26 ஏப்., 2014

மழை பெய்ய மரங்கள் தேவையா ?...

மழை பெய்ய மரங்கள் தேவையா ? என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது, .செந்தமிழனின் முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை என்ற நூலின் தலைப்பைப் பார்த்தவுடன். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வாசித்த பின்பு தான் மழை பெய்ய மரங்கள் தேவை இல்லைமனங்களே’ தேவை என்பதை உணர முடிந்தது.

நமக்கு இருக்கும் ஆற்றலைவிட நமக்கு மேலே மிகப்பெரிய ஆற்றல் உள்ளது என்பது அனைவரது கருத்து. ஆனால், அது இயற்கையின் பேராற்றல். அதற்கு உருவங்களும்வடிவங்களும் இல்லை. ஆனால், அதுவே அனைத்து உருவங்களாகவும், வடிவங்களாகவும் உள்ளது. “

மனதால் இதை புரிந்து கொள்வது மிக எளிது. ஆனால்....!

மனதால் இதை புரிந்து கொள்வது மிக எளிது. ஆனால், அறிவால் இதை ஒப்புக்கொள்ளுவது மிகக் கடினம். அறிவு கேள்விகள் கேட்கும், ஆய்வுகள் செய்யும், ஏற்கும், நிராகரிக்கும். மனம், கேள்விகள் கேட்காது, ஆய்வும் செய்யாது. வெறும் விருப்பத்தில் மட்டும் இருக்கும். அதாவது, தனக்கு என்ன தேவையோ அந்த விருப்பத்தில் மட்டுமே மனம் இருக்கும்என்ற கருத்தை நூலின் முதல் பக்கமே நம் மனதில் விதைத்து விடுகிறது. அதன் வளர்ச்சியைதான் மீதமுள்ள அனைத்துப் பக்கங்களிலும் காண முடிகிறது.

இன்றைய வாழ்வின் பயணங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தான் விரும்பிய அல்லது கனவுகண்ட வாழ்வு என்பது இங்கு எத்தனைப் பேருக்கு கிடைத்துள்ளது என்று யாராலும் சொல்லமுடியுமா ? அதிக பேரின் பதில் 'இல்லை' என்பது தான். ஏனென்றால் நாம் அனைவரும் நம் மனதின் போக்கில் வாழ்பவர்கள் அல்ல, அறிவின் வழிநடத்துதலில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அறிவின் அதீத அறிவியல் கண்டுபிடிப்புகளில் நம்மை நுழைத்துக் கொண்டு இன்று அதைவிட்டு வெளியே வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றோம்.

மனதின் விருப்பத்திற்கேற்ப ஒருவேளை வாழ்ந்திருந்தால் இன்றைய சூழல் உருவாகி இருக்க வாய்பிருந்திருக்காதோ என்று நூல் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. கட்டுரையாளர் .செந்தமிழன் தனது நூலில் மூன்று தலைப்புகளில் உயிர், மனம், அறிவு, இயற்கை மற்றும் பிரபஞ்சம் ஆகிய ஐந்துக்கும் இடையேயான தொடர்பினை பற்றிய கருத்துக்களை மிக விரிவாக நம்மிடையே எழுத்துகள் மூலம் விவாதித்து இருக்கின்றார். இந்த நூலின் அனைத்து பக்கங்களும் மிக வலிமையான கருத்துக்களை தாங்கியவாறு நம் மனங்களினூடே பயணம் செய்கிறது.

நீங்கள் பார்க்காததும் இங்குதான் இருக்கின்றதுஎன்ற முதல் தலைப்பில் நம் புலன்களுக்கு எட்டாத, பார்க்க முடியாத மனம் மற்றும் அறிவை பற்றி மிக அழகாக எழுதியுள்ளார். அதில் மனதுக்கு கண், செவி, நாசி, நாக்கு, தொடு உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களும் இல்லை. அறிவுதான்  இந்த ஐந்தின் நுழைவாயில்கள் என்கிறார். மனம் செய்யத் துடிப்பதை ஏதோ ஒன்று தடுக்கிறது என்றால் அது அறிவின் வேலையாகத்தான் இருக்க முடியும் என்கிறார்.

காற்றிற்கு உயிர் இருக்கின்றதா என யாரிடம் கேட்டாலும், அதெப்படி காற்றுக்கு உயிர் இருக்கும் என்பார்கள். ஆனால், அந்த காற்றுதான் நம் சுவாசமாகி நம்மை வாழவைத்து கொண்டிருப்பதை நாம் உணர்வதில்லை. அப்படியென்றால், உயிர் என்பது காற்றிடமா அல்லது நம்மிடமா உள்ளது என்ற சிந்தனையை தட்டிவிடுகிறார் .செந்தமிழன். பசி வந்தவுடன் வயிற்றுக்கு உணவு தேவைப்படுகிறது. அது கிடைக்கவில்லை, அடுத்து என்ன செய்யலாம் ? மனம் மானம் பார்க்கும், ஆனால் உயிர் மனதுக்கும் மேலானது. மனம் உருவாகும் முன்னே உயிர்தான் உருவாகிறது. உயிருக்கு உணவு தேவை. அச்சமயம் உயிர் பிச்சை கேட்டுப் பார்க்கும் அல்லது பிடுங்கி திண்ண முயலும். இதில் அறிவின் செயல்பாடு என்ன ? மனத்தின் செயல்பாடு என்ன என்பதை அழகாக விளக்கியுள்ளார் கட்டுரையாளர்.

அறிந்தவை மட்டும் தான் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதைக் காட்டிலும் அறியாமை வேறு என்ன இருக்க முடியும். தர்க்கத்தின் வழியில் சென்றால், வாழ்க்கை நடத்தலாம், உயிர் வாழலாம். ஆனால் பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள முடியாது. உலகம் முழுமையும் இயற்கையின் பேராற்றலால் ஆகியுள்ளது. அப்பேராற்றலை யாரும் படைக்கவில்லை. அதனை எவராலும் அழிக்க இயலாது. அது இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும். இது போன்ற பல கருத்துக்கள் புத்தகம் முழுவதும் நிரம்பியுள்ளது. நீங்கள் புத்தகத்தை மூடிவிட்டு, இது போன்ற உண்மைகளை அறிந்துகொள்ள விரும்பினால் உங்கள் அறிவைக் கட்டுப்படுத்தி, மனதை விரிக்க செய்யுங்கள்மனதின் மூலம் நீங்கள் அறிந்துகொள்ள விரும்பியதை விடவும் அதிகமாக கண்டறிந்து கொள்ள முடியும்.

இயற்கையை மனிதன் வென்றுவிட்டான்’ என்ற கொக்கரிப்பில் தான் மனித இனத்தின் அழிவு துவங்கியுள்ளது. இயற்கையை மனிதனால் வெல்ல முடியும் என்ற சிந்தனையே மூடத்தனமானது. மனித இனமும் இயற்கையின் அங்கம்தான். இயற்கையை வெல்வதாக எண்ணிக்கொண்டு வளங்களைச் சுரண்டினால், தன்னைத் தானே சுரண்டி கொள்வதாகப் பொருள் என்னும் இயற்கையின் முக்கியத்துவத்தையும் நாமும் இயற்கையின் அங்கம் என்பதையும் அழகாக கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.

'முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை' என்ற இரண்டாவது தலைப்பில் துவங்கும் வார்த்தைகளே இன்றைய மனித இனத்தின் மீதான சவுக்கடிகளாக தொடங்குகிறது. புவியில் எல்லா உயிரினங்களும் சுதந்திரமாக வாழ்கின்றன. மனிதர்கள் மட்டும்தான் சிறைப்பட்டுள்ளனர். தம்மைச் சுற்றி எண்ணற்ற வேலிகளை, புதைகுழிகளை, அகழிகளையெல்லாம் அமைத்துக் கொண்டு நடுவே ஒடுங்கிக் கிடக்கின்றனர். உங்கள் வீட்டில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள நாய் கூட உங்களைவிட சுதந்திரமாகவே உள்ளது. நிச்சயமாக அந்த நாய்க்கு மாரடைப்பும், இரத்த அழுத்தமும் வருவதில்லை. அந்த நாய்க்கு பிறந்த நேரம் பார்த்து எவரும் எதிர்காலத்தைப் பற்றிய ஜோதிடக் கணக்குகளைச் சொல்லத்தேவையில்லை. எவர் மீதும் அதற்குச் சந்தேகம் இல்லை, கோபம் இல்லை, பொறாமை இல்லை, அச்சம் இல்லை, கவலை இல்லை.

எந்த ஒரு உயிர் மேலே உள்ள உணர்ச்சிகள் இல்லாமல் இருக்கிறதோ அதுவே விடுதலை அடைந்த உயிர்.” இன்றைய சமூகத்தில் இரண்டே இரண்டு பிரிவுகள்தான் உள்ளன. ஒன்று, கடனாளிகள் இனம். இன்னொன்று நோயாளிகள் இனம். மனிதர்கள் இந்த இரண்டில் அடங்கிவிட்டார்கள். எவரெல்லாம், நான் இந்த இரண்டும் இல்லாமல் வாழ்கிறேன் எனச் சொல்கிறார்களோ அவர்கள் விடுதலை அடைந்த மனிதர்கள் என்று கூறுகிறார் கட்டுரையாளர்.

அறிவின் தலைமையில் வாழ்க்கையை நடத்துவதுதான் மனித குலத்தின் பெரும் பாவம். அறிவு, நமக்கு அடிமையாக இருக்க மட்டுமே தகுதியுடையது. தூய்மையான மனம், நம்மை வழிநடத்தும் தகுதி பெற்றது. இது போன்ற கருத்துக்கள் நம்மை நம்மீதான வாழ்வியல் முறைகளின் அடக்குமுறைகளை சற்று உடைத்தெரிந்துள்ளது. சற்று ஆழமாக நாம் நம் மனதால் பல கேள்விகளை மனதில் எழுப்பி பதிலை தேடினோம் என்றால் பலவற்றின் பதில்கள் எல்லாமே திட்டம்தீட்டி வகுக்கும் வாழ்வியலில் நாம் சிக்கியிருப்பது புலனாகிறது.

சரி, தலைப்பைப் பற்றிய செய்தியே இல்லையென்று பக்கங்களை புரட்டினால், கட்டுரையின் இறுதியில் வருகிறது தெளிவான ஒரு வாசகம். அது, மரங்கள் நிறைய வளர்ந்தால், மழை பொழியும் என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் அதற்கும் மேலான உண்மை ஒன்று உள்ளது.

வெப்பக் கோளமாக இருந்த பூமியில், நானூற்றுப் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு மழை பெய்தது. அதுவே பூமியின் முதல் மழை. அப்போது பூமியில் மரங்கள் இல்லை. மரங்கள் மட்டுமல்ல, பூமியில் அப்போது எந்த உயிரினமும் இல்லை.”  இந்த கருத்து நம்மை வெகுவாக கவர்ந்து, யோசிக்க வைத்தது. புத்தகத்தின் அட்டையில் உள்ள வாசகத்திதின் மூலம் நமக்குள் எழும்பிய மழை பெய்ய மரங்கள் தேவையா ? என்ற கேள்விக்கான விடை, நம் தேடலின் பிரதிபலனாக புத்தகத்தின் 35வது பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

மேலும், மரங்களால் மழை பெய்வதில்லை, மரங்கள் உள்ளிட்ட உயிர்கள் வாழ்வதற்காகதான் மழை பெய்கிறது  என்ற வரியில் மழையின் முக்கியத் துவத்தையும், உயிர்கள் மீதான மழையின் காதலையும் அறிந்துகொள்ள முடிந்தது. மழை எப்படிப் பெய்கிறது? எப்போது பெய்யும் என்பதை ஆராய்ச்சி செய்யும் மனிதர்கள் மழையை உருவாக்கிவிட முடியாது. எந்த ஆராய்ச்சியும் செய்யாத மரங்களால் மழையை வரவழைக்க முடியும். எந்த உயிரும் இல்லாத இடத்திலும் மழை பொழிவிக்க பேராற்றலால் முடியும். எனவே, விருப்பத்தில் இருங்கள். உங்களுக்காகவும் மழை பொழியும்! என்று வரிகளோடு கட்டுரை முடிவடைந்தது.

மூன்றாவது தலைப்பாக அவ்வப்போது மரமாக மாறக் கற்றுக் கொள்ளுங்கள் என்றிருந்தது. இதில் மரங்களின் மீதான அன்பையும், அதனை வளர்ச்சியில் பலனடையும் மனிதர்களையும், மரங்களினால் பயனடையும் மனிதர்கள் அல்லாத காரணிகளையும், மரங்களோடு மனிதர்களின் வெளிப்பாடு பற்றிய சிந்தனைத் துணுக்குகளையும் மிக விரிவாக விளக்கியுள்ளார். மரங்களை வெறும் பலன்கருதி வளர்க்காமல் அதனையும் தங்கள் பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

அவ்வப்போது மரங்களுடன் உரையாடுங்கள். இயற்கையின் பல உயிர்கள் எல்லாம், அனுபவத்தில்தான் வாழ்கின்றன. ஆராய்ச்சியில் அல்ல. இயற்கையை நேசிக்க வேண்டும் என்பது, கவித்துவமான கற்பனை அல்ல. மறுக்க முடியாத உண்மை. இயற்கையை நேசிப்பது என்பது வேறொன்றுமல்ல. உங்களை நீங்களே நேசிப்பது என்ற உண்மையை இருள் படர்ந்த நம் இதயங்களில் வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார் .செந்தமிழன். ஏன் இங்கு நான் மூளை என்பதை முன்னிருத்தாமல் இதயத்தை கூறுகிறேன் என்றால், மூளை அறிவுக்கு அடங்கியது. இதயம் மனதால் விரிந்து கொண்டிருப்பது. விரிவது சுருங்கி விட்டால்மனம்’  என்பது உறங்கி போய்விடும்.

பல இயற்கையியல் உண்மைகளை அடுக்கடுக்காக நம் முன் நமது மனம் அறிந்துகொள்ளும் வகையில் முன் வைத்துள்ளார் கட்டுரையாளர் .செந்தமிழன். புத்தகத்தினுள் பயணம் செய்யும் பொழுது, இன்றைய வாழ்வியலில் வலிந்து உருவாக்கப்பட்ட பல நவீன சிந்தனைகள் அப்பட்டமாக தோலுரித்து காட்டப்படுகிறது. பல வரிகள் நம்மை நாமே வெறுக்கும் அளவிற்கு சுட்டிக் காட்டபட்டுள்ளது. நாகரீக வாழ்வு என்று நாம் இன்று எந்த அளவிற்கு இயற்கையை மதிக்கின்றோம். கண்களை மூடிக்கொண்டு, அறிவு ஜீவிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நாம் இதுவரையிலும் எந்தெந்த குழிகளிலெல்லாம் விழுந்து கிடக்கிறோம் என தலையில் கொட்டி கூறப்பட்டுள்ளது.

இறுதியாக இரண்டு உரையாடல் தொகுப்புகள். ஒன்று ஆந்தைக்கும் எனக்குமான தற்காலிக உறவிலிருந்து... மற்றொன்று உங்கள் வீட்டுக்கு கடவுள் வந்தாரா ? என்ற இந்த உரையாடல்களோடு புத்தகத்தின் கடைசிப் பக்கம் முடிவடைகிறது. இன்றைய சமூகத்திற்கு தேவையான மிகச் சிறந்த இயற்கையியல் கட்டுரைகளை வழங்கிய எழுத்தாளர் .செந்தமிழனுக்கும், புத்தகத்தை மிக நேர்த்தியாக, அழகிய அட்டைப் படத்துடனும் வெளியிட்ட செம்மை வெளியீட்டகத்திற்கும்’ நமது உளங்கணிந்த வாழ்த்துக்கள். புத்தகத்தின் விலை ரூ. 90.

மிக நீண்ட பயணம், நீண்ட தொலைவு, நேரம் போனது தெரியவில்லை. ஆனால், மனம் மிக ஆழமான கருத்துக்களால் நிரம்பி, மிகவும் சோர்வடைந்திருந்தது. பல கேள்விகளும், பதில்களும் தலைக்குள் சுற்றிக் கொண்டிருந்து. அருமையான கருத்துக்களை படித்து முடித்த உணர்வுகளோடுதேநீர்’ அருந்தலாம் என புத்தகத்தை மூடினால், அங்கு .செந்தமிழனும் இத்தனை கருத்துக்களை எழுதி முடித்துவிட்டுதேநீர்’ பருகிக் கொண்டிருந்தார்.

1 கருத்து: