26 ஜன., 2012

யானைமலையும் லாடன் குடைவரையும்...

மதுரையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடை என்னும் இடத்தில் அமைந்துள்ளது யானைமலை. சென்னை, திருச்சி, இராமேஸ்வரம், காரைக்குடி என மதுரையின் வடக்கு பகுதியில் இருந்து மதுரை மாநகருக்குள் நுழையும் பொழுது யானைமலையை பார்த்திருப்பீர்கள். ஒத்தக்கடை சிற்றூரானது இம்மலையின் இடப்புறமான தெற்கு திசையில் உள்ளது. மதுரையின் புகழ்மிக்க சான்றுகளில் யானைமலையும் ஒன்று. இம்மலையின் மேற்கு திசையில் அமைந்துள்ளது லாடன் குடைவரை கோவில். சென்ற வாரம் இக்குடைவரையை பார்ககச் சென்று வந்தேன். 

லாடன் குடைவரை முற்பாண்டியர் கால கலைப்பாணியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருந்தது. திறந்தவெளியில் ஒரு கோவில் எப்படி இருக்குமோ அதேபோன்று கருவறை, சன்னிதானம் போன்றவை மலையை குடைந்து வெட்டி செய்துள்ளனர். பார்பதற்கே அதியசமாக உள்ளது. இக்குடவரையை செய்து முடிக்க எத்தனை நாட்களானதோ. உள்ளே உள்ள ஒரு சிறிய கருவறையில் முருகன், தெய்வானையுடன் அமர்ந்திருக்கிறார். கண்ணிமாலையும், சன்னவீரமும் இங்குள்ள சிற்பத்தை முருகன் என அடையாளம் காட்டுகின்றன. முன்மண்டபத்திலுள்ள சேவலும், மயிலும் காட்சி தருவது கருவறையிலிருக்கும் சிலை முருகனே என்று ஆதாரமளிக்கிறது.

லாடன் குடைவரையைப் பற்றியும், குடைவரைகளின் வரலாறு மற்றும் கல்வெட்டுகள் குறித்தும் புத்தகங்களின் மூலம் அறிந்து வைத்திருந்தது இங்கு உதவியது. உள்ளே சுவற்றில் ‘புல்லாரி வட்டக்குறிச்சி நம்பிரான் பட்ட சோமாஜி பரிவிராஜகர் புதுக்கு’ என்ற வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டு லேசாக சிதைந்து போயுள்ளது. கல்வெட்டானது வட்டெழுத்தில் எழுதப்பட்டிருப்பதால் இது கி.பி 8-9ம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம். லாடன் கோயிலுக்கு அருகிலேயே மற்றொரு குடைவரை கோயிலான நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளது. 

அருமையான வரலாற்றுச் செய்திகளை நமக்கு அருகிலுள்ள மலையில் கண்ட மன நிறைவோடு அங்கிருந்து புறப்பட்டு, யானைமலையின் வால் போன்ற பகுதி அமைந்துள்ள கொடிக்குளம் கிராமத் தெப்பக்குளத்திற்கு சென்றோம். செல்லும் வழியில் யானை மலையின் நீளம் நம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. 90 மீட்டர் உயரமும், 1200 மீட்டர் அகலமும், 4000 மீட்டர் நீளமுமாக ஒற்றைப் பாறையாக மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றது. அப்படிபட்ட யானைமலையை சிலரின் சுய லாபத்திற்காக அழிப்பதற்கான சூழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து போராடி யானைமலைக்கு நேரவிருந்த பெரும் சேதத்திலிருந்து மீட்டுள்ளனர்.

4 கி.மீ தூரம் கடந்து கொடிக்குளத்தில் மலையை ஒட்டிய பகுதியில் உள்ள தெப்பக்குளத்திற்கு சென்றோம். கிராமதேவதைக்கான கோயில், மலைச்சாமி கோயில், வேதநாராயணப்பெருமாள் கோயில் என நிறையக் கோயில்கள் இங்குள்ளன. யானைமலையின் பின்புறம் (தேசிய நெடுஞ்சாலைக்கு முன்னர்) இந்த கோவில்கள் அமைந்துள்ளது. இங்கு வற்றாத குளம் ஒன்றுள்ளது. இங்குள்ள மலைச்சாமி கோயிலைப் போய் பார்த்தோம். யானை மலையையே தெய்வமாக இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். மேலும், தங்கள் குழந்தைகளுக்கும் மலைச்சாமி என்ற பெயரும் வைக்கின்றனர். அந்தக்கோயிலில் தொங்கிய மணியொன்றில் ‘மலையே துணை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. 


இங்குள்ள தெப்பத்தில் பாண்டவர்களின் தேர் உள்ளே கிடக்கிறது என நம்புகிறார்கள். அந்த தடம்தான் மலையில் தெரிகிறது என அங்குள்ள பெரியவர் சொன்னார். மேலும், இங்கு உள்ள அம்மன் கோயிலில் உடல்நலம் சரியில்லாதவர்கள் வேண்டிக்கொண்டு நீர்கொண்டு சென்றால் விரைவில் குணமாகிவிடும் என்றனர். அப்படி குணமானவர்கள் வந்து இங்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். நாங்கள் சென்ற போது கூட ஒரு குடும்பம் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள்.

மலையடிவாரத்தில் உள்ள கிணற்றில் நீர் எப்போதும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கிறது. இந்த நீரைத்தான் இப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்துகிறார்கள். இங்கு பழமையான பெருமாள் கோயில் ஒன்றுள்ளது. யானைமலை சைவம், வைணவம், சமணம், மற்றும் நாட்டுப்புறத்தெய்வங்கள் என எல்லாவற்றையும் கொண்டு சமய நல்லிணக்கத்திற்கு  சான்றாக அமைந்ததோடு இப்பகுதி மக்களின்  தெய்வமாகவும் விளங்கிவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக