31 மே, 2013

விதையிலிருந்தே மரம்... பகுதி - 3

மூன்றாம் நாள் காலை பொழுது புலர்ந்தது. விழித்ததும் மரங்களின் காட்சிகள் கண்களை குளிர்ச்சியாக்கின. சுக்கும் பனை வெல்லமும் கலந்த சூடான பானம் கிடைத்தது. அருந்திவிட்டு அருகிலிருந்த ஆற்றில் குளியல். ஆற்றைச் சுற்றிலும் பச்சை பசேல் என்ற காட்சி பரவியிருந்தது. ஆற்றைவிட்டு வர மனமில்லை. ஆற்றுக் குளியலுக்கு பயந்தவர்கள் கூட இயற்கை குளியல் வாய்ப்பைப் பயன்படுத்திக் குளித்து முடித்தனர். அங்கு குளிக்க வந்த சிறுவர்கள் பலர் ஆற்றில் கர்ணம் அடித்து அசத்தினர். குளியலை முடித்துவிட்டு தங்குமிடம் வந்தடைந்தோம்.  





சிறிது நேரம் காணிப் பழங்குடியினரின் குடியிருப்புப் பகுதிகளை சென்று பார்த்தேன். சிறு சிறு செங்கற்களால் ஆன வீடுகள், சிலவற்றில் ஆஸ்பெடாஸ் சீட்களால் கூரை அமைக்கப்பட்டிருந்தது. சில வீடுகளின் கூரைகள் தென்னங்கீற்றுகளால் வேயப்பட்டு இருந்தது. சில வீடுகள் முழுவதும் தென்னை ஓலைகளாலான குடிசையாக காட்சி தந்தது. அனைத்து வீடுகளின் முன்பும் மின்சாரத்திற்காக சூரிய தகடுகள் பொருத்தபப்ட்டிருந்தன. ஒரு வீட்டில் இருந்து பண்பலையின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஒரு வீட்டின் முன்பு மட்டும் டிஸ் ஆண்டெனா தரையில் நின்று கொண்டிருந்தது (சரி அப்ப ஒரு தொலைக்காட்சி இருக்கு). பெண்கள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. சிலர் மட்டும் காட்டு வேலைக்காக ஒன்றிரண்டு பேரோடு சேர்ந்து செல்கின்றனர். 

அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழுந்தைகள் சிலரை பார்த்தேன். அவர்களை புகைப்படம் எடுக்கும் போது மிகவும் உற்சாகம் அடைந்தனர். சிறுவர்கள் சிலர் நொங்கு வண்டியும், மரத்தினால் செய்யப்பட்ட சிறு வல்லத்தையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். சில சிறுவர்கள் கையில் வில் வைத்திருந்தனர். வில் எதற்காக வைத்திருக்கிறீர்கள் என்றதற்கு, மரங்களில் இருந்து பழங்களை அம்பெய்து பறிப்போம் என்றனர். இங்கு வாழும் மக்களின் வாழ்வியல் மீது இனம் புரியாத ஆசை ஏற்பட்டது. எந்தவித நகர வாழ்வின் சாயல்களும் இவர்களிடம் தென்படவில்லை. ஆனாலும் அந்த வாழ்வியலுக்குள் மறைந்துள்ள பல சிரமங்களையும் நம்மால் மறுத்துவிட முடியவில்லை.

காணிப் பழங்குடி மக்களோடு இணைந்திருந்த நேரங்களில் பல கேள்விகளும் பதில்களும் மனதிற்குள் எழுவதும் பின்பு அடங்குவதுமாக இருந்து கொண்டிருந்தது. நேரம் கடந்தது. அனைவரும் புறபட தயாராகினர். பனைவெல்ல பானத்தை இன்னொரு முறை ருசித்துவிட்டு, அங்குள்ள பெரியவர்களிடமிருந்தும், குழந்தைகள், சிறுவர்களிடமிருந்தும் விடை பெற்றோம்ஆற்றோரம் காலை உணவாக இட்லியும் சாம்பாரும் வழங்கினார்கள்



இம்முறை பேருந்து பயணமாக காரையாரிலிருந்து பாபநாசத்தில் உள்ள பயிற்சி பட்டறைக்கு காலை 10.30 மணியளவில் வந்தடைந்தோம். நேற்றைய ஏழெட்டு கி.மீ நடைபயணம் பேருந்து பயணம் மூலமாக அரை மணி நேரத்தில் முடிவடைந்தது. வழியில் காரையார் அணைக் கட்டிலிருந்து பாபநாசத்தில் மின்சாரம் தயாரிக்க மூன்று பெரிய குழாய்கள் வழியாக நீர் கொண்டு வரப்படுவதை கண்டோம். பாபநாசத்தில் இறங்கியதும் அருகிலிருந்த பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கும் சென்று வந்தோம்.

மூன்றாம் நாள் பயிற்சிப் பட்டறையில் காலை 11 மணிக்கு துவங்கியது. சேது சமுத்திரத் திட்டம் குறித்து மருத்துவர் ரமேசும், கண்ணுக்குத் தெரியாத தண்ணீர் என்ற தலைப்பில் எழுத்தாளர் நக்கீரனும், மாறிவரும் சுற்றுசூழல் சிந்தனைகள் குறித்து எழுத்தாளர் நித்யானந்த் ஜெயராமனும் உரையாற்றினர். நேரம் நண்பகலை நெருங்கியது. மதிய உணவில் அசைவ பிரியர்களுக்காக நாட்டு கோழியும், ஆட்டுக்கறிக் குழம்பும், கறிப் பொறியலோடு தூயமல்லி சம்பா சாதம் வழங்கபட்டது. சைவ பிரியர்களுக்கு சாம்பாரும், சாதமும், வெண்டைப் பொறியலும். உணவோடு சேர்த்து வழங்கபட்ட இனிப்பாக ‘மாம்பழ பஞ்சாமிருதம்’ மூன்று நாள் உணவையும் தூக்கி சாப்பிட்டது.

மதிய உணவை முடித்துக் கொண்டு வகுப்பில் அமரந்தோம். உண்ட மயக்கம் வந்து கொண்டிருக்கும் பொழுதே, மருத்துவர் சிவராமன் இன்றைய உணவு முறையையும், இயற்கை உணவையும் பற்றி பேசியதை கேக்கும் பொழுது வந்த தூக்கமும் பறந்துவிட்டது. பல உணவு சம்பந்தபட்ட ஆரோக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவரைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் சுந்தர்ராஜன் பேசினார். நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.சீனிவாசன் பேசினார். இந்த மூன்று நாட்கள் பயிற்சிப் பட்டறைக்கு இயற்கை உணவு, காணிப்பழங்குடியினரோடு சந்திப்பு என பலவகைகளில் நமக்கு பேருதவியாக இருந்த மருத்துவர் மைக்கேலுக்கு நண்பர்கள் அனைவரும் நன்றி பாராட்டினர்.

மூன்று நாட்கள் எந்திர வாழ்வியலில் இருந்து சற்று ஒதுங்கி வாழ்ந்ததில் பல உண்மைகள் புரிந்தன. இயற்கையோடும் இயற்கை உணவோடும் நிறைந்திருந்த மனது அதனை செரிமானம் செய்ய நாட்களாகும் என்பது புரிந்தது. அந்த அளவிற்கு சூழலியல் பாதுகாப்புக் குறித்த கருத்துக்களின் வீரியம் அமைந்திருந்தது. விதையிலிருந்தே மரம்என்ற தலைப்பிற்கேற்றார் போல்பூவுலகின் நண்பர்கள்’. விதைக்க வேண்டிய இடத்தில் விதைகளை விதைத்து விட்டனர்மரங்களை’ எதிர்பார்த்து. பயிற்சி நிறைவடைந்தது. ஊர் திரும்பும் எண்ணம் எவரிடமும் இல்லை என்பதை அனைவரின் பேச்சிலும் காணமுடிந்தது. மூன்று நாட்களும் ஒரு குடும்ப நிகழ்வில் கலந்திருந்த நினைவுகள் மனதில் நிறைந்திருந்தன.

மூன்று நாட்களும் இயற்கை குறித்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மூன்றாம் நாள் நிகழ்வின் கடைசியில் சில புத்தகங்களை வாங்கினேன். பூவுலகின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவரிடமும் நட்பு கலந்த நன்றியை கூறிவிட்டு ஊர் திரும்பினேன், மனதில் பசுமை உணர்வுகளோடு. 

மேலும்  படிக்க:

விதையிலிருந்தே மரம்... பகுதி - 1

விதையிலிருந்தே மரம்... பகுதி - 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக