5 ஜன., 2012

சுவாசிப்போம் அழகிய தமிழை...

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த தமிழ் குடி  என்ற பெருமையைக் கொண்ட பெரும் இனத்தவர்கள் தமிழர்கள். உலகில் முதலில் தோன்றியது கல்தான். அப்படி தோன்றிய கல்லானது, காற்றிலும் மழையிலும் கரைந்து மண்ணானது. அப்படி ஆகும் காலத்திலே, மண் உருவாவதற்கு முன்னரே, வாளோடு வீரத்துடன் தோன்றிய இனம் தமிழ் இனம் என்பது ஒட்டக்கூத்தரின் விளக்கம். இத்தகைய தமிழ் குடியின் மரபு வழியாக வந்த தமிழை தாய்மொழியாகக் கொண்டு பேசுபவர்கள் நாம். தமிழ் மொழியின் வரலாறே அதற்கு சான்றாக உள்ளது.
கொடிய ஆழிப்பேரலைகளால் உலக வரைபடத்திலிருந்து மூழ்கடிந்த தமிழகத்தின் தென் பகுதியானகுமரிக் கண்டம் (லெமூரியாகண்டம்)’ தமிழர்கள் வாழ்ந்த பகுதி என்று தொல்லியல் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சங்ககால தமிழ் இலக்கியங்கள் இவற்றுக்கு சான்றாக உள்ளது. தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது.
நாம் பேசும் தமிழ் மொழி உலகின் தொன்மை மிக்க பல மொழிகளின் பட்டியலில் முதல் ஆறு இடங்களில் ஒன்று என்பது நாம் பெருமைப்படக்கூடியது. எழுத்து வடிவத்தை தன்னகத்தே கொண்டில்லாத மொழி வரலாற்றில் சிறப்புத்துவம் அடைந்ததிலை. எழுத்து என்பது ஒரு மொழியின் அடிப்படை கூறு ஆகும்மொழிக்கு நிலைபேறு அளிப்பது எழுத்தாகும். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து என்பர். எழுதப்படுவதனால் எழுத்து எனப் பெயர் பெற்றது. தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக சில மாறுதல்களைப் பெற்றே இன்றைய எழுத்து மொழியாக உருவம் பெற்றிருக்கின்றன. தமிழ் மொழி  என்பது செம்மொழியாகவும் பண்டைகாலம் தொட்டே சிறந்த இலக்கண, இலக்கியங்கள் பெற்ற மொழியாகவும் உள்ளது.
மொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும்.இது மொழி வரலாறு எனப்படுகிறது. தமிழ் மொழியானது பிராமி மற்றும் வட்டெழுத்துக்கள் மூலம் எழுத்துக்கள் தோன்றியதன் வரலாறையும், அதன் வயதையும் நாம் அறியகூடிய விதத்தில் உள்ளது.

ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி தமிழ் மொழி. அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் 10000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழி தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர். சுனாமி போன்ற பேரலைகளால் ஏற்பட்ட நிலப்பரப்புகளின் அழிவினால் ஆதாரங்கள் பெருமளவு அழிந்து போயுள்ளது. இருப்பினும் அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்களின்தமிழ் வரலாற்று ஆய்வுகள்கடலுக்கடியில் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இவ்வளவு பெருமைமிக்க பழந்தமிழ் மொழியை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றால்(?) சட்டென்றுபயன்பாட்டின் அளவு குறைவேஎன்று சொல்லிவிடும் அளவிற்கு உள்ளது.
நாம் இங்கு பேசும் மொழியில் எவ்வாறு மற்ற மொழிகளின் தாக்கம் உள்ளது என்றால், ஆங்கில மொழியானது அவ்வினத்தவரின் கலாச்சாரக் கவர்ச்சி, மோகம், நம்மை எவ்வாறு இழுத்ததோ, அதே போன்றே அவ்வினத்தவரின் மொழியும் நம்மை இழுத்துவிட்டது. ஆங்கில மொழி சமுதாய மாற்றத்தை உருவாக்கியதென்றால், சமஸ்கிருத மொழி ஆன்மீகத்தின் உச்சமாக நுழைந்து கொண்டுள்ளது.
இங்கு பேசப்படும் மொழி, தமிழ் மொழியில் இருந்து 40 சதவிகிதமும், சமஸ்கிருத மொழியில் இருந்து 25 சதவிகிதமும், ஆங்கில மொழியில் இருந்து 35 சதவிகிதமும் கலவைகளால் ஆன எழுத்துக்களையும், வார்தைகளையும் கொண்ட ஒரு புது மொழியாக உருவெடுத்துள்ளது. இதைப் போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90  சதவிகிதம் பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. இந்த சூழலை நாம் வெகு மதிப்பாகவே இன்று கருதுகிறோம்.
நம்மை யாரென்று அடையாளம் காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது சரியானது அல்ல. தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு சதவிகிதம் பெயர்கள் கூடபொருள்கொண்ட தமிழ்ப் பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுளிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் பொருளை உணர்ந்திலர்.
தமிழர்கள் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்களே இல்லை என்ற நிலை இங்கு இல்லை. மாறாக அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களென மயங்கிச் சூட்டிக் கொள்கின்றனர். இன்றைய மேலை நாட்டு நாகரீக கால ஓட்டத்திலும் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காண்பது எளிதான ஒன்றே. மேலும், தமிழ்ப் பெயர்ப்பட்டியலை உருவாக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர். சிலர்தமிழில் பெயர்கள் சூட்டுங்கள்என்ற தலைப்பிலும் புத்தகங்களும் வெளியிட்டுள்ளனர். இதற்கு முதலில் நாம்  தமிழ் மொழியின் சுவையை ருசித்துப்  பார்க்க வேண்டும். சுவை அறிந்துவிட்டால் பின்னர்ருசி கண்ட பூனையைப் போல்தமிழையே சுற்றிச் சுற்றி வருவோம்.
உலக மொழிகளில் தமிழ் மொழி 12 உயிரெழுத்துக்களையும், 18 மெய் எழுத்துக்களையும், 216 உயிர்மெய் எழுத்துக்களையும் ஒருஎன்ற ஆய்த எழுத்தையும் கொண்டு மொத்தம் 247 எழுத்துக்களை கொண்டுள்ளது. தமிழ் மொழி மனிதனைப் போன்று உயிரையும், மெய்யையும் தன்னகத்தே உடையது. இங்கு எழுத்தானதுஉயிர் இல்லாமல் மெய்யில்லை, மெய்யில்லாமல் உயிரில்லைஇந்த இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் மொழியில்லை. சற்று உள்நோக்கிப் பாருங்கள் தமிழின் சுவையை உணர்வீர். வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்ற எழுத்துகளின் மென்மையை எடுத்துக்கூறும் ஒரே மொழி தமிழ்மொழியே ஆகும்.
ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகள் இன்று நாம் பேசும் மொழியில் எவ்வளவு இணைந்துள்ளது என்பதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆங்கிலம் பேசுவதை நாகரிகத்தின் உயர்வாக கருதுவதே இதன் மூல காரணம். பிற மொழிகளை அனைவரும் நன்கு கற்க வேண்டும், பேச வேண்டும், அதில் புலமை பெற வேண்டும்என்ற கருத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்ல’, மேலும் அதனை முழுமையாக வரவேற்கிறோம். நம்மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களும், அயல் நாடுகளிலும் சென்று தொழில் செய்வதற்கு அது மேலும் வலு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு வேற்று கருத்தில்லை. அதே சமயத்தில்,
தமிழை நாம் முதன்மை மொழியாகக் கருதாமல் வேரு எவர் கருதமுடியும்(?). தமிழ் வார்த்தைகளை நாம் உபயோகிக்காமல் வேறு எவர் உபயோகிக்க முடியும்(?). உலகம் முழுவதும் உள்ள தமிழர்களில் 50 சதவிகித மக்கள் தமிழகத்தில் உள்ளனர். மற்றவர்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், பர்மா போன்ற பல அயல்நாடுகளில் வசிக்கின்றனர். இங்கு வாழும் தமிழர்கள் தூய தமிழையும், தமிழ்ப் பெயர்களையும், தமிழ் வார்தைகளையும் நடைமுறையில் கொண்டுள்ளனர்.
பிற மொழி கலக்காத தூய தமிழ் மொழிக்கு முதன்மை தருகின்றனர். சிங்கப்பூர் விமான நிலையத்தின் நுழைவாயிலில் தமிழ்மொழிக்கு சிறப்பு தரும் வகையில் நல்வரவு என்ற தமிழ் வார்த்தை இடம்பெற்றுள்ளது. மொரிசியஸ் நாட்டு உருபா தாள்களிலும் மற்றும் நாணயங்களிலும் தமிழ் எண்களும், தமிழ் எழுத்துகளும்  இடம்பெற்றுள்ளன. நமது தமிழகத்திற்கு வெகு அருகாமையிலுள்ள இலங்கையின் தென் பகுதியில் (ஈழத்தில்) வாழும் தமிழ் மக்கள் தமிழ் மொழிக்கு தரும் முதன்மையைக் கண்டால் நாம் தமிழர்கள்தானா என்ற ஐயம் ஏற்படும் அளவிற்கு உள்ளது. அவர்களின் பெயர்களிலும், புழக்கத்தில் சாலைகளின் பெயர்களிலும், அங்காடிகளின் பெயர்களிலும் தமிழ் மட்டும் வாழ்ந்து கொண்டு உள்ளது.
அனால், இங்கு அன்றாட வாழ்க்கையில் நாம் இல்லங்களிலும், பொது இடங்களிலும், நண்பர்களிடமும் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பாருங்கள். காலை முதல்... குட்மார்னிங், டீ, பேப்பர், பேஸ்ட் - பிரஷ், சோப்பு, டிபன், பஸ் ஸ்டாண்டு, டிக்கெட், ஸீட், ஸ்டாப்பிங், ஆபிஸ், லன்ஞ், ஸ்கூல், வாட்டர் பாட்டில், புக்ஸ், ரேஷன், மார்க்கெட், கடைகளின் பெயர்ப் பலகையில் ஆங்கிலம், நிறுவனங்களின் பெயர்கள் என்றெல்லாம் பட்டியல் நீள்கிறது. பிறகு ஈவ்னிங். . . டீ, டிவி, போன், ஃபேன், லைட், இறுதியாக குட் நைட் சொல்லிவிட்டு அத்தோடு குட் நைட்டையோ அல்லது ஆல் அவுட்டையோ பொருத்திக் கொண்டு உறங்குகிறது மறுநாள் தமிங்கில வாழ்க்கை விடியலை நோக்கி... இந்த வாழ்க்கை சூழ்நிலையில் தமிழையோ, தமிழ் வார்த்தைகளையோ நினைக்ககூட நேரமில்லை. ஆம் (!) அதுதான் உண்மை.
இன்றைய இயந்திர வாழ்க்கைக்கு மத்தியிலும் தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிச் சிறப்பை உருவாக்க அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழ் மொழியில் மென்பொருளை உருவாக்கி வருகின்றனர். கணினித் துறையிலும், அலைபேசிகளிலும் தமிழ்மொழி தலைசிறந்து உள்ளதே சிறப்பான உதாரணம் ஆகும். அவற்றின் மூலம் தமிழ் மொழியினை இன்றைய கணினித்துறையில் உள்ளவர்களும் பயன்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
பல சிறப்புகளையும், வரலாற்று கருத்துக்களையும் கொண்டுள்ள தமிழ் மொழியை பேசி மகிழ்வது என்பது அவ்வளவு கடினம் அல்ல. அது நம் தமிழை காக்கும் முயற்சியே ஆகும். எந்த ஒரு செயலும் நடைமுறையில் பயன்பாட்டிலும், ஈடுபாட்டிலும் கொண்டு வரும் பொழுது அது பழகிப்போன ஒன்றாகவே ஆகிவிடும் என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றேயாகும்.
மேலும் எந்த ஒரு செயலின் துவக்கமும் முதலில் இல்லங்களில் வாயிலாகதுவங்குமேயானால் அச்செயலின் வெற்றி உச்சியை அடைவது உறுதி. ஆகவே தமிழ் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை முதன்மையாக்க ஒரு ஆழ்ந்த, நீண்ட சுவாசித்தல் மூலம் நிரப்புவோம் அழகிய தமிழை உள்ளங்களில்... அதே தருணத்தில் ஆழ்ந்து சுவாசித்த தமிழை பேசி மகிழ்வோம் இல்லங்களில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக