எங்கள் ஊருக்கு அருகே உள்ள மலைக் குன்றுகளில் கீழக்குயில்குடி
சமணமலையும் ஒன்று. திருமங்கலத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரையிலிருந்து
12 கி.மீ தொலைவில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் நாகமலைப் புதுக்கோட்டை என்னும்
சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்கு பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் சமணமலை
அமைந்துள்ளது. கீழக்குயில்குடி சிற்றூருக்கு அரை கி.மீ முன்னரே மலை அமைந்துள்ளது.
இயற்கையின் பல்வேறு வடிவங்களை அங்கே ஒருமிக்க காண முடிந்தது.
மலையின் அடிவாரத்தில் என்றும் வற்றாத அழகிய குளம் (தடாகம், பொய்கை இன்னும் பல பெயர்கள் தமிழில் உள்ளன. )
ஒன்று உள்ளது. அதில் தாமரை மலர்களும், மீனகளும் நிறைந்துள்ளன. குளக்கரையின் தென்மேற்கு
பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள திடலைச்
சுற்றிலும் அரண் போன்று மிகப்பெரிய பழமையான ஆலமரங்களும், வேம்பும், செங்கொன்றை மரங்களும்
நிறைந்துள்ளன. சமணமலையின் தென்கிழக்கு திசையில் கீழக்குயில்குடி என்னும் சிற்றூரும்,
மேற்கு திசையில் மேலக்குயில்குடி என்னும் சிற்றூரும் அமைந்துள்ளது.
காலை 7 மணிக்கெல்லாம் சுமார் 100 நண்பர்கள் பசுமை நடையில் கீழக்குயில்குடி
மலையடிவாரத்தில் கூடினோம். காலை வேளையில் மலையை பார்ப்பது ரம்மியமாக இருந்தது. அய்யனார்
கோயிலை ஒட்டிய பாதைவழியாக மலைக்கு மேலே உள்ள ‘பேச்சிப்பள்ளம்’
என்ற இடத்தைக் காண குழுவினர் அனைவரும் மலைமீது ஏறினோம். மலைமீது ஏற அழகாக படிகள் வெட்டப்பட்டிருந்தது.
பிடித்து ஏறுவதற்கு வசதியாக இரும்பினால் ஆன கைப்பிடி மலைமேல் மேலே உள்ள பேச்சிப்பள்ளம்
வரை தொல்லியல்த் துறையினரால் அமைக்கப்பட்டிருந்தது. ’பேச்சி’
பள்ளத்தில் இயற்கையான சுனை ஒன்று உள்ளது. சுனையை ஒட்டிய பாறையில் எட்டு சிற்பங்கள்
செதுக்கப்பட்டிருந்தது. சுனையின் முன்பாக இரும்புவேலி போடப்பட்டு சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
பசுமை நடைக்கு வந்திருந்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா
சமணர்களின் வரலாற்றைக் கூறினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு சமணர்கள் வந்துள்ளனர்.
மதுரையைச் சுற்றி பல்வேறு குன்றுகளிலும் மலைகளிலும் சமணர்கள் வாழ்ந்து வந்திருந்தாலும்
கீழக்குயில்குடி மலைக் குன்றில் ’பள்ளி’ (அறம், கல்வி மற்றும்
மருத்துவம் கற்றும் தரும் இடம்) அமைத்து தங்களது இறைப் பணியை தொடர்ந்துள்ளனர். மலைமீது
தங்கி கல்வி கற்க கூடம் போன்ற அமைப்பை உருவாக்க பயன்பட்ட மரத் தூண்கள் வைப்பதற்கான
குழிகள் மலையில் பல காணப்படுகின்றன. எனவே கீழக்குயில்குடி சிற்றூரில் வசித்து வந்துள்ள
மக்களால் இன்றும் இம்மலை ’சமணமலை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
பேச்சிப்பள்ளத்தில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் சமண மதத்தின் மிக முக்கிய தீர்த்தங்கரர்களான பாகுபலி, பார்சுவநாதர், முக்குடைநாதர் ஆகிய மூவரின் உருவங்கள் ஆகும். மேலும் அதனை செய்து கொடுக்க உதவியாக இருந்தவரின் பெயர் சிற்பங்களின் கீழே ‘வட்டெழுத்து’ கல்வெட்டுகளாக செதுக்கப் பட்டுள்ளது. இவை கி.பி 9 - 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அச்சணந்தி முனிவரின் தாயார் செய்வித்த சிற்பம், இங்கு செயல்பட்ட பள்ளியின் தலைவர் குணசேனதேவர் செய்வித்த சிற்பம், குறண்டி திருக்காட்டாம் பள்ளியிலிருந்து இச்சிற்பங்களை செய்தவர்களைப் பற்றி இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். கல்வெட்டுகளின் விளக்கம்,
1) ஸ்ரீ அச்சணந்தி தாயார் குணமதியார் செய்வித்த திருமேனி ஸ்ரீ
2) ஸவஸ்திஸ்ரீ இப்பள்ளி உடையகுணசேன தேவர் சட்டன் அந்தலையான் மாசேனன் மருமகன் ஆச்சஞ் சிரிபாலனைச் சார்த்தி செவித்த திருமேனி
3) ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேனதேவர் சட்டன் அரையங்காவிதி தங்கணம்பியைச் சார்த்திச் செய்விச்ச திருமேனி
4) ஸ்ரீ வெண்பு நாட்டு திருக்குறண்டி பாதமூலத்தான் அமித்தின் மரைகள் கனகன் தசெவிச்ச திருமேனி
5) ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி உடைய குண சேனதேவர் சட்டன் சிங்கடைப் புறத்து கண்டன் பொற்பட்டன் செய்வித்த திருமேனி ஸ்ரீ
6) ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரைக்காட்டாம் பள்ளி அரிஷ்டநேமி அடிகள் செய்வித்த திருமேனி
7) ஸ்ரீ மிழலைக் கூற்றத்து பாரூடையான் வேஸின் சடையனைச் சார்த்தி இவன் மணவாட்டி வெண்புணாட்டு நால் கூர் சடைய..
8) இப்பள்ளி உடைய குணசேன தேவர் மாணாக்கா.. சர் சந்திரப்பிரப, வித்த…
வரலாற்றில் இம்மலை அமணமலை, அமிர்தபராக்கிரமநல்லூர், திருவுருவகம், குயில்குடி என பல பெயர்களில் இந்த மலையும் ஊரும் அழைக்கப்பட்டுவந்துள்ளது. மலைக்கு மேலே மலையின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு பாறையில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (பிராமி) கல்வெட்டு ஒன்று உள்ளது. அதற்கு செல்லும் வழியில் (பேச்சிப்பள்ளத்திற்கு சற்று மேலே) கி.பி.10 நூற்றாண்டில் செயல்பட்ட மாதேவிப் பெரும்பள்ளி என்னும் சமணப்பள்ளியின் அடித்தளம் உள்ளது என்று சாந்தலிங்கம் அய்யா கூறினார்.
பேச்சிப்பள்ளத்திற்கு அருகிலிருந்த பாதை வழியாக மலைமீது மாதேவிப் பெரும்பள்ளி உள்ள மாதேவிப் பெரும்பள்ளி அமைந்திருந்த இடத்திற்கு குழுவினர் அனைவரும் வந்து சேர்ந்தோம். பள்ளியி அடித்தளம் மட்டும் காணப்பட்டது. அடித்தளத்தில் உள்ள கற்களில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு ‘பராந்தக வீரநாராயணன்’ (கி.பி.860-905) என்னும் பாண்டிய மன்னன் தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் கட்டியுள்ளான்.
‘ஸ்வஸ்திஸ்ரீ கோமாறஞ்சடையற்கு யாண்டு இருபத்தேழிதனெதிராண்டி னெ திரான் டு மாடக்குளக் கீழ் திருவுருவகத்து மாதேவிப் பெரும்பள்ளிச் சந்தம் நாட்டாற்றுப் புறத்து புளிங்குன்றூர் நீர்நில மிருவே லியாலும் கீழ்மாந்தரனமான் வயும் அதன்துடவரும் மேற்றி நில மிரண்டு மாவும் திருவுருவகத்து மலைக்கீழ் (போய்) யின வடகீழ் சிறபால வயக்கலு மிதன் தென்வய’ என்பது அடித்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டின் வாசகம்.
இக்கல்வெட்டு வீரநாராயணனின் 29 ஆம் ஆட்சியாண்டான கி.பி.889ல் வெட்டபட்டுள்ளது. இதன் மூலம் இம்மலைக்கு ‘திருவுருவகம்’ என்ற பெயர் இருந்ததும், இப்பள்ளியின் பராமரிப்புக்காக ‘மாடக்குளக்கீழ்’ என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்த புளிங்குன்றூரில் இரு வேலி நிலம் கொடையளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது. புளிங்குன்றூர் என்னும் ஊரே இன்று சமணப்படுகைகள் அமைந்துள்ள கொங்கர் புளியங்குளம் ஊராகும். இந்த சமணப்பள்ளி இடிந்தபின் இங்கிருந்த இயக்கியர் உருவங்களை கீழே உள்ள அய்யனார் கோயிலில் வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். குளத்தை ஒட்டி அமைந்துள்ள அய்யனார் கோயில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது.
மாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளத்தை கண்டுவிட்டு மேற்கு பகுதியில் உள்ள தமிழி (பிராமி) கல்வெட்டைக் காண மலையேறிச் சென்றோம். செல்லும் வழியின் இடது புறத்தில் கிழக்கிலிருந்து மேற்காக செல்லும் மிகப்பெரிய நீண்ட மலை ஒன்று அமைந்துள்ளது. அதன் உச்சியில் தீபத்தூண் ஒன்று உள்ளது. அங்கு கன்னடம் மற்றும் தமிழில் சில கல்வெட்டுகள் உள்ளது. அவை கர்நாடகாவில் உள்ள சரவணபெளகுளம் பகுதியிலிருந்து வந்து சென்ற சமணத்துறவிகளின் பெயர்களாக இருக்கலாம் என சாந்தலிங்கம் அய்யா கூறினார் நேரம் குறைவாக இருந்ததாலும், அங்கு செல்ல உயரம் அதிகம் என்பதாலும் குழுவினர் தமிழி கல்வெட்டு உள்ள பாறையை நோக்கிச் சென்றனர்.
மலையின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள பாறையின் கீழ் தமிழி (பிராமி) கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு 2012ல் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் திரு.முத்துக்குமார் கண்டுபிடித்துள்ளார். இக்கல்வெட்டை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு வல்லுநர்கள் முனைவர் பொ.இராசேந்திரன், சொ.சந்திரவாணன் மற்றும் சொ. சாந்தலிங்கம் அய்யா ஆகியோர் படித்து கல்வெட்டைப் படியெடுத்துள்ளனர்.
‘பெருதேரூர் குழித்தை அயஅம்’ என 13 எழுத்துக்களை இத்தமிழி (பிராமி) கல்வெட்டு கொண்டுள்ளது. இதன் காலம் கி.மு 2ம் நூற்றாண்டு. பெருந்தேரூரார் செய்த கற்படுக்கை என்பது இதன் பொருளாகும்.
மலைமேலிருந்து சுற்றிலும் பார்க்கும் பொழுது தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், மதுரை மாநகர், திருப்பரங்குன்றம், நாகமலை, பசுமலை, ஆணைமலை எல்லாம் காலை வெண்பனி மேகங்களுக்கிடையே அழகாய் தெரிந்தது. மலைமீது இருந்த அனைத்து சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் வரலாற்றுத் தகவல்களாக அனைவரும் அறிந்துகொள்ள வசதியாக புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டொம்.
மலையை விட்டு கீழிறங்கி கீழே உள்ள அய்யனார் கோயிலுக்கு சென்றோம். நுழைவாயிலில் இரண்டு வாயிற்காவலர்கள் நம்மை வரவேற்கின்றனர். நுழைவாயில் பகுதியை தாண்டியதும் குதிரைகளில் கையில் அருவாளோடு கருப்பணசாமி காட்சி தருகிறார். உள்ளே அய்யனார் மற்றும் கருப்பசாமி போன்ற நாட்டுப்புறத்தெய்வங்கள் உள்ளன. பின்னர் அங்கிருந்து மலையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள செட்டிப்புடவு நோக்கி குழுவினர் அனைவரும் சென்றோம். செட்டிப்புடவு பற்றிய செய்திகளை அறிய இந்த சொடுக்கியை அழுத்திப் படிக்கவும்.
பல பல அறிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு தந்ததை பாராட்டுகிறேன்...
பதிலளிநீக்குநன்றிகள்...