9 ஜூலை, 2016

உத்தமபாளையம் திருக்குணகிரி சமணப்பள்ளி

உத்தமபாளையம் சமணத்தளத்திற்கு ஒரு நாளாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக மனதில் இருந்து வந்தது. பயணங்கள் சென்றும் பல மாதங்கள் ஆகிவிட்டதன் காரணமாக ஒரு சின்ன சலிப்பு. அதை ஈடுகட்ட இம்முறை மேற்குதொடர்ச்சி மலைகளை ஒட்டிய சின்னமனூர், உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளுக்கு நண்பர்களோடு பயணம் சென்று வந்தேன்
உத்தமபாளையத்திலிருந்து கம்பம் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது சமணர்மலை. இம்மலையில்தான் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணபள்ளி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் இம்மலையை மொட்டமலை, சமணர்மலை, கருப்பணசாமி மலை என்றே அழைக்கின்றனர். இங்கு செல்வதற்கு கருப்பணசாமி கோவில் எங்கு உள்ளது என்று கேட்டால்தான் எளிதாக வழி சொல்கின்றனர் இங்கு வசிக்கும்  மக்கள்.

மலை அமைந்துள்ள இடத்திற்கு குடியிருப்புகள் நிறைந்த பகுதி வழியாக சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. குடியிருப்புப் பகுதியின் கடைக்கோடி பகுதியில் கருப்பணசாமி கோயிலும் கோயிலுக்கு பின்னால் சிறு குன்றும் தெரிந்தது. கருப்பணசாமி கோயிலை அடுத்தவாறு சமணமலைக்கு செல்லும் வழிகாட்டி பலகை மலைக்குச் செல்லும் வழியை காட்டியது. செல்லும் வழி கருவேலமரங்கள் நிறைந்த, ஆள் அரவமற்ற பகுதியாகவும், வழியெங்கும்  குப்பைகளும், மதுபுட்டிகளுமாக நிறைந்து காணப்பட்டது. கோயிலுக்கு அருகிலேயே இப்படியா என்றவாறு மலையை நோக்கிச் சென்றோம்.


சிறிய மலைக்குன்று நம் முன்னே அழகாக நின்று கொண்டிருந்தது. இக்குன்றிற்கு திருக்குணகிரிமலை என்று பெயர். மலையின் கிழக்குப் பகுதியில் மலையை ஒட்டியவாறு கல்மண்டபம் காணப்பட்டது. கல்மண்டபத்தின்  முன்னதாக தொல்லியல்துறையின் அறிவிப்பு பலகை உள்ளது. மலைப்பாறையில் சமண சமயத்தை சேர்ந்த தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் பல மிக அழகாக செதுக்கப்பட்டிருந்தது. இவை கி.பி 8-9ம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
மதுரை மாவட்டத்திற்கு அடுத்ததாக இங்கு மட்டும்தான் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை கொண்ட சமணப்பள்ளியை காணமுடிகின்றது. இங்கு வாழ்ந்த சமணர்கள் இம்மலைப் பாறையில் தங்களது சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை செதுக்கி வழிபட்டுவந்துள்ளனர்இச்சிற்பங்களைப் பாதுகாக்கபதற்காக சில ஆண்டுகளுக்கு முன் அரசால் இக்கல்மண்டபம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  6 கற்தூண்கள் மலையை ஒட்டியவாறு அமைக்கப்பட்டு அதன் மேலே கற்பலகைகளால் மூடப்பட்டுள்ளது. மலையை ஒட்டிய சுனைப் பகுதியும் கற்பலகைகளால் மூடப்பட்டு, அங்கு செல்வதற்கு மண்டபத்தை ஒட்டியவாறு படிகளும் அமைக்கப்பட்டுள்ளது. சுனைக்குச் செல்லும் படிகள், சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.
சமண சமயம் இந்தியாவில் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் பீகார் மாநிலத்தில் தோன்றியது. அம்மாநிலத்தில் பஞ்சம் வரும் காலத்தை அறிந்த சமண துறவிகளால் கி.மு 3-2ம் நூற்றாண்டுகளில் இம்மதம்  கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பரவியது. ‘விசாகமுனிவர்என்னும் சமண தலைமைத்துறவியின் தலைமையில், சோழ பாண்டிய நாடுகளில் பல சமணத் துறவிகள் தங்கி சமண சமயக் கொள்கைகளைப் பரவச். செய்தனர். மக்கள் வசிக்கும் இடங்களை விட்டு சற்று ஒதுங்கி மலைப் பாறைகளில் உள்ள குகைகளில் சமணர்கள் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இங்கு வாழ்ந்த சமணத்துறவிகள் பள்ளிகளை உருவாக்கி, இப்பகுதி மக்களுக்கு கல்வியும், மருத்துவமும் வழங்கிவந்துள்ளனர். இப்பகுதி மக்கள் கொடுக்கும் உணவையும் பொருளையும் பெற்று வாழ்ந்து வந்துள்ளனர்.
உத்தமபாளையத்திலும் குடியிருப்புகளை விட்டு ஒதுங்கியவாறு, கருப்பணசாமி கோயிலைச் சுற்றியுள்ள மலைப் பாறைகளில் தங்கியிருந்துள்ளனர். மலைப் பாறைகளில் இவர்கள் செதுக்கிய சிற்பங்களும், அதனை செய்து கொடுத்தவர்களின் பெயர்களும் சிற்பங்களின் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டுகளாக உள்ளன. பாறையை ஒட்டியவாறு இயற்கையாக அமைந்துள்ள பள்ளத்தில் சுனை (ஊற்று) ஒன்றும் உள்ளது. இச்சுனை நீரையே சில ஆண்டுகளுக்கு முன்வரை இங்குள்ள மக்கள் குடிநீராக பயன்படுத்தியுள்ளனர். நாங்கள் சென்றிருந்த போது தற்போது பெய்த மழைநீரால் நிரம்பிக் காணப்பட்டது.

இம்மலைக் குன்றில் உள்ள பாறையில்  உள்ள புடைப்புச் சிற்பங்களில் சமண சமயத்தின் 23 மற்றும் 24 ஆம் தீர்த்தங்கரர்களான ஏழுதலை கொண்ட நாகத்தை தலையின் மீது கொண்டுள்ள பார்சுவநாதர் மற்றும் முக்குடையின் கீழ் இருபுறமும் வெண் சாமரம் வீசும் இயக்கிகளுடன் கூடிய மகாவீரரின் திருவுருவங்கள் என மொத்தம் 19 சிற்பங்கள்  காணப்படுகின்றன. இதுவரை நான் கண்ட சமணப்பள்ளிகளிலேயே இப்பள்ளியில் மட்டுமே இத்தனைச் சிற்பங்களைக் காண முடிந்தது. இதில் 8 பார்சுவநாதர் சிற்பங்களும் 11 மகாவீரர் சிற்பங்களும் 8 வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள ஒரு கல்வெட்டின்  மூலம் இப்பள்ளியின் இறைவர்க்குதிருக்குணகிரி தேவர்என்றப் பெயர் உள்ளதை அறியமுடிகிறது
ஸ்ரீதிருக்குணகிரித் தேவர்க்குத் திருவிளக்கு
க்கு அனந்தவீர் அடிகள் அட்டின காசுபதிநொ
ன்று இக்காசு பொலி கொண்டு முட்
டாமைச் செலுத்து வாராநோர் இப்பள்ளியுடைஅ
டிகள் அறம் வேண்டுவாரிது பிழையாமைச் செய்க
(S.IIxiv No.128)
இக்கல்வெட்டு ஒன்றே இங்குள்ள கல்வெட்டுகளில் முழுமையானதும் சற்று பெரிதானதும் ஆகும். அனந்தவீர அடிகள் என்பவரால் பதினோரு காசுகள் கொடையளிக்கப்பட்டு விளக்கு எரிக்கப்பட்டுள்ளது. இதனை இப்பள்ளியின் நிர்வாகி ஏற்றுச் செயல்படுத்தி வந்துள்ளார். தொடர்ந்து இவ்வறத்தை நடத்த வேண்டுமென்னும் வேண்டுகோளுடன் இக்கல்வெட்டு நிறைவடைந்துள்ளது. வட்டெழுத்தில் உள்ள இக்கல்வெட்டு 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
இங்குள்ள மற்றொரு திருஉருவத்தின் கீழே உள்ள கல்வெட்டில் ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்ற வாக்கியத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் பல சமணத்தளங்களில் கண்ட அச்சணந்தி என்பவர் இங்கும் வந்து தனது பங்களிப்பாக இத்திருஉருவத்தை செய்து கொடுத்துள்ளார் என்பதனை அறிய முடிகிறது.
மற்றொரு கல்வெட்டில் வெண்பு நாட்டு வில்லிகுறண்டித் திருக்காட்டாம்பள்ளி சந்திர பிரபன் என்னும்  ஒருவரின் பெயரைக் குறிப்பிடுகிறதுவெண்பு நாட்டு குறண்டித் திருக்காட்டாம்பள்ளி என்னும் பெயரையும் சில சமணத்தளக் கல்வெட்டுகளில் கண்டுள்ளோம். ஆனால், வில்லி என்ற சொல் குறண்டிக்கு முன்னதாக இங்குதான் வருகிறது. எனவே இது புதிய பொருள் அல்லது இடத்தின் பெயரை குறிக்கும் வகையில் உள்ளது. மேலும்சந்திர பிரபன் என்னும் பெயரும் பாண்டிய நாட்டு கல்வெட்டுகள் எதிலும் வராத பெயராகவும் இருக்கின்றது.
ஸ்ரீஅஸ்டோபவாசி கனகவீரர் மாணாக்கர்
அரிட்ட நேமிப் பெரியார் செய்வித்த திருமேனி
என்ற இன்னொரு கல்வெட்டின் மூலம் எட்டு நாட்கள் உண்ணாமல் நோன்பு நோற்கும் துறவி கனகவீரர் என்பவரையும் அவரது மாணாக்கரின் பெயர் அரிட்டநேமி என்பதையும் அறியமுடிகிறது. இந்த அரிட்டநேமி என்ற பெயரின் காரணமாகவே மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள மலைக்கும் ஊருக்கும் அரிட்டாபட்டி என்று வந்திருக்க வேண்டும்.
பிற கல்வெட்டுகள் சற்று சிதைந்துள்ளன. இவற்றின் மூலம் வெண்பைக்குடி நாட்டு வெண்பைக்கரை,செங்குடிநாட்டார், வாழைப்பட்டி ஊரவர் ஆகியோர் இப்பள்ளியில் சில திருமேனிகளை (சிற்பங்களை) செய்து கொடுத்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன்சடையன் மாறன்பெயரும், இவர் இந்த சமணர் கோயிலுக்கு ஆயிரம் பொற்காசுகளை வழங்கியுள்ளார் என்ற செய்தியையும் இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் நிழற்ப்படங்களாக பதிவுசெய்து கொண்டேன்.
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணத்தளம் இன்று கேட்பாரற்று உள்ளது. இத்தளத்தின் வரலாற்று பெருமையை இப்பகுதி மக்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அதன் மூலமே இவ்விடம் பாதுகாக்கப்படும். வெறும் பாதுகாப்பு எச்சரிக்கைப் பலகைகள் இவ்விடத்தை பாதுகாத்திட செய்வது இயலாதது.   முறையான  வகையில் பராமரிப்பு செய்து இவ்விடத்தை பாதுகாக்க அனைவரும் முன் வர  வேண்டும். இன்றைய தமிழ் எழுத்துக்களின் உருவாக்கம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டெழுத்து வடிவில் உள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவாது இவ்விடத்தை நாம் கண்டிப்பாக பாதுக்காத்திட முன்வர வேண்டும்.

மலைக்கு மேலே செல்வதற்கு படிகள் செங்கற்கள் கொண்டு செய்யப்பட்டுள்ளது. படிகளின் முன்னால் நந்தி சிலை ஒன்று உள்ளது. நண்பர்கள் அனைவரும் மலைமீது ஏறிச் சென்றோம். மேலே சிவலிங்கம் ஒன்றை பார்வதிதேவி  வழிப்படுவது போன்ற சுதைச் சிற்பம் ஒன்று காணப்பட்டது. சுற்றிலும் இடிந்த நிலையில் சுற்றுசுவர்கள் காணப்பட்டன. சுவர் சுட்டசெங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு செங்கலின் அளவும் தற்போதுள்ள செங்கலை விட நீளமாகவும் அகலமாகவும் காணப்பட்டது. எனவே இவ்விடமும் பல ஆண்டு வரலாற்றை கொண்டிருக்க வேண்டும். இவ்விடத்தை பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
நீண்ட நாட்கள் காண வேண்டும் என்று இருந்த வரலாற்று இடத்தை கண்ட மகிழ்ச்சியில் அனைவரும் மலையை விட்டு கீழிறங்கி, அருகிலுள்ள கருப்பணசாமி கோவிலுக்குச் சென்று அங்குள்ள சில சிற்பங்களையும் கண்டு ரசித்துவிட்டு ஊர் திரும்பினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக