25 நவ., 2012

மேட்டுப்பட்டி சித்தர்மலையும் ’மதிரை’ கல்வெட்டும்...

அதிகாலை – மூடுபனி - குளிர். இப்படியாக கண் விழித்தது இன்றைய விடியல் பொழுது. சாலையெங்கும் லேசான பனி மூடியிருந்தது. இருசக்கர வாகனத்தில் திருமங்கலத்திலிருந்து செக்கானூரணி நோக்கி நண்பர்களுடன் பயணம். இளம் பனியின் குளுமைக்குள் செல்லும் அதிகாலைப் பயணத்தின் அனுபவம் அலாதியானது. இன்றைய பயணம் மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேரணைப் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி நோக்கி.
அணைப்பட்டி என்னும் சிற்றூருக்கு அருகில் வைகையாற்றின் தென்கரையில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலை உள்ளது. இம்மலையில் கி.மு 2’ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (பிராமி) கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் உள்ளன. 2000 வருட பழமையான ஒரு இடத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள சென்றோம். திருமங்கலம் -  செக்காணூரனி – விக்கிரமங்கலம் – பெருமாள்பட்டி வழியாக மேட்டுப்பட்டி நோக்கிச் செல்ல வேண்டும்.
செல்லும் வழி முழுவதும் மிதமான பனி படர்ந்த சூழல் நம்மைத் தொடர்ந்தது. சூழல் நம் உடலையும் மனதையும் குளிர்ச்சியாககவும் இலகுவாகவும் மாற்றியது. செக்கானூரணி – தேனி நெடுஞ்சாலையில் 3 கி.மீ தொலைவில் வலதுபுறத்தில் விக்கிரமங்கலம் செல்லும் சாலை பிரிகிறது. இதன் வழியாக மேட்டுப்பட்டி செல்ல வேண்டும். விக்கரமங்கலம் சாலையின் வட பகுதியில் நாகமலையின் தொடர்ச்சி மிக அழகாக காட்சி தந்தது.
வழியெங்கும் தென்னந்தோப்புகளும், நெல் வயல்களும், மல்லிகைத் தோட்டங்களும், கரும்புத் தோட்டங்களும், காய்கறித் தோட்டங்களும் எனச் சுற்றிலும் பசுமையாக இருந்தது. இத்தனை பசுமையினூடே பயணம் செய்யும் பொழுது தான் தெரிகிறது, உண்மையான பிராணவாயுவின் அடர்த்தி. சுவாசிக்கும் காற்றில் ஈரபதத்தை உணர முடிகிறது. நகரங்களில் வாழும் நமக்கெல்லாம்... உண்மையிலே நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற சுத்தமான பிராணவாயுவை சுவாசித்துக் கொள்வது நம் உடல் நலத்திற்கு நல்லது. 
வெகு தொலைவில் மலை அமைந்திருக்கும் இடத்தை காணமுடிந்தது. சித்தர்மலை அடிவாரத்தில் கல்யாணிப்பட்டி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. மலைக்கு அருகே சென்றதும் வாகனங்களை மலையடிவாரத்தில் நிறுத்துவிட்டு மலையை நோக்கிச் சென்றோம். மலையேறுவதற்கு வசதியாக கொஞ்ச தூரம் மட்டும் மலையில் படிக்கட்டுகள் வெட்டப்பட்டு இருந்தது. படிகள் முடிந்த பிறகு பாறைகளுக்கு இடையேயான இயற்கையான மலைப் பாதை வழியாக, கரடு முரடான பாறைகளினூடேயும், அடர்ந்த மரங்களினூடேயும் கடந்து சற்று சிரமத்துடன் தான் ஏற வேண்டியிருந்தது. காலைவேளையில் வெயிலின் தாக்கம்  குறைவாக இருந்ததால் மலையேறுவதற்கு எளிதாக இருந்தது. மலையில் ஓரிடத்தில் பிடித்து செல்ல உதவியாக இரும்புக் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு வழியாக மலையில் குகைத்தளம் அமைந்துள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தோம். 
குகைத் தளத்திற்கு செல்வதற்கு வழியில் சிறிதாக சில படிகள் மிக நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தது. அதற்கு அருகிலேயே ஓரிடத்தில் பத்துப் படிகளோடு ஒரு மேடை போன்ற அமைப்பு மலையில் அமைக்கப்பட்டிருந்தது. மேடை போன்ற இடத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை வர்ணங்கள் அட்டிக்கப்பட்டு, அதனருகே ஒரு தீபம் ஏற்றும் தூண் ஒன்றும் உள்ளது. இதற்கு சற்று அருகில் தொல்லியல்துறையின் பாதுகாப்பு மற்றும் அறிவிப்பு பலகை காணப்பட்டது. இதனை பார்த்துவிட்டு மலைமீது இயற்கையாக அமைந்த குகைத்தளத்தைக் கண்டோம்.


அதில் பத்துக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருந்தது. படுக்கைகளின் மேற்புறத்தில் தலையனை போல காணப்படும் இடத்தில் தமிழி (பிராமி) கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. குகையில் மேற்புறத்தில், அருகேயுள்ள இடங்கள் என பல இடங்களில் இன்றைய காதல் உள்ளங்களின் பெயர்களும் பெயிண்டில் எழுதப்பட்டு அவர்களின் ஒப்பற்ற வரலாறும் பதிவு செய்யப்பட்டிருந்தது. படுக்கையிருக்கும் குகைத் தளத்தினூடாக சற்று உள்ளே சென்றால் மிகப்பெரிய குகையொன்று உள்ளேயிருக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது இக்குகை தெரிவதில்லை. 
1908ல் கற்படுகைகளில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகளும், 1980க்கு பிறகு குகைத்தளத்தின் நெற்றிப் பகுதியில் மதுரை எனப் பெயர் பொறித்த கல்வெட்டும் கண்டறியப்பட்டது.
1.        அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ
2.        அந்தை அரிய்தி
3.        அந்தை இராவதன்
4.        மதிர அந்தை விஸூவன்
5.        அந்தை சேந்தன் அதன்
6.        சந்தந்தை சந்தன்
7.        பதின் ஊர் அதை
8.        குவிர அந்தை சேய் அதன்
9.        குவிரந்தை வேள் அதன்
10.       திடி இல் அதன்
இந்த மலையிருக்கும் பகுதி முன்பு சித்தர்கள் நத்தம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. மதுரை என்ற பெயருள்ள தமிழி (பிராமி) கல்வெட்டுக்கள் மதுரை மாவட்டத்தில் இரண்டு இடங்களில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று அழகர் கோயிலுக்கு அருகிலுள்ள கிடாரிப்பட்டி மலையிலும் மற்றொன்று மேட்டுப்பட்டியிலுள்ள இந்த சித்தர்மலையிலும் காணப்படுகிறது. கிடாரிப்பட்டி மலையில் ’மதிரை உப்பு வணிகன் மற்றும் மதிரை பொன் வணிகன்’ என்ற பெயர்கள் கொண்ட தமிழிக் கல்வெட்டுகளும், சித்தர்மலையில் ’மதிரை அமணன் உதயணச’ என்ற தமிழிக் கல்வெட்டும் குகை முகப்பில் வெட்டப்பட்டுள்ளது.
சித்தர்மலையிலுள்ள ’மதிரை அமணன் உதயணச’ என்ற கல்வெட்டில் ’அமணன்’ என்ற சொல் வருவதால் இங்கு சமணத்துறவிகள் தங்கியிருந்ததை அறிய முடிகிறது. ஸ்மணர்கள் என்ற சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் ஸ்மணர்கள் என்ற சொல் மகாவீரர் வழிவந்த சமண முனிவர்களையே குறிக்கும். தொல்காப்பியம் மொழிக்கு (வார்த்தைக்கு) முன் ‘ச’ என்ற எழுத்து வராது என்கிறது. அதை உறுதி செய்வது போல இங்கு அமணன் என்றே காணப்படுகிறது.
இந்த குகைத்தளத்தில் 11 கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொரு படுக்கையிலும் தலையனை போன்ற பகுதியில் தமிழிக் கல்வெட்டு உள்ளது. இப்பெயர்கள் அனைத்தும் இதை செதுக்கி தந்தவர்களின் பெயராகவோ அல்லது இப்படுக்கைகள் இப்பெயர்களுக்கு உரியது என்றோ இருக்கலாம். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் சமணத் துறவிகளுக்கு உதவியுள்ளதை ’தி டி இல் அதன்’ என்ற கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. உசிலம்பட்டி பகுதியில் திடியன் என்னும் சிற்றூர் இன்றும் உள்ளது. அந்தக் காலத்தில் ’இல்’ விகுதியில் முடியும் பெயர்கள் கொண்ட சிற்றூர்கள் நிறைய உண்டு.
பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்குமான பெருவழி இப்பகுதியில் முன்பு இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதை இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அகஸ்டஸ் சீசர்  காலத்தைய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. கம்பம் – உத்தமபாளையம் – சின்னமனூர் – வீரபாண்டி – சித்தர்மலை – விக்கிரமங்கலம் – கொங்கர்புளியங்குளம் – முத்துப்பட்டி பெருமாள்மலை – கீழ்குயில்குடி – மதுரை என வழியெங்கும் வரலாற்றுச் சான்றுகள் பொதிந்த பகுதிகளாக உள்ளன.
கம்பம் அருகேயுள்ள உத்தமபாளையத்தில் சமணத்துறவிகள் தங்கியிருந்த படுகைகள் காணப்படுகிறது. சின்னமனூரில் ஏழாம் (அ) எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவன்கோயில் ஒன்றும் காணப்படுகிறது. தேனி அருகேயுள்ள வீரபாண்டியில் உள்ள கௌமாரி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்தர்மலை மீது உள்ள மகாலிங்கம் கோயில், நந்திப்பாறை எல்லாம் இச்சமகாலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். பின் அங்கிருந்து மலையின் உச்சிப் பகுதியை நோக்கி ஏறத் தொடங்கினோம்.  
மலைமீது அமைந்துள்ள மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக மலையில் சிறு படிகள் அழகாக வெட்டப்பட்டிருந்தது. மலையில் அமைந்துள்ள மகாலிங்கம் கோயிலை பார்த்தோம். கோயில் மிகப் பழமையானதாக இருந்தது. தற்போது சுண்ணாம்பினால் வெள்ளை அடிக்கப்பட்டு, வர்ணங்கள் பூசப்பட்டு காட்சி தந்தது. கோவிலின் முன்னதாக தீபம் ஏற்றும் தூண் மற்றும் உடைந்த நிலையில் நந்தி சிலை ஒன்று காணப்பட்டது. அங்கிருந்து சிறிது தூரம் சென்றால், அங்கு வற்றாத சுனை ஒன்று காணப்பட்டது.

அருகிலிருந்த மிகப்பெரிய மலைத்தளத்தில் இருந்து கீழே பார்த்தால் தொலைவில் வைகை ஆறு வறண்டு வெறும் மணலோடு காட்சி தந்தது. இந்த வறட்சியிலும் வைகை ஆற்றின் கரையோரம் தென்னந்தோப்புகளுக்கு இடையே சிற்றூர் ஒன்று அழகாக அமைந்திருந்தது மனதிற்கு சற்று ஆறுதலை தந்தது. கூடவே விரைவில் வைகையில் தண்ணீர் நிறைந்து ஓட வேண்டும் என மனம் இயற்கையை கேட்டுக் கொண்டது. தொலைவில் உள்ள இடங்கள் எல்லாம் பனி மூடி காணப்பட்டது. தொலைவில் அணைப்பட்டி பாலம் பனியினூடே மங்கலாக தெரிந்தது. அங்கிருந்து சிறிது தூரம் மலைமீது சென்றால் மிகப்பெரிய மமைப் பாறை ஒன்று காணப்படுகிறது. அதன் உச்சியில் மிகப்பெரிய தீபத்தூண் ஒன்று காட்சி தந்தது. மேலே செல்வதற்கு இரும்பினால் ஆன படிகள் உள்ளது. உடன் வந்திருந்த நண்பர்கள் உற்சாகமாக அங்கும் சென்று வந்தோம். 
இயற்கையின் பல முகங்களை கண்ட மன திருப்தியுடன் மலையிலிருந்து அனைவரும் கீழிறங்கினோம். மலையிலிருந்து இம்முறை வந்த படிகளான பாதையில் செல்லாமல், குகைத்தளம் அமைந்துள்ள இடத்தின் மேலாக கொஞ்சம் சரிவாக இறங்கும் பாதையில் மெல்ல இறங்கினோம். இறங்கு வழியில் எதிரே காட்சி தரும் நந்திப்பாறையைப் பார்த்துவிட்டு எல்லோரும் கீழே இறங்கத் தொடங்கினோம். மீண்டும் மரங்கள் சூழ்ந்த பகுதியில் நடக்கும் போது சுத்தமான காற்றை சுவாசிக்க முடிந்தது. மதிரை பெயர் தாங்கிய இரண்டாவது மலையையும், 2000 வருடங்கள் பழமையான இடத்தையும் கண்ட மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினோம். 

1 கருத்து: