6 அக்., 2012

கழுகுமலை வெட்டுவான் கோவில்...

மதுரையைச் சுற்றிய மலைகளுக்கு மாதம் ஒரு முறை, விடுமுறை நாளான ஞாயிறு காலை பசுமை நடைக் குழுவினரோடு சென்று மலைகளில் உள்ள வரலாற்றுச் செய்திகளை அறிந்து வருவது வாடிக்கை. ஒரு மாற்றத்திற்காக வேறு சில ஊர்களில் உள்ள மலைகளையும் அவைகளில் பொதிந்துள்ள வரலாற்றுத் தகவல்களை அறிந்து வருவோம் என பசுமை நடை குழுவினரிடமும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிடமும் நண்பர்கள் சிலர் எங்கள் விருப்பத்தை முன் வைத்தோம்.
சாந்தலிங்கம் அய்யா மதுரையில் செயல்பட்டு வரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராக இருக்கிறார். அதன் பயனாக இந்த மாதம் (30.09.2012 ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மாணவர்கள் சிலரும், பசுமைநடை நண்பர்கள் சிலரும் இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணிபுரம், திருமலாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் என 5 வரலாற்று இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக சென்று வந்தோம்.

ஞாயிறு காலை 6.30 மணிக்கு மதுரை காளவாசல் அருகிலுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம். சுற்றுலாவிற்கு 60க்கும் மேற்பட்ட நண்பர்கள் வந்திருந்தனர். வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் சுற்றுலா இதுவாகதான் இருக்க வேண்டும். 7 மணியளவில் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் எங்களது பயணம் துவங்கியது. கோவில்பட்டி அருகிலுள்ள கழுகுமலைக்கு முதலில் செல்லத்திட்டம். பயணம் நான்கு வழிச் சாலையில் விருதுநகர், சாத்தூர் வழியாக கோவில்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
காலைவேளையில் பேருந்து காற்றை விலக்கிக் கொண்டு சென்றது. உள்ளே அனைவரும் இசைஞானி இளையராசாவின் இசையில் மிதந்து கொண்டிருந்தோம். கோவில்பட்டி-கழுகமலை செல்லும் வழியில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி மையத்தில் காலை உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை உணவாக கேசரி, வெண்பொங்கல், இட்லி வயிற்றுக்குள் இறங்கியது. நண்பர்களோடு தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அப்போது பசுமை நடை நண்பர்கள் சிலர் கொண்டு வந்திருந்த மரக்கன்றுகளை தொழிற்பயிற்சி நிறுவனத்தின் அனுமதியோடு அங்குள்ள வளாகத்தில் நட்டனர். பசுமைக்கான சிறந்த செயலை செய்து முடித்துவிட்டு மீண்டும் பயணம் தொடர்ந்தது.
10 மணிக்கெல்லாம் கழுகுமலையைச் சென்றடைந்தோம். காலையிலேயே வெயில் நம்மை வருத்தெடுத்தது. வெயிலோடு அனைவரும் மலையில் ஏறினோம். தெற்கு பகுதியில் தூரத்தில் பெரிய குளம் ஒன்று படிகளோடு காணப்பட்டது. அருகிலேயே கோவில் ஒன்றும் அதன் முன்பாக கல் மண்டபம் ஒன்றும் காணப்பட்டது. மலையில் ஏறுவதற்கு வசதியாக படிகள் வெட்டப்பட்டு, இரும்பு குழாயினால் ஆன கைப்பிடியும் அமைக்கப்பட்டிருந்தது. மலையின் இடது புறத்தில் கிழக்குப் பகுதியில் வெட்டுவான் கோவில் செல்லும் வழி காணப்பட்டது. வலது புறத்தில் உள்ள மலைப் பகுதியில் சமணர்களின் சிற்பங்கள் உள்ள பகுதிக்கு செல்லும் வழி காணப்பட்டது.
குழுவினர் அனைவரும் முதலில் கிழக்குப் பகுதியில் உள்ள வெட்டுவான் கோவில் நோக்கிச் சென்றொம். வெயிலின் உக்கிரமும் நம்மோடு இணைந்து ஏறியது. கழுகுமலைக்கு 8 வருடங்களுக்கு முன்னர் வந்துள்ளேன். அப்போது நிழற்படக் கருவி என்னிடம் இல்லை. வெட்டுவான் கோவிலையும், சமண சிலைகளையும் பார்த்துவிட்டு அதிசயித்து சென்றிருந்தேன். வெட்டுவான் கோவில் அமைந்துள்ள இடத்தை சுற்றிலும் 100 அடி தூரத்திற்கு இரும்பு முள் கம்பி வேலி போடப்பட்டு பாதுகாக்கபட்டுள்ளது.
கழுகுமலையின் வரலாற்று பெயர் அரைமலை. கழுகுமலையின் இன்றைய சிறப்பே ‘வெட்டுவான் கோயில்’ தான். இக்கோயிலின் ஒத்த வடிவமைப்பும் மகாரஷ்டிர மாநிலம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலின் வடிவமைப்பும் ஒன்றே. இந்தியாவிலேயே இந்த இரண்டு கோவில்கள் தான் இம்முறையில் மலையில் வெட்டப்பட்டு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு மலைகளில் அமைந்துள்ள குடைவரைக் கோயில்களின் வடிவமைப்பை போன்றது இக்கோவில். ஆனால் அவைகளை விடவும் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது. மலையின் ஒரு பகுதியை வெட்டி, கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். மலையின் ஒரு பகுதியில், 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக ஒற்றைப் பாறையை சுற்றிலும் வெட்டி எடுத்து, நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர். இன்று நாம் நம் ஊர்களில் சென்று வரும் கோவில்களில் காணப்படுவது போன்று வெளிச்சுற்றுப் பிராகரம், அர்த்த மண்டம், கருவறை, கோபுரம் ஆகியவற்றை மலையை வெட்டி செய்துள்ளனர்.  
இதனை உருவாக்கிய விதத்தை தற்போதுள்ள எந்தவித பொறியியல் நுட்பத்துடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு துல்லியமாக செதுக்கி செய்யப் பட்டிருந்தது. இக்கோவிலை உருவாக்க நவீன சாதனங்கள் ஏதும் இல்லாத காலத்தில் இதனை உருவாக்கி இருப்பது அக்கால சிற்பக் கலையின் அறிவியல் சிறப்பையும், சிற்பிகளின் கலைநயத்தையும் நாம் உணர்ந்துகொள்ள முடிந்தது. கோபுரங்களில் காணப்படும் சிலைகளின் சிற்ப வேலை மிக அழகாக துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளது.
வெட்டுவான் கோவிலை யுனெஸ்கோவின் புராதன வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட வேண்டும். பல நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு மேம்பாட்டுப்பணிகளை நடுவண், மாநில அரசுகள் எடுக்கும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒப்பற்ற இக்கலைக் கோவிலை நாம் அனைவரும் பாதுகாத்து நம் அடுத்த தலைமுறைக்கு நாம் அறிந்த வரலாற்றுத் தகவல்களை அனைவரும் அறிய வழிவகை செய்திட வேண்டும்.
கோவில் கோபுரத்தில், சிவன் பார்வதி இணைந்த அழகிய சிலையும், சிவன், பார்வதி தனித்தனி சிலைகளும், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, நரசிம்மர், தேவ கன்னியர், ஆகியோரின் சிலைகளும் காணப்படுகின்றன. விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும், அவற்றுக்குக் கீழே யாளி சிலைகளும், பூதகணங்களின் சிலைகளும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கோவிலின் கருவறையில் உள்ள பீடம் போன்ற இடத்தில் விநாயகர் சிலை காணப்படுகிறது. பீடத்தின் மேல் அச்சிலை தற்போது வைக்கபட்டுள்ளது போன்று காணப்பட்டது. கோவிலின் வெளிச் சுற்று பிராகத்தில் உள்ள பாறையில் இரண்டு பெண் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருந்தது.
வெட்டுவான் கோவில் குறித்த வரலாற்றுத் தகவல்களை சாந்தலிங்கம் அய்யா கூறினார். மலைமீது ஒற்றைக் கற்கோயிலாக வெட்டுவான் கோயில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் காலம் 8-ம் நூற்றாண்டாகும். பாண்டியன் பராந்தக நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்தது. அந்தக் காலத்தில் பாண்டியனின் நிலைப்படையொன்று இப்பகுதியில் இருந்துள்ளது. வெட்டுவான் கோயிலை தென்னகத்தின் எல்லோரா என்றழைக்கிறார்கள்.
வெட்டுவான் கோயில் குறித்த சுவாரசியமான கதையொன்று இப்பகுதியில் உலவி வருகிறது. பாண்டிய நாட்டில் மிகவும் புகழ்பெற்ற சிற்பி ஒருவன் இருந்தான். அவன் சிற்பக் கலையில் திறமையானவன். அவன் செய்யும் சிலைகளில் காணப்படும் சிற்பத்திறன் கண்டு அனைவரும் வியந்தனர். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். இருவரும் ஒருநாள் திருவிழாவிற்கு சென்றனர். கூட்டத்தில் மகன் தொலைந்து போய்விட்டான். தேடி அலைந்து அழுது புலம்பினான். மகன் கிடைக்கவில்லை. அதன் பிறகு இம்மலையில் சமணத் துறவிகளின் சிலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டு இங்கேயே தங்கிவிட்டான்.
திடீரென்று ஒருநாள் மலையின் கீழ்பகுதியில் கல்லைச் செதுக்கும் ஒலி கேட்டது. மேலே வந்தவர்கள் இந்தச் சிற்பியிடம் கீழே ஒரு இளம் சிற்பி சிலை செதுக்குகிறான். ’அவன் செதுகிய சிற்பங்களின் அழகை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு’ என்றனர். அவனைப் பற்றி வருபவர்களெல்லாம் புகழ இவனுக்கு வெறுப்பு அதிகமாகியது. ஒருநாள் கடுப்பாகி தன் கையிலிருந்த பெரும் உளியை இளம் சிற்பி இருக்கும் திசையை நோக்கி வீசினான். உளிபட்டு அந்த இளம் சிற்பிஅப்பாஎன அலறி விழுந்தான். சிற்பி அலறல் திசை வந்த இடத்திற்கு சென்று பார்த்தான். அங்கு திருவிழாவில் காணாமல் போன அவனுடைய மகனின் தலையை இவன் எரிந்த உளி வெட்டியிருந்தது.
அங்கு அவன் செதுக்கிய சிற்பங்களை பார்த்து மலைத்து நின்றான். பிறகு தன் மகனை எடுத்து அழுது புலம்பினான். இதனால் இக்கோயில் பணி பாதிலேயே நின்றுவிட்டது. இதனால் இக்கோயிலுக்கு வெட்டுவான் கோயில் என்று பெயர் வந்ததாம். வெட்டியெடுக்கப்பட்ட கோயில் என்பதாலும் வெட்டுவான் கோயில் என்ற பெயர் வந்திருக்கலாம். மலைக்கு கீழே முருகன் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவிலும் குடைவரை கோயில் முறையில் வடிவமைக்கபட்டது. மிக பிரசித்தி பெற்ற முருகன் கோவில் என்றார்.
வெட்டுவான் கோவிலின் அழகையும் அதன் அமைப்பு மற்றும் பிரம்மாண்டங்களை மீண்டும் ஒரு முறை ரசித்து பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே. வெட்டுவான் கோயிலின் அழகை பலவிதமான கோணங்களில் புதிதாக வாங்கிய நிழற்படக் கருவியில் பதிவு செய்து கொண்டேன். மலையை சுற்றியுள்ள பகுதிகளை பார்த்தேன். வெட்டுவான் கோவிலின் கிழக்குப் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் பல வண்ண வண்ண நிறங்களிலும், தூரத்தில் தேவலாயம் ஒன்றும் காணப்பட்டது. மலையின் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் கரிசல் நிலமாக வறண்டு காணப்பட்டது. பின்னர் வெட்டுவான் கோவிலில் இருந்து சமணர் சிலைகள் காணப்படும் பகுதி நோக்கிச் சென்றோம். வாய்ப்புக் கிடைத்தால் தோழர்களே ஒரு முறை கழுகுமலைக்குச் சென்று வெட்டுவான் கோவிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகளை கண்டுவரவும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘கழுகுமலையின் சமணம்’ குறித்த வரலாற்றுத் தகவல்களை அறிய இச்சுட்டியை அழுத்திப் படிக்கவும்... கழுகுமலையில் சமணப்பள்ளி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக