எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் அழகிய மலைக் குன்று திருப்பரங்குன்றம்.
திருப்பரங்குன்றம் மதுரையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலம் செல்லும்
நெடுஞ்சாலையில் (இடது புறம்) கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள
முருகன் கோவிலுக்கு பல முறை சென்றிருந்தாலும், மலைமீது செல்லாதது ஒரு குறையாகவே இருந்து
வந்தது. மலைமீது சிக்கந்தர் சுல்தான் பள்ளிவாசல் மற்றும் காசி விசுவநாதர் கோவில் என திருப்பரங்குன்றம் மலை சமயங்களின் நல்லிணக்கப் பகுதியாக திகழ்ந்து வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவதாக கருதப்படும் திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தமிழிக் (பிராமி) கல்வெட்டுகள் மூலம் அதனை நாம் அறிந்து கொள்ள
முடிகிறது. மலைமீதுள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள சுனையில் 2000 வருட பழமையான
தமிழிக் (பிராமி) கல்வெட்டு ஒன்று சென்ற மாதம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம்
2000 வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் இங்கு தங்கி வாழ்ந்துள்ளனர் என்ற் வரலாற்றுச்
செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த வரலாற்றுப் பகுதிக்கு
பசுமை நடை மூலம் சென்று அவைகளை எல்லாம் கண்டு வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது, பெரும்
மகிழ்வை தந்தது.