29 ஜூன், 2013

கருங்காலக்குடியும் தமிழ் பிராமி கல்வெட்டுகளும்...

கதிரவனே துயில் கலையாத காலை பொழுது. பேருந்தில் பயணம். பேருந்தின் அனைத்து சன்னல்களும் அடைத்தே காணப்பட்டது. மதுரை மாட்டுதாவணிக்கு பயணசீட்டை எடுத்துக் கொண்டு முன் இருக்கையில் அமர்ந்தேன். வெளியே சாலையோர தேநீர் கடைகளில் பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கையில் மெல்ல நகர்ந்தது பேருந்து. மதுரைக்கான சுற்றுசாலை வழியாக பயணம் தொடர்ந்தது. பயணங்களில் அதிகாலை பயணத்தில் மட்டும்தான் அமைதியைக் காணமுடிகிறது. மாட்டுத்தாவணியை நெருங்கிக் கொண்டிருக்கையில் கதிரவனின் துயில் மெல்ல கலைந்தது. மேகங்கள் சூழ்ந்த வானம் அழகாக காட்சி தந்தது. சில நிமிடங்களில் பேருந்து நிலையம் வந்தது. பேருந்து நிலையத்தின் எதிரேயுள்ள இடத்திலிருந்து தான் இன்றைய பசுமை நடை பயணம் ஆரம்பம்.

மிதமான குளிர்காற்றும் லேசான மழைத் தூரலும் போட்டி போட்டு கொண்டிருந்தது. ஐந்தாறு நண்பர்கள் முன்னரே வந்திருந்தனர். அவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். புதிய நண்பர்களின் வருகை அதிகமாக இருந்தது. மேலூருக்கு அருகிலுள்ள கருங்காலக்குடி மலைப்பகுதியை நோக்கிதான் இன்றைய 23 வது பசுமை நடைப் பயணம். பசுமை நடை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த சிற்றுந்து மற்றும் பேருந்தில் நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து அடுத்த பயணம் துவங்கியது. மழைச் சாரல் நின்று குளிர்காற்று சன்னல் வழியாக வந்து கொண்டிருந்தது.

மேலூரிலிருந்து திருச்சி செல்லும் நான்கு வழிசாலையின் வலதுபுறம் கருங்காலக்குடி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. ஊரின் மத்தியில் உள்ள ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து மலை உள்ள கிழக்கு திசை நோக்கி அனைவரும் நடந்தோம். சிற்றூரின் புறப்பபகுதியில் செல்லும் வழியில் சிறு குன்றுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பல குன்றுகள் குவாரிகளால் சிதலமடைந்து இருந்தது. வழியில் இடப்புறத்தில் உள்ள குன்றின் கீழ் மிகப்பெரிய ஊரணி ஒன்று சுற்று சுவர்கள் கட்டப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. ஊரணி நீர் குடிநீராக பயன்படுத்தப்படுவதே இதன் முக்கிய காரணம்.

மழை வருவது போல மேகம் சூழ்ந்திருந்ததால் சூழல் மிகவும் ரம்மியமாகயிருந்தது. அங்கிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருந்தது பஞ்ச பாண்டவர் குகை. இந்த மலைக்குகை தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் அமைந்துள்ளதால் பாதுகாப்பாக இன்று வரையிலும் உள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் தொல்லியல் துறையினரின் அறிவிப்பு பலகையின் நிலைதான் இம்மலையின் பழமையை நமக்கு உணர்த்தியது.

கருங்காலக்குடி என்ற ஊரின் பெயர் கருங்காலிப்பட்டி என்று இருந்து பின்னர் சொல் திரிந்து கருங்காலக்குடியாக மாறியுள்ளது. கருங்காலிப்பட்டி என்ற பெயரில் காலகாலி என்பது கன்றுகுட்டியை குறிக்கும். பட்டி என்பது கால்நடைகளை அடைத்து வைக்கும் இடமாகும். கருமையான கன்று குட்டிகளை வளர்த்த இடையர் இனம் (குடி) இங்கு வாழ்ந்திருப்பதால் கருங்காலக்குடி’ என்று மாறியுள்ளது என்று தொல்லியல் அறிஞர். சொ.சாந்தலிங்கம் அய்யா கூறினார். கருங்காலக்குடி பஞ்ச பாண்டவர் குன்றில் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும், வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகிறது.

இயற்கையாகவே இம்மலை குகை போன்று அமைந்துள்ளது. குகையின் கீழ்த் தளத்தில் சுமார் 30 கற்படுகைகள் வெட்டப்பட்டுள்ளன. சுமார் இருபது துறவிக்கு மேல் இங்கு தங்கி வாழ்ந்துள்ளதை அறிவிப்பு பலகை மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. குகையின் முகப்பில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு அதன்கீழ் தமிழ்பிராமிக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

 ’ ஏழைய் ஊர் அரிதின் பளி ‘

என்ற தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இவ்விடம் இடையர்கள் வாழ்ந்த பகுதி என்பதால்இடையூர்என்பதே பின்னர்ஏழையூர்’ என அழைக்கபட்டு இருக்கலாம். ஏழையூர் அரிதின் என்பவர் செய்த அறப்பள்ளி என்பது இதன் பொருள். இங்கு வாழ்ந்து வந்துள்ள சமண துறவிகளுக்காக கற்படுகைகள் வெட்டப்பட்டுள்ளது.


இக்குகை சமணபள்ளியாகவும், மக்களுக்கு அன்னதானம், அடைக்கலதானம், அறிவு தானம், ஒளசதானம் (மருத்துவக் கொடை) என பலவகையில் மக்களுக்கு சமணத் துறவிகளால் உதவிகள் செய்யப்பட்டுள்ளது. கற்படுகைகளுக்கு அருகில் உள்ளகல்லுவம்’ என்னும் மருந்து அரைக்கும் சிறு குழியான அமைப்பும், பாதம் போன்ற குழியான அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது. இது போன்ற கல்லுவம் அமைப்பு யானைமலையிலும், திருப்பரங்குன்றம் குகைப்பள்ளியிலும் காணப்படுகிறது. குகைத் தளத்தில் உள்ள கற்படுகைகளுக்கு செல்லும் முன் கீழே உள்ள சிறு படியில்பூதகணங்கள்’  சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது

” ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேணி “

குகைத் தளத்தின் இடதுபுறமுள்ள கற்பாறையில் சமணத் துறவியானஅச்சணந்தி’ என்பவரின் உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேணிஎன்ற கி.பி 9-10 ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டும் வெட்டப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களுக்கு பிறகு சமண மதத்தை தமிழ்நாடு முழுவதும் வழி நடத்தி சென்றவர்அச்சணந்திஆவார். இந்த அச்சணந்திதான் மதுரை நின்றசீர் நெடுமாறன் வெப்பு நோய் தீர்ந்து சைவத்தை தழுவிய பிறகு ஏற்பட்ட தொய்விலிருந்து சமணத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர். அச்சணந்தி தென்முனையான கன்னியா குமரியில் உள்ள சிதரால் உட்பட தமிழ்நாட்டின் எல்லா சமணத் தளங்களுக்கும் சென்றுள்ளார் (கழுகுமலை தவிர).

குகைத் தளத்தின் வலது புறமாக குகைக்கு மேலே உள்ள மலைக்குச் செல்ல படிகள் தொல்லியல் துறையினரால் வெட்டப்பட்டுள்ளதுகுகைத்தளத்திற்கு மேலேயும் பல உருளை வடிவ பாறைகள் நின்று கொண்டிருந்தனஇங்கும் சில கற்படுகைகளும்கி.பி 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு வரிகள் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது.

” பள்ளி தரையன்........... “

பள்ளி தரையன்’ என்னும் வார்த்தையை மட்டும் தொல்லியல் நிபுணர்களால் அதிலிருந்து அறிய முடிகிறது. கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளதால் அதில் மேலும் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிய முடியவில்லை என்றும் சாந்தலிங்கம் அய்யா கூறினார்கி.பி 10 ம் நூற்றாண்டு முற்கால பாண்டியர்களின் அரசியல் காலம்அக்காலத்தில் தரையன் என்பவரால் இக்குகைத் தளங்கள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது என்பதனை இக்கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறதுஅரையன் என்பது சிற்றசரைக் குறிக்கும்எனவே இப்பகுதியை சேர்ந்த சிற்றரசன் ஒருவன் இதனை பாதுகாத்து பராமரித்து வந்துள்ளான்மேலும் அரையன் என்னும் சொல் திரிந்து தரையன் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

மலைக்கு மேலே உள்ள பாறை ஓவியங்களைப் பற்றி படிக்க கீழே உள்ள் சுட்டியை அழுத்தவும். 

படிக்க : கருங்காலக்குடியும் கற்கால பாறை ஓவியங்களும்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக