காலை நேரம். கோடைக்கால வெயில் மாதங்களில் ஒன்று. சாலையெங்கும் பனிமூடியது போல வெண்முகில் கூட்டம். விடிந்தும் விடியாது போல இருந்தது. மக்கள் அனைவரும் சாலைகளில் வெள்ளம் போல மாநகர் மற்றும் புறநகர் நோக்கியும் வாகனங்களில் பயணபட்டு கொண்டிருந்தனர். பலரது முகங்களில் மூக்கையும் வாயையும் மூடியவாறும், தலையை மூடியவாறும் கைகுட்டைகள் கட்டப்பட்டிருந்து.
பனி மாதங்கள் என்றால் தலையையும் காதையும் இணைத்தவாறு மட்டும் மூடியிருப்பார்கள். இவர்களோ காதோடு தலை, முகம் என முழுவதையும் ஏன் மூடிக்கோண்டு செல்கிறார்கள்? என்று யோசிக்கும் போதே, நம் கண்கள் லேசாக எரிச்சலுக்குள்ளாகியது. நாசி வழியே செல்லும் சுவாசத்தின் அளவு சற்று க(ர)ணமாக ஆரம்பித்தது. இப்போது நம் பயணம் வெண்முகில் கூட்டத்தின் நடுவே. நம்மை கடந்து செல்லும் இந்த வெண்முகில் கூட்டம் காலைப் பொழுதின் இதமான பனிக்கூட்டம் அல்ல. மாறாக மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைக் கிடங்குகளில் இருந்து வெளிவரும் வெண்புகை மூட்டம். இந்த வெண்புகைதான் அனைவரது கவச நிலைக்கும் காரணம். இன்று எந்தவொரு நகரையும் மாநகரையும் கடக்கும் போது இது போன்ற காட்சியை நாம் காணாமல் செல்ல முடிவதில்லை.
‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற வாசகத்தை எங்கேயாவது கேட்டிருப்போம் அல்லது படித்திருப்போம். ஆனால் ‘கதவை மூடு காற்றே வேண்டாம்’ என்பதாக உள்ளது இன்றைய வாழ்க்கை நிலை. நகரங்களில் பெரும்பாலும் அநேக வீடுகள் காலை, மாலை என்றில்லாமல் பூட்டியே காணப்படும். அதற்கு பல்வேறு பாதுகாப்புக் காரணங்கள் இருந்தாலும் சுகாதாரக் காரணங்களே அதிகம். குப்பைக்களில் இருந்து கொசுக்களின் புறப்பாடு, கழிவுநீர் சாக்கடையின் நாற்றம், எரியும் குப்பைகளின் புகை என இவற்றில் ஒன்றாவது நிச்சயம் அனைவரையும் இன்று பாதிக்கும் சூல்நிலை உள்ளது. பூமியை ஓசோன் படலம் மூடியுள்ளது என்பது நாம் படித்த ஏட்டுக் கல்வி. குடியிருப்புகளை சுகாதரமற்ற சூழ்நிலை படலம் மூடியுள்ளது நாம் அறி(புரி)ந்த வீட்டுக் கல்வி.
வளர்ச்சியின் மாறுபட்ட பிம்பமாக இன்று அனைத்து இடங்களும் இவ்வாறாகவே மாறிவருகிறது. இந்த பிம்பங்களின் உண்மைச் சாயலை நாம் தேடி அலைய வேண்டியதில்லை. அந்த பிம்பங்களின் உண்மைச் சாயல்களாகவே நாம் வலம் வந்துகொண்டு, நிசச் சாயலை எவ்வாறு தேடிக்கொண்டிருப்பது? ஒவ்வொரு மாற்றங்களிலும் நம் பங்கும் ஒளிந்து கொண்டிருக்கிறது. அது சரியானதிலும், தவறானதிலும் சமபங்காக நின்று கொண்டிருக்கிறது. அதற்கு நான் பொறுப்பில்லை இதற்கு நான். காரணமில்லை என்று சொல்லி தப்பித்துகொள்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமம்.
சமூகத்தின் சுற்றுப்புறத் தூய்மையை கெடுத்துவிட்டு தன் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் எப்படி மனநிறைவு தருகிறது. நம் வீட்டின் குப்பைகள் இன்னொரு வீட்டிற்கான அல்லது பகுதிக்கான சீர்கேடு என்பது ஏன் மனதில் தோன்ற மறுக்கிறது. மாலையானதும் ‘கொசுவிரட்டியை’ பொருத்திக் கொண்டு ஜன்னல்களை அடைத்துக் கொண்டால், நாம் வேற்றுக் கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றாகிவிடுமா? ஜன்னலை திறந்து தானே ஆக வேண்டும். என்றாவது எப்போதும் ஜன்னல்களை திறந்து வைப்பதற்கான செயல்களில் நாம் ஈடுபட்டிருப்போமா? எங்கோ இருந்து எரிந்து வரும் குப்பையின் புகையில் நம் வீட்டு குப்பையின் பங்கு இல்லாமல் இருக்கிறதா ? அந்த எரியும் குப்பையின் புகையை எளிதாக கட்டுப்படுத்துவது நம் கைகளில் மட்டுமே இருக்கின்றது. அதனை நம்மால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
சாலைகளில் இரண்டு புறமும் நிறைந்து இருந்த இயற்கை காடுகளை அழித்துவிட்டு, நெகிழிக் காடுகளை வளர்த்து வருகிறோம். அந்த காடுகளில் உள்ள மரங்களில் எல்லாம் வண்ண வண்ன நிறங்களில் ’பாலித்தின்’ எனும் நெகிழி பைகள் பூக்களாக பூத்து குலுங்குகின்றன. கால்வாய்களில், ஆறுகளில் எல்லாம் நீர் நுரை பொங்கி ஓடிய காலம் மாறி, இன்று நெகிழிப் பைகளை நிறைத்துக் கொண்டு ஒடுகிறது நம்மூர் நீர்த்தடங்கள். நெகிழிப் பைகள் கையில் இல்லாமல் இன்று செல்பவர்களை நாம் சந்தைகளில், கடை வீதிகளில், காண்பது என்பது அரிது. இந்த நடைமுறையினை நாம் மாற்ற வேண்டுமென்றால்? நெகிழிப் பொருட்களினால் உண்டாகும் தீமைகளை, உடல்நலத்திற்கு உண்டாகும் சீர்கேடுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.
முன்பெல்லாம் நாம் எரிக்கும் குப்பைகளில் இயற்கைப் பொருட்களே நிறைந்து இருக்கும். வீடுகளில் அடுப்பு எரிக்க விறகுகள், தேங்காய் நார்கள், மட்டைகள் போன்ற இயற்கைப் பொருட்கள் பயன்பட்டன. இவைகள் எரிந்து உருவாக்கும் புகையால் மிகப்பெரிய சுவாச நோய்களோ, தோல் நோய்களோ, கண் பாதிப்புகளோ இருந்ததில்லை. ஆனால் இன்று குப்பைகளின் அளவு பன்மடங்கு பெருகி, நகர்களுக்குள், புறநகர்களுக்குள் குன்றுகளைப் போன்று அளவிற்கு குப்பைகள் பெருகி வருகிறது.
இன்று பெருகி வரும் குப்பைகளில் பெரும்பான்மையாக நெகிழிப் பைகள், பாட்டில்கள், தேநீர், மதுபானம் இன்ன பிற காரியங்களுக்காக பயன்படும் நெகிழி ’கப்’ கள், நெகிழி மின்னனுக் கழிவுகள், இறைச்சிகளின் கழிவுகள், மருந்துக் கழிவுகள் இன்னும் பல்வேறு வகையான கழிவுகள் போன்றவற்றால் நிறைந்து சுற்றுபுறச் சீர்கேட்டை உருவாக்கி வருகிறது.
குப்பைகள் சமூகத்தின் சிலரால் எரிக்கப்படும் பொழுது, அதிலிருந்து வெளிப்படும் புகையில் பல்வேறு வகையான நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் காற்றில் கலந்துவிடுகிறது. இந்த காற்றை நாம் சுவாசிக்கும் போது தான் மேற்கூரிய பல்வேறு நோய்களுக்கு நாம் உட்பட வேண்டியுள்ளது. இன்று எந்தெந்த பெயர்களில் எல்லாம் புதுப்புது நோய்கள் வருகின்றன என்பதையெல்லாம் இங்கு எழுத முடிவதில்லை. எழுதி முடிப்பதற்குள் ஒரு புது நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. பிறகு அதற்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிவதால் நோயினைத் தவிர்க்க வேண்டிய வழிகளை நாம் மறந்துவிட்டு, வரும் நோய்களை சரிசெய்வதற்கான மனநிலையை உருவாக்கிக் கொண்டோம்.
உயிர் வாழ தேவையான ஆதாரம் மூச்சுக்காற்று. நம் மூச்சுக்காற்றில் பெரும்பங்காக பிராண வாயு அதிகமாக இருந்தால் நம் சுவாசம் எவ்வளவு எளிதாக இருக்கும். உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும் என்பதையெல்லாம் இப்போது நாம் நினைவுகூற வேண்டியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் சுழலில் இருந்துகொண்டு தான் நாம் சுவாசிக்க முடியும். எனவே, அந்த சுற்றுப்புறச் சூழலை சுத்தமாகவும், சுகாதரமாகவும் வைக்க வேண்டியது நம் அனைவரது கடமை.
நம்மை என்றும் உயிர் வாழவைக்க உதவும் கண்ணிற்கு தெரியாத ’காற்றை’ தூய்மையோடு சுவாசிக்க விரும்பினால்... நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள, நாம் அனைவரும் ஒன்றினைந்து முயல்வோம். சுத்தமான காற்றையே அனைவரும் சுவாசித்திட வழிவகை செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக