31 அக்., 2012

அரசு பள்ளிகளை சுழற்றும் சாட்டை...

இன்றைய வாழ்வில் சமூகத்தை நோக்கி பலத்திரைப்படங்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதில் ஒன்றோ, இரண்டோ சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. பலத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக வந்து செல்கின்றன. திரைப்படங்கள் என்றாலே நம் மனதுக்கு மகிழ்ச்சி தருவாத இருக்க வேண்டும் என்பது இன்றைய அனைவரது கருத்து. உண்மைதான் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து.
இன்றைய திரைப்படங்கள் என்பது பழையகூத்தின்மேம்பட்ட வடிவமே. கூத்துப் பட்டறையில் இருந்து வந்து வெற்றி பெற்று சாதித்த நடிகர்கள் இன்றும் திரையில் வலம் வந்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். பழைய கூத்தில் நடனத்துடன் கூடிய கதையும், அதில் சிலக் கருத்துக்களும் அமைந்திருக்கும். கூத்தில் இருந்த கலை நயங்கள், கருத்தம்சங்கள் இன்று திரைப்படங்களில் சற்று குறைந்து வருகிறது.
காரணம் முதல் (பணம்) போடும் தயாரிப்பாளர்களின் லாபம், கதாநாயகனின் வெற்றி, மக்களின் எதிர்பார்ப்பை எதிர்ப்பாக மாறாமல் பார்த்துக்கொள்வது என பல விசயங்கள் உள்ளன. இதற்கு மத்தியிலும் ஒரு கருத்தை மட்டுமே கொண்டு படம் எடுக்க வேண்டுமென்றால்! அது அவ்வளவு வெற்றியையும், லாபத்தையும் தருமா என்பது ???.. இந்த சூழலில் வெளிவந்த ஒரு அருமையான சமூக அக்கறையும் சமரசமில்லாத திரைக்கதையும் இயல்பான பாத்திரங்களுமாய் வந்து அவ்வப்போது மனதை வெல்லும் படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம் சாட்டை. சாட்டையைப் பற்றி...

படத்தின் துவக்கமே எதர்சையாக துவங்குகிறது. நல்ல தொடக்கம். படத்தின் முதல் வசனங்கள் நம்மை பள்ளிகாலத்துக்கு அழைத்துச்செல்கிறது.
தவக்களை மாதிரி இருந்துகிட்டு இன்னா அடி அடிக்கிறான்டா இந்த வாத்தி...... டேய் ! நான் வேற ஹொம் ஒர்க் பண்ணலடா !!!  போச்சுடா சங்கூதிட்டாங்கடா என்று பள்ளி மணி சத்தத்தை பார்த்து கூறுவது என இளசுகளின் பேச்சுக்களோடு படமும் பள்ளியும் துவங்குகிறது.
கழுதை கெட்டா குட்டிசுவர் தான்யா... பள்ளிகூடத்துக்குதான் போறேன்யா...அட்டனென்சுனு ஒரு கையெழுத்தப் போட்டுட்டு உடனே வந்துரேன்யா. வையா போன !! ஹும்ம். இதுகள வச்சு மேய்கிறதுக்கு நாலு மாட வாங்கி மேய்சிறலாம் என்று கூறிக் கொண்டே பள்ளி வரும் வாத்தியார். என நம் பள்ளிகாலத்தில் கேட்ட அதே வசனங்கள். பள்ளி மாலை மணி அடித்தவுடன் சந்தோசமாக ஒடிக்கொண்டு மாணவர்கள் வெளிவருவது என அனைத்தும் நம் பள்ளி வாழ்வின் ஒரு பிளாஷ்பேக்!
பள்ளிகூடம் பிடிச்சு போற வாத்தியாரு, பசங்க 25 (%) சதவிகிதம் என்றால், பிடிக்காம போறவங்க 75 (%) சதவிகிதம். இந்த 75 (%) சதவிகிதம் வாத்தியாரு, பசங்கங்கள பத்தின கதைதான் இந்த சாட்டை.
சில வருடங்களுக்கு முன் ஹிந்தியில் நடிகர் அமீர்கான் நடித்த தாரே சமீன் பர் என்ற  திரைப்படம் வெளிவந்தது. படத்தில் மக்கு குழந்தை என்று அனைத்து ஆசிரியர்களாலும், ஏன்? அவனதுப் பெற்றோர்களாலும் ஒதுக்கப்படும் ஒரு சிறுவனை ஒரு ஆசிரியர் மீட்டெடுப்பதுதான் கதை. அச்சிறுவனுக்குள் ஒளிந்திருக்கும் அறிவாற்றலை ஆசிரியரான அமீர்கான் பல பயிற்சிகள் மூலம் வெளிகொண்டு வர முயற்சிபார். இறுதியில் அச்சிறுவன் படிப்பிலும், விளையாட்டிலும் என அனைத்திலும் வெற்றி பெறுவான். அதற்கு ஆசிரியராகிய அமிர்கான் அன்புடனும், அச்சிறுவனுக்கேற்றவாறு தன்னை மாற்றி சென்றதே சிறுவனுடைய வெற்றியின் காரணம் என்ற உண்மையை விளக்குவார்.
அப்ப ஹிந்தியில் இருந்து எத்தனையோ படங்கள் தமிழில் டப் செய்யபடுகின்றனவே ! இது போன்ற சிறந்த பள்ளி கதைகளை தமிழில் டப் செய்தால் இங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவுமே என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் அது அப்போது நடைபெறவில்லை. இப்போது சாட்டை என்ற படம் மூலம் அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறியுள்ளது.
ஒரு அரசாங்க பள்ளிக்கூடத்தின் அருமை, பெருமைகளை அவ்வளவு அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். இன்று நம்மில் எவராவது நம் குழந்தைகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்க்க தயாராக உள்ளோமா ?
அரசாங்க பள்ளிக்கூடம் என்றாலே சரியற்ற கல்விமுறை, மாணவர்களிடையே ஒழுக்கமின்மை, மாணவர்களின் குறைந்த மதிப்பெண்கள் என குறைகூறும் பட்டியல் நீளும்... இதை சரி செய்ய அல்லது சரியாக்கியவர்கள் எவராவது உள்ளனரா ? அரசு பள்ளியில் ஆசிரியர் பணி செய்யும் ஆசிரியர்களின் குழந்தைகள் அதே ஊரின் தனியார் மெட்ரிக்குலேசனில் படிப்பதை பார்க்கிறோம். நிறைய உள்ளது சொல்ல. ஆனால் அவைகள் அனைத்தும் உங்களுக்கே தெரியும். இந்நிலை மாறுவது சாத்தியமா ? சாத்தியமா என்றால். அது எப்படி ? என்பதையெல்லாம் சாட்டை படம் செய்து காட்டி உள்ளது.
இது போன்ற படங்கள் அநேக பேரால் பார்க்க படுவதில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. படம் எடுப்பது என்பது இன்று வியாபாரம். இந்த வியாபாரயுக்தி உலகிற்கு மத்தியில்!!.. இது போன்ற படத்தை எடுக்க நினைப்பது என்பது எல்லாம் வியாபாரத்திற்காக அல்ல. இன்று வியாபாரமாக்கப்பட்டுள்ள கல்வியை அதிலிருந்து மீட்கவே. எளியோருக்கும் தரமான கல்வியை கொண்டு சேர்த்திடவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. இந்த வெளிப்பாடு உணர்வை புரிந்துகொண்டு திரைப்படத்தை எடுக்க முன் வந்த தயாரிப்பாளர் பிரபு சாலமனுக்கும், ஒரு நல்ல கருத்தை திரைப்படம் முழுவதும் சிறப்பாக கொண்டு சென்றுள்ள இயக்குனர் எம்.அழகப்பனுக்கும் நம் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கான தேர்வுப் பரிட்சையில் வெற்றி பெறவேண்டும்  என்று விடிய விடிய படிப்பவர்கள். ஆசிரியர் பணி கிடைத்ததும் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதை சேர்த்தல் பற்றியே யோசிக்க ஆரம்பிப்பது என்பது இன்றைய அரசு பள்ளியில் உள்ளவர்களின் எண்ணம். அது தேவைதான். ஆனால், அதேபோல் அடுத்த தலைமுறையினரையும் தயார்படுத்த வேண்டியது அவர்கள் கடமையல்லவா. இந்த செயலை புதிய ஆசிரியராக வரும் தயாளன் (சமுத்திரகனி) சிறப்பாக செய்து முடிக்கிறார்.
மாணவர்கள் என்பவர்கள் பலவிததில் இருப்பது இயல்புதான். மாணவர்களை தயார்படுத்த அவர் அணுகும் விதமும், யுக்திகளாக தோப்புகரணம் போடுவதன் பயன், புத்தகத்தை தலைகீழாக வைத்து படித்தல் என பல அருமை... " மந்தபுத்திக்காரங்கசராசரி, கற்பூரம் மாதிரி, மூளை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் என நாலு விதமான மாணவர்களை நாம் புரிந்துகொண்டால் அவர்களை வழிநடத்துவது சுலபம் என்று சொல்லும் இடம், மாணவர்களிடம் தானா.. சுய ஒழுக்கத்தை கொண்டு வருவதுதான் ஒரு ஆசிரியரோடு முழுவெற்றி  போன்றவைகள் பாராட்டகுரியது.
இன்றைய அரசுப் பள்ளி ஒவ்வொன்றும் இந்தப் படத்தின் இறுதியில் வெற்றிபெரும் பள்ளி மாதிரி இருந்துவிட்டால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் நம் அனைவரது மனதிலும் தோன்ற வைத்துவிட்டார் இயக்குனர் அன்பழகன். பேதமில்லாத கல்விதான் நோக்கம் எனும்போது, அது அரசுப் பள்ளிகளிலேயே கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு இந்த பாழாய்ப் போன மிடில்கிளாஸ் என்றைக்குதான் வருமோ?
திரைப்படத்தின் இறுதியில் வரும் வசனங்கள் அனைவரக்கும் பொதுவான வரிகளாக வருவது நெஞ்சத்தை தொடுவதாக அமைந்துள்ளது.
தேடல் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சாகும்வரை எதாவது இரு விசயத்தை இழந்துகிட்டேதான் இருக்கனும். “ ஒவ்வொரு முறை இழக்கும் () பிரியும் போது அது வலிக்கத்தான் செய்யும். ஆனா, அந்த வலியை அடுத்த இலக்க நோக்கிய பயணமா நினைக்கும் போது அத ஏத்துக்கிட்டுதான் ஆகனும்.
ஏணியை கூரை மேலே போடாதீங்க   வானத்தை நோக்கி போடுங்க... “
ஒரு அழகான அரசாங்க பள்ளிக்கூடத்தையும் நல்ல பொறுப்பான ஆசிரியர்கள் இருந்தால் முன்னேற்றலாம் என்பதனை அழகான திரைக்கதையின் மூலம் நம்மை முகம் சுழிக்க வைக்காமல் 2 1/4 மணிநேரம் நாம் அந்தப் பள்ளியில் வாழ்ந்தது போல் உணரவைத்த அறிமுக இயக்குனர் எம்.அன்பழகனையும், ஆசிரியராக நடிக்காமல் பொறுப்பான ஆசிரியராக வாழ்ந்த ஆசிரியர் தயாளனையும்  எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சாட்டை’ நடுத்தரதட்டு மக்களின் பள்ளியான அரசு பள்ளியை பற்றியது. அவர்கள்  அனைவரும் வெற்றி பெறவேண்டும் என்பது சாட்டை’ யின் நோக்கம். ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் காணவேண்டிய ஒரு சிறந்த தமிழ்ப்படம்.
சாட்டை’ க்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக