27 ஆக., 2012

மாடக்குளம் கண்மாயும் சித்திரமேலி குழுவும்...

இந்த மாதம் (ஆகஸ்டு 26, 2012) வரலாற்றை அறிந்து கொள்ளும் பயணமாக மாடக்குளம் கண்மாய்க்குபசுமை நடைகுழுவோடு இணைந்து சென்று வந்தேன். அதிகாலையிலேயே நண்பர்களோடு சேர்ந்து பைப்பாஸ் ரோட்டில் உள்ள நட்ராஜ் தியேட்டர்க்கு அருகில் சந்திப்பு இடம் கூறப்பட்டிருந்தது. 6.30 மணியளவில் பசுமை நடை நண்பர்கள் அனைவரும் சந்திக்கும் இடம் வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து மாடக்குளம் சிற்றூர் வழியாக கண்மாய் அமைந்துள்ள பகுதியை நோக்கி சென்றோம்இங்குள்ள பெரிய கண்மாயின் பெயரால் இவ்வூரே மாடக்குளம் என்று அழைக்கப்படுகிறது. 
மாடக்குளம் சிற்றூர் மக்கள் எங்கள் அனைவரையும் பார்த்து திகைத்து நின்றனர். இவ்வளவு பேர் கூட்டமாக எங்கே செல்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினர். உங்கள் ஊர் கண்மாயை பார்க்க போகிறோம் என்றோம். அவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தினர். அந்த கம்மாக்குள்ள என்னத்த பாக்க போறீக என்றனர். அங்கு பாண்டியர் கால வரலாற்று தகவல்கள் உள்ளது, அதத்தான் பாக்க போறோம் என்றோம். சிற்றூரை கடந்து கண்மாய் கரையை வந்தடைந்தோம்.


மிகவும் பெரிய கண்மாய். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர்தான் இல்லை. கண்மாயின் உள்ளே ஒரு சுமார் கி.மீ தூரம் கடந்து தொலைவில் சில குடியிருப்புகள் காணப்பட்டன. இது என்னடா கண்மாய்குள்ள சில குடியிருப்புகள் என்று நண்பர்கள் பேசிக் கொண்டே கண்மய்க்குள் இறங்கினோம். கண்மாயில் தண்ணீர்தான் இல்லை, ஆனால் ஈரபதம் நிறைய இருந்தது. கண்மாய் முழுவதும் பச்சை பசேல் எனக் காட்சி தந்தது. கண்மாய்க்கு உள்ளே சிறு கீரைகள், கொடிகள், பயிர் என விவசாயம் செய்யப்பட்டிருந்தன.
கண்மாயில் இருந்து பார்த்தால் அருகில் சமணமலை, பசுமலை, கபாலிமலை ஆகியவை தெரிந்தது. கண்மாய்க்குள் கல்வெட்டு வெட்டப்பட்டிருந்த கல்லிற்கு முன் அனைவரும் அமர்ந்தோம். கல்வெட்டின் மேல் சேறு அப்பியிருந்ததால் வார்த்தை வரிகள் தெளிவாக தெரியவில்லை. நண்பர்கள் சிலர் கொண்டு வந்திருந்த நீரால் கல்லை கழுவி கல்வெட்டை தெரிந்து கொள்வதற்கு வழி செய்தனர். பின்னர் எழுத்தாளர் .முத்துக்கிருஷ்ணன் மாடக்குளம் பசுமைநடைக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். இம்முறை நடையில் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மற்றும் ஆழ்கடல் ஆய்வுகள் செய்து வரும் அறிஞர் அதியமான் அவர்களும் வந்திருந்தனர்.
சாந்தலிங்கம் அய்யா மாடக்குளத்தின் வரலாற்றுச் சிறப்புகளை சொன்னார். மாடக்குளம் மதுரையின் மிக முக்கிய தொன்மையான இடங்களுள் ஒன்று. இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதுமக்களின் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மாடக்குளம் சிற்றூர் முன்பு சிறிதாகயிருந்து பின்பு விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. மாடக்குளம் அழிந்தால் மதுரையில் பாதி அழியும் என்ற ஒரு சொலவடை (பழமொழி) இப்பகுதியில் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மாடக்குளம் கண்மாயின் அளவு மிகப் பெரியதாய் உள்ளது. அதன் நீர் கொள்ளவை மழைக் காலங்களில் நீர் நிரம்பிய நேரத்தில் பார்த்தால் கடல் போன்று காட்சி தரும்.

கண்மாய்குள் உள்ள இந்த கல்லில் செதுக்கப்பட்ட குறியீடுகள், வரிகள் எல்லாம் 12ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. கல்லின் மேற்பகுதியில் குடை, சாமரம், குத்து விளக்கு மற்றும் விவசாயக் கருவிகளான அரிவாள், கலப்பை (ஏர்) சின்னங்கள் காணப்படுகிறது. இதிலிருந்து இப்பகுதியில் வேளான் சமூகமும் வணிக சமூகமும் இணைந்து வாழ்ந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. கல்லின் பின்புறத்தில் சில துவாரங்கள் வரிசையாக காணப்பட்டன. இத்துவாரங்கள் நீரின் அளவை குறிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம்.
மன்னர் ஆட்சி காலத்தில் பிராமணர்களுக்கு அரசர்களால் ஏராளமான நிலங்கள் கொடையாக கொடுக்கப்பட்ட பிரம்மதேயங்களின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இணைந்து சித்திரமேலி பெரிய நாட்டார் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். பிராமணர்கள் மற்றும் அரசர்களை எதிர்த்து வேளாண் விவசாய அமைப்புகளும், வணிகக் குழுக்களும் இணைந்து உருவாக்கியது தான் இந்த அமைப்பு. இந்த அமைப்பின் பல போராட்டங்களின் மூலம் அவர்களிடம் இருந்த நிலங்களை கிராம மக்கள் மீட்டனர். சித்திரமேலி பெரிய நாட்டார் அமைப்பைச் சேர்ந்த மக்கள் தங்களை பூமாதேவியின் மக்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டனர். பிராமணர்களிடம் இருந்த பெருமாள் கோயில்களை மீட்டனர். மேலி என்றால் கலப்பை. சித்திரமேலி என்றால் அழகிய கலப்பை. இவர்கள் கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமனை வணங்கினார்கள்.
இவர்கள் தங்களுக்கான கல்வெட்டுகளை அமைக்கும் போது அதில் தங்கள் முக்கியச் சின்னங்களை செதுக்கியுள்ளனர். இங்கு காணப்படும் கல்லில் உள்ள கல்வெட்டில் இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான் என்ற வாசகம் காணப்படுகிறது. 12ம் நூற்றாண்டில் இக்குளத்தை விரிவுபடுத்தி புதிய கால்களை அமைத்து உருவாக்கியதைக் இக்கல்வெட்டின் மூலம் அறியலாம். எரிவீரகணத்தான் என்பது திசையாயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவின் படையமைப்பிலுள்ள வீரர்களைக் குறிக்கும். அந்தக் காலத்தில் வணிகக்குழுவினர் தங்கள் பொருட்களை விற்பனைக்காக ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது பாதுகாப்பிற்காக தங்களுடன் வில்வீரர்களை அழைத்துச்செல்வர். அந்த வில்க்குழு வீரர்களுக்கு எரிவீரர், முனைவீரர், குடைவீரர் என்ற பெயர்கள் உண்டு. பொருட்களை கொண்டு செல்ல யானைப்படை கொண்ட வணிகக்குழுக்கள் இருந்துள்ளன.
இங்கிருந்து சற்று தூரத்தில் கண்மாயின் மேற்கு பகுதியில் இன்னொரு மடை பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த மடைக்கு திருவாலவாயன் மடை என்று பெயர். திருவாலவாயன் என்ற பெயர் மதுரை மீனாட்சி சொக்கநாதரை குறிக்கும். மதுரைக்கு ஆலவாய் என்றும் பெயருண்டு. இந்த மடையை ஆலவாய் உடையான் அதிகாரி என்பவரே கண்காணித்துள்ளார். கல்வெட்டுக்களில்  மாடக்குளக்கீழ் மதுரை என்றே குறிக்கப்பட்டது.
இதில் குளக்கீழ் என்பது இன்றைய தாலுகா போன்ற பகுதி எனலாம். வீரநாராயணக்குளக்கீழ், ராஜசிங்கங்குளக்கீழ் என்றெல்லாம் பாண்டியநாட்டில் சில இடங்கள் உள்ளன. வீரநாராயணக்குளக்கீழ் என்பது திருப்புவனம். ராஜசிங்கக்குளக்கீழ் என்பது இராமநாதபுரத்திலுள்ள பெரிய கண்மாயைக் குறிக்கும்.
மாடக்குளக் கண்மாயின்கீழ் திருப்பரங்குன்றம், குலசேகரபுரம், அரியூர் போன்ற பகுதிகள் பாசன வசதிகள் பெற்று வந்தன. மாடக்குளத்தை மதுரோதய வளநாட்டு மாடக்குளம் என்றும் குறிப்பிடுவார்கள். மதுரையை பெரிய நாடாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மாடக்குளத்திலிருந்து நீர் வந்து பாசனம் செய்த பகுதிகள் எல்லாம் இன்று குடியிருப்புகளாகிவிட்டன.
சாந்தலிங்கம் அய்யாவிற்கு பின், ஆழ்கடல் ஆய்வுகள் செய்து வரும் அதியமான் பசுமைநடையை சிறப்பாக நடத்திவரும் முத்துக்கிருஷ்ணனைப் பாராட்டுகிறேன். சாந்தலிங்கம் அவர்களையும் பாராட்டுகிறேன். ஒவ்வொரு ஊரிலும் இதுபோல தங்கள் பண்பாட்டைக் காக்க விரும்பினால் உலகிலேயே சிறந்த பண்பாட்டைக் கொண்டவர்களாக நாமிருப்போம். தொல்லியல் ஆய்வுகள் எல்லாமே மதுரையிலிருந்து ஆரம்பிப்பது வழக்கம். கடைச் சங்ககாலம் இருந்த தடயங்களை மதுரையை சுற்றியுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். நான் இங்கு வந்திருப்பது கூட பூம்புகார் பற்றிய கடலாய்வை மதுரையில் கிடைத்த பல ஆய்வுத் தகவல்களோடு இணைத்து துவங்கினால் இன்னும் நிறைய செய்திகள் கிடைக்கும் என்பதே.
எழுத்துகள் மதுரையிலிருந்தே வடக்கே சென்றிருக்க வேண்டும். சமீபத்தில் கூட கீழ்குயில்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையைய கல்வெட்டை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற விசயங்களை பொதுமக்களுக்கு எடுத்துச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மலைகள் குவாரிகள் ஆகாமல் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வையூட்ட வேண்டும். தஞ்சாவூரில் கூட இதுபோன்ற அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டதுஎன்றார். பசுமைநடை மென்மேலும் வளர்ந்து பல வரலாற்றுத் தகவல்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.
நண்பர்கள் அனைவரும் கல்வெட்டு இருந்த கல்லை புகைப்படம் எடுத்துக் கொண்டு மாடக்குளம் கண்மாய் அருகிலுள்ள கபாலிமலையை நோக்கி நடந்தோம். காபாலி மலைக்கு அருகில் கண்மாய் கரையின் ஓரத்தில் கருப்பசாமி கோயில் உள்ளது. மலையேறிச் செல்வதற்கு படிகள் அமைக்கப்பட்டிருந்தது. குறைந்த பட்சம் நானூறுக்கும் மேற்பட்ட படிகள் உள்ளன. இதனால் மேலே செல்வதற்கு சற்று சிரமமாக இருந்தது. மலையின் உச்சியை அடைந்த பின் பெரும் ஆசுவாசத்திற்கு  பிறகு, அங்கிருந்து சுற்றிப்பார்த்தால் அருகில் பசுமலை, கூடைதட்டிப்பரம்பு, திருப்பரங்குன்றமலை, தென்கால் கண்மாய் சமணமலை எல்லாம் தெரிந்தது.

தொலைவில் நாகமலை, கொங்கர் புளியங்குளம் மலை, முத்துப்பட்டி மலை, சிறுமலை, வயித்துமலை, நத்தம்மலை, யானைமலை, மீனாட்சியம்மன் கோயிலின் நான்கு கோபுரங்களும் சிறிதாய் தெரிந்தது. மலையிலிருந்து கண்மாயை பார்த்தோம் மிகப் பெரிதாக இருந்தது. கண்மாயின் நடுவே முன்பு இருந்த மதுரை - போடி தொடர்வண்டி பாதையின் தடம் காணப்பட்டது. மீண்டும் தொடர்வண்டி இப்பக்குதியில் இயக்கப்படும் என்ற செய்தியை படித்திருந்தேன். அது நடைபெற வேண்டும் நாமெல்லாம் அதில் பயணம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்மலைமீது கபாலிஈஸ்வரி மற்றும் அலங்காரி அம்மன் கோயிலும் உள்ளது. இங்கு வந்து கிராமமக்கள் வழிபட்டுச் செல்கின்றனர். மலையிலிருந்து இறங்கினோம். ஏறும் பொழுது உள்ள சிரமம் இறங்கும் போது தெரியவில்லை.
நானும் சில நண்பர்களும் அருகிலுள்ள 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த மடையை பார்த்துவிட்டு திரும்பினோம். இம்முறை சென்னையிலிருந்து நண்பர் பாபு பசுமைநடைக்கு வந்திருந்தார் அவரோடு சற்று நேரம் பேசிவிட்டு, அருகிலுள்ள அய்யனார் கோயிலுக்கு அருகிலிருந்த மரத்தடியில் அனைவரும் அமர்ந்தோம். பசுமைநடை குழுவினர் வழங்கிய காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக