13 அக்., 2012

சிவன் விஷ்ணு இணைந்த சங்கரன்கோவில்...


பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன்  இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். முதலில் கழுகுமலையை பார்த்துவிட்டு இரண்டாவதாக சங்கரன்கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். சங்கரன்கோவில் நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோவிலில் உள்ள இறைவன் சங்கர நாரயணன் என்று அழைக்கபடுகிறார். சங்கரன்கோவில் ஒரு சிவஸ்தலம்.

7 அக்., 2012

கழுகுமலையில் சமணப்பள்ளி...

வெட்டுவான் கோயிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சமணச் சிற்பங்கள் இருக்கும் மலையை நோக்கி சென்றோம். மலையில் நூற்றூக்கும் அதிகமான சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டன. இவ்வளவு சிற்பங்களை இதுவரை சென்ற வேறு எந்த மலையிலும் பார்த்தது இல்லை. முக்குடையின் அமர்ந்திருக்கும் மகாவீரரின் உருவச் சிலை ஒரே அளவில் வரிசையாக மூன்று வரிசையில் வெட்டப்பட்டுள்ளன.
மேலே காணப்படும் வரிசையில் மற்ற வரிசையில் காணப்படும் அளவைவிச சற்று சிறிதாக 25க்கும் மேற்பட்ட மகாவீரரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழே காணப்படும் இரண்டு வரிசைகளிலும் ஒரே அளவில் 34 சிலைகள் காணப்படுகின்றன. சிலைகளுக்கு நடு மத்தியில் ஐந்துதலை நாகத்தின் கீழ் பார்சுவநாதர் சிலை ஒன்றும் வடிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிற்பங்களின் கீழும் அதனை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாக வட்டெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 அக்., 2012

கழுகுமலை வெட்டுவான் கோவில்...

மதுரையைச் சுற்றிய மலைகளுக்கு மாதம் ஒரு முறை, விடுமுறை நாளான ஞாயிறு காலை பசுமை நடைக் குழுவினரோடு சென்று மலைகளில் உள்ள வரலாற்றுச் செய்திகளை அறிந்து வருவது வாடிக்கை. ஒரு மாற்றத்திற்காக வேறு சில ஊர்களில் உள்ள மலைகளையும் அவைகளில் பொதிந்துள்ள வரலாற்றுத் தகவல்களை அறிந்து வருவோம் என பசுமை நடை குழுவினரிடமும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிடமும் நண்பர்கள் சிலர் எங்கள் விருப்பத்தை முன் வைத்தோம்.
சாந்தலிங்கம் அய்யா மதுரையில் செயல்பட்டு வரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராக இருக்கிறார். அதன் பயனாக இந்த மாதம் (30.09.2012 ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மாணவர்கள் சிலரும், பசுமைநடை நண்பர்கள் சிலரும் இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணிபுரம், திருமலாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் என 5 வரலாற்று இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக சென்று வந்தோம்.

27 ஆக., 2012

மாடக்குளம் கண்மாயும் சித்திரமேலி குழுவும்...

இந்த மாதம் (ஆகஸ்டு 26, 2012) வரலாற்றை அறிந்து கொள்ளும் பயணமாக மாடக்குளம் கண்மாய்க்கு ‘பசுமை நடை’ குழுவோடு இணைந்து சென்று வந்தேன். அதிகாலையிலேயே நண்பர்களோடு சேர்ந்து பைப்பாஸ் ரோட்டில் உள்ள நட்ராஜ் தியேட்டர்க்கு அருகில் சந்திப்பு இடம் கூறப்பட்டிருந்தது. 6.30 மணியளவில் பசுமை நடை நண்பர்கள் அனைவரும் சந்திக்கும் இடம் வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து மாடக்குளம் சிற்றூர் வழியாக கண்மாய் அமைந்துள்ள பகுதியை நோக்கி சென்றோம். இங்குள்ள பெரிய கண்மாயின் பெயரால் இவ்வூரே மாடக்குளம் என்று அழைக்கப்படுகிறது. 
மாடக்குளம் சிற்றூர் மக்கள் எங்கள் அனைவரையும் பார்த்து திகைத்து நின்றனர். இவ்வளவு பேர் கூட்டமாக எங்கே செல்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினர். உங்கள் ஊர் கண்மாயை பார்க்க போகிறோம் என்றோம். அவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தினர். அந்த கம்மாக்குள்ள என்னத்த பாக்க போறீக என்றனர். அங்கு பாண்டியர் கால வரலாற்று தகவல்கள் உள்ளது, அதத்தான் பாக்க போறோம் என்றோம். சிற்றூரை கடந்து கண்மாய் கரையை வந்தடைந்தோம்.