14 ஜூன், 2015

குப்பல்நத்தமும் பொய்கைமலை சிற்பங்களும்...

மதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 கி..மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு திருமங்கலம் – தே.கல்லுப்பட்டி சாலையில் ஆலம்பட்டியை அடுத்து வலது புறமாக சேடப்பட்டிக்கு பிரிந்து செல்லும்  சாலை வழியாகவும், மற்றொன்றாக திருமங்கலம் – உசிலம்பட்டி சாலையில் இருந்து தங்களாச்சேரிக்கு பிரிந்து செல்லும் சாலை வழியாகவும் குப்பல்நத்தம் செல்லலாம்.
குப்பல்நத்தம் பொய்கை மலையில் தென்பக்கச் சரிவில் தொல்லியல் கல்வெட்டுகளும், சமணச் சிற்பங்களாக பார்சுவநாதர், பாகுபலி போன்ற சமணச் சிற்பங்களும் மற்றும் அதன் கீழே தெளிவற்ற நிலையில் சிதைந்த கல்வெட்டு ஒன்றும் காணப்படுவதாக வரலாற்றுச் செய்தியை படித்துள்ளேன். இதனை மதுரை தொல்லியல் வரலாற்று நூல் மூலம் அறிந்தேன். இச்செய்தியைக் கேள்விபட்ட நாள் முதலே ஒருநாள் குப்பல்நத்தம் செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். இதனை நண்பர்களிடமும் கூறியிருந்தேன். நேற்று நண்பகல் கடந்த மாலைப் பொழுதில் நண்பர்கள் இருவருடன் இணைந்து குப்பல்நத்தம் சென்று வந்தேன்.
ஊர்நத்தம் என்பதற்கு தமிழ் அகராதி கிராமம், குடியிருப்பு, கிராமத்தில் வீடு கட்டுவதற்காக விடப்பட்டிருக்கும் இடம் என்று குறிப்பிடுகிறது. விசயநகர மன்னர் மகாபதி வேங்கிடராயர் கல்விமான்களாக வேதங்களில் சிறந்த அறுபத்து நான்கு அந்தனர்களுக்குக் ‘குப்பலநேத்த’ (குப்பல் நத்தம்) என்ற கிராமத்தைப் பஞ்சலாங்கலஸத்புரம் எனப் பெயரிட்டுத் தானமாக வழங்கிய செய்தியினைக் குப்பல் நத்ததில் கிடைத்த செப்புப் பட்டயத்தின் (கி.பி.1587) வாயிலாக அறியலாம்.
குப்பல்நத்ததிற்கு செல்வதற்கு முதலில் திருமங்கலம் – தே.கல்லுப்பட்டி சாலையில் இருந்து வலதுபக்கம் பிரிந்து செல்லும் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றோம். வழியெங்கும் கரிசல்மண் நிலங்கள் காணப்பட்டன. சில இடங்களில் பருத்தி பயிர் செய்யப்பட்டிருந்து. சில இடங்களில் காய்கறிச் செடிகள் விவசாயம் செய்யப்பட்டிருந்து. சாலை நேராகச் சென்றது. வலைவுகளே இல்லை. சுமார் 20 கி.மீ தொலைவிற்கு நேர்சாலையை இங்குதான் கண்டேன். சாலைக்கு நேரிலும், இடப்பக்கமும் மலைகளை அழகாகத் தெரிந்தன.
ஊர் மிகத் தொலைவில் உள்ளதால் வழியில் கண்ட நபர்களிடம் குப்பல்நத்ததிற்கு செல்லும் பாதையைக் கேட்டுக் கொண்டே வந்தோம். நகர மக்களுக்கும் சிற்றூர் மக்களுக்கும் உள்ள மிகப்பெரிய மனிதம் கலந்த பண்பை அன்று மீண்டும் அவர்களிடம் இருந்து அறிந்துகொள்ள முடிந்தது. யார் யாரிடம் எல்லாம் வழி கேட்டோமோ அவர்கள் அனைவரும் எங்களுக்கு இன்முகத்துடன் பலமுறை சரியான வழி கூறியது மறக்கமுடியாத நெகிழ்வு. ஒரு வழியாக குப்பல்நத்ததிற்கு வந்து சேர்ந்தோம். சாலையில் இருந்த தேநீரகத்தில் தேநீர் அருந்தினோம். ஊர்காரர்களிடம் பொய்கை மலையைப் பற்றியும், அங்குள்ள சிற்பங்களைப் பற்றிய செய்திகளை கேட்டோம்.
அவர்கள் கூறிய செய்திகளில் அங்கு சமணச் சிற்பங்கள் இருக்க வாய்பில்லை என்று நினைக்கும் அளவு இருந்தது. ஊரைத் தாண்டி கொஞ்ச தூரம் போனால் ஒரு மலைத் தெரியும் அதான் பொய்ய மலை என்றனர். அங்க இருக்கிற சாமி சமணப்பர் சாமிங்க. நாங்க அதுக்கு வருசம் வருசம் ஆடி மாதம் கெடா வெட்டி சாமி கும்பிடுவோம் என்றனர். அங்க இருக்கிற சிலைய நீங்க படம் எடுத்தாஅலும் அது விழாதுங்க… சக்தி வாய்ந்த சாமி. வருசத்துக்கு ஒரு சிலை அங்க புதுசு புதுசா உருவாகும். இப்படியான பல சுவாரிசய தகவல்களை அங்குள்ள மக்களிடம் இருந்து கேட்டோம். அவர்களுக்கு அங்கிருப்பது சமண மதத்தைச் சார்ந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் என்பதே அரியாத வண்ணம், கெடா வெட்டி சாமி கும்பிடுவோம் என்ற செய்தி வியப்பைத் தந்தது. சூடான தேநீரோடு சில சூடான தகவல்களைத் தந்த ஊர் மக்களுக்கு நன்றி கூறிவிட்டு மலையை நோக்கிச் சென்றோம். 


வெயில் இறங்கி இருந்தது. சிற்றூரின் வயல்வெளிகளில் மெல்லிய காற்று நம்மைக் கடந்துச் சென்றது. சிறிது தூரத்தில் பொய்யை(கை) மலையைம் வந்தடைந்தோம். மலையில் சிறிதும் பெரிதுமாக பாறைகள் அங்கும் இங்குமாக விழாமல் நின்று கொண்டிருந்தது. ஓரிடத்தில் சில படிகள் மலையில் காணப்பட்டது. அங்கு சென்று சிறிது தூரம் மேலேறிப் பார்த்தோம். அங்கு ஒன்றும் தென்படவில்லை. ஆனால், படிகள் முற்ச்செடிகளூடே சென்று கொண்டிருந்து. நேரத்தை வீணடிக்காமல் மக்கள் கூறிய வடமேற்குப் பகுதியை நோக்கிச் சென்றோம். அழகிய தார் சாலை தென்னை மரங்களினூடே மலையைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

ஓரிடத்தில் மலை முடிவடைந்தது. அங்கு காணப்பட்ட பாதை ஆற்றுப்பாதையாக காணப்பட்டது. நீரில்லை வறண்டு காணப்பட்டது. வழியில் குப்பல்நத்தம் சமணச் சின்னம் செல்லும்  வழியைக் காட்டும் வழிகாட்டியின் நிலை பரிதாபமாக இருந்தது. வழிகாட்டிப் பெயர்பலகை இருந்த இடத்தில் இருந்து பெயர்ந்து கீழே வானத்தை நோக்கி தன்னிலையை முறையிட்டுக் கொண்டு கிடந்தது. கரடு முரடான அப்பாதையைக் கடந்து மலையின் வடமேற்குச் சரிவை அடைந்தோம். அங்கு சில இளைஞர்கள் தென்பட்டனர். அவர்களிடம் கேட்டதற்கு நாம் தேடிவந்த இடம் இதுதான் என்று காட்டினர்.
மலையின் சற்று உயரத்தில் மலைப்பாறை ஒன்றின் சரிவில் கீழே சிலச் சிற்பங்கள் தென்பட்டன. மேலேறிச் சென்றோம் சிற்பங்கள் அனைத்தின் மீதும் எண்ணெய் படிந்த கருப்பு நிறத்தில் காணப்பட்டது. இப்பகுதி மக்கள் இச்சிற்பங்களை வைதீக தெய்வங்களாக கருதி மஞ்சள், எண்ணெய், குங்குமம் போன்றவற்றை சாற்றி வழிபடுகின்றனர். இதனால் இச்சிலைகளை முழுமையாக காணமுடிவதில்லை. இடமிருந்து வலமாக முதலில் நான்கு சிற்பங்கள் முக்குடையின் கீழே மகாவீரர் அமர்ந்த நிலையில், அவரின் இருபுறமும் இயக்கியர்கள் இருவர் எனப் புடைப்புச்சிற்பமாக காணப்பட்டது.



அதனைத் தொடர்ந்து நின்ற நிலையில் மூன்று புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டது. இது பாகுபலியின் சிற்பமாக இருக்க வேண்டும். அடுத்ததாக அமர்ந்த நிலையில் மகாவீரர் சிற்பம் ஒன்றும், சற்று தள்ளி நின்ற நிலையில் ஒரு சிற்பமும் அதன் இரண்டு பக்கமும் இரண்டு இயக்கியர்களின் சிற்பமும் காணப்படுகிறது. எனவே இது பார்சுவநாதரின் சிற்பமாக இருக்க வேண்டும். இப்பொய்கை மலையில் மொத்தம் ஒன்பது தீர்த்தங்கரர்களின் திருவருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் கீழே அல்லது மேலே என எங்கேயும் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. அனைத்தும் நெய் அல்லது எண்ணெயால் மறைந்திருக்க வேண்டும். 

தொல்லியல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொய்கைமலையில் முன்பு கண்டெடுக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு வாசகம் இது. கி.பி.9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு இது.
’ 1. ..…ஸவ ஸிஸ்ரீ குறண்டி அட்....
2. .....தேவர்க்கு அடிகள் அம்…..சி 
3. .....பேரால் செய்வித்த திருமேனி இ…..
4. ......வர்மாணாக் கிசு…...க்கள்…...
5. ......வித்த திருமேனி…..ல்லி 
6. ......செவித்த திருமேனி…. கள் கிழவனைச் சாத்தி பன்னி.....
7. ......பேரால் செவித்த திருமேனி…... கொற்றி
8.  (த்த) தேவர் பேரால் செவித்த திருமேனி… ‘
இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட போதே மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. முதல் நான்கு சிற்பங்களைத் தவிர்த்து ஏனைய ஐந்து சிற்பங்களை (திருமேனிகளை) ஒரு பெண் அடியார் உட்பட ஐவர் செய்து கொடுத்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது. குறண்டியிலிருந்த சமணப் பள்ளி பெயரும் இதில் இடம் பெறுகிறது.
பொய்கை மலையில் காணப்பட்ட சமணச் சிற்பங்களை நிழற்படங்களாக எடுத்துக்கொண்டு மலையைவிட்டு கீழிறிங்கினோம். ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் செய்தியைக் கண்ட மகிழ்ச்சியோடு அங்கிருந்து மற்றொரு வழியான தங்களாச்சேரி – திருமங்கலம் சாலை வழியாக ஊர் திரும்பினோம். வழியே இயற்கையின் அழகு நிரம்பியிருந்தது. சூரியன் மேற்கில் மறையத் தொடங்கினான். வானம் நீளமும் கத்தரிபூ நிறம் கலந்த நிறத்தில் காட்சி தந்தது. 

4 கருத்துகள்:

  1. நானும் சேடபட்டி-ல் தான் இருக்கிறேன்... இப்போதுதான் பொய்கைமலையின் அருமை தெரிகிறது... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மேலும் இதைப் பற்றிய தகவல் இருந்தாள் கூறுங்கள்

    பதிலளிநீக்கு