சுற்றுலா சென்று சில மாதங்கள் ஆனதும், நகர வெயிலில் தினம் நடைபெறும் காக்க குளியல் மீதான சலிப்பிலும் குற்றாலம் சென்று ஒரு அருவி குளியலை போட்டுவிட்டு வரலாமே! என்ற எண்ணம் சில் மனதில் தோன்றி வந்தது. குற்றாலத்தில் அருவியில் தண்ணி வருது என்ற செய்தி கேட்டதும், சென்ற வாரம் நண்பர்களோடு சேர்ந்து குற்றாலம் சென்று வந்தேன். மார்கழி மாத மிதமான காலைப் பணியில் மதுரை - செங்கோட்டை பயணிகள் தொடர்வண்டியில் பயணம். பயணத்தில் சென்ற வாரம் பெய்த மழையால் வழியெங்கும் நீர்நிலைகள், பறவைகள், வயல்கள் என எங்கும் பசுமை நிறைந்திருந்தது.
தென்காசியில் இருந்து குற்றாலம் 5 கி.மீ. அனைவரும் தென்காசி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினோம். குற்றாலம் செல்வதற்கு முன் தொன்மையான காசி விசுவநாதர் கோவிலை பார்த்துவிட்டு செல்ல முடிவு செய்தோம். தொடர்வண்டி நிலையத்தில் இருந்து கோவில் 1கி.மீ தொலைவில் கோவில் அமைந்துள்ளதால் நடந்தே சென்றோம். கோவில் நுழைவாயிலாக ராசகோபுரம் மிக அழகாக காணப்பட்டது.