பூமியில் பறவைகள் இல்லை என்றால், ஒரே நாளில் பூமி அழிந்துவிடும். ஏனென்றால், பெரும்பாலான பறவைகள் புழு, பூச்சிகளை உணவாக கொள்கின்றன. எனவே, இந்த உலகில் மனிதர்கள் இன்றி பறவைகள் வாழமுடியும். ஆனால், பறவைகள் இன்றி மனிதர்களால் வாழ முடியாது.
- சலீம் அலி, பறவையியல் பேரறிஞர்.
நீர் இறைப்பதற்காக, கிணற்றுக்குள் வாளியை இறக்கியதும் உள்ளிருந்து
‘விர்ர்..’ என மேலே வரும் குருவிகள். கிண்ற்றுக்குள்
கால் வைத்து இறங்குவதற்கு வசதியாக உட்புறச்சுவர்களில் சிறு துளைகள் வரிசையாக 2 அல்லது
3 அடிகளுக்கு இடைவெளிகளில் அமைந்திருக்கும். இந்த சிறு சிறு துளைகள் தான்...
இன்றைய அடுக்குமாடிக் குடியிருப்பு
போல் அமைந்திருக்கும் சிட்டுக்குருவியின் கூ(வீ)டுகள். இவையெல்லாம், இன்றிலிருந்து
15 – 20 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. இன்று... சிட்டுக்குருவிகளையும் காணவில்லை, கிணற்றையும்
காணவில்லை. போதாக்குறைக்கு சில நேரங்களில் தண்ணீரையும் காண முடிவதில்லை. இதுதான் இன்றைய
விங்ஙான அறிவியலின், இயந்திரவியலும் மின்னனுவியலும் இணைந்த உலகின் வளர்ச்சிக்கான மாற்றங்களில்
ஒன்று.
மனித இனத்தின் வாழ்வியல் முறையில் ஏற்பட்ட பல நவீன முன்னேற்ற மாற்றங்கள், மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்களின் வாழ்வில் பெரும் பின்னடைவையே உருவாக்கியுள்ளன. இந்த உண்மையை மனிதகுலம் அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொள்ள விரும்பவும் இல்லை. இந்த பூமி மற்றும் இயற்கையின் கொடைகள் அனைத்தும் தமக்கு மட்டுமே என எண்ணிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஆனால், பூமி படைக்கப்பட்டது நமக்கு மட்டும், நாம் மட்டுமே வாழ்வதற்காக அல்ல. இதனை எத்தனைபேர் இங்கு உணர்ந்திருக்கிறோம்.
சுற்றுப்புறச் சூழலின் மாற்றம் பல்வேறு வடிவத்தில் உருவெடுத்து வருகிறது. திரும்பும் திசையெல்லாம் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல் கட்டிடங்கள் மரங்களைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. மாநகரங்களிலும், வளர்ந்துவரும் நகர்ப்புறங்களிலும் எங்காவது ஒரு இடம் வெற்று இடமாக இருந்துவிட்டால், அதுவே இன்றைய உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்துவிடக்கூடும். இந்த மாற்றங்களுக்கு முன் இயற்கையைப் பாதுகாப்போம், மலைகளை பாதுகாப்போம், காட்டுயிர்களைப் பாதுகாப்போம் என்ற வார்த்தை வரிகளெல்லாம் நவீன கவர்ச்சி விளம்பரங்களின் முன்னே அடிபட்டு போய்விடுகிறது.
கட்டுரையின் துவக்கத்தில் சிட்டுக்குருவியின் நிலை குறித்து அறிந்தோம். சிட்டுக்குருவிக்கு மட்டுமா இந்நிலை(?), அனைத்துப் பறவை இனங்களுக்கும் இன்று இதுவே உருவாகிவரும் நவீனச்சூழல். அதில் சிட்டுக்குருவி 1, 2, 3, 4, 5... என்ற இடத்தில் இருந்துவரும் பறவை இனம். மற்ற சில பறவைகள் இந்த வரிசையில் சிட்டுக்குருவிகளுக்கு அடுத்ததாகவோ அல்லது முன்னதாகவோ இருக்கக்கூடும் அவ்வளவே. இந்த மாறுபட்டச் சூழலிற்கு காரணம் பறவை இனங்களுக்குள் ஏற்பட்ட மோதலா ? அல்லது மற்ற இனப் பறவைகள் தங்களின் உணவிற்காகவோ அல்லது தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவோ மற்ற பறவை இனங்களை அழித்து வருகின்றனவா ? இல்லை விலங்கினங்கள் ஏதும் அழித்து வருகிறதா ?
இவற்றுக்கெல்லாம் எளிய பதில், மேற்கூறிய ஜீவராசிகளை விட கொடிய மனித இனமே மற்ற அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை முறைகளை மாற்றிய பெருமைக்கு உரியவர்கள். தற்போது பறவையினங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்து வருகிறது. காக்கை, சிட்டுக்குருவி, மைனா, புறா ஆகிய பறவைகள் மட்டுமே நாம் வாழும் இடங்களில் உள்ள மரங்களில் இன்று எளிதாக காணக்கூடிய பறவை இனங்கள். இந்த பறவைகளில் சிட்டுக்குருவிகள் மட்டும் தான் நாம் வாழும் வீட்டுப் பகுதியில் கூடுகள் அமைத்து வாழும் பறவை. பறவை இனங்களில் குருவிகளைப் பற்றிய மிகமுக்கிய செய்தி ஒன்று கீழே உள்ளது. படித்து பாருங்கள்... மனிதர்களை விட மிகச் சிறந்த, உயர்ந்த பண்புகளை மனிதர் அல்லாத சிட்டுக்குருவிகளிடம் எவ்வளவு உள்ளது என்பதை.
“
ஆப்பிரிக்காவின் வாசங் (Wazang) பகுதியில் உள்ள மஞ்சள் நிற தினைக் குருவிகளுக்கு மழைக்காலம் முடிந்ததும் உண்பதற்கு தினைகள் கிடைகாது. அப்போது அவை எறும்புப் புற்றுகளின் அருகில் சென்றமர்ந்து இனிமையாகப் பாடுமாம். அதைக் கேட்ட எறும்புகள் தங்கள் புற்றில் சேமித்து வைத்திருக்கும் தினைகளை வெளியே கொண்டு வந்து வெயிலில் உலர்த்தும். அவற்றில் தேவையான அளவை அத்தினைக் குருவிகள் உண்பதற்கு அந்த எறும்புகள் அனுமதிகின்றன. ஏனெனில் அது சமயம் அந்தக் குருவிகள் உண்ணுவதற்கு உணவு கிடைக்காது என்பது அந்த எறும்புகளுக்குத் தெரியும். எறும்புகளின் இந்த உதவிக்கான நன்றிக் கடனை அறுவடைக் காலத்துக்கு முன்பாக தினைக் குருவிகள் தீர்க்கின்றன. எப்படியென்றால், வயலில் தினைகள் முற்றியவுடன் அதன் மேல் அமர்ந்து அக்குருவிகள் தினைகளை உதிர்க்க வைக்கின்றன. அவற்றை எறும்புகள் எடுத்துக் கொண்டு போய் தங்கள் புற்றுகளில் சேமித்துக் கொள்கின்றன.”
உயிர்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன என்பது அறிவுபூர்வமாக மட்டுமின்றி ஆக்கப்பூர்வமாகவும் அமைகின்றன என்பதற்கு அருமையான ஆதாரம் இது.
“
எந்த உயிரினமும் தன் இனத்தை தானே அழித்துக் கொள்வதில்லை, மனிதனைத் தவிர. தான் வாழ இருக்கும் ஒரே வாழ்விடமான இப்புவியை தன் உணவுக்காக அல்ல, தன் ஆடம்பரத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன் “
- ச. முகமது அலி எழுதிய “ பல்லுயிரியம் “ என்னும் நூலிலிருந்து.
இன்று 25 வயதுக்கு மேலுடையவர்கள் அனைவரும் தங்களது இளமைப் பருவங்களில் வீடுகளுக்கு அருகே சிட்டுக்குருவிகளையும், அவற்றின் கூடுகளையும் கண்டிருக்க முடியும். பறவைகளில் சிட்டுக்குருவிகள் மனிதர்கள் வாழும் இடங்களில் பயம் இல்லாமல் வாழும் தன்மை உடையவை. தாங்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான இடமாக உள்ளதென்று உணர்ந்தவுடன் தைரியமாக கூடுகட்டி வாழும்.
இதனை நாம் நமது பழைய ஓட்டு வீடுகளில், ஓடுகளுக்கும் மரக்கட்டைகளுக்கு இடையில், வீட்டின் மின்சார மீட்டர் பெட்டிகளின் மேல், கான்கீரிட் வீடுகளின் மேற்பகுதியில் உள்ள ‘வெண்டிலேட்டர்’ பகுதிகளில், மின்விசிறிகளின் மேலுள்ள குடுவைகளில், பரண்களில், அலமாரிகளில் உள்ள புத்தகங்களுக்கு மேல் என குருவிக்கூடுகளை கண்டிருப்போம். வெளியிலிருந்து குருவிகள் உணவு, வைக்கோல், பஞ்சு போன்றவைகளை வீட்டினுள் வந்து வைத்துவிட்டு பறந்து செல்லும் காட்சிகளைக் கண்டிருப்போம். இப்படியெல்லாம் உரிமையோடு நம் வீட்டினுள் வந்து சென்ற குருவிகள் காணாமல் போனது ஏன் ?
சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு பல காரணிகள் கூறப்பட்டாலும், மிக முக்கியமான காரணி சுற்றுச்சூலின் மிக முக்கியமான பசுமைப் பரப்புகள் (வேளாண்மை நிலங்களின் வறட்சி) குறைந்து போனதுதான். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இக்குருவிகளின் குஞ்சுகளுக்கு புழுக்களும் பூச்சிகளும் தான் மிகமுக்கிய உணவு. புழுக்களும், பூச்சிகளும் விவசாய தோட்டங்களிலும், செடிகளிலும் தான் அதிகம் வாழும். அவைகளைத்தான் நாம் இராசயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி அழித்து விடுகிறோமே பின் எவ்வாறு அவைகளுக்கு உணவு கிடைக்கும்.
செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன என்பதேல்லாம் சுத்த அபத்தமான செய்தி. பல இடங்களில் செல்போன் கோபுரங்களுக்கு அருகிலேயே நூற்றுக் கணக்கான சிட்டுக்குருவிகள் வாழ்ந்துவருகின்றன. சிட்டுக்குருவிகள் குறைந்து வருவதற்கு உணவின்மையே மிகமுக்கிய காரணமின்றி வேறேதும் இல்லை. இந்த நிலை சிட்டுக்குருவிகளுக்கு மட்டுமில்லை அனைத்து பறவைகளின் வாழ்விலும் தொடர்கிறது.
சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20, உலக காடுகள் தினம் மார்ச் 21 மற்றும் மார்ச் 22 சர்வதேச தண்ணீர் தினம் என வரும் நாட்களின் முக்கியத்துவத்தை அறிந்து நம்மால் இன்றைய நவீன வாழ்க்கை ஓட்டத்தில் இவைகளுக்கு நாம் எவ்வாறு பாதுகாப்பான வாழ்வினை தரமுடியும் என்பதை சிறிது யோசிப்போம். பூமியில் அனைத்து உயிர்களும் தளைத்து வாழக்கூடிய வழிவகைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இந்த பூமி அனைத்து உயிர்களுக்கு சொந்தம் என்பதால், அனைத்து உயிர்களின் மேலும் அன்பு செலுத்துவோம். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ உறுதி கொள்வோம்.
கோடை காலம் தொடங்கிவிட்டது. உங்கள் வீட்டின் மொட்டை மாடியில், பால்கனியில், சன்னல் அருகே அல்லது வீட்டின் சுற்றுச் சுவரின் மேல் என ஏதாவது ஒரு திறந்த வெளியில் பசியுடனும் தாகத்துடனும் அழையும் அனைத்துப் பறவைகளுக்கும் சிறு பாத்திரத்திலோ, வாளியிலோ அல்லது சிறு தட்டுகளில் நீரும் அதன் அருகே அரிசி, கம்பு, சோளம், திணை (இவற்றில் ஏதாவது ஒன்றை) வைத்து அவைகளின் தாகத்தையும் பசியையும் போக்க முயற்சி மேற்கொள்வோம். (குறிப்பு- முடிந்தவர்களால் மட்டுமே)
இனி வரும் காலங்களில், “
நாழ் வாழ ஒரு வீடு அதில் பறவைகளும் வாழ தேவை ஒரு கூடு “ என்ற வாசகத்தை உலகச் சிட்டுக்குருவிகளின் தினத்தன்று உறுதிமொழி எடுத்து அனைத்து பறவைகளும் வாழ வழி செய்வோம். வீடுகளுக்கு அருகே அழகுச் செடிகளுக்கு பதில், நமக்கு பலன் தரும் காய்கறிச் செடிகளையும், கொடிகளையும் வளர்ப்போம். ஏனென்றால், அவைகளில்தான் சிறுசிறு பூச்சி இனங்கள் வாழும். இப்பூச்சிகள் பறவைகளுக்கு தேவையான உணவாய் அமையும்.
வீட்டைச் சுற்றி அல்லது அருகே உள்ள மரம், செடி, கொடிகளுக்கு அருகில் உணவு உண்ட பின் கைகளையும், பாத்திரங்களையும் கழுவுவோம். இதன் மூலம் அவற்றில் இருந்து எஞ்சிய சிறு உணவுப்பொருட்கள் பறவைகளுக்கு உணவாய் அமையும். மேலும் காலியான அட்டைப் பெட்டிகள் கிடைத்தால் அவற்றின் உள்ளே சிறிது வைக்கோலை வைத்து மேற்கூறீயவாறு நீர் வைக்கும் இடங்களுக்கு அருகே வைத்து பறவைகளை வாழவைத்து நாமும் வாழ்வோம்.
சிட்டுக்குருவிகள் மற்றும் இதர பறவைகள் நமது நகர்ப்புற சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை சுட்டிக்காட்டும் ஓர் உயிரினம். அதன் அழிவு சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக நமக்கு விளக்குகிறது. எனவே சுற்றுச்சூழலை முடிந்த அளவு அனைத்து உயிர்களும் வாழும் அளவு மாற்றமுடியாமல் இவற்றின் அழிவைத் தடுப்பது எனபது முடியாத ஒன்றாகும். எனவே, இயற்கை வாழ்க்கை முறையை நோக்கி நாம் நம் நகர்வை நகர்த்துவோம். இயற்கையை பாதுகாப்பது என்பது நம்மை நாமே பாதுகொள்வதும், அனைத்து உயிர்களின் வாழ்வைப் பாதுக்காப்பதே ஆகும்.
சிட்டுக்குருவிகள் மற்றும் இதர பறவைகள் நமது நகர்ப்புற சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை சுட்டிக்காட்டும் ஓர் உயிரினம். அதன் அழிவு சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக நமக்கு விளக்குகிறது. எனவே சுற்றுச்சூழலை முடிந்த அளவு அனைத்து உயிர்களும் வாழும் அளவு மாற்றமுடியாமல் இவற்றின் அழிவைத் தடுப்பது எனபது முடியாத ஒன்றாகும். எனவே, இயற்கை வாழ்க்கை முறையை நோக்கி நாம் நம் நகர்வை நகர்த்துவோம். இயற்கையை பாதுகாப்பது என்பது நம்மை நாமே பாதுகொள்வதும், அனைத்து உயிர்களின் வாழ்வைப் பாதுக்காப்பதே ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக