கலை என்பதற்கு, கற்பதற்குரியவை அனைத்தும் கலை எனப்படுகிறது. எளிமையாக கற்கக்கூடிய செயல்களை கலைகள் என்றும், நீண்ட கால பயிற்சி முறைகளை கொண்டு அடக்கியவைகளை நுண்கலைகள் என்று அழைத்தனர். ஆதிகாலங்களில் மனிதர்கள் கலையை அதிகம் போற்றி வளர்த்தனர். மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏற்றவாறு ஒரு கலை தொடர்ப்பில் இருந்துள்ளது. இயல், இசை மற்றும் கூத்து (இன்று நாடகமாக மாறியுள்ளது) போன்றவைகள் கலைகளின் தொகுப்பாக அமைகிறது.
கலையை ரசிக்க யாரும் சொல்லியோ, பழகியோ தரவேண்டியதில்லை, அது நம் ரத்தத்தில் கலந்துள்ளது. எங்காவது கலை நிகழ்ச்சிகளின் ஆட்டம் பாட்டமோ, அல்லது சத்தமோ வந்துவிட்டால் நம்மையறியாமல் ஒலி வரும் திசை நோக்கி நகர்வோம். இது இயல்பு. அந்த அளவிற்கு நாட்டுப்புறக் கலைகள் நம் வாழ்வோடு ஒருங்கிணைந்துள்ளது.
இன்று நாட்புறக்கலைகளை பார்க்க வேண்டும் என்றாலே அதற்கு ஒரே வழி சென்னைத் தொலைக்காட்சி மட்டுமே. நானும் அதில்தான் கண்டிருக்கின்றேன். தற்போது, மக்கள் தொலைக்காட்சியிலும் நாட்டுப் புறகலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். நாட்டுப்புறக்கலைகள் இன்று வேகமாக வளர்ந்துவரும் மேற்கத்திய நாகரிகத்தில் மெல்ல பின் தள்ளப்பட்டு வருகின்றன. எவ்வளவுதான் பின்னால் தள்ளினாலும், திரைப்படங்களில் மேற்கத்திய சாரல்களில் நான்கு பாடல்களும், நாட்டுப்புறப் பாடல் மெட்டில் ஒரு பாடல் இருந்தால்! நாட்டுப்புறப் பாடலின் வெற்றிதான் முக்கிய பங்கு வகிக்கும். இது அனைவரும் அறிந்தது. சின்ன உதாரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘கும்கி’ திரைப்படத்தில் வந்த “ சொய்ங் சொய்ங் “ பாடல்களின் வெற்றி ஒன்றே போதும் நமது பண்பாடு நிறைந்த நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவம் என்னவென்று.
நாட்டுப்புறக்கலைகளில், கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், தெம்மாங்கு, காவடியாட்டம், புலியாட்டம் என பல்வேறு கலைகள் உள்ளன. இதில் புதிதாக கண்களுக்கு காணக்கிடைத்த ஆட்டம் தான் ஜிக்காட்டம்.
இந்த ஆட்டத்தில், முரசு போன்ற அமைப்பை உடைய வாத்தியத்தையும், ஜில், ஜில் என ஒலி தரும் உருட்டுவையும் கொண்டுள்ளனர் இசைக் குழுவினர். இதில பெரிய முரசுகளை கையாளும் நால்வரும், சிறிய ரக முரசுகளை கையாளும் ஐவரும், ஜில், ஜில் என ஒலி தரும் உருட்டுவை கையில் கொண்ட ஒரு நபரும் உள்ளனர். ஆட்டக் குழுவில் ஆறு பேர் என ஜிக்காட்டக் குழுவில் மொத்தம் 16 பேர் உள்ளனர். இவர்களது ஆட்டமுறையில் ஒயிலாட்டமும், டிஸ்கோவும் கலந்து ஆடப்படுகிறது. ஆடுபவர்களில் ஒருவரிடம் மட்டும் விசில் ஒன்று உள்ளது. அவரின் விசில் சமிஞ்சைகளுக்கு ஏற்றவாறு ஆட்டத்தின் அடவு முறை மாற்றப்படுகிறது.
இசையும் ஆட்டமும் நம்மை கிரங்கடித்து கொண்டிருந்தது. முரசுப் போன்ற வாத்தியத்தை வாசிப்பவர்களின் திறமையை எழுத்துக்களில் விவரிக்க முடியவில்லை. ஜிக்காட்டக் கலைஞர்கள், கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் அதிகம் வசிக்கின்றனர். கோவில் திருவிழாக்களில், தமிழர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து வருகின்றனர். இவர்களை போன்ற கலைஞர்களை நமக்கு நெருங்கிய விழாக்களில், சுபநிகழ்ச்சிகளில் வாய்ப்பளிப்பதன் மூலம் இக்கலையை அனைவரும் அறிய செய்திட முடியும். அத்தோடு கலையையும் வாழச் செய்தவாறும் அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக