6 ஜன., 2013

குடுமியான்மலையும் மேலக்கோயில் குடைவரையும்...

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஏற்பாடு செய்த ஒரு நாள் சுற்றுலாப் பயணத்தில் முதலாவதாக மதுரை - திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக அமைந்துள்ள கொடும்பாளூர் ‘மூவர் கோயிலுக்கு’ சென்றுவிட்டு, இரண்டாவதாக புதுக்கோட்டை மணப்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ள குடுமியான்மலைக்குச் சென்றோம். குடுமியான்மலை மணப்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மூவர் கோவிலைப் பார்த்துவிட்டு, குடுமியான்மலை ஊரில் அமைந்துள்ள மலைப்பகுதிக்குச் சென்றோம். வெயில் சற்று கம்மியாக இருந்தது, மலையில் ஏற உதவியாக இருந்தது. மலை மிக அழகாக காட்சி தந்தது. மலையின் தென்புறச் சரிவில் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தளத்தை நோக்கி அனைவரும் நடந்தோம். மலை சற்று வழுவழுப்பாகவும் சறுக்கலாகவும் இருந்தது. வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆவலில் கவனமாக ஏறினோம். நண்பர்கள் சிலர் ஏற முடியாதவர்களுக்கு உதவி செய்தனர்.
எங்களைவிட தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா குகைத்தளத்தை நோக்கி விரைவாக ஏறிச் சென்றார். இது போன்று எத்தனை மலைகளில் அவருடைய கால்கள் நடைபட்டிருக்கும். அவருடைய வேகம் எங்களுக்கு புது உத்வேகத்தை தந்தது. அனைவரும் குகைத்தளத்தில் அமைந்துள்ள கற்படுகைகளை கண்டோம். கற்படுகைகள் என்றாலே சமணர்கள் நினைவில் வருகின்றனர். சமணர்கள் தங்குவதற்கு வெட்டப்பட்ட படுகைகளுக்கு அருகில் தமிழ்பிராமிக் கல்வெட்டு ஒன்று கொஞ்சம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. கல்வெட்டு பற்றியும் அவ்வூரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் அய்யா கூறினார்.


கல்வெட்டு: நாழல் கொற்றந்தய் பளிய்’ 
இக்கல்வெட்டு கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவ்வூரின் பெயர் சங்க காலப் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் பெயரால் அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. ஆனால் இங்குள்ள குடைவரைக் கோயில் கல்வெட்டுகளிலும், கட்டுமானக் கோயில் கல்வெட்டுகளிலும் இவ்வூரின் பெயர் வடமொழியில் “ சிகாகிரி என்றும் தமிழில் திருநலக்குன்றம் “ என்றும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நலக்குன்றம் என்பதையே வடமொழியாக்கம் செய்யும் போது சுகாகிரி என மாற்றியிருக்க வேண்டும். ஆனால், தவறுதலாக சிகாகிரி (குடுமிமலை) என மாற்றிவிட்டனர் என்றே கருத வேண்டும்.
இக்கதைக்கு ஏற்ப பிற்காலாத்தில் இக்கோயில் இறைவன் லிங்கத்தின் முன்னால் ஒரு குடுமியையும் வைத்துவிட்டனர்.  மலையின்மீது கி.பி ஏழாம் நூரற்றாண்டைச் சேர்ந்த குலசேகரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட முருகன் கோயில் ஒன்று உள்ளது. மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழங்காலத்து முதுமக்களின் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகயிருக்கலாம்
வரலாற்றுத் தகவல்களை கேட்டறிந்துவிட்டு மெல்ல அனைவரும் மலையைவிட்டு இறங்கினோம். பின்னர் அங்கிருந்து மலையின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள குடுமிநாதர்கோயிலுக்குச் சென்றோம். குடுமிநாதர்கோயிலின் நுழைவாயிலும் மண்டபப் பகுதியும் மிக அழகாக காணப்பட்டது. மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களிலும் சிற்ப வேலைபாடுகளும், சிலைகளும் அழகாக காட்சி தந்தன. கோயிலின் பின்புறத்தில் மலையின் கிழக்குச்சரிவில் மலையைக் குடைந்து வெட்டப்பட்டுள்ள குடைவரைக் கோயிலுக்குச் சென்றோம்
குடைவரை அமைந்துள்ள மலையின் முன்னர் பெருங்கற்களால் ஆன மிகப் பெரிய மண்டபம் காணப்பட்டது. மண்டபத்தின் பெருங்கற்கள் அனைத்தும் செவ்வக வடிவில் அழகாக வெட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு கல்லில் சிறு அளவில் நடராசரின் ஆனந்த நடனக் காட்சி சிற்பமாக செதுக்கப்பட்டிருந்தது. அனைவரும் குடைவரைக் கோவிலுக்குச் சென்றோம். சாந்தலிங்கம் அய்யா குடைவரை குறித்த வரலாற்றுத் தகவல்களை கூறினார். இக்குடைவரையிலுள்ள இறைவனான ஈசனுக்கு திருமூலட்டானத்து எம்பெருமான்’ என்று பெயர். இக்குடைவரை மேலக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 



குடைவரையில் ஒரு கருவறையும், முன் மண்டபமும் உள்ளது. கருவறையின்  முன்னர் முன் மண்டபத்தில் காளை (நந்தி) சிலை ஒன்று உள்ளது. சிவலிங்கம் இருக்கும் கருவறையின் வாசல் படிபோல செதுக்கப்பட்டிருந்தது. உள்ளே பீடத்தின் மீது சிவலிங்கம் ஒற்றைக் கல்லில் பீடத்துடன் சேர்த்து செதுக்கப்பட்டிருந்தது. கருவறையின் வாசல் முகப்பின் மேலே தேவதூதர்கள் பறந்து வருவது போல சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. கருவறை வாசலின் இருபுறமும் காணப்படும் வாயில் காவலர் உருவங்கள் ஒரு கையை இடுப்பில் வைத்து மறுகையை ஒரு தூணில் சாய்ந்து ஒயிலாக மிகவும் நளினத்துடன் நிற்பது போல் காணப்படுகிறது. வாயில்காப்போன் சிலைக்கு இடதுபுறம் ஒரு சிறிய பிள்ளையார் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் உள்ள தூண்கள் மிகவும் அழகாக செய்யப்பட்டிருத்தது. இங்குள்ள தூண்களில் கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் சடையன் மாறனின் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளது.
குடைவரையைப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். குடைவரைக்கு இடதுபுறம் மலையில் பெரிய இடம்புரி விநாயகர் சிலை புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் இடது புறத்தில் நீண்ட வரிகளைக் கொண்ட (ஏழுபத்திகள்) கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டில் காணப்படும் எழுத்துக்கள் சமஸ்கிருத மொழியில் இருப்பதாக சாந்தலிங்கம் அய்யா கூறினார். இக்கல்வெட்டுக் குறித்து இசைப்பேராசிரியர் ராமநாதன் போன்றோர் எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டார். இங்குள்ள இசைக் கல்வெட்டுகள் மிகவும் புகழ் பெற்றவை. ஏழுசுவரங்களையும், ஏகப்பட்ட ராகங்களையும் இக்கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள்
மலையின்மீது சற்று உயரத்தில் பாறையில் அறுபத்திமூன்று நாயன்மார்களின் சிலைகள் புடைப்புச் சிற்பங்களாக  ஒரே அளவில் வெட்டப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் அமைந்துள்ள வரிசையையும் அளவையும் காணும் பொழுது கழுகுமலையில் காணப்படும் சமணர்களின் சிற்பங்கள் நினைவில் வருகிறது. அறுபத்துமூன்று நாயன்மார்கள் நிற்கும் சிற்பங்களுக்கும், இதற்கு மத்தியில் சிவன் உமையாளுடன் காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்ற சற்று பெரிய சிற்பம் வெட்டப்பட்டுள்ளது. குடைவரையையும் மலைமீதும் காணப்படும் சிற்பங்களையும் உருவாக்கிய சிற்பிகளின் வேலைப்பாடுகள் இன்றும் குடுமியான் (அ) நலக்குன்றம் மலையில் அவர்களது திறமையை புகழ்பரப்பும் வண்ணம் அமைந்துள்ளது.
கோயிலின் தென்மேற்கு சுற்றுப் பகுதியில் பல அழகியக் கற்தூண்கள் மற்றும் சிற்பங்கள் ஒரு மரத்தடியில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. கண்ணில் கண்ட அனைத்துக் காட்சிகளையும், சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் நிழற்படக் கருவியில் பதிவு செய்து கொண்டேன். மீண்டும் பயணம் அங்கிருந்து குடுமிநாதர் கோயிலுக்குள் சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக