28 பிப்., 2012

உண்டாங்கல்லும் பஞ்சபாண்டவர் படுகையும்...

மதுரைக்கு மேற்கே உசிலம்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது விக்கிரமங்கலம் என்னும் சிற்றூர். இங்குள்ள மலைகளில் சமணர்கள் வாழ்ந்த குகைத் தளங்களும், தமிழி (பிராமி) கல்வெட்டுகளும் உள்ளன. அதனைக் காண்பதற்காக பிப்ரவரி(2012) மாதத்தில் கடைசி ஞாயிறு அதிகாலை வேளையில் பசுமைநடை நண்பர்களோடு விக்கிரமங்கலம் சென்று வந்தேன். மதுரை தேனி நெடுஞ்சாலையில் செக்காணூரணி ஊரைக் கடந்து சாலையின் வலது புறத்தில் உள்ள பிரிவு வழியாக விக்கிரமங்கலம் சென்றோம். இங்கு தான் உண்டாங்கல்லு என்னும் மலையும், பஞ்சபாண்டவர் படுகையும் உள்ளது.

விக்கிரமங்கலம் செல்லும் வழியெல்லாம் தென்னந்தோப்புகளும், காய்கறித் தோட்டங்களும், மல்லிகை தோட்டங்களும் பரவியிருந்தது. வழியில் அமைந்துள்ள கிராமங்களில் அறுவடைக் கால வேளைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வயல்களில் பொன்னிறமான கதிர்களோடு அறுவடைக்கு காத்திருக்கும் நெற்கதிர்களின் அழகு மனதை கொள்ளை கொண்டன. களத்து மேடுகளிலும், தளங்களிலும் அறுவடையான நெற்கதிர்களை அடுக்கி வைத்திருந்தனர். சில இடங்களில் அறுவடையான நெற்கதிர்மணிகள் குவியல் குவியலாக காட்சி தந்தன. இத்தனை அழகையும் ஒருமிக்க காணும் போது விவசாயத்தின் அருமையும், விவசாயிகளின் கடின உழைப்பில் கிடைக்கும் உணவின் அருமையும் நகரங்களில் இருந்து  வந்து செல்லும் என்னைப் போன்றோருக்கு புரிந்தது.

சிற்றூரின் சாலைகளின் வழியே பசுமை நடை நண்பர்கள் 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களிலும், சிற்றுந்துகளிலும் செல்வதை வழியில் கண்ட மக்களெல்லாம் ஆச்சர்யமாக பார்த்தனர். விடியக்காலையில இத்தனை பேர் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூட்டமாக செல்வதை கண்ட மக்கள் சினிமா சூட்டிங் ஏதுமாப்பா என்றார்கள் எங்களிடம். அவர்களிடம் உங்கள் ஊரில் உள்ள மலையைத்தான் பாக்க நாங்க வந்திருக்கோம் என்றோம். அவர்கள் அதியச்த்தில் எங்களிடம் அப்படி என்னப்பா இருக்கு அந்த மலையில என்றார்கள். அவர்களிடம் மலையில் 2000 வருடம் முந்தைய சேதிகள்லாம் இருக்கு அத பாக்க போறோம் என்று சொல்லிவிட்டு உண்டாங்கல்லு மலையை நோக்கி நடையைத் தொடர்ந்தோம்.

குன்றுகள் அமைந்துள்ள  இடத்திற்கு செல்வதற்கு சற்று முன்னதாக உள்ள நீர் நிறைந்திருந்த குளங்கள் முதலில் நம்மை வரவேற்கின்றன. விக்கிரமங்கலம் சிற்றூருக்கு கொஞ்சம் முன்பே உண்டாங்கல் என்னும் மலை உள்ளது. இரண்டு குன்றுகளாக மலை அமைந்துள்ளது. இதில் சிறியதாக உள்ள குன்றை ’சின்ன உண்டாங்கல்’ என்று அழைக்கிறார்கள். இது நடுமுதலைக்குளம் எல்லைக்குள் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள பெரிய குன்று விக்கிரமங்கலம் ஊர்ப் பகுதியோடு இணைந்துள்ளது.

நண்பர்கள் அனைவரும் வாகனங்களை அருகிலிருந்த மரநிழலில் நிறுத்திவிட்டு மலையை நோக்கிச் சென்றனர். செல்லும் வழியில் சில இடங்களில் மலையை வெட்டிய தடயங்கள் தென்பட்டன. விக்கிரமங்கலத்தில் உள்ள உண்டாங்கல்லு மலைக்கு எதிரே சின்ன உண்டாங்கல்லு என்னும் சிறிய குன்று உள்ளது. சின்ன உண்டாங்கல் மலையில் இயற்கையாகவே இரண்டு குகைகள் அமைந்துள்ளன. இக்குகையின் பெயர் ’ராக்கிப்பொடவு’. ஊர் மக்கள் இதனை ’ராக்காச்சி பொடவு’ என்கின்றனர்.

குகை அமைந்துள்ள பகுதி நிலத்தடியில் இருந்து சற்று உயரத்தில் அமைந்திருந்தது. குகைக்குச் செல்வதற்கு சரியான பாதையே இல்லை. மலை மிகவும் வழவழப்பாக சாய்வாகவும் இருந்ததால் மிகக் கவனமாக மேலேறிச் சென்றோம். சின்ன உண்டாங்கல்லு மலையில் உள்ள குகையின் நெற்றிப் பகுதியில் கி.மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (பிராமி) கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்குகையினுள் ஒரு ஆள் படுக்கும் அளவுடன் கூடிய கற்படுகை ஒன்றும் வெட்டப்பட்டிருந்தது. வந்திருந்தவர்களுக்கு கல்வெட்டை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா வாசித்து அதன் பொருளை கூறினார்.

’வேம் பிற் ஊர் பேர்அய்அம் சேதவர்‘ என்பது இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ள வாசகம். வேம்பற்றூர் ஊரவையினர் செய்த பெருங்குளம் என்பது இதன் பொருள். வேம்பத்தூர் என்று இப்பகுதியில் ஊர் ஏதும் இல்லை. திருப்புவனம் அருகிலுள்ள வேம்பத்தூரை குறிப்பதாக இப்பெயர் இருக்கலாம். பேரயம் என்றால் நகரசபை. கல்வியிற் சிறந்தவர்கள் நிறைந்த சபை என்றும் சொல்லலாம். அவர்கள் செய்து கொடுத்த கற்படுகையின் செயலை விளக்குவதாக இருக்கலாம். சேதவர் என்பது செய்தவர் என்பதன் திரிபு.

விக்கிரமங்கலம் கி.பி11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்கிரம சோழபாண்டியன் பெயரால் ‘விக்கிரம சோழபுரம்’ எனப் பெயர் பெற்றுள்ளது. இந்த ஊரில் பழமையான சிவன் கோயில் ஒன்றுள்ளது. பிற்காலப் பாண்டியர் கல்வெட்டொன்றில் இக்கோயிலின் பெயர் மதுரோதய ஈசுவர முடையார் கோயில் எனக் குறிப்பிடப்படுகிறது. இடைக்காலத்தில் இவ்வூர் வணிகத்தளமாகச் செயல்பட்டு இருக்கிறது. ஐயப்பொழில் நானாதேசி எனும் வணிகக் குழுவினர் இங்கு வணிகத்தில் ஈடுபட்டனர். ‘தேசிபட்டணமான ஐயப்பொழில் விக்கிரம சோழபுரம்’ என அவர்களால் இவ்வூர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் நகரம் என்ற நிர்வாக அமைப்பை கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர்.

அருகில் உள்ள மற்றொரு குகையினுள் ஒரு ஆள் நிற்கும் உயரமளவிற்க்கு குகை குடையபட்டிருந்தது. இதில் படுகை இல்லை. முதல் குகையிலிருந்து இரண்டாம் குகையைக் காணச் செல்வது மிகவும் கடினமாம அமைந்தது. ஒரு நபருக்கு மேல் அங்கு நிற்க முடியாததென்பதால் நண்பர்கள் ஒவ்வொருவருராக சென்று பார்த்துவிட்டு கவனமாக கீழிறங்கினர். மலைக்குக் கீழே மதுக்குப்பிகளும் சில்லுகளும் நிறைந்துகிடந்தன. குகை எவற்றிற்கெல்லாம் பயன்படுகிறது. பின்னர் அங்கிருந்து அருகிலுள்ள பஞ்சபாண்டவர் படுகையை நோக்கிச் சென்றோம். செல்லும் வழியில் தோட்டங்களில் மரவள்ளிக் கிழங்குகள் பயிரிட்டிருந்தார்கள்.

மலைக்கு மீது ஏறிச் செல்லும் வழிகளில் ’நரந்தம்புல்’ அடர்ந்து வளர்ந்திருந்தது. ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் வரும் எட்வர்ட் மைக்கல் கிரில்ஸ் எனப்படும் ‘பியர் கிரில்ஸ்’ போல குன்றுகளின் மீதும், பாறைகள் மீதுமாக ஏறிச் சென்றோம். ஓரிடத்தில் மட்டும் ஏறிச்செல்வதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. பாறைகளிலேயே சில இடங்களில் இயற்கையாகவே குகைகளும். குழிகளும் அமைந்திருந்தன. இத்தனை சிரமங்களையும் கடந்து மலைமேல் சென்றடைந்தோம். அங்கிருந்து சுற்றியுள்ள பகுதிகளைப் பார்க்கும் பொழுது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளிகளும், நீர்நிலைகளும், மலைகளுமாக பசுமையாக காட்சி தந்தது.

மலையின் மேலே உள்ள பெரிய குகைத்தளத்தின் முகப்பில் 5 தமிழிக் (பிராமி) கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருந்தது. குகைத் தளத்தின் கீழே பத்திற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருந்தன. குகைக்கு உள்ளே இருந்த ஒரு பாறையிலும் ஒரு கல்வெட்டு காணப்பட்டது. 1978ல் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் இதைக் கண்டுபிடித்தனர் என்று சாந்தலிங்கம் அய்யா சொன்னார். மற்ற கல்வெட்டுகள் எல்லாம் 1923லேயே கண்டுபிடித்ததாகக் கூறினார்.


குகைக்கு உள்ளே பாறையில் உள்ள கல்வெட்டானது ’எஇய்ல் அர்இய்தன் சேவித் ஓன்’ இக்கல்வெட்டில் ‘எஇயில் அரிஇயதன் சேவித்ஒன்’ என்றால் எயில் என்னும் ஊரைச் சேர்ந்த அரிதன் என்பவரால் செய்யப்பட்டது என்று பொருள்.

படுக்கைகள் வெட்டப்பட்டுள்ள பெரிய குகைத்தளத்தின் முகப்பில் ‘எம்ஊர் சிழிவன் அதன்’ என்ற கல்வெட்டு காணப்படுகிறது. எம் ஊர் அதாவது எங்கள் ஊர் சிழிவன் ஆதன் கொடுத்த கொடை என்பது இதன் உட்பொருள். சிழிவன் என்பது செழியன் என்பதன் சிதைந்த வடிவமாகும். ஆதன், செழியன் என்ற பெயர்களுடைய இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்குள்ள கற்படுகைகளை செய்து கொடுத்திருக்கின்றனர்.

குகைத்தளத்தில் உள்ள கற்படுகை ஒன்றின் மேலே ‘அந்தைய் பிகன் மகன் ஆதன்’ என்ற கல்வெட்டு காணப்படுகிறது. இது அந்தை பிக்கன் என்பவருடைய மகன் வேதநாதன் என்பவர் செய்து கொடுத்த கற்படுக்கை எனப் பொருள்.

மூன்று கல்வெட்டுகள் கற்படுக்கைகளின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளன. அவைகள் பேதலை குவிரன், செங்குவிரன், குவிராதன், போன்ற பெயர்களைப் குறிப்பிடுகின்றன. குவி என்ற வார்த்தை குபேரன் என்ற பொருளைத்தரும். மேலும், இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது. மேற்கூறிய ஆறு தமிழிக் (பிராமி) கல்வெட்டுகளும் கி.மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. மேலும் பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் இடையேயான முக்கியப் பாதையாக இந்தப் பகுதி அமைந்திருக்க வேண்டும் என அய்யா கூறினார்.

மதுரை, அமணமலை, நாகமலை, கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம், சின்னமணூர், உத்தமபாளையம், கம்பம் வழியாக கேரளத்தில் உள்ள இடுக்கி வரையுள்ள ஊர்களில் பெரும்பாலான இடங்களில் இது போன்ற கல்வெட்டுகளும், பழங்கால ரோமானிய நாணயங்களும் பெருவாரியாக கிடைத்துள்ளன. கிடைத்துள்ள சான்றுகளை வைத்து பார்க்கையில் முற்காலத்தில் இப்பகுதியானது பெரு வணிகத்திற்கான பாதையாக இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக சாந்தலிங்கம் அய்யா கூறினார். இத்தனை வரலாற்றுச் சிறப்புகளை 2200 வருடங்களுக்கு முன்பாக பெற்றிருந்த மலையையும், கல்வெட்டுகளையும், அப்பகுதிகளையும் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டு மலையைவிட்டு கீழிறிங்கினோம்.

பின்னர் அருகிலிருந்த சிறிய குன்றின் மேலுள்ள ஆலமரத்தடியில் காலைச் சிற்றுண்டி பசுமைநடை குழுவினரால் வழங்கப்பட்டது உணவை முடித்துக் கொண்டு, ஈராயிரம் வருடங்கள் முந்தைய வரலாற்றுச் செய்தியை கண்ட மகிழ்வோடு ஊர் திரும்பினோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக