28 ஜூன், 2015

திருப்பரங்குன்றம் அமன்பாழி கற்படுகைகள்...

சென்ற வாரம் காலையில் திருப்பரங்குன்றம் வரை நானும் நண்பரும் சென்றிருந்தோம். திருப்பரங்குன்றம் மதுரையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் மதுரை – திருமங்கலம் சாலையில் அமைந்துள்ளது. மலையின் மேற்குப் பகுதியில் தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் மலையில் இயற்கையாக அமைந்த குகைத்த தளம், சமணத்துறவிகள் தங்குவதற்கு வெட்டப்பட்ட கற்படுக்கைகள், தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் என பல வரலாற்றுத் தகவல்களை இம்மலை தன்னகத்தே கொண்டுள்ளது. திருப்பரங்குன்ற மலையைச் சுற்றி வரும் வழியில் தென்பரங்குன்றத்தில் குடைவரைக்கோயில் ஒன்றுள்ளது. இவை அனைத்தையும் கண்டுவர வேண்டும் எனச் சென்றிருந்தோம். தொன்மையான வரலாற்றுச் செய்திகளைக் காண பயணத்தோம்.


’அமன்பாழி கற்ப்படுக்கைகள்’ என்ற வழிகாட்டும் பதாகை ஒன்று தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கருகில் அமைந்திருந்தது. அவ்வழியாகச் சென்றால் மலைமீது ஏறிச் செல்வதற்கான வழி உள்ளது என  அப்பகுதி மக்கள் கூறினர். முதலில் அவர்கள் கூறிய வழிக்காட்டும் பதாகையைக் கண்டுபிடிப்பதே பெரிய வேலையாக அமைந்தது. பின்னர் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதி ஒன்றின் முன்னால் அப்பதாகையைக் கண்டோம். பதாகைகாட்டும் வழியில் குடியிருப்புகள் சில இருந்தன. அக்குடியிருப்புப் பகுதியைக் கடந்துதான் செல்லவேண்டியிருந்தது. அங்கு ஒரு வீட்டின் முன் கட்டிப் போட்டிருந்த நாய் ஒன்று விடாமல் நம்மைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது.
முற்புதர்களைக் கடந்து சென்றால் மலையின் அடிவாரத்தில் சிறிது தூரத்திற்கு கான்கிரீட் படிகள் செல்கின்றன. பின்னர் பாறையில் படிபோல் செதுக்கியுள்ள படிகள் வழியே மேலேறிச் செல்ல வேண்டியுள்ளது. மலையில் மேலே சற்று உயரத்தில் குகை போன்ற பகுதிக் காணப்பட்டது. மிகக் கவனத்துடன் ஏறினோம். அன்று வெயில் சற்று குறைவாக இருந்தது ஏறுவதற்கு உதவியாக இருந்தது. குகைத் தளத்திற்கு சற்று முன்னதாக கைபிடித்து ஏறுவதற்கு வசதியாக ஆங்காங்கே இரும்பு குழாயினால் ஆன தடுப்புகள் அமைத்திருக்கிறார்கள். குகைத் தளத்தை அடைந்தவுடன் சற்று ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. குகையினுள் உள்ளே சிறு சிறு குகைகளும் கற்படுக்கைகளும் காணப்பட்டது. சற்று நேரம் குகைத்தளத்தை கண்டு ரசித்தோம்.
குகைத்தளத்தில் உள்ளே பத்திற்கும் மேற்ப்பட்ட கற்ப்படுக்கைகள் வெட்டப்பட்டிருந்தன. அதில் மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் காணப்பட்டன. இவை கி.மு முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனத் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா தனது ‘மதுரையில் சமணம்’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சுமார் 2100 வருடங்களுக்கு முன்னரே சமணர்கள் இங்கு தங்கி வாழ்ந்துள்ளனர் என்பதை இக்கல்வெட்டுகள் மற்றும் கற்ப்படுக்கைகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்விடம் தொல்லியல்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தகவல்களை நிழற்ப்படங்களாக பதிவு செய்து கொண்டோம். கல்வெட்டுகள் பற்றிய குறிப்புகளை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா எழுதிய ‘மதுரையில் சமணம்’ எனும் புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.
முதல் கல்வெட்டு கற்படுக்கையின் தலைப்பகுதியில் தலைகீழாக ஒரே வரியாக வெட்டப்பட்டுள்ளது.
‘ அந்துவன் கொடு பிதவன் ‘
இதில் அந்துவன் என்பவன் இக்கற்ப்படுக்கையை செய்து கொடுத்தவன் என்பது பொருள். அந்துவன், நல் அந்துவன் என்ற பெயர்கள் சங்க காலத்தில் சில  புலவர்களுக்கு உரியதாக இருந்துள்ளது.   
இரண்டாவது கல்வெட்டு முதலில் குறிப்பிட்ட கல்வெட்டின் அருகிலேயே இரண்டு படுக்கைகளின் பக்கவாட்டில் இரண்டு துண்டுகளாக உள்ளது.
‘ மாரயது கய(ம்) ‘
மாராயம் என்பது அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம். கயம் என்றால் குளம், நீர்நிலை எனப் பொருள். எனவே, மாராயம் என்னும் பட்டும் பெற்ற ஒருவர் ஒரு நீர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியைக் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
மூன்றாவது கல்வெட்டு முதல் இரண்டு கல்வெட்டுக உள்ள கற்படுக்கைகளுக்கு கீழே வரிசையாக  தலைப்பகுதியில் ஒற்றை வரியாக நீளமாக வெட்டப்பட்டுள்ளது.
‘ எருகாடூர் ஈழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன நெடுசாதன் ‘
எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுஞ்சாத்தன் இந்தக் கற்படுக்கையை செய்து கொடுத்தான் என்பது இதன் பொருள் எனக் கொள்ளலாம். எருகாடூர், ஆய்சயன், நெடுசாதன் என்ற சொற்களில் முறையே க்,ச்,த் சேர்த்து எருக்காடூர், ஆய்ச்சயன், நெடுசாத்தன் எனப் படிக்க வேண்டும்.  
இக்குகைத்தளத்தினருகில் சிறிய சுனை ஒன்று காணப்படுகிறது. உள்ளே மலைக் காலங்களில் நீர் உள்ளே புகாதவாறு குகைத் தளத்தின் நெற்றியில் புருவம் போன்று காடிகள் வெட்டப்பட்டுள்ளன. கீழே விழுகின்ற நீரை கீழே கடத்துவதற்காக அழகாக காடிகள் வெட்டப்பட்டுள்ளது. மலையிலிருந்து சுற்றிப் பார்த்தால் தொலைவிலுள்ள சமணமலை, நாகமலை எல்லாம் அழகாகத் தெரிந்தன. அனைத்தையும் பார்த்துவிட்டு கீழிறிங்கி மலைக்கு பின்புறம் அமைந்துள்ள குடைவரைக் கோயில் நோக்கிச் சென்றோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக