7 மார்., 2015

யோகு மரங்களின் உற்ற தோழன்...

பெருகி வரும் நாகரீக வளர்ச்சி சூழலில் கட்டிடங்கள் தான் வளர்ந்து கொண்டே செல்கின்றன. மரங்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன. விளைவு புவியின் வெப்பநிலை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. மழை பொழிவு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் பெரும்பாண்மையான மரங்கள் வெட்டப்பட்டு அவ்விடங்களில் எல்லாம் கான்கீரிட் கா(வீ)டுகள், மால்கள், சாலைகள், தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன. மரங்களின் தேவையை மக்கள் உணர்வதற்கு நேரமில்லாத அளவு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது.
நகரங்களில் வீடுகள் இடைவெளிகள் இல்லாத அளவு கட்டப்படுகின்றன. காற்று வீடுகளுக்குள் வருவது என்பது செயற்கையாக்கப்பட்டுள்ளது. கான்கீரிட் சுவர்கள் வெப்பத்தை எளிதாக கடத்துவதில்லை. குளிர்ச்சிக்காக மக்கள் மின் விசிறிகளையும், ஏசியையும் ஓடவிட்டபடியே வாழத் துவங்கிவிட்டனர். வளர்ச்சியின் வேகத்தில் மரங்கள் தேவையற்றவைகள் அகிவிட்டன. வளர்க்க ஆசைப்பட்டாலும் வளர்ப்பதற்கு போதிய இடமில்லை. அப்படியே வளர்த்தாலும் மின்கம்பத்திற்கு இடைஞ்சல், சாலைகளின் விரிவாக்கம் என எதாவது ஒரு காரணத்திற்காக அனைத்தையும் வெட்டியாகிவிட்டது.
மரங்கள் என்பவை இயற்கையின் முக்கிய பரிமாணம். அதை நாம் உணர்வதில்லை. இயற்கையின் மீதான நேசத்தை விட்டு விலகி செயற்கையான வளர்ச்சிகளில் நமது மோகம் அதிகரித்து வருகிறது. வீடுகளில், அலுவலகங்களில் கொடிகள், செடிகள், மரங்கள் என எல்லாமே செயற்கையின் பிடியில் நிறைந்துள்ளது. நகரங்களில் கல்லூரி வளாகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் சிற்றூர்களில் மட்டும் மரங்கள் சில வளர்ந்து நிற்கின்றன. தற்போது அங்கும் விரிவாக்க பணிகளின் காரணமாக பாதிக்கும் நிலை உள்ளது.
மாறுபட்ட இச்சூழ்நிலையில் சிலர் இயற்கையின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அறிந்து மரங்களை நட்டு பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். அவர்களில் கோவையைச் சேர்ந்த .யோகநாதன் குறிப்பிட வேண்டிய முக்கிய நபர். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறை. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். பேருந்து நடத்துனரான இவர் கடந்த 28 வருடங்களில் ஒன்னரை லட்சத்திற்கும் மேலான மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். மரம் நடுவது என்ற பெயரில் பலரும் நட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். அவர்ககளுக்கு நடுவதோடு கடமை முடிந்துவிடுகிறது. ஆனால் யோகநாதனோ நடுவதொடு விட்டுவிடாமல் அவைகள் நன்கு வளரும் வரை பராமரித்து வருகிறார் என்பதே முக்கிய அம்சம்.
நட்ட மரக்கன்றுகளை ஒரு ஆண்டுவரை மரங்களாக வளரும் வரை பாதுகாத்து வருகிறார். வாரத்தின் ஒரு நாள் விடுமுறையில் சிற்றூர்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள், சாலையோரங்கள், ஏரிகரைகள் என மரங்களை நடுவதுதான் இவரது விடுமுறை தின முக்கிய பணி. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை நட்டு எவ்வாறு பராமரிப்பது என்பதையும் சொல்லி கொடுக்கிறார். அதிக அளவு ஆக்ஸிஜன் தரும் மரங்களையும், நாட்டு இன மரக்கன்றுகளையும் அதிக அளவில் நட்டு வருகிறார். அழிந்து வரும் பல்வேறு மரவகைகளை வளர்த்து அவ்வின மரங்களை பாதுகாத்தும் வருகிறார். தனது ஊதியத்தில் பெரும் பங்கை மரங்கள் வளர்பதற்கு பயன்படுத்தி வருகிறார்.
வார விடுமுறைகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று இயற்கையில் மரங்களின் தேவை நமக்கு மட்டும் அல்லாது, பறவைகள், விலங்குகள் மற்ற சீவராசிகளுக்கும் தேவை என்பது குறித்த பற்றிய புகைப்படக்காட்சி (Slide Show) நடத்தி அனைவரிடமும் விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 3000 பள்ளிகளுக்கு மேல் விஞ்ஞான விளக்கப் படக் காட்சி நடத்தி இருக்கிறார்.
இந்த செய்தியை அறிந்த என் நண்பர் சித்திரவீதிக்காரர் தான் கல்வி பயின்ற பள்ளியின் மாணவ மாணவியரிடமும் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என எண்ணினர். அவரும் அவரது சகோதர்களும், நண்பர்களும் இணைந்து தங்களது பள்ளி விழாவிற்கு தோழர். யோகநாதனை அழைத்திருந்தனர். அவ்விழாவில் பார்வையாளனாக கலந்து கொண்டதன் மூலம் இத்தகைய தன்னலமற்ற பொதுநலம் பேணும் இயற்கை சமூகஆர்வலரை’  சந்திக்கும் வாய்ப்பை முதல் முதலாகப் பெற்றேன்.

இவருடைய சேவையைப் பாராட்டி மத்திய அரசு, 2008ல் "சுற்றுச்சூழல் செயல் வீரர் விருது" வழங்கி கௌரவித்தது. இவ்விருதை துணைக்குடியரசு தலைவர் திரு.ஹமீத் அன்சாரி வழங்கினார். 2009ல்டிம்பர்லேண்ட்’ன் (அமெரிக்க நிறுவனம்) பாடப்படாத நாயகன்’ (Unsung Hero) விருதை வழங்கி கௌரவித்தது. 2010ல் தமிழக அரசின் சிறந்த சூழலியலாளர் விருது’ மற்றும் 2011ல் CNN-IBN தொலைக்காட்சி அலைவரிசையின் உண்மையான நாயகன்’ (Real Hero) விருது வழங்கியது. மேலும் கோவை ரோட்டரி சங்கம் மற்றும் டெக்சிட்டியினர் வழங்கிய விருது உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
ஒவ்வொரு மாணவரும், தன் பிறந்த நாளன்று, ஒரு மரக்கன்றை நட்டு, பராமரித்து வளர்த்து வரும் வகையில், உயிர் வாழ ஒரு மரம்' என்ற திட்டத்தை உருவாக்கி, இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேலான பள்ளி, கல்லூரி மாணவர்களை சேர்ந்துள்ளார்.
சமீபத்தில் ட்ரீ என்னும் அமைப்பு ஒன்றை உருவாக்கி மரம் நடுவது, மரங்களில் இருந்து விளம்பரத்திற்காக அறையப்பட்ட ஆணிகளை அகற்றுவது என பல்வேறு சமூக பணிகளை இணைந்து நடத்தி வருகிறார். மேலும் இவரை பற்றியும் இவரது சமூக நற்பணிகளை பற்றி அறிந்துகொள்ள www.yogutree.com இந்த இணையதள முகவரிக்குச் செல்லவும்.
கதிர் 2015’ பொங்கல் மலருக்காக நண்பர் சித்திரவீதிக்காரர் உடன் இணைந்து ஒரு சிறப்பு கலந்துரையாடலை தோழர். .யோகநாதனிடம் நடத்தினோம். அவரும் நமது கேள்விகளுக்கு எளிய பதில்களை வழங்கினார். அக்கலந்துரையாடலைப் படிக்க இச்சுட்டியை ...அழுத்தவும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக