26 ஜன., 2012

யானைமலையும் சமணத் தீர்த்தங்கரர்களும்...

காரைக்குடியில் கல்லூரி படிப்பிற்காக சென்றுவரும் பொது எல்லாம் குன்றக்குடி மலை, கீழவளவு மலைகள் அனைத்தும் சில நொடிகளில் பார்வையயைவிட்டு கடந்துவிடும். ஆனால், மேலூர் - வெள்ளரிப்பட்டி அருகே உள்ள மலையும், யானைமலையும் அவ்வளவு எளிதில் கண்களில் இருந்து மறைந்துவிடாது. ஏனென்றால் அவைகளின் நீளமும் சுமார் 4 கி.மீ. ஒத்தக்கடையில் அமைந்துள்ள வேளாண்மை கல்லூரி முழுப்பரப்பளவும் யானைமலையில் கீழ் அடங்கிவிடும். சென்ற வாரம் பசுமைநடை குழுவினருடன் சென்று யானைமலையில் அமைந்துள்ள தொல்லியல் தகவலைகளை அறிந்துவந்தேன்.

மதுரையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடை என்னும் இடத்தில் யானைமலை அமைந்துள்ளது. சென்னை, திருச்சி, இராமேஸ்வரம், காரைக்குடி என மதுரையின் வடக்கு பகுதியில் இருந்து மதுரை மாநகருக்குள் நுழையும் பொழுது யானைமலையை பார்த்திருப்பீர்கள். ஒத்தக்கடை சிற்றூரானது இம்மலையின் இடப்புறமான தெற்கு திசையில் உள்ளது. மதுரையின் புகழ்மிக்க சான்றுகளில் யானைமலையும் ஒன்று.

நண்பர்களோடு காலை 7 மணியளவில் பேருந்திலிருந்து ஒத்தக்கடை நிறுத்தத்தில் இறங்கிய போது, யானைமலை மிகப்பிரம்மாண்டமாக காட்சி தந்தது. பேருந்து நிறுத்திலிருந்து சிறிது தூர நடைபயணத்தில் ஒத்தக்கடை – நரசிங்கபுரம் செல்லும் வழியில் யானைமலையின் துதிக்கை போன்ற பகுதி உள்ளது. மலைக்கு அருகே காணப்படும் குடியிருப்புகளுக்கு நடுவே மலை மீது செல்வதற்கான தொல்லியல் பலகை ஒன்றில் சமணபடுகை செல்லும் வழி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழியே சென்றால் மலைமீது அமைந்துள்ள சமணச் சிற்பங்களை காணலாம். 

இம்முறை பசுமைநடைக் குழுவினர் மலைக்கு பின்புறம் அமைந்துள்ள சமணச் சிற்பங்களை காண்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து மலையின் பின்பகுதியை வந்தடைந்தோம். சாலையில் ஓரங்களில் சிற்றுந்துகளும், இருசக்கர வாகனங்களும் அணிவகுத்து நின்றிந்தன. சாலையின் வலது புறத்தில் மலையிலுள்ள ஒரு குகைத்தளத்தில் பசுமைநடைக் குழுவினர் நின்றிருந்தனர். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கல்வெட்டுகள் குறித்து கூறிக் கொண்டிருந்தார். குகைத்தளத்தில் ஆறேழு சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகிறது.

இங்குள்ள சிற்பங்களும், கல்வெட்டுகளும் கி.பி 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகள். இதில் ஐந்து முக்குடைக்கு கீழே அமர்துள்ள மகாவீரர் சிற்பங்களும், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா இயக்கி சிலையும் காணப்படுகிறது. இச்சிலைகள் மீது அரைத்த வெண்சுதை பூசி அதன் மீது அழகிய வண்ணங்களில்  ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியாமல் நிலைத்திருப்பது ஆச்சர்யத்தை தருகிறது. இவ்வண்ண ஓவியங்கள் சித்தன்னவாசலில் உள்ள சித்திரங்களுக்கு இணையான காலத்தைச் சார்ந்தவை என்று சாந்தலிங்கம் அய்யா கூறினார்.

ஒவ்வொரு சிலையும் மிகத் துல்லியமாக புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் ஒவ்வொன்றிலும் சிலையையும் அதை செதுக்கித் தர உதவியவரின் பெயரும் அவரின் ஊரும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதில் அச்சணந்தி என்னும் சமண துறவி செய்து செய்து கொடுத்த சிலை ஒன்றின் கீழுள்ள கல்வெட்டில், இக்கற்சிலை இவ்வூரான நரசிங்கமங்கலத்து சபையினர் ரட்சை என்னும் பிராமண சபையினரால் பாதுகாக்க உறுதி செய்திருப்பது சமய நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்குகிறது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்மந்தர் காலத்திலிருந்த சமணப் பகையுணர்வு அறவே நீங்கி ஒரு சமய நல்லிணக்கத்தை பாண்டிய அரசர்கள் உருவாக்கியுள்ளனர் என்பதை இக்கல்வெட்டு மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

’புரவுவரி திணைக்களத்தார் ரட்சை, பொற்கோட்டுக் கரணத்தார் ரட்சை, பரிவாரபுரவுவரியார் பேரம்’ போன்ற கல்வெட்டுத் தொடர்கள் சமண சமயத்தை அரசர்களும், அரசு அதிகாரிகளும் ஆதரித்தனர் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

’களவழி நாட்டு அணையனைச் சார்த்தி ஏனாதி நாடி செய்வித்த திருமேனி’ என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. தென்களவழி நாட்டுப் பெருவேம்புத்தூர் செழியபாண்டி என்னும் ஓர் இயக்கர் படிமம் செய்துள்ளார். வெண்புரைநாட்டு வெண்புரை சாதன் ஆம்பிரையான் ஆயின சாதன் அரையன், வெண்பைக்குடி நாட்டு வெண்பைக்குடி வேட்டஞ்சேரி புதுமை எவியம்பூதி என்ற தனி நபர்களும் இந்த புடைச்சிற்பங்களை செய்ததற்குக் காரணமாயிருந்துள்ளனர். சமணச் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டேன். மேலும் அவைகள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை சாந்தலிங்கம் அய்யா மூலம் அறிந்து கொண்டோம். பின்னர் மலையை விட்டு கீழிறிங்கி யோகநரசிம்மர் கோயிலுக்கு அருகிலுள்ள இலாடன் குடைவரையை காணச் சென்றோம். 

லாடன் குடைவரை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்.

மேலும் படிக்க : யானைமலையும் லாடன் குடைவரையும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக