26 அக்., 2013

மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்...

மதுரையில் நண்பர் ஒருவரின் திருமண விழாவிற்க்காக நானும் நண்பரும் சென்றிருந்தோம். மண்டபத்தின் வாயிலில் மணமக்களின் பெயர்கள்கள் அழகாக வடிவமைக்கபட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் பெண்கள் கூட்டம் நம்மை சிரித்த முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டே நகர மனமில்லாமல் நகர்ந்தோம். அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த மேடை அரங்கில் மணமகனும், மணப்பெண்ணும் நின்றிருத்தனர்.
உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வரிசையாக மணமக்களுக்கு பரிசுகளை வழங்கியவாறு நிழற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். நாங்களும் இந்த சம்பிரதாயங்களை வரிசையில் நின்று முடித்துக் கொண்டு சாப்பாடு நடக்குமிடம் நோக்கிச் சென்றோம். கனிவான உணவு பரிமாறல்களுடன் அருமையான அறுசுவை உணவால் வயிறு நிறைந்தது. பால் பாயசத்தின் இனிப்பு நாவினில் கரையாமல் இருந்தது. சாப்பாடு அறையை விட்டு வெளியேறி அரங்கினுள் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அப்பொழுதான் அந்த காட்சியை காண முடிந்தது. அனைவரது கைகளிலும்,
அனைவரும் கைகளில் புத்தகத்தோடு எதோ வகுப்பில் இருப்பது போல அமர்ந்தினர். ஒவ்வொருவரும் மும்முரமாக தங்களுடைய புத்தகங்களின் முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை பக்கங்களைத் தள்ளிக் கொண்டிருந்தனர். பக்கத்திலிருப்பவரிடம் கேட்டபொழுது தான் தெரிந்தது. திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் தாம்பூலத்தோடு புத்தகமும் வழங்கி கொண்டிருக்கும் செய்தி. புத்தகத்தை வாங்கிய அனைவரும் என்னதான் இருக்கிறது இந்த புத்தகத்தில் என்றவாறு பக்கங்களுக்குள் புரண்டு கொண்டிருந்தனர்.


நாமும் தாம்பூலம் வழங்குமிடத்திற்கு சென்று புத்தகத்தைப் பெற்றுக் கொண்டோம். முன் அட்டையில் அழகிய ஆழமரம் சிறுவிழுதுகளோடு செந்நிற பின்புலத்தோடுக் காணப்பட்டது. அதன் கீழ்மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம் போன்ற வார்த்தை. வாழ்க்கையின் பசுமையை விவரிக்க... உணர்த்த இதைவிடச் சிறந்த வேறு வரிகள் எதுவும் இருக்க இயலாது. அட்டையிலேயே நம்மை நீண்ட நேரம் நிற்கவைத்துவிட்டனர் திருமண வீட்டார்அட்டையை அடுத்த முதல் பக்கத்தில் மீண்டும் அட்டையில் உள்ள வாசகம். கீழே மணமக்களின் பெயரும், திருமண நாளும், நடைபெறும் இடமும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் கீழே ...
வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காக
வெகு தொலைவிலிருந்து கசியும் மழைத்துளி போல்
எங்கள் பிள்ளைகளின் திருமண விழாவிற்கு
வருகை புரிந்து வாழ்த்தியமைக்கு எங்களின்
எளிய அன்பின் பரிசு ... “
என்ற வரிகளோடு மணமக்களின் பெற்றோர்கள் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. எவ்வளவு தத்துவார்த்தமான இயற்கையின் மீதான நம்பிக்கை வரிகள். நிச்சயம் இயற்கையைப் போற்றுபவர்கள் என்றுமே வீழ்ந்ததில்லை என்ற வரிகள் நம் நினைவலைகளில் வந்து சென்றது. முதல் பக்கத்தின் ஈர வரிகளிலிருந்து மெல்ல அடுத்தடுத்த பக்கங்களுக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு பக்கமும் கனமாக இருந்தது. ஆம்... வாழ்வின் நம்பிக்கைக்குரிய வார்த்தைகளையும், வரிகளையும் கட்டுரை மற்றும், கவிதை வடிவத்தில் தாங்கிக் கொண்டிருந்தது அந்த மெல்லிய தாள்.
புத்தகத்தை இவர்கள் சமர்பித்தது யாருக்கு தெரியுமா ? படையல் என்ற வார்த்தைகளோடு...
மண்ணின் விடுதலைக்காக தன்னையே அர்பணித்து வாழும் இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ. நம்மாழ்வார் அவர்களுக்கும், மக்களின் விடுதலைக்காக போராடும் அணுஉலை எதிர்ப்பாளர் முல்லை. சுந்தரராஜன் அவர்களுக்கும்  என்றிருந்தது.
இந்த பக்கங்களையெல்லாம் கடந்து சென்றால் அங்கே  கோ. நம்மாழ்வார், தோழர் நல்லகண்ணு என பலரின் கட்டுரைகளும், தேவதச்சனின் கவிதைகளும் நம்மை வரவேற்றன. அனைத்தையும் அங்கிருந்து படிக்க நேரமில்லாததால் மணமக்களையும், மணமக்களின் பெற்றோரைச் சந்தித்து, அருமையான புத்தகத்தை வழங்கியதற்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு விடைபெற்றோம்.
கட்டுரை மிக நீளமாகிக் கொண்டு வருகிறதே என்று எழுந்தோ அல்லது மூடிவிட்டோ, வாசிக்காமல் சென்று விடாதீர்கள். ஏனென்றால் இது இருமணங்கள் இணையும் திருநாளில் நமக்கு அவர்களின் நன்றியின் வெளிப்பாட்டைக் கூறும் வார்த்தைகள். வாசிப்பவர்களுக்கு நல்லதாக அமையும் என்பதால், அவ்வாறே நாமும். அதனை இங்கு தந்துள்ளோம்.
வீட்டிற்கு வந்த சில மணித்துளிகளிலேயே வீட்டின் முன்னிருந்த வேம்பும், புத்தகமும் நம்மை அழைத்தன. வேப்ப மரத்தின் கீழ் நாற்காலியை போட்டு அமர்ந்து புத்தகத்திற்குள் நுழைந்தேன். முதல் கட்டுரையாகநம்மாழ்வார்எழுதிய கட்டுரை. இயற்கைவிட்டு நாம் எந்த அளவிற்க்கு விலகியுள்ளோம் என்பதை கட்டுரை மிக நேர்த்தியாக விளக்கியது. அதில் என்னைக் கவர்ந்த சில வரிகள்.
கன்றுக்கு பாலைத் தராமல், இயந்திரம் வைத்து எப்பக் கறக்கிறார்களோ, அப்படியே இயற்கையையும், ரசாயனங்களையும் வைத்துக் கறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு மடங்கு விதைத்தால் ஐந்து மடங்கு விளைச்சல் தர வெளிநாட்டு விதைகளை வாங்கினோம். இப்போது ஐந்து மடங்கு வறட்சி தான் மிச்சம்.
சீட்லெஸ் திராட்சை வேண்டுமென்று கேட்கிறவர்கள், விதை இல்லாமல் ஒரு பொருள் விளைவது ஆரோக்கியமல்ல என்பதை உணரவேண்டும். குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் மலடாகிப் போனால் துடிக்கிற இதயம், நம் பாரம்பரியமான நிலம் மலடாகும் போதும் துடிக்க வேண்டாமா ? ‘
அவருடைய கட்டுரையைத் தொடர்ந்து தேவதச்சனின் அழகிய கவிதைகளும், தோழர் நல்லக்கண்ணு’ அவர்களின் அரசியல் அறிவுக் கட்டுரையும் இருந்தது. அவரினின் கட்டுரைகளில்,
வேரில் விசமேறிவிட்டால் கனிகளும் அப்படித்தான் இருக்கும். ஒரு சமூகத்துக்கு அரசியல்தான் ஆணிவேர். அரசியல் அசிங்கமானால் நாடே அசிங்கமானதாகத்தான் அர்த்தம்.’
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் எழுதிய கட்டுரையில்...
இரட்டைவேடம் தரிப்பதே நமக்கு நடைமுறையாகிவிட்டது. நம் வீட்டுச் சுவரில் எச்சில் துப்புவது தவறு என்று உறைக்கிற அறிவு, அடுத்தவர் வீட்டுச் சுவரில் அச்சில் துப்பும்போது மரத்துப்போவது ஏனோ ?
கண்ணுக்கு எதிரே தவறுகள் நடக்கிறபோது, அதைத் தடுக்க வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல், தனக்குத் துன்பம் வந்தால் மட்டும் உலகம் கெட்டுவிட்டதாகப் புலம்புகிறோம்.’  என்ற வரிகளில் எவ்வளவு உண்மை அடங்கியுள்ளது.
அவரைத் தொடர்ந்து, சு. தியோடர் பாஸ்கரன்’ எழுதிய இயற்கை - அறிவியல் கட்டுரை. அதில்...
பல்லுயிரியம் என்பதுதான் உலகம் தழைப்பதற்கான தத்துவம், ஒவ்வொரு உயிருக்கும் இங்கே தேவை இருக்கிறது. கையில் அரிப்பெடுக்கிறது என்பதற்காக, கையை யாரும் வெட்டுவதில்லை. ஆனால், இலைகள் உதிர்ந்த குப்பைகள் வருவதாக மரங்களைக் கூசாமல் வெட்டுகிற மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள்.’
மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சார்ந்த மருதையன் அவருடைய தமிழர்களின் கலை, இலக்கியம் சார்ந்த கருத்துக்கள் நிறைந்த கட்டுரை. அதிலிருந்து சில வரிகள்
ஆயிரம் பேருக்கும் குறைவாக இருக்கிற ஒரு சபாவில் கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினால், அதற்குப் பக்கம் பக்கமாகப் பாராட்டும், விமர்சனமும் செய்கின்றன் ஊடகங்கள். ஆனால், உழைக்கும் மக்கள் 20 ஆயிரம் பேர் திரளும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தமிழ் மக்கள் இசை விழா’வை இதுவரை எந்த ஊடகமும் கொண்டாடியதில்லை. மக்களின் கலையை அவமதிப்பது என்பது அந்த மக்களையே அவமதிப்பதாகும். ‘
அதனைத் தொடர்ந்து வணிகவியல் பேராசிரியர் விக்டர் லூயிஸ் ஆன்த்துவான்’ எழுதிய நம்மிடையே நிலவும் இன்றைய வணிக முறைகளை பற்றி விரிவாக எழுதியுள்ள கட்டுரை. அவற்றிலிருந்து சில...
சென்னை போன்ற பெருநகரங்களில் சாலை ஓரங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்களை விசாரித்துப் பாருங்கள் ... அவர்கள் நமக்கு சோறு போட்ட விவசாயிகளாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு சோறிட்ட கைகள் பிச்சை எடுக்க என்ன காரணம் ?
‘யார் ஏழையாக இருக்க வேண்டும், யார் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதனை உலகமயமாக்கல்தான் தீர்மானிக்கிறது.’ போன்ற இன்னபிற கருத்துகள் நிறைந்த கட்டுரை இடம்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரசிவன்அவர்களின் நமது பண்பாட்டு வாழ்வியல் முறைகள் பற்றிய அழகிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில்,
இயற்கையின் பேராற்றலில் திராவிடர்கள் நீரை முதன்மைப்படுத்தினர். திட உணவைவிட, இளநீர், மோர், நீராகரம் போன்றவை நம் தட்ப வெப்பத்துக்குத் தேவையான உணவுகள். நமக்கு வாழ்வாதரமான நீரை எங்கிருந்தோ வந்த பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடமே தண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டு இருக்கிறோம்.
பாலைவிட நீரின் விலை இன்று அதிகம். உணவு விடுதிகளில் தண்ணீர் வைப்பதற்க்கு பதில் இப்போது வெளிநாட்டுக் குளிர் பானங்களை வைக்கிறார்கள்.
கதராடை அவமானமாகவும், காற்று புகாத பாலிஸ்டர் துணி கௌரவமாகவும் ஆனது எப்படி ? அந்த அவமானத்துக்கும் கௌரவத்திற்க்கும் இடையில்தான் தோலைந்து போனது நம் பண்பாடு.
பட்டால், புரியும் வலி.
பண்பாட்டால் காண்போம் நல் வழி !
என்று தன் அழகிய கட்டுரையை நம் மனதில் ஏற்றிவிடுகிறார் ஐயா தொ. பரமசிவன் அவர்கள்.
அடுத்ததாக எழுத்தாளர் வண்ணதாசன் எழுதிய ஒன்பது பக்க கவிதைகள் புத்தகத்தை மேலும் அலங்கரித்தன.
கவிதையைத் தொடர்ந்து, கவிஞர் அறிவுமதி எழுதிய கட்டுரை தொடர்கிறது. அதிலிருந்து சில வரிகள்...
இடம் பெயர்தலில் உயிர்வலி அறியாதவர்களுக்குத் தெரியாது மழை ருசி. வியர்வையின் ருசியும்தான்.
கர்ப்பமுற்ற பெண்ணிடம் மரக்கன்றுகள் தந்து மாதத்திற்கு ஒன்றாக நடச்சொல்லி பத்தாவது மாதத்தில் அவளைப் பதினோரு குழந்தைகளுக்கான தாயாகப் பார்ப்போம்மழைக் கர்ப்பம் கலைந்து விடாதபடிக்கு மருத்துவம் பார்ப்போம்.’  இயற்கையை வெட்டி அனுபவிக்கிற வெறித்தனம் மறந்து, உலுக்கி அனுபவிக்கிற அறிவு பெறுவோம்.” இயற்கையை பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு ஒரு அழகிய புரிதலை முன்வைத்துள்ளார் பெற்றேடுக்கும் குழந்தையாக.
கட்டுரையைத் தொடர்ந்து மூமியா அபு ஜமால் எழுதிய கவிதை வருகிறது.
இறுதியாக, தேன் மாம்பழம் வைக்கம் முகம்மது பசீர்’ எழுதிய சிறுகதையின் தமிழாக்கமாக சுகுமாரன் எழுதிய எழுத்துக்களோடு நிறைவுபெறுகிறது.
நூலாக்கம் - குக்கூ குழந்தைகள் வெளி.
திருமண ஜோடியை வாழ்த்திய நெஞ்சங்களுக்கு, நன்றி சொல்லும் விதமாக தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை தாம்பூலப் பையில் வைத்து வழங்குவது நமது வழக்கம். இன்னும் சற்று வசதியானவர்கள், மணமக்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட பையில் வழங்கியும் வருகின்றனர்.
இயற்கை மீது ஆர்வமுள்ள சிலர், தற்போது திருமண விழாக்களில் வாழ்த்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும் தாம்பூலப் பைகளுக்கு பதிலாக மரக்கன்றுகள், சமூக அக்கறை கொண்ட சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் போன்றவைகளை வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறதுதிருமண விழாவிற்கு வந்து வாழ்த்தும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தாம்பூலத்துக்கு பதிலாக, சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கும் புத்தகங்களை கொடுக்கும் பழக்கத்தை நாமும் பின்பற்றலாமே! என்பதை நண்பரும், அவரின் குடும்பத்தாரின் செயல்களும் நம்மை யோசிக்க வைத்துள்ளன

இது போன்ற சிறந்த செயல்களை செய்வதன் மூலம், நாமும் நம்மை சுற்றியள்ளவர்களை சமூகத்தின் மீதும், இயற்கைய மீதும் பற்று கொள்ள செய்யலாம்என்ன நண்பர்களே நாமும் இதை செய்யலாம் தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக