இலட்சக்கணக்கான மரங்களை நட்டு 3000க்கும் மேலான பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடையே மரம் வளர்ப்பது மீதான விழிப்புணர்வை ஏற்படுத்திய, மத்திய அரசின் சுற்றுச்சூழல் செயல்வீரர் விருது பெற்ற திரு. ம.யோகனாதன் உடனான ஒரு சந்திப்பு.
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவந்த 'கதிர் 2015' மலருக்காக தோழர் ம. யோகநாதனை சந்தித்து ஒரு சிறு கலந்துரையாடலை நண்பர் திலீப்குமார் மற்றும் சித்திரவீதிக்காரருடன் சேர்ந்து ஏற்பாடு செய்தேன். கலந்துரையாடலில் தோழரிடம் பல முக்கிய கேள்விகளை முன் வைத்தோம். அவர்களும் மிகச்சிறப்பாக நமக்கு விளக்கம் தந்தார். அந்த கலந்துரையாடலை இங்கு உங்கள் முன் வைப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
உங்களைப்
பற்றி...
கோவையில் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறேன். மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் சாதாரண மனிதன்தான் நான். 28 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பணியைச் செய்து வருகிறேன். நடத்துனர் பணிக்குச் சேர்ந்து 14 ஆண்டுகள்தான் ஆகிறது. இதற்கு முன்பாகவே சுற்றுச்சூழல் பணியை ஆரம்பித்துச் செய்து வருகிறேன்.
? மரங்கள் அதிகமாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் உருவாக அமைந்த சில காரணங்கள்.
மரங்கள் அதிகமாக வளர்த்தால்தான் நம்மைச் சுற்றியிருக்ககூடிய அனைத்து உயிரினங்களும் நன்றாக உயிர் வாழ முடியும் என்பதற்காகவும், நம்முடைய சீதோஷ்ன நிலை நன்றாக இருந்தால்தான் நோய்நொடியில்லாமல் நம்முடைய வாழ்க்கைத்தரத்தை நன்றாக அமைத்துக்கொள்ள முடியும் என்பதற்காகவும் தொடர்ந்து மரங்களை நட வேண்டும், அதிகமாக மரங்களை வளர்க்க வேண்டுமென்ற எண்ணம் என்னுள் உதித்தது. ஒவ்வொரு நகரமும் வெப்ப நகரமாக இன்றைக்கு மாறிக்கொண்டு வருகிறது. இந்த வெப்ப நகரை மாற்றுவதற்கு எந்த விஞ்ஞானத்திலும் ஏசி இல்லை. ஆனால், குளிர்ந்த ஏசி காற்றையும் நல்ல சூழலையும் தரக்கூடிய இந்த மரங்களை நட்டு வளர்த்தால்தான் நம்முடைய வாழ்வாதாரமும் சீதோஷ்ணநிலையும் நன்றாகயிருக்கும் என்பதற்காகவே மரங்களை அதிகமாக நட்டு வளர்த்து வருகிறேன்.
? பணிசூழலில் ஊக்கமும் சோர்வும் குறித்து
2008
ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது கிடைத்தது. அதை வாங்க செல்வதற்கு நான் போக்குவரத்து கழகத்தில் வேலை செய்ததால், எனக்கு விடுப்புத் தராமல் ஆப்சன்ட் போட்டுத்தான் அனுப்பினார்கள். ஆனால் அதற்கு பிறகு நாளிதழ்களில் என்னைப் பற்றிய செய்தி வந்தபிறகுதான் அதை விடுப்பாக்கினார்கள். 2008க்கு முன் நிறைய கிண்டல், கேலிகள் இருந்தது. இப்போது நல்லகாரியம்தான் செய்கிறார் என்றும், அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்றளவும் சொல்கிறார்கள்.
? குடும்பத்தில் உங்கள் சுற்றுச்சூழல் பணிகளுக்கு ஆதரவு எப்படி
என் குடும்பம் எனக்கு மிக ஆதரவாகவே உள்ளது. எங்கேயும் போகக்கூடாது என்றால் என்னால் செயல்படமுடியுமா?. ஞாயிற்றுக்கிழமை இரவு நேரங்களில் விழிப்புணர்வுப் பணிக்காக கிளம்பும் போது வீட்டில் ஒத்துழைப்புக் கொடுத்து அனுப்புகிறார்கள். என்னுடைய பணிகளுக்கு ஊக்கமும் தருகிறார்கள்.
? மின்கம்பிகள் மரங்களுக்கு தடையா? மரங்களைப் பாதுகாப்பாக வளர்ப்பதெப்படி
மின்கம்பங்களுக்கு கீழே மரம் நடுபவர்களைப் பார்த்தால் விளம்பரத்திற்காக அவர்கள் நடுகிறார்களோ என்ற எண்ணம் எனக்கு வரும். மின்கம்பத்திற்கு கீழே மரம் நடுவதும் அல்லது சாக்கடை தோண்டுகிற பகுதிகளில் மரம் நடுவதும், வீட்டில் கட்டடங்களுக்கு அருகில் மரம் நடும் பழக்கத்தையும் விட்டுவிட்டு, இன்று மரங்கள் நட்டு வளர்ப்பதற்கு அரசு நிலங்கள், அரசு அலுவலங்கள், பள்ளி கல்லூரி பகுதிகள் என எண்ணிலடங்காத இடங்கள் உள்ளது. மேற்கூறிய பகுதிகளில் மரங்கள் நட்டு வளர்த்தால் தான் நன்றாக வளரும். எனவே, மின்கம்பிகள், தொலைபேசி கம்பிகள் செல்லும் பகுதிகளை விட்டுவிட்டு, மரங்களால் இடைஞ்சல் இல்லாத பகுதிகளில் மரங்களை நட்டு வளர்பது என்பது மரங்களுக்கும் பாதுகாப்பனது. நமக்கும் நம் சமூகத்திற்கும் மிகுந்த பயனளிக்கும்.
? மக்கள் மனதில் ‘மரங்கள் தேவை’ என்ற எண்ணம் மறைந்ததற்கு முக்கிய காரணங்களாக நீங்கள் நினைப்பது
மக்கள் மத்தியில் சுயநலம் அதிகமாகிவிட்டது. யாரோ நட்ட மரத்தில் இவன் பழத்தைப் பறித்துச் சாப்பிடுவான். இவன் நட்ட மரத்தில்தான் இவனுடைய சந்ததிகள் பழங்களைப் பறித்துச் சாப்பிட வேண்டு மென்ற எண்ணம் மக்களுக்குள் இல்லை. அது இல்லாமல் அறிவியல் ரீதியாக, விஞ்ஞான ரீதியாக இவர்களுக்கு மரத்தினுடைய மகிமை தெரியவில்லை. தங்களுக்கு அதிக வேலைப்பளு என்று சொல்லிகொண்டு இந்த விஞ்ஞானத்தைக் கற்றுக் கொள்ள மறந்துவிட்டார்கள்.
அதனால்தான் இன்றைக்கு விவசாய நிலங்கள் எல்லாம் ரியல்எஸ்டேட்டாக மாறிக் கொண்டு இருக்கிறது. மரங்கள் எல்லாம் களவாடப்பட்டுக் கொண்டு இருக்கிறது. வீட்டிற்கு முன்பாக மரம் நட்டால் குப்பை விழும். அதற்காகவே அந்த மரங்களை நடுவதை தவிர்க்க வேண்டுமென்ற எண்ணம் மக்கள் மனதிற்குள் வந்துவிட்டது. மரங்கள் இருந்தால்தான் மனிதன் வாழ முடியும். மரமில்லாமல் மனிதன் வாழ இயலாது. மனிதன் இன்றி மரங்கள் வாழ்ந்துவிடுமென்ற விசயத்தை இவர்களுக்கும் இனிவருகின்ற சந்ததிகளுக்கும் நம்மை போன்றவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். அந்தப் பணியைத்தான் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன்.
? இன்றைய நவீன சிமெண்ட் கான்கீரிட் மற்றும் ஹாலோ ப்ளாக் சாலைகளுக்கு மத்தியில் மரங்கள் வளர்ப்பது குறித்து உங்களது யோசனைகள்
சாலையோரங்களில் மரங்களை நட்டு வளர்க்க முடியுமென்றால் அங்கே நடலாம். அப்படி வளர்க்க முடியாத இடங்களில் மரங்களை நட்டு அவைகளை கொலை செய்வதை நான் விரும்பவில்லை. மிகப்பெரிய வசதி படைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் முன்வந்து சாலையோரங்களில் இந்த மரங்களை நடுகிற பணியை ஒரு போர்க்கால அடிப்படையிலாவது இவர்கள் செய்தால்தான் கொஞ்சம் வெப்பத்திலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும்.
? எந்தெந்த மரங்கள் அதிகமாக ஆக்ஸிஜனைத் தருகின்றன
அரசமரம், மூங்கில், ஆடாதொடா இது மூன்றும் தான் அதிக ஆக்ஸிஜனைத் தருகிறது. ஆக்ஸிஜன் தரும் மரங்களையே நடவேண்டுமென்ற அவசியமில்லை. விவசாயிகள் பூவரசமரத்தை தங்கள் ஏரிப் பகுதிகளில், தோட்டங்களில், பாதையோரங்களில் நடலாம். பூவரச மரங்கள் வெட்டி, வெட்டிவிடதான் நன்கு வளரும். இம்மரத்தின் ஒரு கிளையை வெட்டி நட்டாலே போதும் முளைத்து வளரும். பூவரசு மரம் அதிகளவு நைட்ரஜனைத் தரும். விவசாயிகளுக்கும் ஏற்ற மரமாக பூவரசு மரம் இருக்கும். இப்படி பலமரங்களை நட்டு பலன் பெறலாம்.
? மரங்கள் வளர்ப்பதனை மக்கள் மனதில் உருவாகுவதற்கு தேவையான எளிமையான சில உதாரணங்கள்
மக்கள் நினைத்தால் மரங்களை நட்டு வளர்த்துவிட முடியும். ஒரு உதாரணம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 116 ஏக்கர் உடைய ஒரு குறுஞ்சோலையிருக்கிறது. அதற்கு பெரியசோலை (LONGWOODSOLA) என்று பெயர். நகரத்திலிருந்து 1 கி.மீ தள்ளி அந்தக்காடு உள்ளது. இந்தக்காடு கழிவறையாகவும், ஆடு, மாடுகள் மேய்பதற்கும், மது அருந்துபவர்களும், சூதாடுபவர்களும் பயன்படுத்தப்பட்டது. இந்த சோலையைக் காப்பாற்றுவதற்காக நானும் அந்தப்பகுதி ஆசிரியர்களும், நண்பர்கள் மைக்கல் டெனினோ மற்றும் ஜெயசந்திரன் ஆகியோர் சேர்ந்து போராடி ”வாட்ச்டாக் கமிட்டி” என்கின்ற அமைப்பை ஏற்படுத்தி அந்தக் காட்டை காப்பாற்றினோம்.
இன்று அந்தக்
காடு 15 கிராமங்களுக்கு குடிநீர் கொடுத்துகொண்டு இருக்கிறது. இந்த காடு இல்லையென்றால் இந்த 15 ஊர்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்குள் ஆளாகியிருப்பார்கள். ” காடு
இல்லையென்றால்
தண்ணிர்
இல்லை
“ என்ற அடிப்படை காரணத்தை இவ்வூர் மக்கள் அறிந்துகொண்ட பின் இந்த காடைக் காப்பாற்ற முன் வந்தார்கள். இப்படி தண்ணீர் மற்றும் காற்று போன்றவற்றை சுத்தப்படுத்துகிறது என்பதை தெள்ள தெளிவாக தெரிந்து கொண்டால் மக்கள் மரங்கள் நட அவர்களே முன் வருவார்கள். மரங்களை பாதுகாக்க முன் வருவார்கள்.
? மரங்கள் தவிர்த்து சூழலியலில் தங்களது மற்ற ஈடுபாடுகள்
பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுகிற பணி, பறவைகள் மற்றும் விலங்குகள் எங்கேனும் அடிபட்டுக் கிடந்தாலோ அல்லது யாராவது கடத்திப்போய் விட்டாலோ அதை மீட்டெடுக்கும் பணி மற்றும் மரங்களில் ஆணியடித்து மரங்களுடைய
வளர்ச்சி தடைபடுகிறது என்கிற காரணத்திற்காக மரங்களில் இருந்து ஆணிகளை அகற்றும் பணி. இது போன்ற பல சுற்றுச்சூழல் பணிகளை செய்துவருகிறேன்.
? இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யாவுடன் பழகிய அனுபவங்கள்
நம்மாழ்வார் அய்யா சில நேரங்களில் பாசத்தோடு என்னை பார்த்தவுடன் கண்டக்டர் அய்யா வந்திட்டாரு என்பார். சில சமயங்களில் டே லோகு என்பார். நம்மாழ்வார் ஐயா என்னிடம் சொன்னது ’நான் இறந்துவிட்டால்
ஊரை
கெடுத்தவன்
இங்கே
உறங்குகிறான்’ என்று எழுதி வைடா என்றார். ஆனந்தவிகடனில் நம்மாழ்வார் அய்யா ’இன்று ஒன்று நன்று’ பகுதியில் ஒருநாள் என்னைப் பற்றி பேசியிருப்பது எனக்கு கொடுத்த மிகப்பெரிய அங்கிகாரமாக நினைக்கிறேன். அவருடன் பழகிய நட்பே மிகப் பெரிய விசயமாக எண்ணுகிறேன்.
சூழலியலைப் பற்றி நிறைய சொல்லிக் தந்திருக்கிறார். எங்கு போனாலும் பழங்களை வாங்கித்தருவார். சாப்பிடவுடன் இந்த இந்த விதைகளைப் எல்லாம் பத்திரமாக வைக்கச் சொல்வார். திரும்பி வரும் பொழுது அந்த விதைகளை மறக்காமல் வாங்கித் எதாவது ஒரு தோட்டத்தில் விதைத்து விடுவார். ஐயா ஒரு மாமனிதர். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இந்த மண்ணும், இந்த மண்ணின் மைந்தர்களும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இனி மேல் இவரைப் போன்றவர்கள் வருவார்களா என்பதே சந்தேகம் தான். அப்படி ஒருவர் வந்தால்! அது ஒரு அபூர்வமான நிகழ்வாக இருக்கும். அவர் விட்டுச் சென்ற பணியை கண்டிப்பாக நான் இந்த சமூகத்திற்கு செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
? நீங்கள் அவ்வப்போது கானுயிர் மற்றும் தாவரங்கள் பற்றிய சிறுகையேடுகளை வெளியிட வேண்டுமென்று எங்களிடம் வலியுறுத்தி இருக்கிறீர்கள். அதை எப்படி செய்ய வேண்டும்
ஒரு காலத்துல சுற்றுச்சூழலைப் பற்றி மேல்மட்ட மக்கள்தான் பேசிக்கொண்டு இருக்க வேண்டும், செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இப்போது அப்படியில்லை. இயற்கைதரும் உயிர்காற்றை சுவாசிப்பவனும், உயிர்நீரை குடிப்பவனும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தான் என்கின்ற எண்ணத்தில் எல்லோரும் சுற்றுச்சூழலுடைய செயல்பாட்டாளர்களாக மாற வேண்டும் என்பதுதான் நமது அக்கறை. இதுபொன்ற எளிமையாக மாணவர்களுக்கு, வருகின்ற தலைமுறைக்கு
போய் சேருகின்ற வகையில் சிறு சிறு கையேடுக மலிவான விலையில் நல்ல வண்ணமயமாகவும், எளிதில் புரியும் விதத்திலும் தயாரிக்க வேண்டும்.
அதில் எதைப்பற்றிக் குறிப்பிட்டாலும் அதைப்பற்றி முழுமையாய் தகவல்கள் தெரிந்து கொள்ளும்படி அதை வடிவமைக்க வேண்டும். நீர் என்றால் நீரைப்பற்றி, யானையென்றால் யானையைப்பற்றி, காற்றென்றால் காற்றைப்பற்றி, மண் என்றால் மண்ணைப்பற்றி என எதைப்பற்றி வந்தாலும் அதன் தலைப்புகளில் முழுமையாக அறிந்து கொள்ளும்படி சிறுசிறு புத்தகங்களாக எளிய முறையில் எழுதி அச்சிட்டு கொடுத்தால் வரக்கூடிய தலைமுறை இதனை உணர்ந்து செயல்படுவதற்கு மிகபெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இது அமையும் என்பது என் கருத்து.
? உங்கள் ட்ரீ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து...
நான் 28 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பணியில் ஈடுபட்டு வருகிறேன். சமீபத்தில் தொடங்கிய ’ட்ரீ’ அமைப்பில் ஒத்த கருத்துடைய நண்பர்களும், நல்ல மனிதர்களும் இணைந்திருக்கிறார்கள். முக்கியமாக மரம் நடுவது, கழிவுப் பொருட்களில் மட்காத பொருட்களைப் பிரிப்பது, மரங்களில் ஆணிகளை அகற்றுவது பற்றி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதை திங்கள்கிழமைதோறும் தொடர்ந்து செய்து வருகிறோம். இப்போது ’ட்ரீ’ அமைப்பு அனுப்பும் ஒரு குறுந்தகவல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் இணைந்து செயல்பட முன் வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக