28 ஜூன், 2015

தென்பரங்குன்றம் குடைவரைக் கோயில்.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி செல்லும் சாலையில், சாலையின் இடது புறத்தில் குடைவரைக்கு செல்லும் வழிக் காணப்பட்டது. குடைவரைக்குச் செல்லும் வழியில் பூங்கா ஒன்று  அழகாக காணப்பட்டது. நாங்கள் சென்ற நேரம் பூங்காவில் ஆங்காங்கே காதலர்கள் அமர்ந்திருந்தனர். மலையில் குடைவரைச் சற்று உயரத்தில் காணப்பட்டது. மேலே செல்வதற்கு வசதியாக படிகள் செய்து தரப்பட்டிருந்தது.





குடைவரையானது முன்னால் 10 அடிக்கு சுற்றிலும் இரும்பு கம்பிகளால் ஆன வேலியால் பாதுகாக்கப்பட்டிருந்தது. குடைவரைக்குள் செல்வதற்கு முன் வெளியில் மலையில் புடைப்புச் சிற்பங்கள் சில இரு பக்கங்களிலும் காணப்பட்டது. குடைவரையின் வலது புறத்தில் மூன்று புடைச் சிற்பங்கள் மற்றும் இடது புறத்தில் மூன்று சிற்பங்கள் காணப்படுகின்றன. இடமிருந்து வலமாக முதலில் விநாயகர் சிற்பம் உள்ளது. சிற்பத்தில் முகம் மற்றும் துதிக்கைகள் சேதமைடைந்துள்ளன.
அதற்கு அடுத்து இரண்டு சிற்பங்களும் ஒரே அமைப்பில் சம்மணம் இட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இரண்டு சிற்பங்களின் தலையின் மேலே குடை போன்ற அமைப்பு காணப்படுவதால் தவம் புரியும் முனிவர்களின் உருவங்களாக இருக்க வாய்ப்புள்ளது. கடைசி சிற்பத்தின் உருவம் மகாவீரரின் உருவத்தை போன்றுக் காணப்படுகிறது. சிற்ப வேலைகள் முழுமையடையாமலும், சில இடங்கள் சேதமுற்று இருப்பதாலும் சிற்பங்களின் காணும் உருவமுடையவரை அடையாளம் காண முடியவில்லை.
வலது புறத்தில் உள்ள மூன்று புடைப்புச் சிற்பங்களில் முதலாவதாக பெண் உருவம் ஒன்று பீடத்தின் மீது ஒரு காலை மடக்கி மற்றொரு காலை கீழே தொங்கவிட்ட நிலையில் காணப்படுகிறது. உமையாளின் சிற்பமாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த சிற்பத்தில் மூன்று பேரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அதில் நடுவில் உள்ள சிற்பம் ஆடல்வல்லானான நடராசரின் உருவமாகவும், அவரின் இரு புறங்களிலும் அவருடைய அடியார்களின் உருவங்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
மூன்றாவது சிற்பம் பார்ப்பதற்கு சமணத் தீர்த்தங்கரரின் உருவம் போன்று இருந்தாலும் அவரின் பின் நாய் ஒன்று நிற்பது போல் உள்ளதால் அதனைப் பற்றிய விபரமும் அறிய முடியவில்லை. குடைவரையின் முன்னர் மேல் பகுதியில் மழைநீர் உள்ளே புகாதவாறு காடிகள் வெட்டப்பட்டிருந்தது. குடைவரையின் முன் உள்ள ஆலமரத்திலும், குடவரையின் முன்னதாகவும் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன.


குடைவரை மலையைக் குடைந்து மிக அழகாகச் செய்யப்பட்டிருந்தது. உள்ளே கிழக்குப் பார்த்த கருவறையும், அதன் முன்னதாக நான்கு தூண்கள், நான்கு அரைத் தூண்கள்களுடன் கூடிய முன்மண்டபத்துடன் இக்குடைவரை அமைந்துள்ளது. கருவறையில் புடைப்புச் சிற்பமாக ஒரு தீர்த்தங்கரரின் உருவம் செய்யப்பட்டிருந்தது. இது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக் குடைவரை.
கி.பி.1223ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை சிவன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் எனக் இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுத் தகவல்களை ‘மதுரையில் சமணம்’ எனும் புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. இக்கோயிலின் பாரமரிப்புக்காக புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை தானமளித்த செய்தி இங்குள்ள கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது. இக்கோயிலை அமைக்க பிரசன்னதேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார்.
தற்போது உமையண்டார் கோயில் என்று இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. அதற்கு ஏற்ப ஏற்கனவே இருந்த சமணத் தீர்த்தங்கரர் உருவத்தை மாற்றம் செய்து அர்த்தநாரியின் உருவத்தையும், அதன்பின் நந்தியின் சிற்பத்தையும் உருவாக்கியுள்ளனர். சிற்பத்தின் தலைக்கு மேலாக காணப்படும் சுருள் சுருளான கிளைகள் அசோக மரத்தைக் குறிக்கின்றது. இந்த ஆசோக மரச்சான்று ஒன்றே முன்பு சமணக் குடைவரையாக இருந்துள்ளது என்பதற்கு சான்றாக உள்ளது. மேலும், 13ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் குடைவரைக்கோயில் அமைக்கும் வழக்கம் இல்லை என்பதும், இது மாற்றப்பட்ட கோயில் என்பதற்கு ஒருச் சான்றாகும்.


குடைவரையின் முன் மண்டபத்தில் உள்ள வட சுவற்றில் தெற்கு பார்த்தவாறு நடராசரின் ஆனந்த சிவதாண்டவ நடனச் சிற்பம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதில் வயிற்க்கு கீழ் உள்ள பகுதிகள் இல்லாதவாறு முழுமையாக சேதமடைந்துள்ளன. இச்சிற்பத்தை வலதுப்புறத்திலும் கீழேயும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அருகிலேயே திருமால் தனது துணைவியார் இருவரோடு காட்சி தரும் சிற்பம் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் உள்ள மேற்கு பக்க சுவர்களில் ஏராளமான வட்டெழுத்துக் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டிருந்தன. ஒரு தூணிலும் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்பட்டது.
இன்றைய நாளில் மிக முக்கியமான 2000 வருடங்களுக்கு மேலான வரலாற்றுத் தகவல்கள் மற்றும் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான குடைவரை பற்றிய தகவல்களை அறிந்துகொண்ட மகிழ்ச்சியில் அனைத்து வரலாற்றுத் தகவல்களையும் நிழற்படங்களாக பதிவு செய்துகொண்டு திரும்பினோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக