20 ஏப்., 2014

அழகிய மழைக்கிராமம் பள்ளத்துக்காடு...

நகர வாழ்வின் மின்னல் ஓட்டங்களில் இருந்து ஒரு மாறுதலை மனம் நீண்ட நாளாகத் தேடிக் கொண்டிருந்தது. இதைப்பற்றி நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொண்டதும் உண்டு. அவர்களுக்குள்ளும் இதே போன்ற ஒரு உணர்வு துள்ளிக்கொண்டே இருந்துள்ளது. தம்பி மதுமலரன் ஒருநாள் தனது ஊருக்கு அருகேயுள்ள மலைக்குச் செல்லலாம் என பரிந்துரைத்தார். நானும் சரி என்று ஒரு ஞாயிறன்று மலைக்குச் செல்லலாம் என்றேன். ஞாயிறு வந்ததும் காலையில் மலைப்பயணம் நகரத்திலிருந்து வெளியேறி மலையை நோக்கி புறப்பட்டது.


நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் வழியில் உள்ளது குட்டப்பட்டி என்னும் சிற்றூர். ஊருக்கு மேற்கு பகுதியில் மலையில் அமைந்துள்ள பள்ளத்துக்காடு என்னும் அழகிய மலை கிராமத்திற்க்கு மது என்னை அழைத்துச் சென்றார். ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே ஒரு பயணம் இடையில் சிறு ஓடையில் நீர் சலசலத்து கொண்டிருந்தது. பறவைகளின் சத்தம் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருந்தது. நிச்சயம் நகர வாழ்வில் இதில் ஒரு பங்கேனும் கூட நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு நிசப்தம். மூச்சுக்காற்றே லேசானதாகவும் சில்லென்றும் இருந்தது. பறவைகளின் கீச் கீச் ஒலி. ஒவ்வொரு பறவையும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. சலசல’ ஓடைத் தண்ணீர் கால்களை குளிர்வித்தது. வண்ணத்துப் பூச்சிகள் வட்டமடித்து கொண்டிருந்தன.
தம்பி மது இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் மலைக்கு மேலே சென்றுவிட்டு திரும்பி வர நேரமாகும், வேகமாக நடங்க என்றார். நடையின் வேகம் கூட்டிய சிறிது நேரத்தில் காட்டைக் கடந்து மலைப்பயணம் ஆரம்பமாகியது. கூடவே நெஞ்சில் தகைப்பும், கால்களில் வலியும் ஏறிக்கொண்டது. மலையின் ஏற்றமான பகுதிகளைப் போலவே... மனதும் உடலின் ஒத்துழைப்பும் மலைக்கு எதிராக ஏற்றமாயிருந்தது. நாக்கு வறள நடந்து கொண்டிருக்கும் போது கண்களுக்கு தெரிந்த காட்சியின் வெளிப்பாட்டை எழுத்துகளில் விவரிக்க முடியாது. ஆம், அழகிய சிற்றருவி தான் அது. எப்படியிருந்திருக்கும் அந்த நேரம் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
வீட்டில் ஷவரிலும், குழாய்களில் மட்டுமே நீரை கண்ட நமக்கு இப்படியொரு காட்சி துள்ளிகுதிக்க வைத்தது. தாகம் தீர குளிர்ந்த நீரை பருகிவிட்டு, குளிப்பதற்கு தயாரானோம். இது சுற்றுலா பகுதி இல்லையென்பதால் நகர மக்களின் கூட்டமும், கரைச்சலும் இல்லாது நீரின் இரைச்சல் மட்டுமே தனித்திருந்தது. ஒன்றிரண்டு மலைக்கிராமத்து ஆண்கள் மட்டும் குளித்து கொண்டிருந்தனர்மனம் போதும் என்று சொல்லும் வரை குளித்து முடித்தோம். கையில் இருந்த கேனில் நீரை நிரப்பிக் கொண்டு பயணம் மலைக்கு மேல் பகுதி நோக்கி சென்றது. 
மலையின் அனைத்து பகுதிகளும் மரங்களால் சூழப்பட்டு பசுமை நிறைந்திருந்தது. ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களைக் கடந்து ஒத்தையடி பாதையில் பயணம்... சற்று திகிலுடனும் கிலியுடனுமாக அமைந்தது. வழியில் கோவேறு கழுதைகளுடன் மலை கிராமத்தினர் மலையிலிருந்து டவுனை நோக்கி வியாபாரத்திற்கும் உணவுப் பொருட்கள் வாங்கவும் சென்று கொண்டிருக்கிறோம் என்றனர். மலைக் கிராமத்து இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனகளில் சர்வசாதரணமாக சென்று கொண்டிருந்ததை நம்ப முடியவில்லை. நடப்பதே சிரமான அளவிற்கு செங்குத்தாக இருக்கும் கரடுமுரடான பாதை வழியாக சரசரவென சென்று கொண்டிருந்தனர். நிச்சயம் இவர்களை பாராட்டி பரிசு கொடுத்தே தீரவேண்டும். தொலைக்காட்சியில் வெளிநாடுகளில் நடக்கும் இருசக்கர வாகன பந்தயங்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை இவர்களது பயணம்.
இதையெல்லாம் கண்டுகொண்டே நாம் மலைக்கிராமத்தை நோக்கி பயணித்தோம். பயணம் சற்று கடுமையாக இருந்தாலும் அதன் நிறைவு இயற்கையின் மடியில் எங்களை கொண்டு விட்டுவிட்டது. வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களில் மலைக் கிராமான பள்ளத்துக்காடும் சேர்ந்து கொண்டது. நிஜத்தில் அப்படியொரு இயற்கை நிறைந்த பகுதி. நகர வாழ்க்கையை விட்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள பகுதி. அதனால்தான் என்னவோ அப்படியொரு அழகை இன்னமும் யாரும் அழிக்காமல் உள்ளனர். இது போன்ற பகுதிகள் மூலம் புவியின் ஆரம்ப அழகை ரசிக்க முடிந்தது.
வீடுகள் எல்லாம் தள்ளி தள்ளி அமைந்திருந்தது. ஒவ்வொரு வீடும் இயற்கையின் வரபிரசாதமான மரஞ்செடிகொடிகளோடு பிண்ணி பிணைந்திருந்தது. மதுவுக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் வீடு அங்கிருந்தது. அவர் மூலமாகத்தான் இந்த இயற்கைப் பகுதியை சுற்றிப் பார்க்கலாம் என நண்பர் மது கூறினார். இல்லையென்றால், நம்மை போன்ற வேற்று நபர்கள் இங்கு வருவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதனை வழியில் வந்து கொண்டிருக்கும் போதே, சில கிராமத்து மக்கள் எங்களைப் வித்தியாசமாக பார்ப்பதிலும், யாரைப் பார்க்க வேண்டும் என்ற வினாக்களிலிருந்தும் அறிந்து கொண்டேன். மலைக் கிராமத்தினரின் வாழ்க்கை முறைகள், நடவடிக்கைகள், பேச்சு என முற்றிலும் நம்மிலிருந்து வேறுபட்டு காணப்பட்டது. ஆனால் அன்பு மட்டும் இயற்கையை போலவே பசுமையாக நிறைந்திருந்தது. குடிப்பதற்கு கொடுத்த மோரும், உண்பதற்கு கொடுத்த நிலக்கடலையும் பண்பாட்டை வலியுறுத்தியது. 

எல்லாவற்றையும் கண்டு ரசித்துவிட்டு, வீடு திருப்புவதற்கு வேறு ஒரு பாதை வழியாக மலையிலிருந்து கீழிறங்கினோம். வழியில் கிராமத்தினர் வளர்க்கும் ஆட்டுகளை அடைக்கும் ’பட்டி’ கண்டோம். மிக அழகாக இருந்தது. வழி நெடுக இயற்கை விவசாயத்தை காண முடிந்தது. கம்பு, வரகு, இருங்குச் சோளம், அவரை, சீனி அவரை, பாகற்காய் என அனைத்து செடி கொடிகளும், சீதாப்பழ மரங்களும் இருந்தது. இயற்கையின் அழகை அள்ளிப் பருக முடிந்த அளவு பருகிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.
மலைமீதுள்ள கிராமத்தை பார்க்க ஏறியது தான் கடினம் என்றிருந்த எனக்கு, கீழிறிங்குவது என்பது அதைவிட பன்மடங்கு அதிகமான கடினமாய் அமைந்தது. கரடுமுரடான மலைப்பாதை வழியாக நடந்து கொண்டிருந்தோம். இந்த பாதையில் எங்கும் நீரூற்றுகள் ஏதும் காணப்படவில்லை. தாகம் தொண்டையை இறுக்கியது. எப்போதும் மலை ஏறுவதை விட இறங்குவது மிகக் கடினம். மனம் தளர்ந்து நடைக்கு விடை கொடுத்து வீழ்ந்து கிடந்தேன். சிறிது தூரத்தில் ஆண்களும் பெண்களும் தலையில் மூடையுடன் நடந்து வந்தது தெரிந்தது. விசாரித்ததில் இது எங்களுக்கு தினசரி பழகிய ஒன்று என்றும், மாற்று வழி இல்லையென்பதால் இதுவே எங்கள் வாழ்வும் விதியும் என்றனர்.
மனதில் சிறிது தெம்பு பிறந்தது. எழுந்து நடக்கலானேன். நகர வாழ்வில் உள்ள சுகங்களும் சுமைகளும், மலைக் கிராமத்தினரின் வாழ்வின் சுகங்களும் சுமைகளும் நினைவுகளில் சுற்றி கொண்டிருந்தது. நகரத்தாரான நாங்கள் எங்கள் வீடுகளை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தோம்மலைக் கிராமத்தினர் அவர்களது வீடுகளை நோக்கி மலைமீது ஏறிக்கொண்டிருந்தனர். கீழே தூரத்தில் மனித நடமாட்டமும் வாகனங்களும் செல்லும் சாலையைக் கண்டோம். அப்போது மனதில் தோன்றியது, வீட்டில் தொலைக்காட்சியில் டிஸ்கவரி சேனலில் வரும் மேன் வெர்சஸ் வய்ல்ட் நிகழ்ச்சியின் கடைசி நிகழ்வுகள். பசுமையை தேடிச் சென்ற பயணத்தின் அனுபங்கள் நம்மைச் சுற்றிலும் பசுமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை மலையளவுக்கு நம் மனதில் வளர்ந்து நின்றிருந்தது.

1 கருத்து: