27 ஜூலை, 2013

கழிஞ்சமலை தமிழி கல்வெட்டுகள்...



கழிஞ்சமலைத் தொடரில் பல விதமான பாறைகளின் வித்தியாசமான உருவங்களையும், அவைகளின் புவியியல் அமைப்பையும் கண்டபடியே நடந்து கொண்டிருந்தோம். வழியில் கண்ட சிறுகுன்றின் மீது நிற்கும் ஒரு பாறையின் இந்த காட்சி மீண்டும் மனதைவிட்டு அகலாமல் கல்லாய் நிற்கிறது.

குகைத்தளம் அமைந்துள்ள இடத்திற்கு செல்வதற்கு முன் ஒரு பாறைக்கு அருகே பல மணிகள் இரண்டு கற்தூண்களுக்கு நடுவே கம்பி ஒன்றில் தொங்கவிடப் பட்டிருந்தது. இந்த மணிகள் அனைத்தும் மக்களின் வேண்டுதலாக இருக்க வேண்டும். அருகில் தெய்வங்களின் உருவங்கள், சிலைகள் ஏதும் காணப்படவில்லை. மலைப் பாறையையே தெய்வமாக இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வருவதாக அருகில் இருந்த சில குடியிருப்பு வாசிகள் கூறினர். இயற்கை சில இடங்களில் தெய்வமாக வழிபடுவதை காணும் பொழுதெல்லாம் மனம் நிறைவு அடைகிறது. கோயில் மணிகளை பார்த்துவிட்டு பின்னர் அருகில் இருந்த குகைத் தளத்திற்கு சென்றோம்.
குகைத்தளம் மலையை ஒட்டிய பாறை ஒன்றுக்கு கீழ் இயற்கையாக அமைந்துள்ளது. குகைத் தளத்தின் பல பகுதிகள் சிதைந்து காணப்படுகிறது. உள்ளே சில கற்படுக்கைகள் உடைந்த நிலையில் காணப்பட்டன். இது எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பது பற்றி தெரியவில்லை. பாறையின் நெற்றியில் காடி (விளிம்பு) வெட்டப்பட்டு மழைநீர் கற்படுக்கையின் உள்ளே புகாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. குகைத்தள விளிம்பில் கி.மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு தமிழிக் (பிராமி) கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
தொல்லியல் துறையை சேர்ந்த கே.வி இராமனுஜம், எ.சுப்பராயலு அவர்களால் 1971ல் இங்குள்ள தமிழிக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. 2003ல் தொல்லியல் அலுவலர்களால் மற்றொரு தமிழிக் கல்வெட்டும் கண்டறியப்பட்டது. இம்முறை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா வர இயலாத காரணத்தால், கல்வெட்டு தகவல்களை பசுமை நடை குழுவினர் வழங்கிய அரிட்டாபட்டி பற்றிய தொல்லியல் கைப்பிரதி மூலம் வரலாற்று செய்திகளை அறிந்து கொண்டோம். அவை,
’ நெல் வெளி இய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதோன் ‘
நெல்வேலியைச் சேர்ந்த சிழிவன் அதினன் வெளியன் என்பவன் இக்குகைத்தளத்தை அமைத்துக் கொடுத்தான் என்பதே இக்கல்வெட்டின் பொருள். இங்குக் குறிப்பிடப்படும் ‘நெல்வெளிய்’ என்பது இன்றைய திருநெல்வேலியாக இருக்கலாம். சிழிவன் என்பது ‘செழியன்’ என்னும் பாண்டியர் குடிப்பெயரின் சிதைந்த வடிவமாகலாம். அதினன் வெளியன் என்பது குகையை அமைத்துக் கொடுத்த கொடையாளியின் பெயர் எனக் கொள்ளலாம். முழாகை என்னும் சொல்லுக்குக் கற்குகை எனப்பொருள்.
’ இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன் இவ்முழ உகைய் கொடுபிதவன் ‘
என்பது இரண்டாவது கல்வெட்டு இதில் இலஞ்சி என்னும் ஊரைச் சேர்ந்த எளம்பேராதன் மகன் எமயவன் இந்தக் குகைத் தளத்தை உருவாக்கினான் என்பது இக்கல்வெட்டின் பொருள். இலஞ்சி என்னும் ஊரை இன்றைய குற்றாலத்திற்கு அருகில் உள்ள சிற்றூராக அடையாளம் காணலாம். நெல்வேலி, இலஞ்சி என்னும் இரு ஊர்களும் தென்பாண்டி நாட்டில் அமைந்துள்ளதால் அப்பகுதியில் தலைமையேற்று நிர்வாகம் செய்த பாண்டிய நாட்டுச் சிற்றரசர்கள் இக்குகைப் பள்ளியை அமைத்துக் கொடுத்தனர் என்று கருதலாம். இவ்விரண்டாம் கல்வெட்டு முதல் கல்வெட்டைக் காட்டிலும் சற்றுக் காலத்தால் முந்தியது.
இக்குகைத்தளத்துக்கு சற்று வெளியில் அமைந்தள்ள  பாறை ஒன்றில் கி.பி 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்குடைக்கு கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும், அதன் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகிறது. கல்வெட்டானது,
’ ஸ்ரீ திருப்பிணையன் மலை பொற்கோட்டு கரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்த திருமேனி பாதிரிக் குடியார் ரஷை ‘
இவ்வட்டெழுத்துக் கல்வெட்டிலிருந்து இந்த மலையின் பெயர் ’திருப்பிணையன் மலை’ என்றும், அதை பொற்கோட்டுகரணத்தார் என்னும் குழுவினர் உதவியோடு அச்சணந்தி இச்சிற்பத்தை செய்திருக்கிறார். பாதிரிக்குடி இன்றைய அரிட்டாபட்டியின் ஆரம்பகாலப் பெயராக இருந்திருக்க வேண்டும். சமணத் தீர்த்தங்கரர்களில் 22வது தீர்த்தங்கரரான நேமிநாதருக்கு அரிட்டநேமி என்ற பெயருமுண்டு. இவரது பெயரால் இவ்வூர் அரிட்டாபட்டி என்று அழைக்கப்பட்டிருக்கலாம். சிற்பத்தின் இருபுறமும் விளக்கும், சாமரமும் காணப்படுகிறது. இச்சிற்பம் மீது தீட்டப்பட்டுள்ள வண்ணம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் லேசாய் தெரிகிறது. அனைத்து வரலாற்றுச் செய்திகளையும் நிழற்படங்களாக பதிவு செய்து கொண்டு திரும்பினோம். 



திரும்பு வழியில் கழிஞ்சமலைக்கு எதிரே உள்ள மலையில் அமைந்த அணையைக் காணச் சென்றோம். மலைமீது அணையானது இரண்டு குன்றுகளுக்கு நடுவில் இயற்கையாக காணப்பட்டது. நீர் மட்டும் இல்லை. மழை காலங்களில் இங்கு இயற்கையாகவே நீர் சேமிக்கப்பட்டு, இங்குள்ள மக்களின் விவசாய பாசனத்திற்கு உதவுகிறது. இன்று ஒரு அணை கட்ட நிறைய செலவு ஆகும் நிலையில், இயற்கையே இப்படியொரு உதவியை செய்துள்ளது.
எனவே இவ்வணையை காக்க வேண்டுமென்றால், இம்மலைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். இம்மலையில் சுனை ஒன்று உள்ளது. சுனைநீர் மிகச் சுவையாகவும், செறிவாகவும் இருக்கும் என்றும், இச்சுனை நீரில்தான் குடைவரையிலுள்ள சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்படுகிறது என்று அப்பகுதி மக்கள் கூறினர். இப்படிப்பட்ட இயற்கையின் கொடை அமைந்துள்ள மலையின் மறுபுறத்தில் மலையை வெட்டி அறுக்கத் தொடங்கியதை இப்பகுதி மக்கள் தடுத்து ஆரம்பத்திலேயே அறவழியில் போராடி வெற்றி பெற்றுள்ளனர். இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் இம்மலையை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
மலையிலிருந்து இறங்கி மீண்டும் ஆணைகொண்டான் கண்மாய் வழியாக நடந்து வந்து கரையிலிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்தோம். நண்பர்கள் அனைவருக்கும் பசுமை நடைக் குழுவினர் வழங்கிய உணவை எல்லோரும் குழுவாக அமர்ந்து சாப்பிட்டோம். இந்த வரலாற்றுப் பயணத்திற்கு பேருந்து உதவி வழங்கிய குகன் அய்யா அவர்களுக்கு நன்றிகள். அழகிய மதுரை மாநகரைச் சுற்றியுள்ள மலைகளின் வரலாற்றை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் அனைவரும் ஊர் திரும்பினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக