சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகெங்கிலும் இறந்தவர்களின் நினைவாக பல நினைவுச் சின்னங்கள் எழுப்பும் வழக்கம் இருந்துவந்துள்ளது. ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு பெயர்கள். கற்பதுக்கைகள், கற்திட்டைகள், நடுகற்கள், என பல்வேறு வடிவங்களையும், பெயர்களையும் கொண்டுள்ளன.
அவற்றில் கற்பதுக்கை (CIST
BURIAL) என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்ன வகைகளுள் ஒன்று. இது இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைக்க நிலத்திற்கு கிழே கல்லால் அமைக்கப்பட்ட சிறிய அறை போன்ற அமைப்பு. கற்பதுக்கைகள் பலகை போன்ற வடிவம் கொண்ட கற்களால் ஆனவைகள்.
இயற்கையாகக் காணப்படும் பெரிய கருங்கற்களைப் கொண்டு நிலத்திற்கு மேல் காணப்படும் கற்திட்டைகள் போல் கற்பதுக்கைகள் காணப்படுவதில்லை. தேவையான வடிவமைப்புக்கு ஏற்பச் செதுக்கிய கற்களினால் அமைக்கப்பட்டவை. செதுக்குவதற்கு இலகுவான ’செம்புரை’ கல்லைப் பயன்படுத்தி செய்துள்ளதை
பல்வேறு பதுக்கைகளில் காணமுடிகிறது.
கற்ப்பதுக்கையில் நான்கு பெருங்கற்களும் ஈமக்குழியை ஒட்டியவாறு நிலத்திற்குள் பதிக்கப்பட்டு, அதன் மேலே மூடிபோன்ற ஒரு கற்பலகையால் மூடப்பட்டுள்ளது கற்பதுக்கைகள் காலம் கி.மு 1000 முதல் கி.மு 500 (பெருங்கற்காலம்) உட்பட்டதாக இருக்கக்கூடும் என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட தாண்டிக்குடியில் தமிழ்நாடு காப்பி ஆராய்ச்சி வாரியம் உள்ளது. வாரியத்திற்கு சொந்தமான காப்பி தோட்டம் அமைந்துள்ள காடுக்களுக்குள் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ‘கற்பதுக்கை’ (CIST BURIAL) ஒன்று உள்ளது. இக்கற்பதுக்கையை காண பசுமைநடைக் குழுவினரோடு சென்றிருந்த போது தாண்டிக்குடியைச் சார்ந்த விவசாயி மோகனசுந்தரம் அவர்கள் கற்ப்பதுக்கை பற்றிய சில செய்தி குறிப்புகளை கூறினார்.
அவருடைய மகள் தஞ்சை தமிழ் பல்கழைக்கழகத்தில் 2003ல் தொல்லியல் துறையில் ஆய்வியல் மாணவியாக படித்து கொண்டிருந்தார். அப்போது அவர் தாண்டிக்குடியில் மேற்கொண்ட தொல்லியல் களப்பணிகள் மூலம் இப்பகுதியின் தொல்லியல் முக்கியத்துவம் வெளிக்கொண்டு வரப்பட்டது. அவர் சமர்பித்த பல தொல்லியல் குறிப்புகளின் படி முனைவர் கா.ராஜன் அவர்கள் தலைமையில் ஆய்வு மாணவர்கள் சிலருடன் சேர்ந்து ஏப்ரல் 2003ல் இப்பகுதியல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது இப்பகுதியில் கிடைத்த சில கல்வெட்டுகளில் இவ்வூர் ‘தான்றிகுடி’ என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘தான்றி’ என்பது இங்குள்ள ஒரு மரத்தின் பெயர். இன்றும் இந்த மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. குடி என்பது சமூகத்தின் குடிகளை குறிப்பதால் இவ்வூர் தான்றிக்குடி என்று அழைக்கப்பட்டு, காலபோக்கில் மருவி தாண்டிக்குடியாக மாறியிருக்க வேண்டும் என்றார்.
2003ம் ஆண்டு முதன் முதலாக அகழ்வாராய்ச்சிக்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் இடம் காப்பி தோட்டத்திற்குள் அமைந்துள்ள கற்ப்பதுக்கை ஆகும். இதற்கு அருகிலுள்ள மற்றொரு பதுக்கையானது மரங்களின் வேர்கள் உள்ளே சென்று இருப்பது தெரியவந்ததால் அதை விட்டுவிட்டு இதனை தேர்ந்தெடுத்தனர். இந்த கற்ப்பதுக்கைக்கு எந்தவித இடையூறுகளும் இல்லாமல் இருந்தது.
இக்கற்ப்பதுக்கையின் மேலிருந்த மூடுகல்லின் எடை சுமார் 3 டன் அளவு. கற்பதுக்கையின் உள்ளே ஆய்வு செய்வதற்க்காக மூடுகல்லானது 20 பேர் சேர்ந்த குழுவினரால் மிகவும் பாதுகாப்பாக நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. ஆய்விற்கு பின் மீண்டும் இருந்த இடத்தில் வைக்கும் போது பதுக்கையின் பக்கவாட்டில் உள்ள கல்லின் மேற்புறம் உடைந்திருந்தது. எனவே முடுகல்லின் அதிக எடை காரணமாக மேலும் சேதமாக வாய்ப்புள்ளது என்பதால் பதுக்கையை மூடாமல் விட்டுவிட்டனர். மூடுகல் கற்பதுக்கையின் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த கற்பதுக்கையின் சிறப்பு என்னவென்றால் இது ஒரு தலைவன் அல்லது மன்னனின் ஈமக்குழியாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான்.
ஆராய்ச்சின் போது இதனுள் இருந்து சுமார் 4 ½ அடு நீளமுள்ள கைப்பிடி இல்லாத இரும்பு கத்தி கண்டெடுக்கப்பட்டது. கைப்பிடியையும் சேர்த்தால் சுமார் 5 ½ அடி நீளம் இருக்க வேண்டும். எனவே இவ்வாளை சுழற்ற குறைந்தபட்சம் 6 ½ க்கு மேலான உயர உடல்வாகு கொண்ட ஒரு பராக்கிரமசாலியாக அவன் இருந்திருக்க வேண்டும். இவ்வாளை அவரது வாரிசுகள் மறுசுழற்சிக்கு செய்யாமல் இந்த ஈமக்குழியில் வைத்திருப்பதன் மூலம், இறந்தவர் மிகபெரிய வீரனாகவோ, தளபதியாகவோ, மன்னனாகவோ இருந்திருக்க வேண்டும்.
இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யும் போது ஈமக்குழியின் வெளிப்பக்கத்தில் சுற்றிலும் 46 பானைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்டெடுக்கப்பட்ட ஒவ்வொரு பானையும் தனித்தனி வடிவங்களில் இருந்தது. 46 பானைகள் இருந்ததன் மூலம் அவை இறந்தவரின் உறவினர்கள் மற்றும் பங்காளிகள் போன்றோரின் செய்முறையாக இருக்க வேண்டும். மேலும் பதுக்கையின் உள்ளே 4 மிகப்பெரிய தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 3 ½ அடி உயரம்.
இதுவரை இப்பகுதியில் 15 இடங்களில் அகழ்வராய்ச்சி செய்ததில் அனைத்து கற்பதுக்கைகளிலும் ஒவ்வொரு தாழி மட்டுமே கிடைத்துள்ளன. இங்கு மட்டும்தான் 4 தாழிகள் கிடைத்துள்ளது. மேலும் இங்கு 4 மற்றும் 3 கால்களை உடைய ஜாடிகளும், பல்வேறு விதமான அளவுகளில் ஜாடிகள் என மொத்தம் 90 விதமான பொருட்கள் கிடைத்தன. இவை அனைத்தையும் மிகுந்த சிரமங்களுக்கிடையே ஆய்வு மாணவர்கள் எடுத்தனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் காப்பித் தோட்ட வாரியத்தில் தொல்லியல்த்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இக்கற்பதுக்கையின் அகழ்வாராய்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
இக்கற்பதுக்கைக்கு அருகில் 200 மீட்டர் தொலைவில் சுமார் 500 கற்பதுக்கைகள் விவசாய நிலங்களுக்குள் உள்ளது. விவசாயிகள் எவருக்கும் இது கற்ப்பதுக்கை என்பது தெரியாது. இவர்கள் இப்பகுதியில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருவதால், இதனை அவர்கள் அங்கிருந்து அகற்றாமல், பதுக்கையைச் சுற்றிலும் விவசாயம் செய்து கொள்கின்றனர். பாரம்பரியமான விவசாயிகள் மூலம் இவை இன்றும் அழியாமல் இருந்துவருகிறது. இதுவே தனியார் முதலாளிகளின் வசம் சென்றிருந்தால் உடைத்தெடுத்து அழித்துவிட்டு விவசாயம் செய்திருப்பர்.
இதேபோல் முருகன் கோவில் பாறையில் சுமார் 40 கற்ப்பதுக்கைகளும், 500 –
1000 ஈமக்குழிகள் இருக்கின்றது. இந்த அகழ்வாராய்ச்சி முடிவுகளின்படி இவை அனைத்தும் 2000 முதல் 3000 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 2000 வருடங்களுக்கு முன்னதாகவே இத்தனை கற்ப்பதுக்கைகள், ஈமக்குழிகள் இருந்துள்ளதால், இங்கு வாழ்ந்தவர்களின் மக்கள்தொகை எந்த வகையிலும் இன்றைக்கு இருப்பதை காட்டிலும் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. எனவே மிகப்பெரிய மக்கள்ச் சமூகம் இங்கு வாழ்ந்திருப்பதை இக்கற்பதுக்கைகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புடைய நம் முன்னோர்களின் வாழ்வியல்ச் சிறப்புகளை காலத்தால் அழியாமல் பாதுகாத்திட வேண்டும். இதன் பெருமைகளையும் முக்கியத்
துவங்களையும் அனைவரும் அறிந்துகொள்ள நாம் வழிவகை செய்வதன் மூலம் நம் முன்னோர்களின் சிறப்பை உலகமெங்கும் உள்ள மக்கள் எடுத்தச் செல்லமுடியும்.
நமது பாரம்பரிய தொல் வரலாற்றை அறிந்துகொள்ள அனைவரும் முன் வருவோம். நமது தொன்மைகளையும் பண்பாட்டையும் அழிந்திடாமல் காத்திடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக