12 ஜன., 2013

சுயநலத்தின் ஆற்றாமை...

பருவமழை பொய்த்துப்போனது. . .
காவிரியும் பெரியாறும்
தடைபட்டுப்போனது. . .
எங்கள் பயிர்களெல்லாம்
நீரின்றி வாடிப்போனது. . .

இயற்கை வாழ்வை - மறந்து
செயற்கை வாழ்வைத் தேடியதால்
அறுவடை திருநாள் என்பது
எங்களிடம் இருந்து
அறுபட்டு போகுமோ ???


இந்த கேள்வியின் நிலைக்கு நானும் ஒரு காரணம். என் உணவிற்க்கானப் பொருட்கள் யாருடைய உழைப்பில், எங்கிருந்து வருகிறது என்ற கவலை இல்லாமலேயே வாழ்ந்து வந்திருக்கிறேன்.. என்னிடம் பணம் இருக்கும் தைரியத்தில். இந்த உணவுப்பொருள்கள் இங்கு விளைய நீர் இல்லையென்றால்? அதனை நான் வேரிடத்தில் இருந்து அல்லவா பெற வேண்டிய சூழ்நிலை. அப்படியானால்!! அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு நான் தாக்குப் பிடிப்பேனா? இந்த சூழ்நிலை மாற மாற்றுவழியே இல்லையா ?... என்ற கேள்வி மனதிற்குள் ஒடிக்கொண்டிருந்தது, முதல் முறையாக தற்போதைய உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தால்.

மாற்று வழியே இல்லையா ??  எங்க மாத்து வழி, இருக்கும் வழிகளையெல்லாம் என் சுயநலத்திற்க்காக அதிகமாகவே பயன்படுத்திக்கொண்டேன். விலைக்கு வந்த விளை நிலத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு வெரும் நிலமாக போட்டு வைத்துள்ளேன்... எதையும் விதைக்காமலேயே ஒரு நல்ல அறுவடைக்குநான் தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு முன்னால் முன்பு லேசாக பெய்த மழையில் தேங்கிய நீரை விரும்பாமல், மண் மற்றும் சிமெண்ட் கலவை போட்டு மேடாக்கி கொண்டேன். இப்போது தெருவின் அனைத்து வீடுகளுக்கு முன்னும் அதே நிலையை அரசு உருவாக்கி தந்தது. என்ன ஒரு ஆச்சரியம்!. இப்போது நீர் என்பது என் வீட்டிற்க்கு முன் மட்டுமல்ல... எங்களது தெருவில், ஏன்...? ஊரின் குளம், குட்டையில் கூட தேங்குவதில்லை.

வீட்டுக்கு முன்னால இருந்த ஒத்த மரத்தையும் வீட்டோட முன் அழகை மறைக்கிதுனு வெட்டித் தள்ளினேன். பத்தாக்குறைக்குத் தெருவில் இருந்த மீதமுள்ள மரங்களை மின்கம்பிக்கு தடையாக உள்ளதென்று வெட்டித் தள்ளினோம். இப்போது தெருவில் இரண்டு மரங்கள் மட்டுமே உள்ளன. நிழல் தரும் மரமாக அல்ல! குழல்விளக்கு மாட்டிய மின்கம்ப மரமாக!. மின்கம்பிக்கு தடையாக உள்ளதே என மரத்தை வெட்டினோம். இன்று மின்சாரமே தடைபட்டுப் போயுள்ளது. இனி வெட்டுவதற்கு ஒன்றும் இல்லை. ஒதுங்குவதற்கு கூட மரங்களே இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் செய்தவற்றைப் போலவே எனக்குத் தெரிந்த சிலரும் இதையே செய்த்திருந்தனர். விளைவு  “ (ஞ்ச)சுமைப் புரட்சி  “ தேவைபடுகிறது இப்போது.

மாற்றுவழியே இல்லையா? என்ற கேள்வி மீண்டும் மனதிற்குள் சுற்றிக் கொண்டு இருந்தது. விவசாயம் பெருக வேண்டும் என்றால்! நீர்வளம் வேண்டும். நீர்வளத்திற்க்கு மழை பெய்தல் ஒன்றே தீர்வு என்ற பதிலை தவிர வேறேதும் தோன்றவில்லை. மழைக்கான ஒரேவழி நிச்சயம் மரங்கள் நிறைந்த பகுதியாக நம் பகுதியை மாற்ற வேண்டும் என்று மனது கூறியது.


எத்தனை மரத்தை காலி பண்ணிருப்ப ? இப்ப நீ நடப்போகும் மரத்தினால தான் மழை பெய்து விவசாயம் செழிக்கப் போகிறதா? என்ற ஏளனக்கேள்வி என்னை செவியில் அறைந்தாலும். எனக்கு உணவுதரும் முகம் தெரியாத அந்த விவசாயிக்கு நான் செய்யும் நன்றியுணர்வாகவே எண்ணுகிறேன். இதனையே என் நண்பர்களையும் செய்ய சொல்லிக் கேட்டுக்கொள்வேன். காலம் கடந்து என்னுள் இந்த மன மாற்றம் ஏற்பட்டாலும் மாறுதல் என்பது மாறாதது என்பதால் நம்பிக்கையுடன் ஒரு செடியை நடுகிறேன் மழை வேண்டி...

1 கருத்து: