ஏப்ரல் மாதம் (22.04.12) ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு நண்பரின் சிற்றுந்தில் பயணம். சிற்றுந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை குளுமைக்குள் பயணித்தது. மெல்லிய
கதிரவனின் ’கதிர் ஒளி’ வெளிச்சத்தில் இளங்காற்றை விளக்கி விட்டுக் கொண்டே மித வேகத்தில் சென்றது. இம்முறை அழகர்கோயிலுக்கு அருகில் உள்ள ’கிடாரிப்பட்டி’ என்னும் கிராமத்தருகில் உள்ள ’அழகர் மலை’க்கு தான் பயணம். சிற்றுந்தில் சொகுசாக பயணம் என்பதால் நேரம் போனது தெரியவில்லை.
சரியாக 6.30 மணிக்கு... மதுரை புதூர் பேருந்து நிலையத்தை அடைந்தோம். பின் அங்கிருந்து அனைவரும் கிடாரிப்பட்டி நோக்கி ஒரே குழுவாகப் பயணித்தோம். இம்முறைப் பயணம் மிக நீ.....ண்டப் பயணமாகவே அமைந்தது. சிற்றுந்தின் சொகுசு அதை ஈடுகட்டியது. மலை அமைந்துள்ள இடத்திற்கு செல்ல சரியான தடம் (கரடுமுரடான சாலை) இல்லாததால் ஒரு கி.மீ தொலைவில் முன்னரே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, இறங்கி நடக்கத் தொடங்கினோம். இப்போது கதிரவன் தன் கதிர்களை நம்மேல் ஒருமித்து குவிக்கத் துவங்கினான்.
மலையில் பெரிய குகைத்தளத்தைப் பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சியாகயிருந்தது. இதுவரை சென்ற இடங்களைவிட மிகப்பெரிய இடம். இந்தக் குகைத்தளத்தினுள்ளே வற்றாத சுனையொன்று காணப்படுகிறது. குகைத்தளத்தின் முகப்பில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளது. குகையில் ஆதிகால மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்களும் நிறைய காணப்படுகிறது. வந்தடைந்த உற்சாகத்தில் நண்பர்கள் அனைவரும் பாறைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள், சிறு குகைகள் மற்றும் படுகைகள் என அனைத்தையும் கண்டுரசித்தும் புகைப்படங்களா பதிவும் செய்து கொண்டோம்.
’அழகர்மலை’ சங்ககால தமிழர் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பெயர்பெற்ற மலைகளில் ஒன்று. இங்குள்ள குகையின் முகப்பில் 12 இடங்களில் சிறு சிறு வரிகள் கொண்ட பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் கீழேயுள்ள படுகையில் ஒன்று என மொத்தம் 13 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவைகள் அனைத்தும் 2200 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டவைகள். அவற்றில் ஒன்றில் ‘மதிரை’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிரை என்ற சொல் 2200 ஆண்டுகளுக்கு முன்பான இன்றய மதுரையின் பெயராக இருந்து வந்துள்ளது என்பதை நம்மால் அறியமுடிகிறது.
கல்வெட்டுகள்,
1)
மதிரை பொன் கொல்லன் அதன்
அதன்
2)
… அனாகன் த…
3)
மத்திரைகே உபு வாணிகன்
வியக்கன் கணதிகன்
4)
கணக அதன் மகன் அதன் அதன்
5)
சபமிதா இன பமித்தி
6)
பாணித வாணிகன் நெடுமலன்
7)
கொழு வணிகன் எள சந்தன்
8)
ஞ்சி கழுமாற நதன் தார
அணிஇ கொடுபிதஅவன்
9)
தன்மன் கஸபன் அவ்விரு
அ அர்உம் குடுபிதோ
10)
வெண்பளிஇ அறுவை வணிகன்
எளஅ அடன்
11)
தியன் சந்தன்
12)
கணிநாகன் கணிநதன் இருவர்
அமகல்
மேலும் மதிரை பொன்குலவன், மதிரை உப்பு வணிகன், மதிரை அறுவை வணிகன், மதிரை பனித வணிகன், மதிரை கொல் வணிகன் (பொன், உப்பு, துணி, சர்கரை, இரும்பு) என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பகுதி ஒருங்கிணைந்த வணிக வளாகமாக (Chamber
of Commerce) செயல்பட்டு வந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது.
இந்த இடம் சமணர்கள் வாழ்ந்து வந்த இடமாக இருந்து வந்துள்ளது. இந்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்துவந்த வணிகர்கள்தான் படுகைகளையும், மலையில் புருவம் போன்ற அமைப்பையும் சமணர்களுக்கு வெட்டிக் கொடுத்து, பல தர்ம காரியங்கள் செய்துவந்துள்ளதாக இந்த கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆகவே, இந்தப் பகுதியை மிகப் பெரிய ‘வணிகபெருவழி’ எனச் சொல்லலாம். இந்த மலை திண்டுக்கல் - மதிரை மற்றும் நத்தம் - மதிரை என இரு வழியாக இருந்துள்ளது. மேலும் இந்த வழியில் உள்ள ஆணைமலை, வெள்ளரிப்பட்டி, அரிட்டாபட்டி, மாங்குளம் மலைகளிலும் இதேக் கருத்தை (வணிகப்பெருவழியின் தொடர்ச்சி) உணர்த்துகிறது.
அதிலும் மாங்குளத்தில் உள்ள கல்வெட்டுகளில் ‘வெள்ளரிநிகமம்‘ என்று உள்ளது. ‘நிகமா’ இது வெள்ளரிப்பட்டியில் வணிக குழு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது என்பதை விளக்குகிறது. தொடர்ந்து 10ம் நூற்றாண்டு வரை இவ்விடம் வணிக வளாகமாகவே இருந்து வந்துள்ளது என்பதை, சுனைக்கு அருகிலுள்ள தீர்த்தங்கரர் உருவத்துடன் கூடிய ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அதில் உள்ள வட்டெழுத்து கூறுவது ‘அச்சணந்தி செய்வித்த திருமேனி’ என்றுள்ளது.
இந்த அச்சணந்திதான் நின்றசீர் நெடுமாறன் வெப்புநோய் தீர்ந்து சைவத்தை தழுவிய பிறகு ஏற்பட்ட தொய்விலிருந்து சமணத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர். அச்சணந்தி தென்முனையான கன்னியாகுமரியில் உள்ள ‘சிதறால்’ உட்பட தமிழகத்தின் எல்லா சமணத்தலங்களுக்கும் சென்றுள்ளார்.
எனவே மேலே குறிப்பிடப்பட்ட 2300 ஆண்டுகளில் 1300 ஆண்டுகள் (கி.மு 3 முதல் - 10ம் நூற்றாண்டு வரை) ’மதிரை’ சமணர்கள் வாழ்ந்து வந்த இடமாக இருந்து வந்துள்ளது.
பின்னர் 12, 13ம் நூற்றாண்டுகளில் வாணாதிராயர்கள்கள் (அழகர்மலை கள்ளர்கள்) எனும் ஒரு இன மக்கள் பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் ஆட்சியில் அவர்களுக்கு கீழே தலைவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் போர்களுக்கு பயன்படுத்தப்
பட்டுள்ளனர். அழகர்மலையைச் சுற்றியுள்ளக் கோட்டையைக் கட்டியவர்கள் வானாதிராயர்கள் ஆவர்.
மேலும் படிக்க : அழகர் மலையும் பாறை ஓவியங்களும்...
மேலும் படிக்க : அழகர் மலையும் பாறை ஓவியங்களும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக