2 அக்., 2015

குன்னத்தூரும் சுப்பிரமணியர் மலை கல்வெட்டும்...

மதுரை - சிவகங்கை சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். வரிச்சியூரிலிருந்து வலது புறமாக செல்லும் சாலை .குன்னத்தூர் நோக்கிச் செல்கிறதுஇச்சாலையில் சுமார் 1 கி.மீ தொலைவில் சாலையின் வலதுபக்கம் உதயகிரி எனப்படும்சுப்பரமணியர் மலைஅமைந்துள்ளது. சுப்பரமணியர் மலையின் கிழக்கு திசையில் உதயகிரீஸ்வரர் எனும் குடைவரைக் கோயிலும் குன்றின் பின்புறம் அஸ்தகீரிஸ்வரர் எனும் குடைவரை கோயிலும் அமைந்துள்ளதுஇம்மலைக்கு சென்ற வாரம் நண்பர்களளோடு சென்று வந்தேன்.


உதயகிரீஸ்வரர் குடைவரைக் கோயிலுக்கு வடபகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணியர் மலையில்  குகைத்தளம்  சற்று உயரத்திலும் மிகப்பெரியதாகவும் காணப்பட்டது. இயற்கையான முறையில் அமைந்த இக்குகையில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்  கற்படுக்கைகளும் அமைந்துள்ளன. எண்ணளவு குறித்த கல்வெட்டுகள் இம்மலையின் குகைத்தள முகப்பில் காணப்படுவது இக்குன்றின் சிறப்பு. நண்பர்கள் அனைவரும் குகைத் தளத்திற்கு சென்றோம். குகைத்தளம் சற்று உயரத்தில் மிகப்பெரியதாக காணப்பட்டது. குகைத்தளத்திற்கு செல்வதற்கு படி்கள் தொல்லியல் துறையினரால் செய்து தரப்பட்டுள்ளது. குகைத்தளத்திற்கு முன்னால் படிகளின் அருகில் இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கைகள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் தாங்கிய கல்வெட்டு அறிவிப்பு தொல்லியல் துறையினரால் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குகைத்தளத்தின் இடதுபுறத்தில் சுவர் எழுப்பப்பட்டு இரண்டு இரும்பு கதவுகள் காணப்பட்டன. இடப்புறமுள்ள கதவின் வழியே உள்ளே உள்ள முருகன் சிலையையும்  வலதுபுறமுள்ள கதவின் வழியே சிவலிங்கத்தையும் காண முடிகிறது. நாங்கள் சென்றிருந்த போது கோயிலின் பூசாரி இருந்ததால், அவரின் அனுமதியோடு உள்ளே சென்றோம். உள்ளே குகை உள்நோக்கிச் சென்று கொண்டிருந்தது. உள்ளே ஒரே இருள் நிறைந்திருந்ததது. இரும்பு கதவின் வழியேதான் உள்ளே வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. இடப்புறம் ஒரு அறை எடுக்கபட்டுள்ளது. அங்கே முருகன் வேலோடு காட்சி தருகிறார். வெளியே இடப்பக்கத்தில் விநாயகர் சிலை உள்ளதுவலதுபுறம் காணப்படும் அறையின் உள்ளே சிவலிங்கம்  காணப்படுகிறது. மேலும் குகைக்குள்ளே பெண் தெய்வம் ஒன்றின் சிலையும், சிறிய சாய்பாபாவின் சிலையும் காணப்பட்டது.
வெளியே கிழக்குப் பார்த்து அமைந்துள்ள குகைத்தளத்தில் சுமார் 20 சமணத்துறவியர்கள்  தங்கும் வசதியுடன் கூடிய கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. குகையின் நெற்றியில் புருவமும், நீர்வடி விளிம்பும் வெட்டப்பட்டுள்ளன. இங்கு மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டாகும்.  1908ல் இங்குள்ள கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது.
பளிய் கொடுபி……
என்ற முதல் கல்வெட்டு வடக்கு நோக்கிய குகைத்தளத்தில் முற்று பெறாமல் சிதைந்துள்ளது. இந்த குகைப்பள்ளி செய்து கொடுக்கப்பட்ட செய்தியாக இருக்கலாம்வேறு பெயர் எதுவும் வெட்டப்படவில்லை.
அடா….. .. . றை ஈதா வைக ஒன் நூறுகல நெல்......
என்னும் இரண்டாம் கல்வெட்டு கிழக்கு நோக்கிய பெரிய குகைத்தளத்தின்  நெற்றியில் நீர்வடி விளிம்பின் மேலாகச் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டிலும் ஆங்காங்கே சிதைசுகள் காணபடுகின்றது. இப்பள்ளிக்குநூறு கலம் நெல்வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. ‘ஈதாஎன்பது மகிழ்ச்சியைக் குறிக்கும் விளிச் சொல்லாகும்.
இளநதன் கருஇய நல் முழ உகை
என்னும் மூன்றாம் கல்வெட்டு நீர்வடி விளிம்பின் கீழே செதுக்கப்பட்டுள்ளது. இளந்தன் என்பவரால் இக்குகை உருவாக்கப்பட்டது என்பது இதன் பொருள்.
இக்கல்வெட்டுகளில் கலம், நெல், நூறு, கருகிய, முழுஉகை ஆகிய புதிய சொற்கள்  காணப்படுகின்றன. பெரும்பாலான தமிழ்பிராமிக் கல்வெட்டுகளில் குகை செய்து கொடுத்த அல்லது பொருள் கொடை கொடுத்த வரலாற்று செய்திகளே உள்ள நிலையில், இங்கு மட்டும் அளவைப் பெயர், எண்ணுப் பெயர், தானியப் பெயர் போன்றவைககள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த விசய நகர அரசர் காலத்திய கல்வெட்டு ஒன்றும் கற்படுக்கையின் மீது வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் வரிச்சியூர் என்ற ஊரின் பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சொக்கட்டான் விளையாட பயன்படுத்தும் கட்டங்கள் ஒன்று கற்ப்படுக்கைகளில் செதுக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டு பாதங்களின் சுவடுகள் மற்றும் மருந்து அரைக்கும் குழிகள் சில இடங்களில் செதுக்கப்பட்டிருந்தது. அனைத்து வரலாற்றுக் குறிப்புகளையும் நிழற்ப்படங்களாக பதிவு செய்துகொண்டு பின்னர் அங்கிருந்து அருகிலுள்ள உதயகீரிஸ்வரர் மற்றும் அஸ்தகிரீஸ்வரர் குடைவரை கோயில்கள் நோக்கிச் சென்றோம்.
குடைவரை கோயில்கள் பற்றி படிக்க இச்சுட்டியை அழுத்தவும்…. குன்னத்தூரும் குடைவரை கோயில்களும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக