5 ஜன., 2013

கொடும்பாளூர் மூவர்கோயில் கற்றளி...



பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் இணைந்து வரலாற்றுப் பயணமாக கடந்த செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள சில வரலாற்று இடங்களுக்கு சென்று வந்தோம். அதே போல், இந்த மாதமும் (23.12.2012 ஞாயிற்றுக்கிழமை) மதுரையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை அருங்காட்சியகம் மற்றும் திருமயம் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் வரலாற்று சுற்றுலா பயணமாக சென்று வந்தோம்.

பயணத்தில் முதலாவதாக மதுரை - திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக அமைந்துள்ள கொடும்பாளூர் சத்திரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள ‘மூவர் கோயிலுக்கு’ சென்றோம். கொடும்பாளூர் மணப்பாறையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மூவர்கோயிலானது கொடும்பாளூர் சத்திரம் சிற்றூருக்கு கிழக்கு பகுதியில் இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஞாயிறு காலை 7 மணியளவில் மதுரை காளவாசல் அருகிலுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்திலிருந்து பேருந்து மற்றும் சிற்றுந்தில் அனைவரும் புறப்பட்டோம். இந்தமுறை வரலாற்றுப் பயணத்தில் நண்பர்கள் எண்பது (80) பேர் இணைந்தனர். சென்னை மற்றும் கோவையிலிருந்து சில நண்பர்கள் கலந்து கொண்டனர். சுற்றுலா செல்லும் இடங்களைக் குறித்த வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய குறிப்பேடு அனைவருக்கும் பேருந்திலேயே வழங்கப்பட்டது. இக்குறிப்பேட்டின் மூலம் செல்லும் இடத்தை பற்றிய வரலாற்றை முதலியே தெரிந்துகொண்டு, பின் அதைப் பற்றிய ஐயங்களை கேட்பதற்கு வசதியாக இருந்தது. 
கொடும்பாளூர் ஊர் பெயரை முன்பு எங்கோ வாசித்த அனுபவம் ஞாபகத்தில் வந்தது. அது கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் நாயகியாக வரும்  வானதி கொடும்பாளூரைச் சேர்ந்தவள் என்பது தான். சிலப்பதிகாரத்தில், கோவலனும் கண்ணகியும் பூம்புகாரிலிருந்து மதுரை நகருக்கு இக்கொடும்பாளூர் வழியே சென்றதாகக் குறிப்புகள் உள்ளன. முந்தைய சோழநாட்டின் தலைநகரான உறையூரிலிருந்து பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குச் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது. கொடும்பாளுரில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மூவர் கோயில், ஐவர் கோயில், முசுகுந்தேஸ்வரர் கோயில் மற்றும் சிவன் கோயில்கள் ஆகியன உள்ளன. இதில் தற்போது மூவர் கோயிலில் இரண்டு கோயில்களும் மற்றொன்று முசுகுந்தேஸ்வரர் கோயில். மேலும் ஐவர் கோயில் இருந்ததற்கான அடித்தளமும் சிவன் கோவிலும் இருந்ததற்கான தடையங்கள் மட்டும் தற்போது எஞ்சியுள்ளன. 
மூவர்கோயில் அமைந்துள்ளப் பகுதி வரையிலும் பேருந்து செல்வதற்கான பாதை இருந்தது. தொல்லியல்த் துறையின் சிறிய அலுவலகம் ஒன்று காணப்பட்டது. அதற்கு வலது புறத்தில் உள்ள சிறு புல்வெளித் தளத்தைக் கடந்தால் அழகிய மூவர்கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நின்று கொண்டிருந்தது. கோயில் பெருங்கற்களில் சிற்பங்கள் வடிக்கப்பட்டு பழமையேறி காணப்படுகிறது. மூன்றுகோயில்களின் வரிசையில் முதல் கோவிலைத் தவிர மற்ற இரண்டு கோயில்களும் ஒரே வடிவமைப்பில் கருவறையின் மீது கோபுரத்துடன் எழுப்பட்டுள்ளது. முதல் கோயிலின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது. கோயிலின் எதிரே உள்ள இடங்களில் உடைந்த நிலையில் கோயிலின் சில பாகங்கள் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன. இவை அழிந்த முதல் கோயிலின் எஞ்சிய சில பாகங்களாக இருக்க வேண்டும்.
கோயிலைச் சென்று காண்பதற்கு முன்பாக, தொல்லியல்த் துறை அலுவலகத்தின் அருகே ஒரு மரத்தடியில் எல்லோரும் கூடினோம். எழுத்தாளர் .முத்துக்கிருஷ்ணன் எல்லோரையும் வரவேற்று பேசினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லியல் துறையில் அனுபவமுள்ள சாந்தலிங்கம் அய்யா நம்முடன் இப்பயணத்திற்கு வருவது நமக்கு இன்னும் பெருமை தருவதாகக் கூறினார். அவரைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா (செயலாளர், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம்) மூவர்கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களை கூறினார். பேருந்தில் வழங்கிய குறிப்பேட்டிலுள்ள தகவல்களோடு மேலும் பல புது தகவல்களை சுற்றுலாவுக்கு வந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சைவத்தில் உள்ள காளாமுகம் என்னும் பிரிவைச் சேர்ந்த துறவிகளுக்கான மடம் இந்த ஊரில் இருந்துள்ளது. மல்லிகார்ஜூனர் என்ற துறவி இங்கு தங்கியிருந்ததாகவும் மடத்தை பராமரிக்க மதுரையிலிருந்தெல்லாம் நன்கொடை வழங்கப்பட்டதாகவும் சொல்வார்கள். காளாமுகர்கள் முகத்தில் கரிய மையை பூசி மேனியெங்கும் திருநீறு அணிந்து மண்டையோட்டு மாலை சூடியிருப்பார்கள். இவர்களுக்கு மது, மாமிசம் எல்லாம் விலக்கில்லை. வேளிர்கள் ஆட்சிக்குப் பின் இப்பகுதியை பாண்டியர்கள், அதன்பின் நாயக்க மன்னர்கள் ஆண்டனர். மங்கம்மாள் மதுரையை ஆண்ட போது இந்த ஊர் மங்கம்மா சமுத்திரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரை ஒரு பாளையக்காரருக்கு மங்கம்மா தானமாக வழங்கியதாக குறிப்பு உள்ளது.
இங்கு ஐந்தளி (ஐவர் கோயில்) என்ற கோயில் இருந்துள்ளது அது முற்றிலும் அழிந்து போய்விட்டது. இந்த ஊருக்கு வரும் வழியில் முசுகுந்தேஸ்வரம் என்ற கோயில் உள்ளது. (முதுகுன்றம் என்ற வார்த்தை முசுகுந்தேஸ்வரமாக வடமொழியாக்கப்பட்டு இருக்கிறது) இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் நடுவில் இருந்ததால் வணிக மையமாக கொடும்பாளூர் இருந்திருக்கிறது. மூவர்கோயிலின் உள் விமானம் கூடு போல உள்ளது. இந்த முறையைப் பின்பற்றி தஞ்சைப் பெரிய கோயில் கட்டியிருக்கிறார்கள்.
பின்னர் அனைவரும் சாந்தலிங்கம் அய்யாவுடன் இணைந்து மூவர்கோயிலை நோக்கிச் சென்றோம். கோயிலின் அமைப்பு, அங்குள்ள சிலைகள், அவைகளைப் பற்றிய புராணத் தகவல்கள், கல்வெட்டுகள், மற்றும் வரலாற்றுத் தகவல்களை விரிவாக எடுத்துரைத்தார். இங்கிருந்த கோயில் சிற்பங்கள் சில சென்னை அருங்காட்சியகத்திலும், புதுக்கோட்டை அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இங்கு முன்பு நூறு சிற்பங்களுக்கு மேல் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இப்பொழுது அவை அனைத்தும் திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. மூவர்கோயில் தொல்லியல் துறையின் பராமரிப்பில் இன்று நன்றாகப் பராமரிக்கப்படுகிறது.
பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தினர் வழங்கிய குறிப்பேட்டில் இருந்து சில :-
விஜயாலயன் தோற்றுவித்த சோழப் பேரரசு தொடர்ந்து 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்டது. இதற்குக் காரணம் அந்தச் சோழ மாமன்னர்கள் மட்டும் அல்ல. அவர்கள் காட்டிய திசைவழியில் ஈட்டிகளையும் வேல்களையும் ஏந்தி, தேர்பூட்டிப் படைநடத்தி உயிர்கொடுத்து வெற்றிக்கனி பறித்தோர் ஏராளம். ஏராளம். அவர்களில் சிலர் சிற்றரச மரபினர்.
இருக்குவேளிர், பழுவேட்டரையர், மழவரையர் எனப் பல குறுநிலத் தலைவர்கள் படைதிரட்டி உதவியதால்தான் சோழ மன்னர்களின் சாதனைகள் சாத்தியமாயின. அத்தகைய ஓர் சிற்றரசர் குடியே கொடும்பாளூரை தலைநகராகக் கொண்ட இருக்குவேளிர்குடி. இவர்களில் செம்பியன் இருக்குவேள், மகிமாலய இருக்குவேள், பூதிவிக்கிரமகேசரி எனப் பல தலைவர்கள் சோழர் படை நடத்தியவர்கள்.
இவர்கள் ஆண்ட தலைநகரம் கொடும்பாளூர் ஆகும். கொடும்பாளூரில் இருந்து மதுரைக்கு மூன்று பெருவழிகள் சிவபெருமானின் மூவிலைச் சூலம் போலப் பிரிந்து சென்றுள்ளது. எனவே, நீண்ட காலமாகச் சோழநாட்டையும் பாண்டியநாட்டையும் இணைத்த பெருவழியில் அமைந்திருந்த கொடும்பாளூர் இருக்குவேளிரின் தலைநகராக அமைந்தது. அவர்கள் இங்கு தங்கள் ஆட்சியைத் தொடர்ந்து எல்லை காவலர்களாகவும் விளங்கினர். சோழர்களின் பல்லவருடனான போரிலும், ஈழப்போரிலும் பெரும்பங்காற்றினர்.
சோழ அரச குடும்பத்தினரோடு மண உறவும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன்தான் பூதிவிக்கிரம கேசரி என்னும் பெரும்வீரன். இரண்டாம் பராந்தகன் சுந்தரச் சோழனின் சமகாலத்தவன். அவனுக்கு இரு மனைவியர். கற்றளிபிராட்டி, வரகுண நங்கை என்பது அவர்களின் பெயர்கள். பூதிவிக்கிரமகேசரியும், அவன் மனைவியர் இருவரும் சேர்ந்து எடுத்த கோயிலே மூவர் கோயில் என்பது. மூன்றும் சிவன் கோயில்களே.
மூன்றும் ஒரே விதமான அமைப்பில் சிறிய இடைவெளிவிட்டு ஒரே வரிசையில் கட்டப்பட்டவை. மூன்று கோயில்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய திருச்சுற்றும் கட்டப்பட்டது. ஆனால், இன்று முதல் கோயிலும், திருச்சுற்றும் முற்றிலும் அழிந்து இரண்டு கோயில்கள் மட்டுமே அதுவும் விமானம் (கருவறை உள்பட) மட்டுமே எஞ்சியுள்ளன. பிற மண்டபங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. இவை சோழர் கோவில் கலை வரலாற்றுக்கு முக்கிய சான்றுகளாய்த திகழ்கின்றன.  

சோழர்களின் கோயில் கட்டடக் கலைப்பாணியை ஆராய்ந்தவர்கள் அதனை முற்சோழர்பாணி, இடைச்சோழர்பாணி, பிற்சோழர்பாணி என மூவகைப் படுத்துவர். இதில் முற்சோழர்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்வது மூவர்கோயில். அதிட்டான வரியில் விரிந்த தாமரை இதழ்களும், உருள் குமுதமும், அதற்கும் மேலாக வரிசையாக அமைந்த யாளி வரியும் அமைத்து ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இக்கோயில்களில் தேவகோட்டச் சிற்பங்களின் எழிலும் கலை நேர்த்தியும் கண்டோரைக் களிப்படையச் செய்வன. ஸ்தூபி வரை கல்லிலேயே கட்டப்பட்டுள்ளன. இரண்டு கோயில்களிலும் காணப்படும் விமானத்தின் உள்கட்டமைப்பு தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முன்னோடியாய் அமைந்துள்ளது.
இங்குள்ள அர்த்தநாரி, ஆடவல்லான், திரிபுராந்தகர் ஆகியோரின் கற்சிற்பங்கள் கண்டு மகிழத்தக்கவை. இங்குள்ள தமிழ், கிரந்தக் கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பிற்காலத்தில் கொடும்பாளூர் மணிக்கிராமத்தார் என்ற பெயரில் தமிழகமெங்கும் வணிகம் செய்த குழுவினர் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. இதன் முக்கியத்துவம் கருதி இது வரலாற்றுச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.
நன்றி-    சாந்தலிங்கம், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை.


தற்போதும் மூவர்கோயில் என்ற உடன் என் நினைவில் வந்து செல்பவை இரண்டு காட்சிகள்தான். ஒன்று முதல் கோயிலின் இடது புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கற்படிக்கிணறு. கிணறானது வட்ட வடிவில் அழகிய கற்பாறைகளால் அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் சென்று நீர் எடுத்து வர வசதியாக தரைத் தளத்தின் கீழே கற்களான படிகள் கிணற்றின் அடிவரை செல்கின்றன.
இரண்டாவது, கோயில் கோபுரத்தில் காணாப்படும் சிவன் உமயாளோடு நெருங்கி காட்சி தரும் சிற்பம். இதில் பெண்ணின் இடையை அவ்வளவு ஒயிலாக சிற்பி வடிவமைத்துள்ளது என் நினைவுகளை விட்டு அகல மறுக்கிறது. சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் புகழ் பரவுக... வாழ்க சிற்பி.
கோயிலின் விமானக் கட்டுமானக் கற்கள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நேர்த்தி நம்மை வியக்க வைக்கிறது. சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள பாரத்தைக் கொண்டு விமானத்தின் உள்பகுதி கூம்பு போன்ற உள்கூடாக உருவாக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் மூவர் கோவில் ஒவ்வொன்றிலும் கருவறை, அர்த்த மண்டபம், துவார பாலகர், நந்தியீசர் என ஆகம விதிப்படி கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை சந்நிதி மேற்குப் பார்த்தவண்ணம் அமைந்துள்ளது. கருவறை 21' க்கு 21' என்கிற அளவில் சதுரமாக உள்ளது. விமானம் 32' உயரமாக உள்ளது. மூன்று கோவில்களுக்கும் பொதுவான ஒரு மகாமண்டபம் வெகு நேர்த்தியாக அமைந்திருந்தது. மகா மண்டபத்தை அடுத்து நந்தி மண்டபம், பலிபீடம் அமைந்திருந்த சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
பிரகாரச் சுற்றில் பரிவார தேவதைகளுக்காகக் கட்டப்பட்டிருந்த பதினைந்து சந்நிதிகளின் அஸ்திவாரங்கள் மட்டுமே இன்று நாம் கண்ணால் காணக் கூடியவை. இக் கோவிலைச் சுற்றிலும் பெரிய கோட்டைச் சுவர் ஒன்று இருந்துள்ள தடயத்தை நம்மால் காண முடிகிறது. மூன்று கோவில்களிலும் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. தற்போது வடபுறம் உள்ள கோவிலில் மட்டுமே பாணலிங்கம் காணப்படுகிறது.
கண்ணில் கண்ட அனைத்துக் காட்சிகளையும், சிற்பங்களையும், கோயில்களையும், கல்வெட்டுகளையும் நிழற்படக் கருவியில் பதிவு செய்து கொண்டேன். பயணம் அங்கிருந்து குடுமியான் மலை நோக்கிச் சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக