7 அக்., 2012

கழுகுமலையில் சமணப்பள்ளி...

வெட்டுவான் கோயிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சமணச் சிற்பங்கள் இருக்கும் மலையை நோக்கி சென்றோம். மலையில் நூற்றூக்கும் அதிகமான சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டன. இவ்வளவு சிற்பங்களை இதுவரை சென்ற வேறு எந்த மலையிலும் பார்த்தது இல்லை. முக்குடையின் அமர்ந்திருக்கும் மகாவீரரின் உருவச் சிலை ஒரே அளவில் வரிசையாக மூன்று வரிசையில் வெட்டப்பட்டுள்ளன.
மேலே காணப்படும் வரிசையில் மற்ற வரிசையில் காணப்படும் அளவைவிச சற்று சிறிதாக 25க்கும் மேற்பட்ட மகாவீரரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழே காணப்படும் இரண்டு வரிசைகளிலும் ஒரே அளவில் 34 சிலைகள் காணப்படுகின்றன. சிலைகளுக்கு நடு மத்தியில் ஐந்துதலை நாகத்தின் கீழ் பார்சுவநாதர் சிலை ஒன்றும் வடிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிற்பங்களின் கீழும் அதனை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாக வட்டெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டும் இல்லாமல் மலையின் இடது புறத்தில் பெரிய மகாவீரரின் சிலை முற்றுப் பெறாத நிலையில் காணப்படுகிறது. இரண்டு பக்கமும் இயக்கியர் சாமரம் வீச மகாவீரர் அமர்ந்திருக்கும் சிற்பம் மட்டும் 5 மேல் உள்ளது. சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருக்கும் மகாவீரரின் இருபுறமும் சாமரம் வீசும் இயக்கியர், முக்குடைக்கு மேலே அரச மரத்திலாடும் அரம்பையர், யானைமேல் வரும் இந்திரன் எனத் தீர்த்தங்கரரின் சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
பாம்பை குடையாகக் கொண்ட பார்சுவநாதர், தம் தமக்கையரோடு நிற்கும் பாகுபலி, இயக்கியர்களோடு அரச மரத்தின் கீழ் மகாவீரர் காணப்படும் சிற்பங்களில் மரங்களின் கிளைகள் மற்றும் இலைகளின் வேலைப்பாடு என அனைத்தும் மிக துல்லியமாக அழகாக செதுக்கப்பட்டிருந்தது. இயக்கியர்களின் தனி சிற்பம், சிங்கம் போன்ற விலங்கு சிற்பம், மகாவீரரின் சிற்பங்கள் என மலையே சிற்பங்களால் நிறைந்துள்ளது. சிற்பங்களின் மேல் மழைநீர் புகாத வண்ணம் மேலே புருவம் போன்ற காடி வெட்டப்பட்டுள்ளது. அருகிலுள்ள மற்றொரு பாறையில் 12 புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதில் முக்குடையின் கீழ் மகாவீரரின் சிலைகள் பதினொன்றும் ஐந்துதலை நாகத்தின் கீழ் பார்சுவநாதர் சிலை ஒன்றும் வடிக்கப்பட்டுள்ளது. 

அருகில் உள்ள அறிவிப்புப் பலகையில் இங்குள்ள சிற்பங்கள் யாரால் செய்யப்பட்டன என்று இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. மலையில் சிறப்பாக வழிபாடு பெற்ற சமணர் தெய்வத்துக்கு அரைமலை ஆழ்வார் என்றும் மலைமேல் திருமலைத் தேவர் என்றும் பெயர் இருந்தது. இதன் அருகில் பல சமணர் உருவங்களை செய்திருக்கிறார்கள் கோட்டாறு, மிழலூர், வெண்பைக் குடி முதலிய 32 க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் இங்கு வந்து, இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள். இறந்து போன குரவர் சீடர், தந்தை, தாய், மகன், மகள் முதலிய பலரின் நினைவாக இவ்வுருவங்கள் செய்யப்பட்டுள்ளன. சமண துறவிகள் குரவர் என்றும், குரவடிகள் என்றும், துறவிகள் பெண் துறவிகள் குரத்தியார் என்றும் அழைக்கப்பட்டனர்.
இவர்களின் சீடர்கள் ஆணாக இருப்பின் மாணாக்கர் என்றும் பெண்ணாயின் மாணாத்தியர் என்றும் அழைக்கப்பட்டனர். எட்டி, எனாதி, காவிதி முதலிய சிறந்த தமிழ்ப் பட்டங்கள் பெற்றவர்களும் இச்சிற்பங்களைச் செய்வித்துள்ளனர். தச்சர், வேளார், குயவர், கொல்லர், முதலிய பல தொழில் புரிவோரும் இங்கு பணிபுரிந்துள்ளனர். இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டது. குணசாகரபடாரர் என்னும் சிறந்த சமணப் பெரியாரும் இன்னும் பலவயிராக்யர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர்.   இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவை. 
சமணத்தீர்த்தங்கரர்கள் சிற்பங்களிருக்கும் பாறைகளுக்கருகில் ஐயனார் கோயில் ஒன்று உள்ளது. கோவிலின் வாயிலில் சேமங்குதிரையில் ஐயனார் காட்சி தருகிறார். கருப்புசாமி ஐயனார் கோயிலுக்கு காவலாகயிருக்கிறார். சன்னதிக்கு எதிரில் யானை சிலையொன்றும் உள்ளது. நாங்கள் சென்றிருந்த போது ஐயனார் கோயிலுக்கு சாமி கும்பிட ஏராளமானோர் வந்திருந்தனர். அங்கு பொங்கல் வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். கற்பாறைக்கு அருகில் ஒரு பதாகையில் மகாவீரரின் அருள்மொழிகளை எழுதி வைத்திருந்தார்கள்.  
மலைக்குக் மேற்கே உள்ள சிறு மலைப்பாதை வழியாக மலைக்கு மேலே சென்றேன். ஒருவர் நடந்து செல்லும் அளவு இரண்டு கற்பாறைகளுக்கு இடையே செல்ல வேண்டியிருந்தது. மேலே பாறையில் குடைவரை போன்று பாறையைக் குடைந்து அதன் உள்ளே அரசமரத்தின் அடியில் முக்குடையின் கீழ் மகாவீரர் அமர்திருக்கும் பெரிய புடைப்புச் சிற்பம் வெட்டப்பட்டுள்ளது. உள்ளே அமர்ந்து இச்சிற்ப்த்தை எவ்வாறு செய்து இருப்பார்கள் அல்லது வெளியிலிருந்தவாறே செய்திருப்பார்களா ? அப்படி என்றால் மிகப்பெரிய உளியால் செய்து இருக்க வேண்டும். எவ்வாறு வெளியிலிருந்தவாறு இவ்வளவு துல்லியமாக செதுக்க முடியும் என்பது போன்ற கேளிவிகள் எழுந்தது. மிகுந்த சிரமங்களுக்கு இடயே இச்சிற்பம் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாக நமக்கு புரிகிறது. இதுவரை கண்ட சிற்பங்களில் இதுவே அதிக திறமையுடன் செய்யப்பட்ட சிற்மாக இருக்க வேண்டும். இருபுறமும் இயக்கியர்கள் சாமரம் வீச, மேலே தேவதூதர்கள் பறந்த வண்ணம் சிற்பம் காணப்படுகிறது. அங்குள்ள சிறு பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக இரும்பு முள் வேலி போடப்பட்டிருந்தது.
சாந்தலிங்கம் அய்யா கழுகுமலையில் சமணம் செழித்திருந்த வரலாற்றைக் கூறினார். மதுரை சமணமலையில் மாதேவிப் பெரும்பள்ளி இருந்ததைப் போல இங்கும் ஒரு சமணப் பள்ளி இருந்திருக்கிறது. இங்கு கற்றுக் கொடுத்த சமணத் துறவிகளில் ஆண்களை குரவரடிகளென்றும், பெண் துறவிகளை குராத்தியர் எனவும் படித்த மாணவர்களை மாணாக்கன், மாணாக்கியர் எனவும் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் உள்ளது. மற்ற பகுதிகளிலிருந்தும் சமணத்துறவியர் வந்து பாடம் நடத்தி சென்றிருக்கின்றனர்.
இந்த ஊரின் பெயர் நெச்சுரம் அல்லது திருநெச்சுரம் என்று இங்குள்ள கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. நெச்சுரம் என்றால் நீர்நிலைகள் சூழ்ந்த பகுதி என்று பொருள். பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்செழியன் காலத்தைச்(ஏழாம் நூற்றாண்டு) சேர்ந்தவை. இங்குள்ள சிலைகளை நேர்ச்சையாக (நேர்த்திக்கடன்) செய்து கொடுத்துள்ளனர். தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பலர் இங்கு வந்து சிலைகள் செய்து கொடுத்திருப்பதை கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.
சிறிது நேரம் மலையில் அனைவரும் அமர்ந்தோம். அய்யனார் கோவிலுக்கு பொங்கல் வைப்பவர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்தோம். தண்ணீர் சுவையாக இருந்தது. பொங்கல் வைப்பதற்கு மலையில் அமைந்துள்ள சிறு சுனையில் இருந்து எடுத்து வந்ததாக கூறினர். காற்று இரு பெரும் பாறைகளுக்கு இடையேயான கணவாய் போன்ற அமைப்பின் வழியாக சில்லென்று வந்து கொண்டிருந்தது. அனைவரும் மலையையும், சிற்பங்களையும் நிழற்படம் எடுத்துக் கொண்டு, மலையைவிட்டு கீழே இறங்கினோம். அடுத்தாக பேருந்தில் பயணம் சங்கர நாராயணன் கோவில் அமைந்துள்ள சங்கரன் கோவில் நோக்கி சென்றது. அதனைக் குறித்த பதிவு கீழே...


கழுகுமலை குறித்த மற்றுமொரு பதிவு வாசிக்க : தென்தமிழகத்தின் எல்லோரா “ கழுகுமலை ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக