அதென்ன ? நஞ்சில்லா உணவு. அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா ? இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது. நஞ்சுள்ள உணவு என்பது வேறேதும் இல்லை, இன்று நாம் அதிகம்பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவு தான் நஞ்சு உணவு.
அட, நம்மூர்ள தினமும் ஒரு ஏழையோடோ உணவில் கூட பல கூட்டுகள சேர்த்து திங்கிற பாக்கியம் இருக்குனா, கொஞ்சம் வசதியான ஆட்களோட சாப்பாட்டுல எவ்வளவு கூட்டுக இருக்கும். கூட்டுனா என்னாவா?...
யூரியா, அமோனியா, பாஸ்பேட், பொட்டாசு இதுக தான். நம்ம தட்டுல கண்ணுக்கு தெரியாம நம்மோட சாப்பட்டுல உள்ளவைகள். இன்னும் பல உள்ளன. இது போன்ற இரசாயன உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்து பெறப்படும் உணவுப் பொருட்கள் நஞ்சுள்ள உணவு. இப்படிப்பட்ட உணவுகளை உண்பதால் பலவித நோய்களுக்கு நாம் இன்று ஆட்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
இரசாயன உரங்கள் ஏதும் உபயோகிக்காமல், இயற்கை முறையில் மாட்டுச்சாணம், கோமியம், காய்ந்த இலை தளைகள், பிண்ணாக்கு என இவைகளை பயன்படுத்தி வேளாண்மை செய்து பெறப்படும் உணவுப் பொருட்களே நஞ்சில்லா உணவுகள். மேலே கூறப்பட்ட இரு உணவு வகைகளில் எது சிறந்தது என்பதை சிறு குழந்தைகள் கூட சொல்லிவிடும். ஆனால், இதையெல்லாம் கேட்காத அளவிற்கு நாமெல்லாம் பல உயர்கல்வி படிப்புகளை முடித்து வேலை செய்து கொண்டிருப்பதால், நமக்கு எது சரியானது என்பதை சிந்திக்க கூட நேரமில்லை.
கல்வி சிந்தனைகள் நிரம்ப பெற்றவர்களாலேயே எது சரியான உற்பத்தி முறை என்று அறிய முடியாத போது, குறைந்த கல்வியறிவு (குறிப்பு: நவீன கல்வியறிவைத் தவிர அனுபவ அறிவும், இயற்கை அறிவும், மெய்யறிவும் அதிகம் கொண்டவர்கள் விவசாயிகள்) கொண்டவர்களால் உண்மையை அறிந்து கொள்வது என்பது சற்று சிரமமே. அதிக மகசூல் எடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில், விவசாயிகள் பலர் இராசயன உரங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்காலிகமாக அதிக மகசூலைத் தரும் இந்த முறையில் நீண்ட கால அதிக மகசூலைத் தரமுடிவதில்லை.
மாறாக இந்த இராசயன விவசாய முறை, விரைவில் மண்ணின் உயிர் சத்துக்களை காலி செய்து இறுதியில் விவசாயத்திற்கு பயன்படாத நிலமாக மாற்றி விடுகிறது. இதன் காரணமாக பல விவசாயிகள் நிலங்களை பல நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு வரும் பொழுது விற்று விடுகின்றனர். விவசாயம் மெல்ல மெல்ல இன்று குறைந்து வருவதன் சிறு விளக்கமே இது. இதிலிருந்து மீண்டு வர தற்போது இயற்கை விவசாயத்தை விவசாயிகள் பின்பற்ற தேவையான அனைத்து வழி முறைகளையும் நாமெல்லாம் நன்கு அறிந்த நமது விவசாயிகளின் தந்தை “ அய்யா கோ. நம்மாழ்வார் “ அவர்கள் நமக்கு அளித்துள்ளார்.
தற்போது இந்த இயற்கை விவசாய முறையை பலரும் பின்பற்றி நல்ல மகசூலைக் கண்டுள்ளனர். இதுபோன்ற வெற்றிச் செய்திகள் பலருக்கும் செல்லும் பொழுதுதான், அதனை மற்றவர்களும் நம்பி இயற்கை முறைக்கு மாறுவார்கள். இதனை கடலூர் மாவட்டத்தில் தோழர். ரமேசு கருப்பையா, அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வில் இயற்கை வேளாண்மை செய்து நல்ல முன்னேற்றம் கண்ட சிறந்த விவசாயிகள் சிலரை ஒருங்கிணைத்து அவர்களை கௌரவித்து உள்ளார். இதன் மூலம் பல விவசாயிகளுக்கும் இயற்கை வேளாண்மை முறையின் வெற்றிகளை விவசாயிகள் மூலமாகவே அறிந்துகொள்ள ஒரு அறிய வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, மதுரையில் செயல்பட்டு வரும் “ நாணல் நண்பர்கள் “ குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் இயற்கை வேளாண்மையைச் செய்து வரும் விவசாயிகளை அனைவரும் அறிந்து கொள்ள அவர்களுக்கான பாராட்டு நிகழ்வுகளை ஏற்படுத்தினர். இயற்கை வேளாண்மைச் செய்யும் விவசாயிகளைத் தேடிச் சென்று ஒருங்கிணைத்து அவர்கள் வசிக்கும் அல்லது அருகிலுள்ள கிராமங்களில் வைத்து பாராட்டுவிழா எடுத்து சிறப்பித்து வருகின்றனர்.
மேலும் இராசயன முறையைவிட இயற்கை விவசாய முறை எந்த அளவிற்கு சிறந்தது என்பதை இயற்கை வேளாண்மையில் வெற்றிகண்ட விவசாயிகளை வைத்து விளக்குவது என்பது பாராட்டக்கூடிய செய்தி. இது இரசாயன உரங்கள் பயன்படுத்தும் விவசாயிகள் இடத்தில் இயற்கை வேளாண்மை முறையின் மீதான புது நம்பிக்கையை உருவாக்கி வருகிறது. விவசாயிகள் என்றாலே ஏளனமாக பார்க்கும் இந்த நவீன நாகரீகச் சமூகத்தில், அவர்கள் தான் மிக முக்கியமாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை இந்நிகழ்வுகள் மிக அழுத்தமாக பதிவுசெய்து வருகிறது.
கடந்த ஞாயிறு (20.04.14)
அன்று மதுரை திருமங்கலம் அருகேயுள்ள பெ.பொக்கம்பட்டி என்னும் சிற்றூரில் மாலை 5 மணியளவில் “ உழவர்களைத் தேடி “ நிகழ்வு நடைபெற்றது. இதில் திருமங்கலம் தாலுகாவில் உள்ள பல சிற்றூர்களில் இயற்கை வேளாண்மை செய்து வெற்றி கண்ட 11 விவசாயிகளை ” நாணல் நண்பர்கள் “ குழுவினர் கௌரவிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். கிராமத்தின் மத்தியில் உள்ள மந்தையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராமத்திலிருந்தும் வெளியூர்களில் இருந்தும் பலர் நிகழ்ச்சியில் வந்து கலந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேடைக்கு அருகில் இருந்த அழகிய வேப்ப மரங்கள் பசுமையான இளங்காற்றின் வழியாக வேப்பம் பூக்களைத் தெளித்து அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது.
இது போன்ற நிகழ்ச்சிகளை இன்று ஊக்குவிப்பவர்களும் மற்றும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களும் குறைந்துவரும் நிலையில், உழவர்களைத் தேடி நிகழ்வில் பலர் கலந்திருந்தது உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை என்றாலே தொலைக்காட்சி, திரையரங்கு செல்லதுல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு மத்தியில் இளைஞர்கள் பலரும் உழவர்வகளைத் தேடி நிகழ்வில் கலந்திருந்தனர். கிராமத்திலுள்ள சிறுவர்கள் பலரும் ஆர்வமாக மேடையின் முன்னால் அமர்ந்திருந்து விழாவின் சிறப்புரைகளை கேட்டனர். பெண்கள் தங்களது வீடுகளிலிருந்தவாரே நிகழ்வுகளை பார்த்து இயறகை விவசாயம் குறித்த செய்திகளை அறிந்து கொண்டனர்.
இயற்கையாளர் பாமயன் (தாளாண்மை உழவர்கள் இயக்கம்) அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 11 விவசாயப் பெருமக்களை கௌரவித்தார். விழாவில் நாணல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த தமிழ்தாசன் அனவரையும் வரவேற்றும் நிகழ்ச்சி குறித்தும் விரிவாக பேசினார். செலவில்லாத விவசாயம் என்னும் தலைப்பில் சிவகங்கை பழையனூரைச் சேர்ந்த ச.மாசாணம் உரையாற்றினார். தற்சார்பு வேளாண்மை குறித்து திருமங்கலத்தைச் சேர்ந்த ” பாமயன் “ பேசினார். விளைந்த உணவுப் பயிர்களை எவ்வாறு சந்தைப்படுத்துதல் பற்றி இயற்கை வேளாண் ஒருங்கிணைப்பாளர் ச.காளிமுத்து பேசினார். விழாவிற்கு வந்த அனைவருக்கும் இயற்கை வேளாண்மை குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன.
இது போன்ற நிகழ்வுகள் விவசாயத்தின் மீதான சிறு நம்பிக்கையை அனைவர் மனதிலும் ஆழமாக விதைத்துள்ளது. இயற்கை விவசாயம் பற்றிய முக்கியத்துவத்தை நமது குழந்தைகளிடம் எடுத்துச் சொல்வோம். விவசாயத்திற்கு எதிராக உள்ள காரணிகளை அனைவரும் இணைந்து நம் மண்ணில் இருந்து அப்புறப்படுத்துவோம். உடல் நலத்தைக் காக்கும் இயற்கை வேளாண் உணவுப் பொருட்களை வாங்கி பெறும் பயனடைவோம். நமக்கெல்லாம் நஞ்சில்லா உணவைத் தந்து கொண்டிருக்கும் விவசாயப் பெருமக்களைப் நாளெல்லாம் போற்றி மகிழ்வோம்.
நிகழ்ச்சி நடைபெற்ற நாளுக்கு என்னை பின்னோக்கி அழைத்து சென்றது கட்டுரை. வாழ்த்துகள்
பதிலளிநீக்கு