6 ஜன., 2018

தென்காசி காசி விசுவநாதர் கோவில்



சுற்றுலா சென்று சில மாதங்கள் ஆனதும், நகர வெயிலில் தினம் நடைபெறும் காக்க குளியல் மீதான சலிப்பிலும் குற்றாலம் சென்று ஒரு அருவி குளியலை போட்டுவிட்டு வரலாமே! என்ற எண்ணம் சில் மனதில் தோன்றி வந்தது. குற்றாலத்தில் அருவியில் தண்ணி வருது என்ற செய்தி கேட்டதும், சென்ற வாரம் நண்பர்களோடு சேர்ந்து குற்றாலம் சென்று வந்தேன். மார்கழி மாத மிதமான காலைப் பணியில்  மதுரை - செங்கோட்டை பயணிகள் தொடர்வண்டியில் பயணம். பயணத்தில் சென்ற வாரம் பெய்த மழையால் வழியெங்கும் நீர்நிலைகள், பறவைகள், வயல்கள் என எங்கும் பசுமை நிறைந்திருந்தது
.
தென்காசியில் இருந்து குற்றாலம் 5 கி.மீ. அனைவரும் தென்காசி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினோம். குற்றாலம் செல்வதற்கு முன் தொன்மையான காசி விசுவநாதர் கோவிலை பார்த்துவிட்டு செல்ல  முடிவு செய்தோம்தொடர்வண்டி நிலையத்தில் இருந்து கோவில் 1கி.மீ தொலைவில் கோவில் அமைந்துள்ளதால் நடந்தே சென்றோம். கோவில் நுழைவாயிலாக ராசகோபுரம் மிக அழகாக காணப்பட்டது.

கோவில் கோபுரத்தின் அழகை ரசிக்க நிச்சயம் பல நிமிடங்கள் தேவை. அவ்வளவு அழகிய சிற்ப வேலைப்பாடுகள். கோபுரத்தின் அடி முதல் உச்சி வரைசுற்றிலும் ஏராளமான கலைச் சிற்பங்கள் நிறைந்திருந்தன. கோபுரத்தின் உயரம் 180 அடி மற்றும் ஒன்பது (9) அடுக்கு மாடங்களைக் கொண்டுள்ளது. மாட அடுக்குகள் அனைத்தும் தற்போது புதிதாக வண்ணங்கள் தீட்டப்பட்டு கட்டப்பட்டவை. அதற்கு முந்தைய ராச கோபுரம் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கோவிலின் நீளம் கிழக்கு மேற்காக 554 அடியாகவும்தெற்கு வடக்காக 318 அடியாகவும் அமைந்துள்ளது. இக்கோவில் கி.பி.1456-ல் அரிகேசரி சடையவர்மன் பராக்கிறம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டுஅவரது தம்பியான குலசேகர பாண்டியனால் கி.பி.1462 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 560 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இக்கோவில் பாண்டியர்கள் வரலாற்றில் மிக முக்கிய இடம்பெற்றுள்ளது.
தாமிரபரணியின் துணையாறுகளில் ஒன்றான சிற்றாற்றின் கரையோரம்முன்பு செண்பகத் தோப்பாக இருந்த இவ்விடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் நுழைவுப் பகுதியில் நாம் நுழையும் பொது நம்மை  பின்புறம் இருந்து குளிர்ந்த காற்று கோவிலை நோக்கி முன்னே நகர்த்தும் வண்ணம் இருக்கின்றது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வரும் காற்று கோவில் ராசகோபுரத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே வருவது இக்கோவில் கட்டிடக்கலையின் முக்கிய அம்சமாகும். இது போன்ற அமைப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் ஆகும்.   
கோபுரத்தின் நுழைவாயில் உட்புறத்தில் இராமயண காவியத்தின் சில காட்சிகள், ஆடல் மகளிரின் பல்வேறு நாட்டியச் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றனமேலும் கிரந்த எழுத்துக்களினால் ஆன கல்வெட்டுகள் கோபுரத்தின் சுவர்களில் காணப்படுகின்றன. நிழற்படங்கள் எடுக்க அனுமதியில்லை என்பதால் அவற்றை பதிவு செய்ய முடியவில்லை. கோவில் மற்றும் கோபுரம் பற்றிய வரலாற்றை இனையதளம் மூலம் அறிந்துகொண்டேன். 
இக்கோவில் ராசகோபுரம் கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீயினால் பாதிக்கப்பட்டு மொட்டையாய் இருகூறாய் பொலிவிழந்து நின்றுள்ளது. 1963 வரை இக்கோபுரம் மொட்டைக் கோபுரமாக இருந்துவந்துள்ளது. அதன் பின் 1963-ல் ராச கோபுரத் திருப்பணிக் குழு ஆரம்பிக்கப்பட்டு 1990ல் 180 அடி உயரத்தில் 9 அடுக்குகளுடன் மிகப் பெரிய ராச கோபுரம் கலை வேலைப்பாடுகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, இன்று கம்பீரமான அழகிய தோற்றத்துடன் காட்சி தருகின்றது.
இக்கோவில் வரலாறு, ” முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார்.
அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது. ”                                                                                                        
கோபுரத்தின் அழகையும் சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு ரசித்துவிட்டு கோவிலுக்குள் சென்றோம். முதலில் சுயம்பு லிங்கமாக தோன்றிய காசிவிசுவநாதர் கோவிலுக்குள் சென்றோம். இதற்கு முன்னர் நான் கண்ட சிவாலயங்கள் சிலவற்றில் கருவறைக்கு சற்று முன்பாக, செல்லும் வழியில் உள்ள மண்டபத்தில் இருபுறங்களிலும் உள்ள சிற்பங்களைப் போலவே இங்கும் அதே சிற்பங்கள் காணப்பட்டன. இவையனைத்தும் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என்பது சிறப்பாகும்.
இங்கு காணப்படும் சிற்பங்கள் அக்னி வீரபத்திரர், ரதிதேவி, தமிழணங்கு சிலைகள், காளிதேவி, விஷ்ணு, மன்மதன், வீரபத்திரர், பாவை மற்றவை பெயர் தெரியவில்லை. சிற்பங்கள் அனைத்தும் மிகுந்த நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை சிற்பிகளின் திறமையையும், சிறப்பையும் பறைச்சாற்றும் உன்னத படைப்புகள். மண்டபத்தின் தூண்களில் கலைகளையும் நிகழ்வுகளையும் விளக்கும் வண்ணம் பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. நெல்லையப்பர் கோவிலில் உள்ளது போல இங்கும் இசைத் தூண்கள் காணப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து அருகிலுள்ள உலகம்மன் கோவிலுக்குச் சென்றோம்.
பட உதவி நன்றி - விக்கிபீடியா
உலகம்மன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் கீழே நடைபாதையில் அமைந்திருந்த  சிற்பத்தில் ஆண் ஒருவர் கைகூப்பி வணங்கியவாறு காணப்பட்டது. சிற்பத்தில் காணப்படுபவர் ராச உடை அலங்காரத்திலும் இடையில் உடைவாளோடும் காணப்பட்டார். அருமையான புடைப்புச் சிற்பம் நடைபாதையில் அனைவரும் அதனை மிதித்து கடந்து செல்லும் வகையில் அமைந்திருந்தது. இச்சிற்பம் பற்றிய தகவலை ஊர் திரும்பியதும் இணையத்தின் உதவியோடு விக்கிபீடியா மூலம் அறிந்துகொண்ட பின்பு மாமன்னர் பராக்கிறம பாண்டியனது சிறப்பை நம்மால் உணர முடிந்தது. அதனை எழுத்துகளால் கூற இயலவில்லை. அவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்டவர் பராக்கிறம பாண்டியன்.
தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக் கொண்ட முதல் பாண்டிய மன்னன் பராக்கிறம பாண்டியன். தன்னால் தென்காசி பெரிய கோவிலை கட்டி முடிக்க இயலாது என்றும் நாளை இக்கோயில் இடிந்து விழும் என கணிக்கப்பட்டதாலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதை மீட்க உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை உலகம்மன் கோயிலின் வாசலிலேயே பதித்துக் கொண்டார்என்பதே அச்சிற்பத்தின் வாயிலாக மாமன்னர் பராக்கிறம பாண்டியர் மக்களிடம் வேண்டுவது
மன்னரின் சிற்பமும் அதன் விளக்கமும் ராச கோபுரம் தீயினால் பாதிக்கப்பட்டதற்கும் ஒரு தொடர்பு இருப்பதை தற்போது அறிய முடிகிறது. எதிர்கால நிகழ்வை மனதில் கொண்டு அதற்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்த மன்னன் பராக்கிறம பாண்டியனது செயல் நிச்சயம் பாராட்டக்கூடியது.   
பின்னர் உலகம்மன் கோவிலின் அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் செல்ல உலகம்மன் கோவிலின் வலது பக்க வாசல் வழியாக வெளியே வரும் பொழுது மேலே உத்திரத்தில் பாண்டியர்களின் அடையாளமான மீன் புடைப்புச் சிற்பம் காணப்பட்டது. இதில் இரண்டு மீன்களும் நடுவே அங்குசம் ஒன்றும் காணப்படுகிறது. இது பாண்டியர்களின் முத்திரையாக இருக்கலாம். தென்காசிக் கோவிலுக்குச் செல்பவர்கள் அவசியம் இதனை கண்டு ரசித்து வரவும்.
முருகன் கோவிலை கண்டு ரசித்துவிட்டு வெளியே அமைந்துள்ள மண்டபத்தின் சுவற்றில் பராக்கிரம் பாண்டிய மன்னன் மக்களிடம் வைக்கும் வேண்டுகோளின் வார்த்தைகள் வரிகளாக அங்கு எழுதிவைக்கப்பட்டிருந்து. முருகன் கோவிலைவிட்டு வெளியே வரும் பொழுது குளுமையான காற்று நம்மை தழுவிச் செல்கின்றது. கோவிலைச் சுற்றியுள்ள தோட்டங்களில் மூலிகைச் செடிகள், விநாயகர், துர்க்கை, பல்வேறு வகையான சிவலிங்க கோவில்கள், சித்தர் ஒருவரின் கோவில் என சுற்றிலும் அமைந்துள்ளது. கோவிலின் பிராகாரத்தை சுற்றி வருகையில் நம்மால் நிச்சயம் இரண்டாவதாக கூறிய காற்று நம்மை தழுவிச் செல்கின்றது.
இவ்வாறு கோவிலுக்குள் நுழையும் போது உள்ளே அழைத்து செல்லும் வகையான காற்றும் கோவிலைச் சுற்றிய பிறகு நம்மை வெளியே அழைத்துச் செல்லும் விதமான காற்றும் என இரு வகையில் காற்றின் போக்கைக் கொண்டவாறு அமைத்துள்ள காசி விசுவநாதர் கோவிலில் தமிழர்களின் கட்டிடக் கலையை எண்ணிப் பார்க்கும் பொழுது நிச்சயம் ஒரு கணம் நம்மை அதிசயிக்க வைக்கின்றது. இப்படிப்பட்ட அறிவியல் அறிவை கட்டிட கலையில் கொண்டுள்ள தென்காசிக் கோவிலை கண்டு ரசிக்கும் வாய்ப்பு இப்பயணத்தில் எனக்கு கிடைத்த்து. நீங்களும் கண்டிப்பாக இக்கோவிலுக்கு சென்று தமிழர்களின் கட்டிடக் கலையை கண்டு ரசித்து வரவும் நண்பர்களே.
கோவிலை விட்டு வெளியே வரும் பொழுது நேரம் நண்பகலை நெருங்கி கொண்டிருந்தது. கோவிலின் வெளியே வலது புறம் அமைந்துள்ள அரங்கம் ஒன்றில் அரிகேசரி பராக்கிறம பாண்டியனின் நினைவாக கல்லில் வடிக்கப்பட்ட சிலை ஒன்று வைக்கபட்டுள்ளது. தென்காசிக் கோவிலின் சிறப்புகளை அறிந்து கொண்டு நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து அருகில் உள்ள குற்றாலத்தில் ஒரு குளியலை போட்டுவரச் சென்றோம். குற்றாலச் சிறப்புகளை அடுத்த கட்டுரையில் காண்போம்.

3 கருத்துகள்:

  1. ஒருமுறை டூர் போகும்போது குற்றாலம் வந்தோம். அது நடு இரவு, தென்காசில தங்கிட்டு விடிகாலை கிளம்பலாம்ன்னு ஹோட்டல்ல ரூம் கேட்டா இல்லன்னு சொல்லிட்டாங்க. அதனால, இந்த கோவில் வாசல்ல படுத்துக்கிட்டோம். பசங்க, பெண்கள் நாங்கலாம் தூங்குனதால அப்பா முழிச்சுக்கிட்டே உக்காந்திருந்தாரு. என் அம்மா என் பையனோட அரைஞான் கயிற்றோடு தன் புடவை முடிச்சு போட்டுக்கிட்டு படுத்தாங்க. காத்து பலமா வீசினது இன்னும் மறக்கல.

    பதிலளிநீக்கு
  2. பயணக்கட்டுரை மிக அருமை. தமிழியில் தொடர்ந்து கட்டுரை படைத்து வாசகர்களை மகிழ்வுற செய்யவும்

    பதிலளிநீக்கு
  3. தம்பி பயணக்கட்டுரை மிகவும் அருமை தமிழரின் தனித்துவத்தை விளக்கும் கட்டுரைகள் படைப்பதற்கான உங்களுடைய பயணம் தொடர என் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு