20 மார்., 2016

முத்துப்பட்டி பெருமாள்மலையும் சமணமும்

மதுரைக்கு அருகே உள்ள மலை ஒன்றில் 2000 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள கல்வெட்டுகள் உள்ளன பார்க்க வருகிறாயா ? என மைத்துனரிடம் இருந்து அழைப்பு வந்துது. 2000 வருட பழமை என்றால் நிச்சயம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வை தாங்கி இருக்கும் என்பதால், சரி என்றேன். எப்போது பார்க்க செல்கிறோம் என்றேன். நாளை காலை 5 மணிக்கெல்லாம் தயாராக பேருந்து நிலையம் வந்துவிடு என்றார். 

மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் தயாராக பேருந்து நிலையம் வந்தடைந்தேன். மழை லேசாக பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மைத்துனரும் அவரது இரு நண்பர்களும் இருசக்கர வாகனங்களில் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடு பயணத்தில் நானும் ஐக்கியமானேன். வழியெங்கும் மழைச்சாரல் அடித்துக் கொண்டே இருந்தது.


அவர்களிடம் எந்த மலையை பார்க்க போகிறோம் என்றேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே உள்ள மலை ஒன்றை காணப்போவதாக கூறினார்கள். நாம் நால்வர் மட்டும்தானா ? என்றேன். இல்லை. இன்னும் பல நண்பர்களோடு என்றனர். அரை மணி இடைவெளியில் சரியாக 6 மணி இருக்கும், காமராசர் பல்கலைக்கழகம் அருகே இருந்த தேநீர் கடையில் வண்டியை நிறுத்திவிட்டு தேநீர் பருகினோம். சற்று நேரத்தில் இன்னும் சிலர் அங்கு வந்து சேர்ந்தனர்.

மழைச்சாரல் நின்றிருந்தது. சில்லென்ற மழைக் காற்றில் நண்பர்கள் அனைவரோடும் இணைந்து மலைப் பயணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு 50க்கும் மேற்பட்டவர்கள் வந்து சேர்ந்தனர். அதில் பெண்களும், குழந்தைகளும் இருந்தனர். இந்த அதிகாலை வேளையிலேயே இவர்கள் அனைவரும் வந்திருப்பது பற்றி மைத்துனரிடம் கேட்டதற்கு, இவர்கள் அனைவரும் ‘பசுமை நடை’ குழுவைச் சேர்ந்தவர்கள் என்றார்.

பேசிக்கொண்டிருக்கும் போதே அனைவரும் நம்முடன் நின்றிருந்த நண்பர்கள் அவர்களோடு சேர்ந்து கிளம்ப தயாராகினர். அவர்களுடன் இணைந்து அனைவரும் பல்கலைக்கழக குடியிருப்பு பகுதிக்கு எதிரே அமைந்துள்ள ‘முத்துப்பட்டி’ மலையை நோக்கிச் சென்றோம். அப்போது மீண்டும் மழைத் தூரல் ஆரம்பித்திருந்தது.

முத்துப்பட்டி மலை அமைந்திருக்கும் வழியெங்கும் குன்றுகள் வெட்டப்பட்டிருந்தது. பல இடங்களில் மிக ஆழமான அளவிற்கு மலைகள் வெட்டப்பட்டிருந்தது. வெட்டப்பட்ட இடங்களில் எல்லாம் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. சிறிது நேர நடைபயணத்திற்கு பிறகு தூரத்தில் மலை தெரிந்தது. அந்த மலையில்தான் கல்வெட்டுகள் உள்ளன என்றனர் உடன் வந்த நண்பர்கள். இப்பகுதியில் வாழும் மக்களால் இம்மலை முத்துப்பட்டி மலை மற்றும் கரடிப்பட்டி பெருமாள்மலை என்று அழைக்கப்படுகிறது.

பசுமைநடைக் குழுவினர் அனைவரையும் மலையை நோக்கி நம்மை அழைத்துச் சென்றனர். குழுவினரின் கூட்டத்தைப் பார்த்து மலையை ஒட்டிய சிற்றூர் வாசிகள் அனைவரையும் அதிசயமாக பார்த்து அவர்களுக்குள்ளாறே பேசிக்கொண்டிருந்தனர். இவுகலாம் யாரு...என்ற ஒரு பாட்டியின் குரலுக்கு, இந்த மலையைப் பாக்கத்தான் வந்திருக்காக... என்று வந்தது இன்னொரு பெண்மணியின் பதில் குரல். வழியெங்கும் மல்லிகைத் தோட்டங்களில் பூப்பறித்துக் கொண்டிருந்தனர். மழைத்தூரலில் நனைந்தவாறே அருகிலிருந்த மலையில் ஏறினோம். 

மலை மழையில் நன்றாக நனைந்திருந்தது. மலையின் அடிவாரத்தில் தொல்லியல் துறையினரின் தகவல் பலகையின் நிலைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாம இருந்தது. மலைமீது ஏறி அங்கிருந்த குகை போன்ற பகுதிகளில் அனைவரும் மழைக்கு ஒதுங்கினோம். நமக்கு முன்னரே ஆடுகள் சில அவ்விடத்தில் தஞ்சம் அடைந்திருந்தன. சிறிது நேரத்திற்கு பிறகு எங்களுக்காக மழை லேசாக நின்றிருந்தது. அனைவரும் மலையையும், மலையைச் சுற்றியுள்ள பகுதிகளை கண்டோம். மழையின் காரணமாக சூழ்நிலை மிகவும் குளிர்ச்சியாக பசுமையோடு இணைந்திருந்தது.


மலையில் அமைந்திருந்த குகை போன்ற இடத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட படுக்கைகள் வெட்டபட்டுள்ளது. அவைகள் அனைத்தும் மிக வழவழப்பாக செய்யப்பட்டிருந்தது. படுக்கைகள் அனைத்தும் 4 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் வரிசையாக வெட்டபட்டுள்ளது. ஒவ்வொரு படுக்கைக்கும் இடையிடையே சிறு மேடும், தலைப் பகுதியில் ஒரு கல்வெட்டும் உள்ளவாறு வெட்டப்பட்டுள்ளது. இக்குகை போன்ற இடத்திற்கு பெயர் ‘பஞ்சவர் படுக்கை’ என்றும், இங்குள்ள கல்வெட்டுகள் ’தமிழி’ (பிராமி) வகையைச் சார்ந்தது என்றும் குழுவில் வந்திருந்த தொல்லியல் அறிஞர் அய்யா சாந்தலிங்கம் வந்திருந்தவர்களிடம் கூறினார்.

குகைத்தளத்தின் முகப்பில் குகையின் நெற்றிப் பகுதியிலும் பிராமிக் கல்வெட்டுகள் வெட்டபட்டிருந்தது. நெற்றிப் பகுதியில் மழைநீர் உள்ளே புகாதாவாறு புருவம் போன்று காடி வெட்டப்படிருந்தது. குகையின் இன்னொரு பகுதியில் சமண மதத்தைப் பரப்பிய மகாவீரரின் புடைப்புச் சிற்பங்கள் வெட்டப்பட்டு அதன் கீழும் கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருந்தது. இக்கல்வெட்டு ’வட்டெழுத்துக்கள்’ வகையைச் சார்ந்தது என்றார் சாந்தலிங்கம் அய்யா. அருகில் இருந்த இன்னொரு குகை போன்ற இடத்திலும் ஒரு படுக்கையும் அதன் மேல் ஒரு கல்வெட்டும் உள்ளது. இக்கல்வெட்டு எழுத்துக்கள் மட்டும் படிக்க முடியாதவறு சிதைந்து போய் உள்ளது. மலையில் உள்ள மகாவீரரின் சிற்பங்களின் கீழே மகாவீரரின் கற்ச்சிலை ஒன்று முனைப்பகுதி உடைந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

அனைத்துச் புடைப்புச் சிற்பங்களையும், படுகைகளையும், கல்வெட்டுகளையும் பார்த்த பிறகு மனதில் தோன்றியது, இவையனைத்தும் இந்த மலையில் இல்லையென்றால் இம்மலையும் அழிக்கப்பட்டிருக்கும் என்று. இதனை வரும் வழியில் கண்ட காட்சிகள் உறுதி செய்தன. குழுவினர் அனைவரும் குகைத்தளத்தின் கீழே அமர்ந்தோம். 

மழையின் காரணமாக இன்றைய நிகழ்வு நடைபெற வாய்ப்பிருக்காது என்றென்னி பலரும் வரவில்லை. இருந்த போதிலும் அறுபது நண்பர்கள் வந்திருந்தனர். பெண்களும், சிறுவர்களும் என பலர் வந்திருந்தது பசுமைநடையின் மீது புது நம்பிக்கையை நமக்கு தந்தள்ளது என்றார் பசுமைநடை குழுவை நடத்திவரும் எழுத்தாளர் சமூக ஆர்வலருமான அ.முத்துக்கிருஷ்ணன். பின்னர் மழையில் நடந்த மலைப்பயணம் குறித்து பேசினார். இம்முறை மழையால் பசுமைநடை இருக்குமா என பலரும் அலைபேசியில் அழைத்து அடிக்கடி விசாரித்து இருக்கின்றனர். இந்த மழையிலும் அறுபதுபேர்கிட்ட வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இதுபோன்ற ஆர்வத்தைப்பார்க்கும் போது இன்னும் பல பயணங்கள் செல்ல உற்சாகமளிப்பதாகக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா முத்துப்பட்டி மலையில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள், சமணம் குறித்த தகவல்களை கூறினார். குகைத்தளத்தின் முகப்பில் உள்ள தமிழி (பிராமி) கல்வெட்டில், அங்குள்ள படுகைகளை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார். குகையின் கிழக்கு நோக்கி காணப்படும் கல்வெட்டில், 

‘சையஅளன் விந்தைஊர் காவிய்’ என்னும் கல்வெட்டு மலையிலுள்ள பெரிய குகைத்தளத்தின் முகப்பு பகுதியில் மூன்று பகுதிகளைக் கொண்ட வார்த்தைகளாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமிக் கல்வெட்டு ஆகும். விந்தையூரைச் சேர்ந்த சையளன் என்பவர் இக்குகைத்தளத்தை அமைத்து தந்திருப்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் விந்தைஊர் என்பது இன்றுள்ள மதுரை வண்டியூராக இருக்கலாம் என்றார். 

’திடிக்காத்தான் {ம}....னம் எய்...’ குகைத்தளத்தின் கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டு கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்து தந்த கற்படுகையாக இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.

’நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்’ சிறுகுகைத் தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாக காணப்படும் இக்கல்வெட்டு கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி என்பது சேரர் துறைமுகப்பட்டிணத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும், நாகபேரூரின் தலைவரும் செய்துகொடுத்த கொடை எனப் பொருள் கொள்ளலாம்.

மேலும், அக்காலத்திலேயே இந்தப்பகுதி பாண்டிய நாட்டின் தலை நகரத்திற்கும், சோழ நாட்டின் தலைநகரான உறையூருக்கும் (இன்றைய திருச்சி) இடையிலான முக்கிய பெருவழிகளாக இருந்துள்ளன. இந்த மலைக்கு அருகிலுள்ள கீழ்குயில்குடி, கொங்கர்புளியங்குளம் ஆகிய இடங்களிலும் சமணத்தின் சுவடுகள் உள்ளன. வணிகர்கள் அந்தக் காலத்தில் சமணத்தை ஆதரித்தனர். அதனால் பெரும்பாலான இவ்வழித்தடங்களில் சமணம் சார்ந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் காணப்படுகின்றன என்றார்.


குகைத்தளத்தில் தெற்கு நோக்கி மகாவீரர் அமர்ந்தது போன்ற இரண்டு சிற்பங்களும், அதன் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகின்றன. மகாவீரரின் இரண்டு பக்கங்களிலும் இருவர் வெஞ்சாமரத்தால் வீசிக் கொண்டிருந்தனர். இந்த இரண்டு கல்வெட்டுகளும் கி.பி 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். முதல் சிலையின் கீழுள்ள கல்வெட்டு கூறும் வார்த்தை வரியானது,

’ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர் மாணக்கர் மகாணந்தி பெரியார் நாட்டாற்றுப்புறத்து நாட்டார்பேரால் செய்விச்ச திருமேனி‘

பராந்தகப்பர்வதமாயின குரண்டி என்னுமிடத்தில் உள்ள சமணப்பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் இதைச் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவியூர்க்கருகிலுள்ள குரண்டி மலைக்கு பராந்தகபர்வதம் என்று பெயர். அங்குள்ள சமணப்பெரும்பள்ளியில் மாணவர்கள் பலர் கல்வி பயின்றுள்ளனர்.

இரண்டாவது சிலையின் கீழுள்ள கல்வெட்டு கூறும் வார்த்தை வரியானது, 


’ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாஸி படாரர் மாணாக்கர் குணசேனதேவர் மாணாக்கர் கனகவீரப் பெரியடிகள் நாட்டாற்றுப்புறத்து அமிர்த பராக்கிரம நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி பள்ளிச் சிவிகையார் ரக்ஷ‘

அருகிலுள்ள சிற்றூரான கீழக்குயில்குடி ஊரார்க்காக குரண்டிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்துள்ளார். மேலும், அந்தக்காலத்தில் சமணத்தைப் பின்பற்றிய மக்கள் இதனை ஒரு நேர்த்திக்கடன் போல் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். கோவில்பட்டிக்கு அருகேயுள்ள கழுகுமலையில் நிறைய மகாவீரர்ச் சிற்பங்கள் வரிசையாக செதுக்கப்பட்டு உள்ளன. கீழக்குயில்குடியிலும் பெரும்பள்ளி ஒன்று நடைபெற்று வந்துள்ளது. அதனுடைய சுவடுகள் இன்றும் அந்த மலையில் காணப்படுகின்றன.

மேலும் சமணர்கள் இது போன்ற மலைகளில் தங்கி மக்கள் அனைவருக்கும் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். மலையில் உள்ள கல்வெட்டுக்களை வாசித்து அதன் பொருளையும் சமண மதத்தின் சிறப்புகளையும் சாந்தலிங்கம் அய்யா வந்திருந்தவர்களுக்கு கூறினார். அய்யா அவர்களுக்கும், தோழர். முத்துக்கிருஷ்ணனுக்கும் வந்திருந்தவர்கள் அனைவரும் பெரும் நன்றியைக் கூறினார்கள்.

தற்போது மழை அதிகமாகி பெய்து கொண்டிருந்தது. அனைவருக்கும் படுக்கைகள் இருந்த குகைத்தளத்தில் வந்திருந்தவர்களுக்கு காலை உணவை பசுமைநடைக் குழுவினர் வழங்கினர். மழையில் நனையாதவாறு கிடைத்த இடங்களில் ஒதுங்கி நின்று கொண்டே சாப்பிட்டோம். உணவிற்கு பின் மலையையும், சிற்பங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு மலையைவிட்டு திரும்பினோம்.

இது போன்ற நிகழ்வுகளின் மூலம் நிச்சயம் நமது தமிழ் வரலாறு நிலைத்து நின்று அனைவரையும் சென்றடையும் என்பதில் ஐய்யமில்லை. திரும்பிக் கொண்டிருக்கும் போது அடுத்த பசுமைநடை எப்போது என்று நண்பர்களிடம் கேட்டேன். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு காலையில் என்றனர். மழையிம் நனைந்தவாறே மனம் அடுத்த நடைக்கு தயாரனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக