25 நவ., 2012

மேட்டுப்பட்டி சித்தர்மலையும் ’மதிரை’ கல்வெட்டும்...

அதிகாலை – மூடுபனி - குளிர். இப்படியாக கண் விழித்தது இன்றைய விடியல் பொழுது. சாலையெங்கும் லேசான பனி மூடியிருந்தது. இருசக்கர வாகனத்தில் திருமங்கலத்திலிருந்து செக்கானூரணி நோக்கி நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தேன் இம்மாத பசுமைநடை பயணத்திற்கு. இளம் பனியின் குளுமைக்குள் செல்லும் அதிகாலைப் பயணத்தின் அனுபவம் அலாதியானது. இன்றைய பயணம் மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேரணைப் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி நோக்கி.
அணைப்பட்டி என்னும் சிற்றூருக்கு அருகில் வைகையாற்றின் தென்கரையில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலை உள்ளது. இம்மலையில் கி.மு 2’ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (பிராமி) கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் உள்ளன. 2000 வருட பழமையான ஒரு இடத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள அறிய வாய்ப்பை பசுமை நடை தந்தது. நண்பர்கள் அனைவரும் கூடும் இடம் நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகமாக இருந்தது. பின் அங்கிருந்து குழுவாக செக்காணூரனி – விக்கிரமங்கலம் – பெருமாள்பட்டி வழியாக மேட்டுப்பட்டி நோக்கிச் செல்ல வேண்டும்.