இங்குள்ள பாறையில் மொத்தம் 13 இடங்களில் பாறை ஓவியங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்கள் செம்பாறாங்கல் எனக்கூடிய கல்லைப் பொடியாக்கி, இலைச் சாறுகள் பல இணைத்து தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கலவை மிருங்களின் வாலில் உள்ள மயிர்களைக் கொண்டு செய்த தூரிக்கைகளாலும், சில ஓவியங்கள் கம்புகளாலும், சில ஓவியங்கள் விரல்களாலிம் வரையப்பட்டுள்ளது. மிக அழகான ஓவியங்கள் தூரிகைகளாலும், புறக்கோடுகள் சீராக இல்லாத ஓவியங்கள் கம்புகளால் அல்லது விரல்களால் வரையப்பட்டிருக்க வேண்டும். கலைமான் உருவம் இரண்டு இடங்களில் காணப்படுகிறது. இது வேட்டைச் சமூகத்தை உணர்த்துகிறது.
கலை என்பது மனிதனுடைய வாழ்வின் பிரதிபலிப்பு. தான் வாழ்ந்து வந்த வாழ்வியலைப் ஓவியங்களாக பதிவு செய்துள்ளனர். விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற ஓவியங்கள் வரைவதால், அதிக விலங்குகள் வேட்டையில் கிடைக்கும் என்பதை அவர்கள் நம்பியிருந்தனர். 1300 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டும் மிக அண்மையில் வரையப்பட்டவை போன்று இவ்வோவியங்கள் தோற்றமளிப்பது நம்மை வியப்படையச் செய்கிறது.
இப்பாறை ஓவியங்கள் கரிம முறையில் வயதுக்கணிப்பு (carbon
dating) இன்னும் செய்யப்படவில்லை. என்றாலும்! குதிரை அல்லது யானை போன்ற ஒரு விலங்கின் மீது அமர்ந்து கோடரியேந்திய நிலையில் மனித உருவம் காணப்படுகிறது. இது விலங்குகள் பழக்கப்படுத்தப் பட்டதற்குப் பிந்தைய பெருங் கற்காலம் அல்லது இரும்புக் காலத்தைச் சேர்ந்த (கிமு மூன்றாம் நூற்றாண்டு முன் - 2400ஆண்டுகளுக்கு முன்பு) ஓவியங்களாக இவற்றை வகைப்படுத்த உதவுகிறது.
சமணர்கள் இந்த பாறை ஓவியங்களை பாதுகாத்துள்ளனர். அவர்கள் அதனை அழிக்க முயலவில்லை. ஆனால் கடந்த 2300 ஆண்டுகளாக காலத்தால் அழியாது காக்கப்பட்டு இருந்து வந்த இந்த ஓவியங்கள் கடந்த 30 - 50 ஆண்டுகளுக்குள் தான் அழிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.
இவைகளை நாம் பாதுகாக்க வேண்டும், இல்லையென்றால் இது போன்ற ஓவியங்கள் இருந்தது என்பதை நாம் பிற்காலங்களில் புத்தகங்கள் வாயிலாக தெரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏறபடும். எனவே ‘இந்த பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்’ என்ற கருத்தை நம்மிடம் இருந்து நாம் துவக்க வேண்டும். மற்றவர்களை பாதுகாக்க கூறுவதில் பயன் இல்லை.
இந்த ஓவியங்களின் தொன்மை தெரியாமல் இந்த இடத்தில் கண்டதைக் கிறுக்கி வைப்பதிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதிலும் இதுபோன்ற இடங்களுக்கு வருபவர்கள் சரித்திரத்தில் இடம்பெறும் நோக்கில் பெயிண்ட், ப்ரஷூடன் வந்து தங்கள் பெயர்கள் மற்றும் காதல் சின்னங்களை பதிந்து செல்கின்றனர். இங்கு மட்டுமல்ல, பெரும்பாலான இடங்களில் இதுபோன்ற கிறுக்கல்களைக் காண முடியும். இப்படி கிறுக்கிச் செல்பவர்களை குறை கூறுவது ஒரு புறமிருக்கட்டும்.
இதுபோன்ற இடங்களின் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள முக்கியமான இடங்களைக் குறித்து அந்தந்த ஊர்க்காரர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்விக்கூடங்களில் சொல்லித்தருவது, விளம்பரம் செய்வது என பல நடவடிக்கைகளை அரசு சுற்றுலாத்துறை மூலம் எடுக்க வேண்டும். ஊடகங்களில் ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் இதுபோன்ற விசயங்களைக் குறித்து விளம்பரம் போடும் போதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
மேலும் படிக்க : ’மதிரை’ பெயர் அழகர் மலை கல்வெட்டில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக