இந்த மாதம் (ஆகஸ்டு 26,
2012) வரலாற்றை அறிந்து கொள்ளும் பயணமாக மாடக்குளம் கண்மாய்க்கு ‘பசுமை நடை’ குழுவோடு இணைந்து சென்று வந்தேன். அதிகாலையிலேயே நண்பர்களோடு சேர்ந்து பைப்பாஸ் ரோட்டில் உள்ள நட்ராஜ் தியேட்டர்க்கு அருகில் சந்திப்பு இடம் கூறப்பட்டிருந்தது. 6.30 மணியளவில் பசுமை நடை நண்பர்கள் அனைவரும் சந்திக்கும் இடம் வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து மாடக்குளம் சிற்றூர் வழியாக கண்மாய் அமைந்துள்ள பகுதியை நோக்கி சென்றோம். இங்குள்ள பெரிய கண்மாயின் பெயரால் இவ்வூரே மாடக்குளம் என்று அழைக்கப்படுகிறது.
மாடக்குளம் சிற்றூர் மக்கள் எங்கள் அனைவரையும் பார்த்து திகைத்து நின்றனர். இவ்வளவு பேர் கூட்டமாக எங்கே செல்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினர். உங்கள் ஊர் கண்மாயை பார்க்க போகிறோம் என்றோம். அவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தினர். அந்த கம்மாக்குள்ள என்னத்த பாக்க போறீக என்றனர். அங்கு பாண்டியர் கால வரலாற்று தகவல்கள் உள்ளது, அதத்தான் பாக்க போறோம் என்றோம். சிற்றூரை கடந்து கண்மாய் கரையை வந்தடைந்தோம்.