27 அக்., 2013

கொங்கர் புளியங்குளம் பஞ்ச பாண்டவர் மலை...


மலைகளைக் காண்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் மலைகளை கண்டு வருவது வாடிக்கையாக இருந்தது. மதுரை மாநகரும் நான்கு பக்கமும் மலைகள் சூழ அமைந்துள்ள பெரும் வரலாற்று புகழ் வாய்ந்த பகுதி. இம்முறை மதுரையிலிருந்து தேனி - கம்பம் செல்லும் நெடுஞ்சாலையில் செக்காணூரணிக்கு அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்திற்கு சென்று வந்தேன். காரணம் இம்மலையில் 2000 வருடங்கள் பழமையான தமிழிக் கல்வெட்டுகள் இருப்பது என்பதே. விடுமுறை நாளான ஞாயிறு காலை பொழுது ஒன்றில் நண்பர்களோடு சென்றேன்.
கொங்கர் புளியங்குளம், மதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில், தேனி-கம்பம் செல்லும் சாலையின் தென்பகுதியில் அமைந்துள்ள சிற்றூர். இவ்வூர் மதுரைக் காமராசர் பல்கலைகழகத்திற்கு அடுத்ததாகவும் செக்காணூரணிக்கு முன்பாகவும் அமைந்துள்ளது. மலைக் குன்றானது கொங்கர் புளியங்குளம் சிற்றூருக்கு எதிரே,  சாலையின் வடக்கு திசையில் அமைந்துள்ளது. மலைக்கு செல்லும் வழியை சிற்றூர் மக்களிடம் விசாரித்தோம். மலைக்குச் செல்லும் பாதையானது சற்று தூரத்தில் மலையின் கிழக்கு பகுதியில் இருந்தது. வேறு பகுதி வழியாக மலைக்கு செல்ல முடியவில்லை.
மலையின் கிழக்கு பகுதியில் அழகிய கல் மண்டபம் ஒன்று காணப்பட்டது. கல் மண்டபம் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்தது. உள்ளே கற்சிலை ஒன்றும் இருந்தது. எனவே இப்பகுதி ஊர் மக்களால் வழிபடப்படும் நாட்டுப்புறத் தெய்வமாக இருக்க வேண்டும். அருகில் இருந்த மரத்திற்கு கீழ் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மலையை நோக்கி நடந்தோம். கதிரவனின் காலை வெயில் 10 மணிக்கு அவ்வளாக சூடு தெரியவில்லை. சீக்கரம் பார்த்துவிட்டு திரும்ப வேண்டும் என்று கூறிக் கொண்டு நடந்தோம். செல்லும் வழியில் சில பாறைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இயற்கையின் அழகிய வடிவங்களில் காணப்பட்டது. சிறிது நேர நடைக்கு பிறகு மலையின் அடிவாரப் பகுதியை அடைந்தோம். மலை மிக அழகாக இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.

மலைப் பகுதியில் செல்வதற்கு வசதியாக கற்களால் ஆன படிகள் சற்று தூரத்திற்கும், பிடித்து நடக்க இரும்பு குழாயிலான கைப்பிடியும் செய்யப்பட்டிருந்தது. மலையின் மீதுள்ள இயகையான குகைத்தளத்திற்கு செல்வதற்கு இரும்பு பட்டைகளால் ஆன படிகள், கைப்பிடிகளோடு தொல்லியல்த் துறையினரால் செய்து வைக்கப்பட்டிருந்தது. மலையில் படிகள் அமைதுள்ள இடத்திற்கு (இடது) மேற்குப் பகுதியில் சில கற்பாறைகள் வெள்ளை, சிவப்பு வர்ணங்கள் பூசப்பட்டு இருந்தது. ஒரு சிறு கற்பாறையில் ‘முதமை இடம் ஆதி பிராமி’ என்று எழுதப்பட்டு இருந்தது. அதற்கு சற்று அருகில் நடுகல் போன்ற ஒரு கல்லில் கையில் கருப்பசாமி காட்சி தருகிறார். அவருக்கி கீழேயுள்ள பாறையில் ‘கருப்பசாமி’ என்று எழுதப்பட்டு 2.9.2003 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேதியானது வர்ணங்கள் பூசப்பட்ட நாளாக இருக்க வாய்ப்புள்ளது.
அருகில் குகை போன்ற இடத்தில் காளி சிலை ஒன்று கையில் சூலாயுதத்தோடு அமர்ந்துள்ளார். குகையின் விளிம்பின் இருபுறமும் யானை இரண்டு ஓவியமாய் வரையப்பட்டுள்ளது. நடுவே மணி ஒன்றும் உள்ளது. காளி சிலையின் அருகே குடத்திலான உண்டியல் வைக்கப்படிருந்தது. சிற்றூரில் வசிக்கும் மக்களால் இவ்விடம் வழிபாட்டு இடமாக இருப்பதை அறிய முடிந்தது. காளி சிலைக்கு இடது புறத்திலும் சில சிறு குகை போன்ற அமைப்புகள் காணப்பட்டன. குகைக்கு மேலே பாறையில் ’ஸ்ரீ தங்கக் காளி  ஸ்ரீ ஆதிபிராமி பஞ்சமுகி பஞ்ச பாண்டவர்கள்’ என்ற வரிகள் எழுதப்பட்டு இருந்தது.
பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் குகைத் தளம் அமைந்துள்ள மலைப் பகுதிக்கும் பஞ்ச பாண்டவ மலை என்றே இவ்வூர் மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. மகாபாரத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் செல்வார்கள். எனவே இந்த இரண்டு பகுதிக்கும் பஞ்ச பாண்டவர்கள் என்ற வார்த்தைக்கும் உள்ள தொடர்பானது 2000 வருடங்களுக்கு முன் வடபகுதியில் இருந்து வந்து மலைகளில் தங்கி வாழ்ந்த சமணர்களை மக்கள் பஞ்ச பாண்டவர்களின் வம்சா வழியினராக எண்ணி இப்பெயரை வழங்கிருக்க வாய்ப்பு உள்ளது.
பின்னர் பஞ்ச பாண்டவ மலை மீது அமைந்துள்ள குகைத் தளத்திற்கு சென்றோம். அங்கு பெரிய வடிவில் குகை போன்ற அமைப்புகள் பல இருந்தது. பஞ்சபாண்டவ மலை மிக நீளமாக அமைந்திருந்தது. சிறுவர்கள் சிலர் மலைப் பகுதியில் உள்ள குகைத் தளங்களில் விளையாடிக் கொண்டிர்ந்தனர். குகைத் தளத்தில் 50க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் (பிராமி) கல்வெட்டுகளும் காணப்பட்டன. கல்வெட்டுகள் அமைந்த இடத்திற்கு மேலாக் இரும்பு தகடுகளால் ஆன கூரை ஒன்று அமைக்கப்பட்டு, கல்வெட்டிற்கு முக்கியத்துவமும், பாதுகாப்பும் அளிக்கப்பட்டு இருந்தது.  கல்வெட்டு அமைந்துள்ள மலைக்கு முன்னதாக உள்ள தரைத் தளத்தைச் சுற்றிலும் முள் கம்பி வேலி போடப்பட்டிருந்தது.
குகைத்தள விளிம்பில் கி.மு. 2ம் நூற்றாண்டைச் சார்ந்த மூன்று தமிழிக் (பிராமி) கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளது. அதில் இங்குள்ள கற்படுக்கைககளை செய்து கொடுத்தவர்களைப் பற்றிய செய்தியுள்ளது.



முதல் கல்வெட்டில் ” குற கொடு பிதவன் உபச அன் உபறுவ {ன்} “ உபசஅன் உபறுவன் என்பவர் இதை செய்து கொடுத்திருப்பதை இக்கல்வெட்டு குறிக்கிறது. உபசன் என்பது சமய ஆசாரியன் என்னும் பொருள்படும். உபறுவன் என்பது ஆட்பெயர். ’குற’ என்பது கூறை என்னும் பொருளைக் குறிக்கிறது. கொடுபிதவன் என்பதைக் கொடுத்தவன் என்று கொள்ளல் வேண்டும்.
இரண்டாம் கல்வெட்டில் ” குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன் ” இதிலும் ’குற’ என்பது கூறை என்னும் பொருளைக் குறிக்கிறது. ’கொடல்’ என்பது கொடுத்தல் என்ற பொருளைக் குறிக்கும். ’குஈத்தவன்’ என்னும் சொல்லைக் குயித்தவன் எனக்கொண்டு குகையைச் செதுக்கியவன் எனப்பொருள் கொள்ள வேண்டும். சேர அதன் அன்பது ஆட்பெயர். குகையை செதுக்கியவன் பெயராக இருக்க வேண்டும். கடைசியாய உள்ள இரண்டு எழுத்துக்களான ’ஒன்’ என்பது பொன்னை குறிக்கிறது. குகைத்தளத்தின் இப்பகுதியைக் குடைவிப்பதற்கு பொன் கொடை கொடுக்கபட்டுள்ளதை அறிய முடிகிறது. பொன்னின் மதிப்பு கல்வெட்டின் இறுதியில் குறியீடாக உள்ளது போல் தெரிகிறது.
மூன்றாம் கல்வெட்டில் ” பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவேபோன் “ பாகனூரைச் சேர்ந்த பேரதன் பி(ட்)டன் என்பவரால் இக்கொடை நல்கப்பட்டுள்ளது என்பது இக்கல்வெட்டின் பொருள். பாகனூர் என்பது இம்மலையின் பின்புறம் ஓடும் வைகை நதிபாயும் வளமான நிலப்பரப்பாகும். சோழவந்தானுக்கு அருகில் அமைந்திருந்த இவ்வூர் பாகனூர்க் கூற்றம் என்னும் பெயரில் முற்பாண்டியர்களின் வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிப்பிடப்படுகிறது. ’பிடன்’ என்பது பிட்டன் என்னும் ஒருவரின் பெயராக கொள்ளத்தக்கது.
குறிப்பு: கல்வெட்டுத் தகவல்கள் – மதுரையில் சமணம் நூல்.

பின்னர் அங்கிருந்து மலையின் கிழக்கு பகுதியில் சிறிது தூரம் சென்றோம். சிறிது பெரிது என பல கற்பாறைகள் காணப்பட்டன. ஓரிடத்தில் மலைப் பகுதியானது இரண்டாக பெரிய விரிசல் விட்டு காண்ப்பட்டது. பாதுகாப்பு கருதி அதற்கு மேல் செல்லாமல் மலையை விட்டு கீழிறிங்கி மேற்கு புறம் சென்றோம். செல்லும் வழியில் மலைப் பாறையில் அரசமரத்தடியில் முக்குடையின் கீழ் தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம் ஒன்று இரண்டு இயக்கியர்களோடு காணப்பட்டது. அதன் கீழ் வட்டெழுத்தில் ‘ஸ்ரீ அச்சணந்தி செயல்’ என்ற 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெடு வரி காணப்படுகிறது. கி.பி.9-10 நூற்றாண்டுகளில் இதை சமண சமயத்தை மீண்டும் தமிழகத்தில் பரப்பிய அச்சணந்தி என்னும் துறவி செய்வித்திருக்கிறார்.  சிற்பம் அமைந்துள்ள பாறை அடுக்குப் பாறை அமைப்பைச் சார்ந்ததால் தெளிவாக செதுக்கப்படாமல் உள்ளது. அதில் தற்கால மாமனிதர் ஒருவரின் பெயர் சிற்பத்தின் கீழ் பெயிண்டால் எழுதப்பட்டு உள்ளது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிற்பங்களின் முக்கியத்துவங்களை எந்த அளவிற்கு புரிந்துள்ளோம் என்பதை உணர்த்தியது. 


மலையின் மேற்குப் பகுதி வழியாக மலைமீது ஏறி உச்சிக்குச் சென்றோம். மலைமீது செல்வதற்கு சிறிதாக சில படிகள் வெட்ட்ப்பட்டிருந்தது. அங்கிருந்து பார்த்த போது நாகமலைத் தொடர் மிக அருகில் தெரிந்தது. மலைமீது இருந்து சுற்றிலும் அமைந்துள்ள பகுதி அழகாக இருந்தது. மலைமீது இரண்டு கோயில் அமைப்புகள் இருந்தன. மேலே இடது புறத்தில் மலையை ஒட்டிய பாறையில் நான்கு உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் மேல் எண்ணெய் போன்றவற்றை ஊற்றி வழிபட்டு இருப்பதால் கருப்பாக காட்சி தருகிறது. இதனால் அதில் கல்வெட்டுகள் ஏதும் தெரியாததால் அதன் காலம் மற்றும் வரலாற்றுச் செய்திகளை அறிய முடியவில்லை. இவை நாட்டுப்புறத் தெய்வங்களாக இருக்க வாய்ப்புள்ளது.
இதற்கு சற்று அப்பால் கற்பாறைகளால் ஆன கோவில் ஒன்று காணப்படுகிறது. இது பெருமாள் கோயில் என்று கீழே கண்ட சிறுவர்கள் கூறினர். இக்கோயிலில் பெருமாள் மற்றும் அவரது துணைவியார்களின் சிலைகள், மற்றும் தெய்வங்களின் சிலைகளும் காணப்பட்டது. கோவிலின் முன்னால் ஒரு கல்லிலான தீபத்தூண் உள்ளது. மலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க மலையை விட்டு கீழிறங்கினோம். மலையின் கிழக்குப் பகுதிக்கு மீண்டும் நடையாக வந்து சேர்ந்தோம். அருகிலுள்ள கல் மண்டபத்தில் உள்ள மரத்தடியில் சிறிது நேர ஓய்விற்கு பிறகு ஊர் வந்து சேர்ந்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக