2 மே, 2015

தாண்டிக்குடி மலைப் பயணம் - பகுதி 2

5 மணிக்கு தாண்டிக்குடி தமிழ்நாடு காப்பி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான காப்பி தோட்டம் அமைந்துள்ள காடுக்களுக்குள்ளே உள்ளகற்பதுக்கைஒன்றைக் காண பசுமைநடைக் குழுவினர் அனைவரும் சுமார்கி.மீ காட்டிற்குள் நடை பயணமாகச் சென்றோம். வழியெங்கும் உயர்ந்த மரங்களின் கீழே காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. கற்ப்பதுக்கை அமைந்துள்ள இடம் முழுவதும் காட்டுச் செடிகள் வளர்ந்து இருந்தது. கற்ப்பதுக்கையின் வரலாற்றுச் சிறப்பை தாண்டிக்குடியைச் சார்ந்த விவசாயி மோகனசுந்தரம் பசுமைநடைக் குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
மோகனசுந்தரம் அய்யாவின் கற்ப்பதுக்கைகள் பற்றி உரையை அறிந்துகொள்ள இந்த சுட்டியை அழுத்தி படிக்கவும்வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...



மாலை நேர குளிர்காற்றில் தலையில் முண்டாசோடு தாண்டிக்குடிச் சிற்றூரின் கடைவீதிகளில் நண்பர்களோடு சுற்றித்திரிந்தோம். செல்லும் வழியில் சாலையில் இடப்புறத்தில் உள்ள ஒரு கல்லின் முன்புறமும் பின்புறமும் சில வட்டெழுத்துக்கள் காணப்பட்டது. சில அடித்தூரத்தில் அருகிலேயே மற்றொரு கல்லில் மனித உருவம் செதுக்கப்படிருந்தது. மேலும் இவ்விடம் வழிபாட்டு இடம் போன்று அதன் முன்புறம் செய்யப்பட்டிருந்தது. இது நடுகற்களை போன்ற உருவத்தை கொண்டிருந்தது.
எனவே மேலும் இவ்விடத்தை சுற்றி பார்த்தபொழுது அருகிலுள்ள கோவிலின் முன்புறத்தில் இரண்டு கற்களில் உருவங்கள் செதுக்கப்படிருந்தது. இதில் ஒன்றில் வீரர் ஒருவர் இரு கையிலும் வாளோடு நிற்பதும், மற்றொன்றில் வீர்ர் ஒருவர் கையில் வில்லோடு நிற்பது போன்று செதுக்கப்பட்டிருந்தது. எனவே இவை அனைத்தும் நடுகற்களே என்பதை அறிந்துகொள்ள முடிந்த்தது. இந்த நடுகற்கள் மூலம் இப்பகுதியில் மிகப் பெரிய வேட்டைச் சமூகம் வாழ்ந்துவந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. நடுகற்கள் அனைத்தையும் படமெடுத்து பதிவு செய்துகொண்டு கடைவீதிக்குச் சென்றோம். 

தாண்டிக்குடியின் சிறப்பாக கடைவீதியில் கிடைத்த காரப் பணியாரமும் காரச் சட்டினியும் சூடான தேநீரும் குளிருக்கு இதமாக அமைந்தது. குளிரை அள்ளி அணைத்தவாறே அனைவரும் தங்குமிடம் வந்துசேர்தோம். தங்கும் அறையில் குளிரின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. கொண்டுவந்திருந்த பவானி ஐமுக்காளங்களை விரித்து நண்பர்களோடு அமர்ந்து சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தோம்.
பேச்சு முழுவதும் காடுகளில் உள்ள கற்த்திட்டைகள், கற்பதுக்கைகள், நடுகற்கள் பற்றியும், தாண்டிக்குடியில் தற்போதைய முக்கிய பிரச்சனையாக காடுகளை வனவிலங்கு சரணாலயமாக மாற்றுவது குறித்தும், விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. 9 மணிக்கு இரவு உணவாக சப்பாத்தி மற்றும் கிச்சடியோடு அன்றைய பொழுது குளிருக்கு பயந்து கொண்டு போர்வைகளுக்குள் சுருண்டு கொண்டது. சித்திரையிலும் இரவில் குளிர் சற்று தூக்கலாகவே இருந்தது.
காலையில் அனைவரும் எழ மனமில்லாமல் எழுந்தனர். குளிரின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. கடைவீதிக்கு சென்று ஒரு தேநீரை அருந்திய பின்னரே உடலில் சிறு சுறுசுறுப்பு வந்தது. 8.30 மணிக்கெல்லாம் தங்குமிடத்தில் அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கபட்டது. சிற்றுண்டியை முடித்துவிட்டு கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். புகைப்படங்களை வரிசையாக அமைக்கும் வேலைகளில் குழுவினர் அனைவரும் இணைந்து செயல்பட்டனர். 10.30 மணிக்கு ஊர் மக்கள், விவசாயிகள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் என ஒரு பெருங்கூட்டமே கண்காட்சியை காண வந்திருந்தது.


’தாண்டிக்குடி வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி திறப்புவிழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்பாணிப்பாளர் திரு. சரவணன் தலைமை தாங்கினார். பட்டக்காரர் திரு. கே.சி.எம்.மங்களகாந்தி முன்னிலை வகித்தார். ’புகைப்பட கண்காட்சியை திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரி டி.வெங்கடேஷ் திறந்து வைத்து, வனத்துறையும் விவசாயமும் என்ற தலைப்பில் விரிவாக பேசினார். விழாவிற்கு வந்த அனைவரையும் புலவர் சுப்பிரமணி அவர்கள் வரவேற்று பேசினார். வட்டாச்சியர் திரு.சுரேஷ், ஊராட்சி ஒன்றிய தலைவர், திரு. கே.சி.எம்.மங்களராஜ், ஊராட்சி மன்றத் தலைவர், மரகதம், மற்றும் பாலகிருஷ்ணன், கண்ணாயிரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தஞ்சை தமிழ் பல்கழகத்தைச் சார்ந்த வரலாறு & தொல்லியல்துறையைச் சார்ந்த பேராசியர் முனைவர் செல்வக்குமார் புகைப்படக் கண்காட்சி மற்றும் தொல்லியல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துக்களை மக்களிடம் விளக்கினார்.

பசுமைநடை பற்றி எழுத்தாளரும் பசுமைநடையின் நிறுவனருமான அ.முத்துக்கிருஷ்ணன் பேசினார். தாண்டிக்குடியைச் சார்ந்த விவசாயி மோகனசுந்தரம் மலை மக்களும் தொன்மையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். கோவிந்தசாமி நன்றியுரை வழங்கினார். விழாவில் தாண்டிக்குடி ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட கிராமங்கள், அதன் பிரதிநிதிகள், பசுமைநடை குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

விழா முடிவடைந்ததும் அனைவரும் தங்குமிடம் வந்து சேர்ந்தோம். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. சிறிது நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் ஒரு பயணம் தாண்டிக்குடி மலைப் பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலுக்கு. செல்லும் வழியில் பளியர் இன மக்களின் வாழ்விடங்களை காணமுடிந்தது. வீடுகள் அனைத்தும் ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளாக இருந்தன. மின்சார வசதிக்காக ஒவ்வொரு வீட்டின் முன்பாக அரசு வழங்கிய சூரிய தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன. 

வேறு எந்தவித வசதிகளையும் அங்கு காணமுடியவில்லை. அந்த இடத்தை கடந்து சிறிது தூரம் சென்றபோது அங்கும் சிலக் கற்த்திட்டைகள் காணப்பட்டனஅனைவரும் கோவில் அமைந்துள்ள மலை உச்சிக்கு சென்றதும் அங்கிருந்து தாண்டிக்குடி ஊரின் அழகையும், மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளின் அழகையும் கண்டு ரசித்தோம். அடர்ந்த காடுகளிலிருந்து பறவைகளின் கீச்சொலிகள் திரும்பும் திசையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தது. அனைத்தையும் கண்டு ரசித்துவிட்டு குழுவினர் அனைவரும் இணைந்து நிழற்படம் எடுத்துக்கொண்டு தங்குமிடம் திரும்பினோம்.
தங்குமிடம் வந்து சேர்ந்ததும் அனைவரும் ஊர் திரும்புவதற்கு தயாரானோம். கிளம்புவற்கு முன்னதாக அனைவரிடம் இந்த பயணத்தின் அனுபவங்கள் கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும்  இப்பயணம் வெறும் சுற்றுலா பயணம் போல் அல்லாது பல்வேறு செய்திகளை காடுகளைப் பற்றியும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பாகவும் அமைந்தது என்றனர்.
பெற்றோர்கள் சிலர் தங்கள் வாழ்வில் இன்று காணகிடைத்த பல அறிய செய்திகளை பசுமைநடையின் மூலம் தங்கள் குழுந்தைகள் சிறு வயது முதலே அறிந்துகொள்ள வாய்ப்பு கிட்டியது என்றனர். பசுமைநடையின் நிறுவனர் எழுத்தாளர் .முத்துகிருஷ்ணன் இது போன்ற பயணங்கள் மூலமே இயற்கையின் மீதான புரிதலையும், அதன் பாதுகாப்பு அவசியங்களையும் நாம் அறிந்துகொள்ள் முடியும் என்றார். அறிந்த தகவலகளை நம் நண்பர்களும் உறவினர்களும் அறிந்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்ற கருத்தை அனைவரிடமும் பதிவு செய்தார்.
இது போன்ற ஒரு அற்புதமான இயற்கையினூடன பயண அனுபவங்களை அனைவரும் அறிந்துகொள்ள வழிவகை செய்து கொடுத்த தோழர் .முத்துக்கிருஷ்ணனுக்கு பசுமைநடைக் குழுவினர் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக