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்கள் மத்தியில் பரவியிருக்கிறது.

சுமார் 100 துறவிகள் தங்கும் வகையிலே இங்கு படுகைகள் வெட்டப்படுள்ளன. இந்த படுகைகளில் காணப்படும் அழகும், வழவழப்பும் போல மதுரையின் வேறு எந்த சமண குகைகளிலும் செதுக்கப்படவில்லை. உள்ளே உள்ள இயற்கையான ஊற்றுகளில் இருந்து வரும் நீரும், மழைகாலங்களில் வடியும் நீரும் துறவிகள் தங்கும் படுகைகளை நனைத்துவிடாமல் செல்ல காடி (சிறு வாய்கால்) வெட்டப்பட்டு, நீரை வெளியே கொண்டுவிடும் விதமாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மலையின் வடிவம் பம்பரம் போன்று காணப்படுகிறது. மலையின் அடிபாகம் மட்டும் பம்பரத்தின் ஆணியை போல தரையைத்தொட்டு கொண்டு உள்ளது. மலையின் அடியில் துறவிகள் அனைவருக்கும் படுகைகள் சுற்றிலும் வட்ட வடிவத்தில் வெட்டப்பட்டுள்ளது. மலையின் நெற்றியில் தமிழ் பிராமி கல்வெட்டுக் காணப்படுகிறது. இந்த கல்வெட்டு மற்ற மலைகளில் காணப்படுவது போல் நேராக இல்லாமல், தலைகீழாக படிக்கும் விதமாக வெட்டப்பட்டுள்ளது. அதன் நோக்கம் தெரியவில்லை. மலைக்கு முன்னால் இருந்து பார்த்தால் தலைகீழாகவும் கண்ணாடியின் உதவியால் பார்க்கும் பொழுது நேராகவு தெரிகிறது என்று  சாந்தலிங்கம் ஐயா கூறினார்.

உப(ச) அன் தொண்டி(ல) வோன் கொடு பளிஇ என்ற வரி அந்த கல்வெட்டில் கூறுப்பட்டுள்ளது. அடைப்புக் குறிக்குள் உள்ள எழுத்துக்கள் சற்று சிதைவுற்றவை. உபாசன் தொண்டி இலவோன் கொடுத்த பள்ளி என்பது இக்கல்வெட்டின் பொருள். இடவலமாக வெட்டப்பட்ட கல்வெட்டு. ’உபசன்’ என்ற சொல் உபஜ்ஜயா என்னும் பாலி மொழிச் சொல்லின் திரிபு. சமய ஆசிரியர் என்று இதற்கு பொருள்

உபாசன்என்றால் உபாசிப்பவன் அல்லது உபவாசம், விரதம், நோன்பு இருத்தலை குறிக்கிறது. ‘தொண்டு இளவோன் என்றால் பாண்டிய நாட்டின் கீழக்கடற்கரையில் அமைந்துள்ள தொண்டி என்ற நகரத்தைச் சேர்ந்த ஒருவர் இதை செய்து கொடுத்திருக்கிறார் என்பதையும், ’கொடுபலி’ என்பது கொடுபித்த, கொட்டி கொடுத்த, வெட்டி கொடுத்த பள்ளி என்ற செய்தியையும் கல்வெட்டில் சொல்லப் படிருக்கிறது. உபவாசமிருந்த துறவி ஒருவருக்கு தொண்டியை சேர்ந்தவர் வெட்டிக்கொடுத்த படுகை என சுருக்கமாக அறியலாம்.

பாண்டிய நாட்டின் தலைநகரத்திற்கும், சோழ நாட்டின் தலைநகரான உறையூருக்கும் (இன்றைய திருச்சி) இடையிலான பெருவழிகளில் இந்த சமணமலைகள் அமைந்துள்ளன. மதுரையில் உள்ள சமண மலைகள் மாங்குளம், அரிட்டாபட்டி, ஆணைமலை, கருங்காலக்குடி போன்றவைகள் திருச்சிமேலூர் என ஒரு பெருவழியிலும், கீழவளவு, திருப்பத்தூர், திருமலை(சிவகங்கை), திருச்சி என இரண்டாவது பெருவழியிலும் அமைந்துள்ளது.

பக்தி இயக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவை மீட்டதில் அச்சணந்தி என்ற சமணத் துறவிக்கு பெரும்பங்கு உண்டு. மலையின் மேலே மகாவீரரின் மூன்று புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அதில் நடுவில் உள்ள சிற்பத்தின் கீழே வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் உள்ளது. கி.பி 10ம் நூற்றாண்டிலே இவ்விடம் வணங்குதலக்குரியதிருவமுது (அன்னதானம்) தினந்தோறும் வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை மேலே உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சங்கரன் ஸ்ரீ வல்லவன்

சங்கரன்ஸ்ரீ வல்லன் என்ற கொடையாளி 50 ஆடுகளை கொடுத்து, அதன் மூலமாக வரக்கூடிய நெய்யை வைத்து விளக்கு போடுவதற்க்காகவும், அரிசியும் கொடுத்து தினந்தோறும் உணவு படைக்க செய்த ஏற்பாட்டை அக்கல்வெட்டு கூறுகிறது.

மலையின் முன்னால் உள்ள இரண்டு கற்தூண்கள், இந்த மலையைப்  பாதுகாக்க Archaeological Survey of India (ASI) அமைப்பால் மேலே ஒரு பாதுகாப்பு கூரை ((Shed) போடுவதற்க்காக செய்யப்பட்டது. இந்த தூண் இருக்கும் இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவிற்க்கு எந்தவித சேதாரமும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்க்காக சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் காரணமாக இன்றும் இம்மலை பாதுகாப்பாக காக்கப்பட்டு வருகிறது. பஞ்சபாண்டவர் மலையின் முழுத் தோற்றத்தை காணும் பொழுது மிகப்பெரிய திமிங்கலத்தின் முகச்சாடையை கொண்டுள்ளது போல் காணப்படுகிறது. நிழற்ப்படத்தைப் பாருங்கள் உங்களுக்கும் தெரியும்.

மலையின் பின்புறம் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி போன்றோரின் 9,10ம் நூற்றாண்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இல்லறத்தில் இருப்பவர்களை ’சிராவகர்கள்’ என்பார்கள். சிராவகர்களும், வணிகர்களும் துறவிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர். தொடர்ந்து இவ்விடம் அந்த வட்டார மக்களுக்கு கல்வி பயிலும் பள்ளியாக, மருத்துவ சேவை வழங்கும் மையமாக, ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலமாக, அன்னதானம் வழங்குமிடமாக செயல்பட்டு வந்துள்ளது. 1000, 1300 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த, வழிபாட்டில் இருந்த ஒரு சமணத்தளம் இந்த கீழவளவு ஆகும். 2300 வருடங்களுக்கு முன்பாகவே கல்வி வளர்த்த அறங்கள் செழித்த இடமாக, தமிழர் பண்பாட்டை வளர்ப்பதற்க்கு மிகச்சிறப்பாக பணியாற்றிய துறவிகள் வாழ்ந்த இடமாக கீழவளவு பஞ்சபாண்டவர் மலை திகழ்ந்துள்ளது.

மலைக்கு தென்புறம் உள்ள மலை முகட்டிற்க்கு சென்று பார்த்தால் ஒரு புறம் ஓரளவு பசுமையாகவும், மறுபுறம் நெஞ்சைப் பிளக்கும் காட்சியாக மலைகள் அனைத்தும் கிரானைட் கற்களாக, கிரானைட் குவியலின் மைதானமாக காட்சியளிக்கிறது. தூரத்தில் ஒரு மலை, உச்சியிலிருந்து வகிடு எடுத்தது போல் வெட்டப்பட்டிருந்தது. அந்த மலை மட்டுமல்ல, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கண்ட பல மலைகள் எவையும் தற்போது இல்லை. இதையெல்லாம் கண்டுவிட்டு பஞ்சபாண்டவர் மலையை திரும்பிப் பார்க்கும் பொழுது மனதிற்குள் ஒரு பெரும் நிம்மதி. மலைகளை விட்டு கிளம்ப நேரம் தயாரகியது. அவ்விடத்தை விட்டு புறப்படும் முன், பசுமைநடை குழுவினர் வழங்கிய காலைச் சிற்றுண்டியையும் ருசித்துவிட்டு புறப்பட்டோம்.

மலையைவிட்டு மதுரையை நோக்கி பேருந்தில் செல்லும் பொழுது, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துக்களில் இரண்டு வரிகள் ஞாபகத்திற்க்கு வந்தது.

1) நாம் உலக வரலாற்றை அறிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தை உள்ளுர் வரலாற்றை அறிந்து கொள்ளுவதில் காட்டுவதில்லை.

2) வரலாற்றை மறந்து போவது மக்களின் இயல்பு, அதை நினைவுபடுத்துவதும் மீட்டு எடுப்பதும் கலையின் வேலை என்பார்கள்

மலைக்காதல் அவ்வளவு எளிதில் என்னை விட்டுவிடாது. நானும் விட்டுவிடுவதாய் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக