25 ஏப்., 2012

அழகர் மலையும் பாறை ஓவியங்களும்...

அழகர்மலையில் உள்ள பாறை ஓவியங்கள் சமணர்கள் வருகைக்கு முன்பே மலை வாழ்மக்கள் சிலர் வாழ்ந்துள்ளதை கூறுகிறது. இவர்கள் அனைவரும் வேட்டைச் சமூகமாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த பாறை ஓவியங்கள் பற்றி பேராசியர் கண்ணன் அவர்களின் உரையிலிருந்து சில...

’மதிரை’ பெயர் அழகர் மலை கல்வெட்டில்...

ஏப்ரல் மாதம் (22.04.12) ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு நண்பரின் சிற்றுந்தில் பயணம். சிற்றுந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை குளுமைக்குள் பயணித்தது. மெல்லிய கதிரவனின்கதிர் ஒளி’ வெளிச்சத்தில் இளங்காற்றை விளக்கி விட்டுக் கொண்டே மித வேகத்தில் சென்றது. இம்முறை அழகர்கோயிலுக்கு அருகில் உள்ளகிடாரிப்பட்டி’ என்னும் கிராமத்தருகில் உள்ளஅழகர் மலை’க்கு தான் பசுமை நடை பயணம். சிற்றுந்தில் சொகுசாக பயணம் என்பதால் நேரம் போனது தெரியவில்லை.

சரியாக 6.30 மணிக்கு... மதுரை புதூர் பேருந்து நிலையத்தை அடைந்தோம். பசுமை நடை பயணத்திற்காக வந்திருந்த பழைய மற்றும் புதிய நண்பர்கள் பலர் ஆங்காங்கே தென்பட்டனர். அனைவரும் சந்திக்கும் இடமாக புதூர் பேருந்து நிலையம் குறிப்பிடப்பட்டிருந்தது. பசுமைநடை குழுவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் அனைவரும் வந்தடைந்தனர். பின் அங்கிருந்து அனைவரும் கிடாரிப்பட்டி நோக்கி ஒரே குழுவாகப் பயணித்தோம். இம்முறைப் பயணம் மிக நீ.....ண்டப் பயணமாகவே அமைந்தது. சிற்றுந்தின் சொகுசு அதை ஈடுகட்டியது.