‘குடிசெட்லு’ ஓசூர் – பாகலூருக்கு அருகே அமைந்துள்ள சிற்றூர். இவ்வூர் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் எல்லையில் அமைந்துள்ளது. தெலுங்கில் ’குடி’ என்றால் கோவில். ‘செட்லு’ என்றால் மரங்கள். இங்கு வாழ்ந்த மூதாதையர்கள் மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் உள்ள நடுகற்களை வணங்கி வந்திருக்கும் காரணத்தால் இவ்விடம் ‘குடிசெட்லு’ என்ற காரணப்பெயரோடு அழைக்கப்பட்டிருக்கலாம்.
கடந்த ஜூன் மாதம் ஓசூரில் இரண்டு நாள் நடைபெற்ற ’நடுகற்கள்’ (ஹீரோ ஸ்டோன்ஸ்) பற்றிய தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களின் நடுகற்கள் மற்றும் கற்திட்டைகள் பற்றிய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.
கடந்த ஜூன் மாதம் ஓசூரில் இரண்டு நாள் நடைபெற்ற ’நடுகற்கள்’ (ஹீரோ ஸ்டோன்ஸ்) பற்றிய தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களின் நடுகற்கள் மற்றும் கற்திட்டைகள் பற்றிய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.
கருத்தரங்கின் முதல் நாள் முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் ஓசூர் அருகே வரலாற்று நினைவுச் சின்னங்கள் நிறைந்த ‘குடிசெட்லு’ என்னும் சிற்றூருக்கு அழைத்துச் சென்றனர். சிற்றூரை அடுத்து அமைந்திருந்த அழகிய வனத்திற்கு நடுவே வீரர்களுகளின் நினைவாக எழுப்பபட்டுள்ள நடுகற்கள் மிகுந்த கம்பீரத்துடன் அவ்விடம் முழுவதும் நிறைந்திருந்தன.
நடுகற்கள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் தான் அநேக இடங்களில் அமைந்துள்ளது. ஆனால், குடிசெட்லுவில் 15க்கும் மேற்பட்ட நடுகற்கள் காணப்பட்டன. பொதுவாக நடுகற்களில் காணப்படும் வீரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டு இருக்கும். இதில் பாறையின் நிறமும் செதுக்கபட்ட உருவமும் ஒரே நிறத்தில் அல்லது காலபோக்கில் நிறம் மங்கி, கருமை படிந்து காணபடும். குடிசெட்லுவில் நிறுவபட்டுள்ள நடுகற்களை கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் துறையினர் மிக அழகாக பாறைகளுக்கு சுண்ணாம்பினால் வெள்ளை நிறத்தில் பூச்சு செய்து, அதில் உள்ள உருவங்களுக்கு செந்நிற வண்ணம் தீட்டி பாறையில் உள்ள உருவங்களை மிகத் தெளிவாக காணும் வகையில் வழி செய்துள்ளனர்.
ஒவ்வொரு நடுகற்களிலும் ஒருவர் அல்லது இருவர் என கையில் வேல், உடைவாள், வாள், கேடயம் மற்றும் வில் போன்ற ஆயுதங்களை கையில் ஏந்தி நின்றவாறு வீரர்கள் காட்சி தருகின்றனர். சில நடுகற்களில் வீரர்கள் புலி, சிங்கம் போன்ற கொடிய காட்டு விலங்களுடன் சண்டையிடுவது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மனிதர்களை அச்சுறுத்தும் கொடிய விலங்களிடம் இருந்து தங்களை காத்த வீரனின் அல்லது தலைவனின் நினைவாக இந்நடுகற்கல் எழுப்பட்டிருக்கலாம். நடுகற்களில் காணப்படும் வீரர்களின் உருவங்கள் உடல் பலத்தை கொண்ட திடகாத்திரமான தோற்றத்துடனும், தலையில் கொண்டை கொண்டும், முறுக்கிய மீசையுடனும், கச்சை கட்டியவாறு தோற்றம் தருகிறது.
இங்குள்ள
நடுகற்களில் ஒரு பக்கம் திறந்தவாறும் எஞ்சிய மூன்று பக்கங்கள் கற்பலகையால்
சூழபட்டும், மேற்புறம் ஒரு அகண்ட கற்பலகையால்
மூடப்பட்டு கற்கால கற்திட்டைகளை போன்று காணப்படுகிறது. சில நடுகற்கல் நான்கு
புறமும் நீண்ட கற்தூண்களாலும் அதன் மேல் அகன்ற கற்பலகைகளால் மூடப்பட்டுள்ளது. ஒரே
ஒரு நடுகல்லைச் சுற்றி இன்றைய கட்டிட கலையில் அறை போன்ற முறையில் கோவில்
எழுப்பட்டு அதற்கு இரும்பு பட்டைகளால் ஆன கதவு மாட்டப்படுள்ளது. இது ஒன்று அல்லது
இரண்டு ஆண்டுகளுக்குள் இந்நடுகற்களை வழிபடுபவர்களால் கட்டபட்டிருக்க வேண்டும்.
இந்த நடுகல்லில் இரண்டு உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு உருவம்
வணங்கியவாறும், மற்றொன்று கைகளில் உடைவாள் மற்றும் வாளுடன்
காட்சி தருகிறது.
தமிழ்
நாட்டில் இறந்த மனிதர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே
இருந்து வந்துள்ளது. இதனை பல தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் மூலம் நாம்
அறியமுடிகிறது. இதனை சங்கப் பாடல்களிலும், பின்னர்
எழுதப்பட்ட நூல்களிலும் நாம் காண்லாம். நம் பண்டைய தமிழர்கள் வெட்சி கரந்தைப்
போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டு வந்தால் உண்டாட்டு என்பதை
நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு
வணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள்
அனைத்தும் போரில் வீர மரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக
நடப்பட்ட கற்களைப் பற்றியதாகவே உள்ளன.
நடுகற்கள்
தமிழகத்தின் பல பகுதிகளில் பரவிக் காணப்படுகின்றன. கிருஷ்ணகிரி,
தர்மபுரி, செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை
செங்கம் ஆகிய இடங்களில் அதிகமாக நடுகற்கள் காணப்படுகின்றன. அவற்றில் திருவண்ணாமலை
மாவட்டம் செங்கம் பகுதியிலிருந்து தர்மபுரி வரையிலும் மிக அதிக அளவு நடுகற்கள்
காணப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தமுள்ள நடுகற்களில் இப்பகுதியில் மட்டும் 75 விழுக்காடு காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கபட்ட
மொத்த நடுகற்களின் எண்ணிக்கை 202. தமிழகத்தில் சங்க காலம்
தொட்டே (பொ.ஆ.மு.4 ம் நூற்றாண்டு முதல்) வீரர்களுக்கு நடுகல்
எடுக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளதை இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்து
கொள்ளலாம்.
அங்கு
இங்குமாக நடுகற்கள் ஒன்றிரண்டை கண்டு வந்த நமக்கு, ஒரே
இடத்தில் 15க்கும் மேற்பட்ட நடுகற்களை காண அற்புதமான ஒரு
வாய்பேற்படுத்தி கொடுத்த கிருஷ்ணகிரி மாவட்டத் தொல்லியல் துறையைச் சார்ந்த
திரு.மனோன்மனியம், திரு.ராகவன், திரு.மங்கை
ராகவன், திரு.ராசகோபால் மற்றும் திரு.மணி ஆகியோர்க்கு
நன்றிகள்.
தொல்லியல்
அறிஞர்களின் கடின ஆய்வுகளின் மூலம் கண்டெடுக்கப்பட்ட இந்நடுகற்கள் பல
நூற்றாண்டுகள் கடந்தும் நமது மூதாதையர்களின் வரலாற்றை நமக்கு தந்து
கொண்டிருக்கிறது. இது போன்ற நினைவுச் சின்னங்களை நாம் பாதுகாத்து நாம் அறிந்த
வரலாற்றுச் செய்திகளை நம் எதிர்கால சந்ததியனரும் அறிந்துகொள்ள வழிவகை செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக