2 அக்., 2015

குன்னத்தூரும் குடைவரை கோயில்களும்...

மதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர் நோக்கிச் செல்லும் சாலையில் உதயகிரி என்னும் சிறுகுன்று உள்ளது. இக்குன்றின் கிழக்குதிசையில் உதயகிரீஸ்வர் என்னும் குடைவரை கோயிலும் குன்றின் பின்புறம் மேற்குதிசையில் அஸ்தகிரீஸ்வர் என்னும் குடைவரை கோவிலும் அமைந்துள்ளது. குன்றின் வடக்கு திசையில் மிகப்பெரிய இயற்கையான முறையில் அமைந்த குகையில் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கைகள் அமைந்துள்ளன. எண்ணளவு குறித்த கல்வெட்டு இம்மலை குகைத்தள முகப்பில் காணப்படுவது இக்குன்றின் சிறப்பு.
சென்றவாரம் நண்பர்களோடு இக்குடைவரை கோயிலுக்கு சென்று வந்தேன். பயணம் அதிகாலையில் திருமங்கலம், சுங்குராம்பட்டி, வழியாக பழைய விமானநிலையம் சாலையில் சென்றது. இளஞ்சிவப்பு நிறத்தோடு கதிரவன் முகம் காட்டினான். பறவைகள் உணவிற்கான தங்களின் தேடலைத் துவங்கியிருந்து அவைகளோடு நாங்களும் இணைந்து கொண்டோம். வழியெங்கும் மிதமான பனியும் பறவைகளின் ரீங்காரமும்  நிறைந்திருந்தது. வழியில் கண்ட சில கிராமங்களில் பசுமை நிறைந்து இருப்பதைக் காணமுடிந்தது.
பயணத்தில் தூத்துக்குடி-மதுரை நான்குவழிச் சாலையில் மண்டேலாநகரை அடுத்த அமைந்துள்ள சாமநத்தம் கண்மாயில் செந்நாரை, சாம்பல் நாரை, வழுவாங்கி, வெண்கொக்குகள் என பறவைகள் நிறைந்திருந்தன. இவ்விடத்தை அரசு பறவைகளுக்கான சரணாலயமாக அமைந்து தந்தால் இன்னும் நிறைய பறவையினங்கள் பாதுகாக்கப்படும். மதுரை மற்றும் சுற்றியுள்ள புறநகர்வாழ் மக்களுக்கு சுற்றுலாப் பகுதியாக அமையும். மதுரை சிவகங்கைச் சாலையில் கருப்பாயூரணியிலிருந்து செல்லும் வழியெங்கும் மதுரை பெருநகர்மயமாகி வருவதை காணமுடிந்தது. வழியெங்கும் கிரானைட் தொழிற்கூடங்கள் காணப்பட்டன. மனிதர்களுக்கு நிலத்தின் மீது மதிப்பு குறைந்து கிரானைட் கற்களின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வளர்ந்திருப்பதை உணர முடிந்தது.
பயணத்தில் வரிச்சியூர் வந்தடைந்ததும் காலை உணவு இடைவெளி எடுத்துக்கொண்டோம். சாலையில் சிறு சிறு கடைகள் காணப்பட்டது. காலைவேளை என்பதால் சில கடைகள் மட்டும் திறந்து காணப்பட்டது. அருகிலிருந்த தேநீர் கடையில் சிறுகூட்டம் நிறைந்திருந்தது. ஒவ்வொருவர் கையிலும் போண்டாவும் உழுந்தவடைகளும் காணப்பட்டது. நாங்களும் கோதாவில் இறங்கினோம். சிற்றூர்களில் செய்யப்படும் போண்டாக்களுக்கும், வடைகளுக்கும் ஒரு தனி சுவையே. வேறு எங்கும் இச்சுவை கிடைப்பதில்லை. தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்தவர்களிடம் ம.குன்னத்தூர் செல்லும் வழி கேட்டுத் தெரிந்துகொண்டு மீண்டும் பயணத்தைத் துவக்கினோம் கையில் சில போண்டாக்களோடு.
வரிச்சியூரிலிருந்து வலது புறமாக செல்லும் சாலை ம.குன்னத்தூர் நோக்கிச் செல்கிறது. ம.குன்னத்தூர் நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சாலையின் வலதுபக்கம் உதயகிரி எனப்படும் ”சுப்பரமணியர் மலை” அமைந்துள்ளது. குன்றின் கிழக்கு திசையில் உதயகிரீஸ்வரர் குடைவரைக் கோயில் உள்ளது. குடைவரையின் வடக்கு பகுதியில் இக்குன்றில் காணப்படும் இதர தளங்களின் அறிவிப்பு பலகை காணப்படுகிறது. 


இம்மலையில் சூரியன் உதயமாகும் கிழக்குத் திசை நோக்கி இக்குடைவரை கோயில் அமைந்துள்ளதால் இக்கோயில் உதயகிரீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கம் ஒற்றைத் தனிக் கல்லாக பொருத்தப்படாமல் அப்பாறையிலேயே நடுவில் பீடத்துடன் இணைந்து செதுக்கப்பட்டுள்ளது. கி.பி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால இக்குடைவரை கோயிலில் சிறிய முக மண்டபமும், வாயிலில் புடைப்புச் சிற்பங்களாக இரண்டு துவாரபாலகர்கள் மிக எளிமையாய் நின்று கொண்டிருக்கிறார்கள். குடைவரையின் இடதுபுறம் பிள்ளையாரின் புடைப்புச் சிற்பத்தை செதுக்கியுள்ளார்கள். கோயிலின் வெளியே காளை சிலை சிவலிங்கத்தை நோக்கி வணங்கியபடி காட்சியளிக்கிறது.
இக்குடைவரை வரலாறு பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தொல்லியல் துறையினரால் குடைவரையின் இடப்பக்கம் தமிழிலும் வலபக்கம் ஆங்கிலத்திலும் வரலாற்றுக் குறிப்புகள் கல்வெட்டுகளாக செய்து வைக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையின் உள்ளே மின்சார ஒளி விளக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துகொள்ளும் வகையில் சூரியதகடுகள் குன்றின் மீதும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் குன்றோடு குடைவரையையும் சேர்த்து சுற்றிலும் இரும்பு முள்வேலிப் பாதுகாப்பு  தொல்லியல் துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது. 
பின்னர் அங்கிருந்து மலையைச் சுற்றி குன்றின் பின்புறமாக மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள அஸ்தகீரிசுவரர் குடைவரை கோயில் நோக்கிச் சென்றோம். குடைவரை மிக அழகாக செதுக்கப்பட்டிருந்தது. இங்கும் குடைவரை பற்றிய வரலாற்றுச் செய்தி தாங்கிய இரும்பு அறிவிப்பு பலகை தொல்லியல் துறையினரால் வைக்கப்பட்டிருந்து. உதயகிரீசுவர் குடைவரையைப் போன்று இங்கும் சிவலிங்கம் கருவறையில் காணப்பட்டது. வெளியே காளை சிலை லிங்கத்தை நோக்கி வணங்கியவாறு அமர்ந்திருந்தது. குடைவரையின் வாயிலில் வாயிற்க் காவலர்களான துவாரபாலகர்களின் சிற்பங்கள் பதிலாக கோயிலில் காணப்படும்  தூண்கள்  போன்ற வேலைப்பாடுகள் செய்ய்ப்பட்டிருந்தது. அஸ்தகீரிசுவரர் குடைவரை அமைந்துள்ள குன்றின் மேலேயும் குடைவரையைச் சுற்றிலும் இரும்புமுள் கம்பி வேலியிடப்பட்டு தொல்லியல்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 


பின்னர் குடைவரையிலிருந்து குன்றின் உச்சிப் பகுதிக்கு சற்று சரிவான பாறைப் பகுதி வழியாக சென்றோம். மேலே சிதலமடைந்த நிலையில் கோயில் ஒன்று காணப்பட்டது. கோயிலின் சுற்றுச்சுவர்கள் இடிந்த நிலையில் சில இடங்களில் மட்டும் காரை பெயர்ந்த நிலையில் உள்ள செங்கற்கள் காணப்பட்டன. செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய செங்கற்களின் வடிவத்தை போல் இல்லாமல் சற்று நீளமானதாகவும் அகலமானதாகவும் காணப்பட்டது. இதன்மூலம் இக்கோயில் மிகப் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இங்கு தொல்லியல்துறையின் அறிவிப்புப்பலகை ஏதும் இல்லை. எனவே தொல்லியல் துறையினரால் இக்கோயில் கண்டறியப்பட்டதா என தெரியவில்லை.
கோயிலின் அடித்தளம் சிதைவடையாமல் இருக்கின்றது. இங்கும் சிவன் கோயில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், கோயில் கருவறை அமைந்துள்ள இடத்திற்கு நேர் எதிரே காளை சிலை ஒன்று வணங்கிய நிலையிலும் கோயிலின் பின்புறத்தில் நீர் வெளியேறும் வழியும் உள்ளது. காளைச் சிலைக்கு சற்று பின்னால் கல்லிலான விளக்குத்தூண் ஒன்றும் உள்ளது. கோயிலின் கருவறை கற்தூண்கள், வாயில் தூண்கள் சில உடைந்த நிலையிலும், கற்ச்சிலை ஒன்று உடைந்த நிலையிலும் காணப்பட்டது. சிலையில் காணப்படும் உருவத்தையும் இக்குன்றிக்கு “சுப்பிரமணியர் மலை” என்ற பெயரையும் வைத்து பார்கையில், இக்கற்சிலை முருகப் பெருமானின் கற்சிலையாக இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். காளையின் சிலையை வைத்துப் பார்கையில் இங்கிருந்திருக்க வேண்டிய சிவலிங்கத்தையும் தேடிப்பார்த்தேன் தென்படவில்லை. இக்கோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்திருந்தது.  
குன்றின் மேலிருந்து பார்க்கும் பொழுது ஒரு சிறு குன்று உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அங்கும் ஒரு கோயில் காணப்பட்டது. பாறை ஒன்றின் மீது தன் இணையை நோக்கி குரல் எழுப்பிக் கொண்டிருந்த பல்லி ஒன்றின் அழகிய காட்சியைக் காணமுடிந்தது. அந்த காட்சியை படமெடுத்துக்கொண்டு குன்றைவிட்டு கீழிறங்கினோம். குன்றைச் சுற்றிலும் சில குகைப் போன்ற அமைப்புகள் காணப்பட்டது. அங்கு செல்வதற்கு தடையாக தற்போது பெய்த மழைநீர் நிரம்பி இருந்ததால் சென்று பார்க்க முடியவில்லை.  பல வரலாற்றுச் செய்திகளை அறிந்துகொண்ட மகிழ்ச்சியில் நண்பர்கள் அனைவரும் ஊர் திரும்பினோம்.   
நீங்களும் நேரம் கிடைக்கையில் இவ்வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடத்திற்கு சென்று வாருங்கள். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வரிச்சூர் வழி நிறைய பேருந்துகள் செல்கின்றன. களிமங்கலம் என்னும் பேருந்து இம்மலை வழியாகவே வந்து செல்கிறது. பூவந்தி, இடையபட்டி, கருப்புகால் போன்ற பேருந்துகளில் வந்தால் வரிச்சூரில் இறங்கி மலையை நோக்கி சுமார் ஒரு கிலோமீட்டர் செல்ல வேண்டும்.

சுப்பிரமணியர் மலை கல்வெட்டுகள் பற்றிஅறிந்துகொள்ள... படிக்க...
இச்சுட்டியை அழுத்தவும்…. குன்னத்தூரும் சுப்பிரமணியர் மலை கல்வெட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக